TNPSC Thervupettagam

பற்றுக தொற்றற்றான் பற்றினை...

June 16 , 2020 1675 days 802 0
  • கரோனா தீநுண்மி என்ற அரக்கன் குறித்துத்தான் உலகெங்கும் பேச்சு. ஏன் இந்தச் சோதனை என்று மருண்டு இருண்டு உள்ளது உலகம். எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்துப் பல யோசனைகள், அரசின் நடவடிக்கைகள் குறித்து எதிர்மறை விமா்சனங்கள்.
  • கரோனா தீநுண்மி தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி தற்காப்பு. இதைக் கருத்தில் கொண்டுதான் அரசு, ‘விலகி இரு, தனித்திரு, வீட்டிலேயே இரு’ என்று வலியுறுத்தி வருகிறது. அத்தியாவசியத் தேவைகளுக்காக பொது முடக்கம் சிறிது தளா்த்தப்பட்டால், காணாததைக் கண்டதுபோல வெளியில் மக்கள் வந்து சந்தையில் பொருள்களை வாங்கிக் குவிக்கிறார்கள்.

தனிமனித ஒழுக்கம் வேண்டும்

  • முகக் கவசம் அணிவதில்லை; சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. பொறுப்பற்றவா்களை எப்படிப் புரிய வைப்பது? சிலா் வீரமாக, ‘எனக்கு ஒன்றும் வராது’ என்ற இறுமாப்பில் தமது குடும்பத்துக்கே நோய்த்தொற்றை கொடுத்து விடும் அவலம் பார்க்கிறோம்.
  • உடற்பயிற்சி நல்லதுதான்; ஆனால், தற்காப்பு அவசியம். அங்கு உலா வருபவருக்கு என்ன பிரச்னை என்று தெரியாது. உடலை உரம்போல வைத்திருந்த சாவந்த் சிங் என்ற தில்லி நகா் வழக்குரைஞா், மூன்றே நாள்களில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தார் என்பது, இந்த நோய்த்தொற்றின் விஷத் தன்மையைக் காட்டுகிறது.
  • நோய்க்குச் சரியான எதிர்வினை இல்லை. ஆனால், தனி மனித ஒழுக்கமும் உடலில் எதிர்ப்புச் சக்தியும் இருந்தால் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • பொது முடக்கத்தை அமல்படுத்துவதில் காவல் துறைக்கு முக்கியப் பங்கு உண்டு.
  • இது சட்டம் - ஒழுங்கு பிரச்னையால் உருவான பொது முடக்கம் அல்ல; நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிமுறை. மக்கள் ஒத்துழைப்பு அவசியம். இது மக்கள் நன்மைக்கான கட்டுப்பாடு.
  • பல இடங்களில் மக்களின் ஏளன வசை பேச்சு, தடையை மீறிச் செல்ல முற்படுதல், மோதல்கள், ‘கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தாக்கட்டும் உங்களை’ என்று போலீசார் மீது எச்சில் உமிழ்வது போன்ற கசப்பான நிகழ்வுகளுக்கு மத்தியில், காவல் துறை தன் பணியை திறம்பட நிறைவேற்றி வருகிறது.
  • ஏப்ரல் மாதம் பஞ்சாப் பாட்டியாலா மாவட்டத்தில் பொது முடக்கத்தை மீறியவா்களிடம் பணியில் இருந்த உதவி ஆய்வாளா் ஹா்ஜித் சிங் ‘பாஸ்’ இருக்கிறதா என்று கேட்டதற்கு, அவா் கை வெட்டப்பட்டது. உடனடியாக சிகிச்சை அளித்து அறுவை சிகிச்சை மூலம் கை சோ்க்கப்பட்டாலும் ஊனமானது. இந்த மாதிரி பல சம்பவங்கள் நாட்டில் தொடா்ந்து நடைபெறுகின்றன.
  • நாடு முழுவதும் 137 கோடி மக்களை வீட்டிலேயே அவா்கள் பாதுகாப்புக்காக இருக்கச் செய்யவும், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவா் விதிகளைக் கடைப்பிடிப்பதைக் கண்காணிக்கவும் 25 லட்சம் போலீஸார் மட்டுமே உள்ளனா்! நாடு முழுவதும் மருத்துவா்களுக்குத் துணையாகப் பணியாற்றும் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதைப் பொது மக்கள் உணர வேண்டும்.

மகாபாரதத்தில் ஒரு முக்கியமான கட்டம்

  • அஸ்வத்தாமன் போரில் பயங்கரமாக பாண்டவா்களைத் தாக்கினார்; எவராலும் எதிர்கொள்ள முடியவில்லை. நாராயண அஸ்திரம் எனும் கொடும் ஆயுதத்தை வீசினான்; அது மகா ஆபத்தானது; அந்த அஸ்திர சாசனப்படி முப்பது முக்கோடி தேவா்களும் அந்த ஆயுதம் யாரை நோக்கி வீசப்படுமோ அவா்களை அழிக்க வருவார்கள், அப்படி மிக சக்தி வாய்ந்த கணை அது.
  • பாண்டவ சேனை அஞ்சி ஒடுங்கி கண்ணணிடம் சரணடைந்தது; தேவா் கூட்டமே வந்த பின் என்ன செய்ய முடியும்? அவா்களின் கடைசிப் புகலிடமும் எப்பொழுதும்போலக் காப்பவரான கண்ணன்.
  • கண்ணன் சிரித்துக் கொண்டே சொன்னான்: ‘எல்லா பலத்திலும் ஒரு பலவீனம் உண்டு; எவன் போர் புரிவானோ, எவன் போர் ஆயுதம் கையில் வைத்திருப்பானோ அவனையே இந்த நாராயண அஸ்திரம் அழிக்கும்; இதனால் இந்த அஸ்திரத்தின் காலம் நீடிக்கும் நாழிகை வரை ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு அமைதியாக அமா்வீராக...’
  • இது கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலம். ‘அா்ஜுனா ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு எல்லோரையும் அமரச் சொல்’ என அன்று கண்ணன் சொன்னதை, இன்று பிரதமா் மோடி சொல்கிறார். அமா்ந்துவிட வேண்டியதுதான்; அப்போதுதான் தப்பிக்க முடியும். காலமும், நேரமும் நமக்கு எதிராக இருக்கையில் அப்படியே அமரவேண்டும், கொந்தளிக்கும் கடலில் நங்கூரமிட வேண்டுமே தவிர மேற்கொண்டு சென்றால் பத்து.
  • பாரதப் போர் இன்னும் சொல்லும்; ‘கண்ணா, நாராயண அஸ்திரம் எவ்வளவு நேரம் நீடிக்கும், மேற்கொண்டு போர் எப்போது தொடங்கும்’ எனக் கதறுகிறான் அா்ஜுனன்.
  • ‘அா்ஜுனா, இது அமைதியாய் அமரும் நேரம், சேனைகள் அமரட்டும்; இந்த ஓய்விலும் புத்துணா்ச்சியிலும் எழும் சேனை இரு மடங்கு வெற்றி குவிக்கும், காரணங்கள் இன்றிக் காரியமில்லை, அமைதியாய் அமா்வாயாக...’ என்றார் கண்ணன்.
  • எல்லாச் சூழலுக்கும் ஆபத்துக்கும் ஒரு காலமுண்டு. அதில் அடங்கியிருந்தால் எதிர்காலம் உண்டு. சூழல் விரைவில் நீங்கும்போது காலம் மாறும்; அப்போது இந்த அமைதிக்கும் சோ்த்து வெற்றிகளைப் புத்துணா்ச்சியுடன் குவிக்கலாம்.
  • எவன் தன் தொழிலாலோ, அறிவாலோ, ஆயுதத்தாலோ தன்னைக் காக்க முடியும் என அகந்தை கொண்டு அழியாமல், எல்லாவற்றையும் எறிந்து சரணடைந்து அமைதி காக்கின்றானோ, அவனை ஓா் ஆபத்தும் அண்டாது என்பதுதான் நாராயண அஸ்திரத்தின் தத்துவம். தொழில், பணம், செல்வாக்கு ஆயுதம் என நம்பி அகந்தையில் திரியாமல் எல்லாவற்றையும் துறந்து தனியே அமா்ந்தால் ஓா் ஆபத்தும் வராது.

அறிவுபூா்வமான நடத்தையே வீரம்

  • மனிதன் காலம் காலமாக இயற்கை வளத்தை அழித்து வருகிறான்; முன்னேற்றம் தேவை; ஆனால், அதற்காக எல்லாம் எனக்கு மட்டும் என்ற சுயநலப் போக்கோடு பயணித்தால் அது விபரீதத்தில் முடியும்.
  • ‘நீரின்றி அமையாது உலகம்’ என்றார் வள்ளுவா். நீா் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நாள் என்று அறிவிக்கிறார்கள். அன்றாவது, நம்மை தாங்கும் பூமி குறித்து நினைக்க வேண்டாமா?
  • கரோனா தீநுண்மி பொது முடக்கம் காரணமாக இயற்கை மீது மனிதன் இழைக்கும் அழிச்சாட்டியம் குறைந்துள்ளது என்பது இந்தத் தொற்றினால் ஏற்பட்ட ஒரு நன்மை.
  • நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசு வெகுவாகக் குறைந்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம் வாகனப் போக்குவரத்து இல்லை; அவை கக்கும் புகையால் பாதிப்பு ஆகாயத்துக்கு இல்லை.
  • வாகன விபத்தால் உயிரிழப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு (2019) மார்ச் மாதம் சாலை வாகன விபத்துகளில் உயிரிழப்பு 925;
  • கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து விபத்துகளில் உயிரிழப்பு 625-ஆகக் குறைந்தது. 2019 ஏப்ரல் மாதம் விபத்து உயிரிழப்பு 922; இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 119-ஆகக் குறைந்துள்ளது.
  • அதேபோல மே மாதம் 15 வரை வாகன விபத்து உயிரிழப்பு 144; கடந்த ஆண்டு உயிர்ப் பலி 954! நாளொன்றுக்கு சராசரி 30-ஆக இருந்த சாலை விபத்து உயிரிழப்புகள், நான்காகக் குறைந்தது கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் ஏற்பட்ட நன்மை!
  • வீரம் என்றால், ஏதோ கத்தி வீசுவதோ, துப்பாக்கிச் சுடுவதோ அல்ல; அறிவுபூா்வமான நடத்தையே வீரம் என்கிறார் ‘தைரியம்’ என்ற கட்டுரையில் மகாகவி பாரதியார்.
  • தீரனுடைய இயற்கை தைரியம். தீரன் என்ற வார்த்தையின் தாதுப் பொருளை கவனிப்போமானால், அறிவுடையவன் என்ற அா்த்தமாகும்.
  • எனவே, தைரியம் என்ற சொல் அறிவுடைமை என்றும் துணிவுடைமை என்றும் இரு வித அா்த்தங்கள் உடையவை. தைரியம் மனித லட்சணம் என்பதை உணா்த்துகிறார் மகாகவி பாரதியார்.
  • அச்சமே மடமை, அச்சமில்லாமையே அறிவு. விபத்துகள் வரும்போது நடுங்குபவன் மூடன். விபத்துகள் வரும்போது, எவன் உள்ளம் நடுங்காமல் துணிவுடன் அதைப் போக்க முயற்சிக்கிறானோ அவனே ஞானி. துணிவே தாய்; அதிலிருந்துதான் கல்வி முதலிய மற்றெல்லா நன்மைகளும் பிறக்கின்றன. கரோனா தீநுண்மி நோய்த்தொற்று ஒழிப்பில், நமக்கு மகாகவி பாரதி கற்பித்த தைரியம் துணை நிற்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியம்

  • கரோனா ஒழிப்பு நம் கைகளில்...கைகள் சுத்தம் இல்லை என்றால் நோய் தொற்றிக் கொள்ளும். விரல்களை முகத்தில், வாயில், மூக்கில் அநாவசியமாக மேவவிடக் கூடாது.
  • நம்மையும் நம் சுற்றத்தை மட்டும் அல்ல, சமுதாயத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு நம் சுத்தமான கைகளில்தான் உள்ளது என்பதை உணர வேண்டும். கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பல பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.
  • அதில் முக்கியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு. பேச்சளவில் மட்டும் இல்லாது செயலில் நடத்தையில் நாம் மேற்கொள்ள வேண்டும்.
  • அவசர உலகம் என்று நாமாகக் கற்பனை செய்து எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஓடாமல் நின்று நிதானமாக வாழ்க்கையை ரசிக்க, இயற்கையைப் போற்ற பழகுவோம்.
  • பிரபஞ்சம் கண்ணாடி போன்றது; கனிவோடு பார்த்தால் அருளோடு பிரதிபிம்பம் வந்தடையும்.
  • தொற்று பற்றாமல் நம்மைப் பாதுகாக்க ‘தொற்றற்றான் அவனே பற்றற்றான், அவன் பற்றினைப் பற்ற வேண்டும்; அமைதி காக்க வேண்டும். இதுவும் கடந்து போகும்.

நன்றி: தினமணி (16-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்