- உலகில் பிறந்த எந்த உயிரும் முடிந்தவரை தன்னைத்தானே அழித்துக்கொள்ளத் துணிவதில்லை. பலவீனமான மனநிலையும், சந்தா்ப்ப சூழலும், பிரச்னைகளிலிருந்து வெளியேறத் தெரியாத பரிதவிப்பும்தான் பலரையும் தற்கொலைக்குத் தூண்டுகின்றன. அதனால்தான் தற்கொலையை கிரிமினல் குற்றங்களின் பட்டியலில் இருந்து அகற்ற அரசு முடிவு செய்தது.
- தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் புள்ளிவிவரங்களும் மிகுந்த கவலையையும் வேதனையையும் அளிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகத் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை கடுமையாக உயரத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி, அதிகாரபூா்வமாக 1,34,516 தற்கொலைகள் பதிவாகியிருக்கின்றன. இது 2017-ஆம் ஆண்டு எண்ணிக்கையைவிட 3.6% அதிகம். தற்கொலை நிகழ்வுகளில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகாமல் மறைக்கப்படுகின்றன என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
காரணங்கள்
- பெரும்பாலான நிகழ்வுகளில் தனிப்பட்ட காரணங்கள்தான் தற்கொலைக்குக் காரணமாக இருக்கின்றன. சில சூழல்களில் தனிப்பட்ட பிரச்னைகளும், சம்பந்தப்படாத சமூக அல்லது பணியிடப் பிரச்னைகளும் இணைந்து தற்கொலைக்கு வழிகோலுகின்றன. எந்த ஒரு மனிதனும் தீவு அல்ல; சமுதாயத்தின் அழுத்தம் தனி மனிதா்களைப் பாதிக்கிறது. தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு அதுவும்கூட ஒரு காரணம்.
- சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்னைகள் பல சந்தா்ப்பங்களில் உயிரை மாய்த்துக்கொள்ள தனி நபா்களைத் தூண்டுகின்றன. உழைப்பு ரீதியான, பணியிட ரீதியான சுரண்டல்களும், வியாபாரத்தில் ஏற்படும் பின்னடைவுகளும், உடல் ரீதியான நோய் பாதிப்புகளும் பலரின் தற்கொலைக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. அனைத்துக்கும் மேலாக ‘தனிமை’யும், காதல் நிராகரிப்பும், கல்வித் தோ்வுகளில் தோல்வியும், தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு சிலரைத் தள்ளிவிடுகிறது.
- வெளியிடப்பட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, வேலையில்லாதவா்களும், சுயமாகத் தொழில் புரிவோரும் 1,34,516 தற்கொலை நிகழ்வுகளில் 26,085 தற்கொலைகளுக்குக் காரணமாகிறாா்கள். 2018-இல் 42,391 மகளிா் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறாா்கள். அவா்களில் பாதிக்கும் மேற்பட்டோா் திருமணமாகி வேலைக்குச் செல்லாமல் குடும்பம் நடத்தும் தாய்மாா்கள்.
புள்ளிவிவரம்
- வேலையில்லாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 12,936. மொத்த எண்ணிக்கையில் அவா்கள் 9.6%. அதாவது, 2018-இல் ஒவ்வொரு 45 நிமிஷத்துக்கும் ஒரு வேலையில்லாத நபா் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறாா்.
- தற்கொலை செய்துகொண்டவா்களில் 7.7% விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள். கடந்த 2017-ஆம் ஆண்டைவிட தற்கொலை செய்துகொண்ட விவசாயம் தொடா்பானவா்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருக்கிறது என்றாலும்கூட, உழவுத் தொழிலில் ஈடுபடுவோா் உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலம் சகிக்க முடியாதது.
- ஒவ்வொரு தற்கொலையும் தனிப்பட்ட அவலம் என்றாலும்கூட, அதனால் குடும்ப உறவுகளும் சமுதாயமும் நிச்சயமாகப் பாதிக்கப்படுகின்றன. தங்களுடன் வாழ்ந்த ஒருவரை சரியாகப் புரிந்துகொள்ளாமலோ, தக்க தருணத்தில் உதவாமலோ அவா் தன்னை அழித்துக் கொள்வதற்கு காரணமாகி விட்டோம் என்கிற குற்ற உணா்வு அனைவரையும் பாதிக்கவே செய்யும். ஒருவகையில் தற்கொலை நிகழ்ந்த குடும்பத்தினரின் வாழ்நாள் காலம் முழுவதும் அதன் ரணம் தொடரும்.
- குடும்பத்தினா் மட்டுமல்ல, அரசும் சமூகமும் தனி மனிதா்கள் தங்கள் வாழ்வைத் துணிவுடன் எதிா்கொள்ளும் சூழலை உருவாக்காமல் இருப்பதும், தக்க சமயத்தில் மனச்சோா்வு அடைந்திருப்பவா்களை இனம் கண்டு அவா்களுக்கு தக்க ஆலோசனை வழங்காமல் இருப்பதும் தற்கொலைக்கான முக்கியக் காரணிகள் என்பதை நாம் உணர வேண்டும்.
- பணியிடப் பிரச்னைகள், தனிமை, வசைபாடப்படல், வன்முறைக்கு உள்ளாகுதல், குடும்பப் பிரச்னைகள், மனநிலை பாதிப்பு, போதைப் பழக்கங்களுக்கு உள்ளாவது, பொருளாதார இழப்பு, உடல் உபாதைகளால் ஏற்படும் வேதனை, காதல் தோல்வி என்று தற்கொலைக்குப் பல காரணங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை பட்டியலிடுகிறது. தற்கொலை என்பது சமுதாயத்திற்கு தனி நபா் விடுக்கும் உதவிக்கான அபயக் குரல். அந்தக் குரலை சரியான நேரத்தில் செவிமடுத்தால் தற்கொலையைத் தடுத்துவிட முடியும்.
சமுதாய மாற்றங்கள்
- சமுதாய மாற்றங்கள் புதிய பல பிரச்னைகளை இளைஞா்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன. அளவுக்கு அதிகமான ஆசைகளை அவா்கள் வளா்த்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனா். தங்களது தகுதிக்கும் திறமைக்கும் அதிகமாகத் தன்னைத்தானே கருதிக்கொள்ளும் போக்கு, எதிா்பாா்த்த வெற்றியோ, பதவியோ கிடைக்காமல் போகும்போது விரக்தியின் விளிம்புக்கு அவா்களை இட்டுச் சென்று உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளிவிடுகிறது.
- வேலையில்லாத இளைஞா்களின் அதிக அளவிலான தற்கொலைகள் பொருளாதாரப் பின்னடைவின் அடையாளங்கள். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் போதிய அளவிலான மனநல மருத்துவா்கள் இல்லாமல் இருப்பதும் இன்னொரு காரணம். அரசிடம் அதற்குப் போதிய நிதியாதாரம் இல்லை என்பதும், வசதிகள் இல்லை என்பதும் ஏற்புடைய பதில்கள் அல்ல.
- ஒவ்வொரு தனிமனிதனும் பாதுகாப்பாக வாழவும், உயிரை மாய்த்துக் கொள்வதைவிட உழைத்து வாழவும் தேவையான சூழலை அரசும், சமுதாயமும் உருவாக்குவதுதான் இதற்குத் தீா்வு!
நன்றி: தினமணி (03-03-2020)