- நாடு தழுவிய அளவில் கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்று காட்டுத் தீ போல பரவிக்கொண்டிருக்கிறது என்றால், இந்தியாவின் வனப் பகுதிகளில் கொள்ளை நோய்த்தொற்றைப்போலப் பரவிக் கொண்டிருக்கிறது காட்டுத் தீ.
- ஆசியாவின் இரண்டாவது பெரிய சூழலியல் மையமான மத்திய பிரதேசம், ஒடிஸா வனப் பகுதிகளில் தொடர்ந்து ஆங்காங்கே பல வாரங்களாகக் காட்டுத் தீ பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
- அதேபோல, கோடை தொடங்கிய சில வாரங்களிலேயே தெலங்கானாவில் 15,000-க்கும் அதிகமான காட்டுத் தீ நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றன.
- கடந்த கோடைக்காலத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஏற்பட்டிருக்கும் கடுமையான பாதிப்பு வனத் துறையினருக்கும் வனப் பகுதியில் வாழும் மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
- வெள்ளப்பெருக்கும் காட்டுத் தீயும் ஒருசேரத் தாக்கும் விசித்திரம் உத்தரகண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு அரங்கேறியிருக்கிறது.
- பிப்ரவரி மாதம் கடுமையான காட்டாற்று வெள்ளத்தில் உத்தரகண்ட் மாநிலத்தின் சில பகுதிகள் மூழ்கின. பல நாள்கள் தொடர்ந்த வெள்ளப் பெருக்கில் பலர் உயிரிழந்தனர். வாழ்வாதாரம் இழந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர்.
- உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு ஊடகங்களில் முன்னுரிமை பெற்றதுபோல, அந்த மாநிலம் எதிர்கொண்ட காட்டுத் தீயால் ஏற்பட்ட நாசங்கள் அதிகம் பேசப்படவில்லை.
- கோடைக்காலத்தில்தான் பொதுவாக காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் முடிவடைந்த குளிர்காலத்தில் உத்தரகண்ட் மாநிலம் எதிர்கொண்ட காட்டுத் தீ சம்பவங்கள் ஏராளம்.
- உத்தரகண்ட் மாநில வனத்துறையினரின் செய்திக் குறிப்பின்படி, அக்டோபர் 1, 2020-க்கும் ஏப்ரல் 4, 2021-க்கும் இடையே 989 காட்டுத் தீ சம்பவங்கள் அம்மாநிலத்தில் நிகழ்ந்திருக்கின்றன.
காட்டுத் தீ அடங்காது
- அதிகமான பல்லுயிர்ப் பெருக்கம் நிகழும் உத்தரகண்ட் மாநிலக் காடுகளில் சுமார் 1297.43 ஹெக்டேர் பகுதி எரிந்து சாம்பலாகியிருக்கிறது. கடந்த 2000 முதல் இதுவரை மாநில வனப் பகுதியின் 48,000 ஹெக்டேர் காட்டுத் தீக்கு உள்ளாகி கருகியிருக்கிறது.
- கடந்த ஆண்டு இதே பருவத்தில் உத்தரகண்ட் சந்தித்த காட்டுத் தீ சம்பவங்களின் எண்ணிக்கை வெறும் 39 தான்.
- தற்போது பதிவாகியிருக்கும் 989 நிகழ்வுகளைக்கூட குறைத்து மதிப்பிடப்பட்டவை என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
- பொதுவாகவே வெள்ளப்பெருக்கு என்பது மழைக்காலத்திலும், காட்டுத் தீ என்பது கோடைக்காலத்திலும் எதிர்கொள்ளப்படும் சம்பவங்கள்.
- குளிர்காலத்தின் முதல் மூன்று மாதங்கள் இமயமலைப் பகுதியின் அடிவாரமும் நடுப் பகுதியும் மிகவும் மிதமாகவும் அமைதியாகவும் இருப்பது வழக்கம்.
- அமைதி தேடி பலரும் இமயமலையை நாடும் பருவமும் அதுதான். அப்படிப்பட்ட பருவத்தில் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கும், அதிக அளவிலான காட்டுத் தீயும் சர்வதேச அளவிலேகூட பல ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கின்றன.
- ஆறு மாதங்களுக்கு முன்பு உத்தரகண்ட் மாநில வனப்பகுதியில் தொடங்கிய காட்டுத் தீ இன்னும் அடங்கியபாடில்லை.
- அந்த மாநிலத்தின் இமயமலைப் பகுதியிலுள்ள காடுகளின் பெரும்பகுதி காட்டுத் தீயால் அழிவை எதிர்கொண்டு வருகிறது.
- வனப்பகுதியில் வசிப்போருக்கு காட்டுத் தீ புதிதல்ல என்றாலும்கூட இதுபோல பருவநிலை மாறி வனப் பகுதிகளில் தீப்பிடிப்பதும், அது அணையாமல் தொடர்ந்து காடுகள் எரிந்து கொண்டிருப்பதும் முன்னெப்போதும் எதிர்கொள்ளாத புதிய அனுபவம். அதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
- காட்டுத் தீ முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டியதும் அல்ல. ஒருவகையில் சூழலியல் சமநிலையை நிலைநிறுத்த காட்டுத் தீ உதவுகிறது. இயற்கையாக உருவாகும் காட்டுத் தீ அதிகம் நீண்டு நிற்காமல் தானாகவே அணைந்துவிடும்.
- ஆனால், இப்போதுபோல தொடர்ந்து சில வாரங்கள் காட்டுத் தீ எரிந்து கொண்டிருப்பதற்கு பல செயற்கைக் காரணங்களும், சில இயற்கைக் காரணிகளும் கூறப்படுகின்றன.
- குறைவான மழை, அதிகரித்த கோடை இரண்டுமே இமயமலைப் பகுதியின் காடுகள் சட்டென்று தீப்பற்றிக் கொள்வதற்கான காரணங்கள். பருவநிலை மாற்றத்தின் விளைவுதான் அது.
- காட்டுத் தீ உருவாவதற்கு வனப்பகுதியில் காணப்படும் ஆக்கிரமிப்புகளும் மனிதத் தலையீடும்கூட காரணங்கள்.
- வன விலங்குகளை விரட்டுவதற்கு உருவாக்கப்படும் நெருப்பின் விளைவால் காடுகள் பற்றிக்கொள்வதும், விவசாய பயன்பாட்டுக்காக வனப்பகுதிகளை ஆக்கிரமிக்க வேண்டுமென்றே உருவாக்கப்படும் காட்டுத் தீயும்கூட இந்த நிலைமையை ஏற்படுத்தி விடுகின்றன.
- காட்டுத் தீ பல்லுயிர்ப் பெருக்கத்தை பாதிப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழலையும் கடுமையாக பாதிக்கிறது.
- காடுகள் அழியும்போது அதன் தொடர் விளைவாக மழைப்பொழிவு குறைந்து கோடையின் வெப்பம் அதிகரிக்கிறது.
- காட்டுத் தீயை இயற்கைச் சீற்றமாகவோ, பாதிப்பாகவோ தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏன் கருதுவதில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
- சர்வதேச நிகழ்வுகளிலிருந்து இந்தியா பாடம் படிக்கவில்லை. காட்டுத் தீயை எதிர்கொள்வதற்கான தொழில் நுட்பமும் மனித வளமும் நம்மிடம் இல்லை.
- வளர்ச்சி என்கிற பெயரில் சுற்றுச்சூழல் குறித்த கவலையே இல்லாமல் பல திட்டங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.
- அரசியல் தலைவர்கள் தங்களது சந்ததியர் குறித்து கவலைப் படுகிறார்களே தவிர, வருங்கால இந்திய சந்ததியினர் குறித்துக் கவலைப்படுவதாக தெரியவில்லை. அதனால், காட்டுத் தீ அடங்காது!
நன்றி: தினமணி (22 – 04 - 2021)