TNPSC Thervupettagam

பலியிடுவதற்கா மனித உயிர்கள்

March 4 , 2024 141 days 122 0
  • ஆண்கள் போரிட்டுக் கொண்டிருக்க, பெண்கள் விலகிச் செல்லவே விரும்புவார்கள். போர்களும் பெண்களும் எப்போதும் நேர் எதிர்திசையில் நிற்கக்கூடியவர்கள். எக்காலத்திலும் பெண்களும் குழந்தைகளும் போர்களை ஆதரித்தவர்கள் இல்லை. போர்க் காலங்களில் முதலில் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான்.
  • நாம் இதிகாசங்களில் படித்து அறிந்து கொண்ட ராமாயண, மகாபாரதப் போர்கள் தொடங்கி முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் முதல்நம் கண்ணெதிரே இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் ரஷ்ய–உக்ரைன் போர், சமீபத்திய இஸ்ரேல்–காசாவை முன்னிறுத்தி நிகழும் பாலஸ்தீன ஹமாஸ் படையினரின் போர்வரை இதுதான் நிலை.

எத்தனை எத்தனை விலை மதிப்பற்ற உயிர்கள்?

  • அதிலும் பிஞ்சுக் குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் என எத்தனை ஆயிரம் ஆயிரம் உயிர்கள் பலி கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வளவு பேரழிவுக்குப் பின்னரும் ஆட்சியாளர்களின் அதிகார வெறியும் போர்த் தாகமும் இன்னமும் தீர்ந்தபாடில்லை. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை அமைதியும் சமாதானமும் நிலவும் என்ற அறிகுறியோ நம்பிக்கையோ தென்படவும் இல்லை.

நியதியை மீறும் வெறி:

  • மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்ற போர் நியதிகள் அனைத்தும் மீறப்படுகின்றன. காசாவை முற்றிலும் சிதைத்துவிட்ட பிறகும் போர் நிறுத்தம் மட்டும் நிகழ்ந்தபாடில்லை. எனில், பாலஸ்தீன இன அழிப்பும் நாடு பிடிக்கும் மூர்க்கமும் மட்டும்தானே இஸ்ரேலின் சிந்தனையில் நிறைந்திருக்கிறது!
  • அடிப்படை உணவான மாவு, குடிநீர்கூடக் கிடைக்காமல் மக்கள் அல்லாடுகின்றனர். காசாவில் ஐந்து லட்சத்துக்கும் மேலானவர்கள் (அ) நால்வரில் ஒருவர் பஞ்சம், பட்டினியின் பிடியில் சிக்கித் தவிப்பதாக உலக உணவுத் திட்டத் துணை இயக்குநர் எச்சரித்திருக்கிறார்.
  • உணவு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தெற்கு காசா பகுதியில் ஏக்கத்துடன் குழுமியிருந்த பாலஸ்தீன மக்கள் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் தங்கியிருந்த நுசிராத், புரேஜ், கான் யூனிஸ் போன்ற முகாம்களில் வான்வழித் தாக்குதலும் ஷெல் தாக்குதலும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.
  • இதில் ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வெள்ளைத் துணியில் பொட்டலங்களாகக் கட்டி வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் சடலங்களைப் பார்க்கும் துணிவு யாருக்கு இருக்கிறது? எவ்வளவு மன உறுதி படைத்தவர்களாலும் இத்தகைய காட்சிகளைப் பார்க்க இயலாது. குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவதென்பது எத்தகைய நியதியற்ற போர் முறை?

மக்கள்தொகைப் பெருக்கம் தீர்வாகுமா?

  • உக்ரைன் நாடோ மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், பிற நாடுகளைவிட ‘பெரியண்ணன்’ அமெரிக்காவின் ஆதரவுக்கரமே வெகுவாக நீண்டிருக்கிறது. ஆயுத விற்பனையும் ஆயுதப் பரவலும் எப்போதுமே அமெரிக்காவின் கைங்கரியம் அல்லவா?! அணு ஆயுதங்களைத் தங்களிடம் வைத்திருக்கும் நாடுகள், எந்நேரமும் ஒருவித அச்ச உணர்வையே பிற நாடுகள் மத்தியில் விதைத்துக்கொண்டிருக்கின்றன. அதனாலேயே சிறிய நாடுகள் தங்கள் பாதுகாப்புக்காக மற்றொரு பெரிய நாட்டை அண்டியிருக்க நினைக்கின்றன.
  • பெரும்பாலான உலக நாடுகளில் மக்கள்தொகை குறைவு என்பது தற்போது சிக்கலான பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது. பொருளாதார வளர்ச்சி அடிப்படையிலும் ரஷ்யா போன்ற நாடுகளில் இது பிரதான பங்கு வகிக்கிறது.
  • 2022 பிப்ரவரி 24 அன்று உக்ரைன் நாட்டுடன் தொடங்கிய போர் நீண்டுகொண்டே செல்வதால், ரஷ்யாவின் மக்கள்தொகைவெகுவாகக் குறையத் தொடங்கியிருக்கிறது. ரஷ்யாவுடன் ஒப்பிடும்போது உக்ரைன் அளவில் சிறியதும் மக்கள்தொகை மிகக் குறைவாகவும் உள்ள நாடு. அப்படி என்றால், உக்ரைன் மக்கள்தொகையும் சரியத் தொடங்கியிருக்கிறது.
  • மக்கள்தொகைப் பெருக்கத்தை அதிகரிப்பதற்காக ரஷ்ய அதிபர் புதின் தங்கள் நாட்டுப் பெண்களிடம் அதிகக் குழந்தைகளை - குறைந்தபட்சம் மூன்று குழந்தைகள் - பெற்றுக்கொள்ளும்படி சில மாதங்களுக்கு முன்னதாகவே கோரிக்கை வைத்தார். மற்றொரு அணு ஆயுத ஆற்றல்மிக்க நாடான வட கொரியாவின் அதிபர் கிம்ஜாங் உன், தன் பங்குக்கு இதே கோரிக்கையைத் தங்கள் நாட்டுப் பெண்களிடமும் வைத்திருக்கிறார்.
  • வட கொரியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. அதனால், நாட்டின் பாதுகாப்புக்கு மக்கள் வளம் அத்தியாவசியம் என்ற கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில், பெண்கள் அதிகமாகக் குழந்தைகள் பெற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார்.

ஆயுத உற்பத்தியும் குழந்தை பெறுவதும் சமமானவையா?

  • உண்மையில் இவர்கள் இருவரும் பெண்கள் அதிகம் பிள்ளைகள் பெற வேண்டும் என்ற கருத்தையே அழுத்தமாக வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள். எதற்கு அதிகக் குழந்தைகள் பெற வேண்டும்? அவர்களையும் வளர்த்து ஆளாக்கிப் போர்க்களத்தில் பலியிடுவதற்கா? நினைத்த நேரத்தில் பிள்ளைகளைப் பெற்றுத்தள்ள பெண்கள் ஒன்றும் இயந்திரங்கள் அல்லவே... பிள்ளைகளைப் பெற்று ஆளாக்கி அழிப்பதைக் காட்டிலும் ஆயுதங்களின் பெருக்கத்தைக் குறைக்கலாமே?
  • ஆனால், அதிகார போதையில் இருப்பவர்கள் எவருமேபோர் வேண்டாம் என்று கூறப் போவதில்லை. மக்கள் பாதுகாப்புடன், அமைதியாக வாழ வேண்டும் என்கிற சிந்தனையும் அவர்களிடம் எழப் போவதில்லை. ஆயுத உற்பத்தியையும் விற்பனையையும் ஒருபோதும் இவர்களில் யாரும் நிறுத்தப் போவதில்லை.
  • ஆயுத உற்பத்தியாளர்களுக்கு எங்காவது ஒரு நாட்டில் தொடர்ந்து போர் நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆயுதங்களின் ஆளுமை வட்டத்துக்குள் போரின் கரங்கள் எப்போதும் நீண்டு சிக்கிக்கொண்டுதான் இருக்கும். இந்த ஆயுத வியாபாரிகளுக்கும் போர் ஆதரவாளர்களுக்கும் மனித உயிரின் மாண்பும் உன்னதமும் வாழ்க்கையின் மகத்துவமும் எந்தக் காலத்திலும் புரியப் போவதில்லை. ராணுவ பலத்தை நேசிப்பவர்களால் மக்களை ஒருபோதும் நேசிக்க இயலாது.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்