TNPSC Thervupettagam

பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு தவறான அளவுகோல்

April 6 , 2022 853 days 433 0
  • தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ முழுவீச்சில் செயல்படுத்தி வரும் மத்திய அரசு அதன் சார்பாக பல முனைப்புகளை முன்னெடுத்து வருகிறது.
  • அதன் தொடர்ச்சியாக, இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொது பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு (காமன் யூனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்) என்ற தேசிய அளவிலான ஒரு தேர்வை நடப்பு ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்த போவதாகச் சமீபத்தில் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
  • இது மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்காக என்று கூறப்பட்டாலும், வருங்காலத்தில் இத்தேர்வு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக்கப்படக்கூடும் என்று தெரிகிறது.
  • பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு, மொழி, பாடப்பிரிவு - பொதுத்திறன் - தகுதி என மூன்று பிரிவுகளைக் கொண்டது எனவும், மூன்றாவது பிரிவு விருப்பப் பிரிவாக உள்ளதால் அது கட்டாயமில்லை எனவும் கூறப்படுகிறது.
  • இத்தேர்வின் உள்ளடக்கங்கள் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமையவிருக்கிறது என்றும் கூறப் படுகிறது.
  • பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்களின் பல்வேறு மதிப்பீடுகள் மூலம் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்து தேசிய அளவிலான மாணவர் சேர்க்கையில் நியாயமான தர அளவீடு செய்ய முடியாது என்பதால் இத்தேர்வு கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.
  • பல்வேறு கல்வி வாரிய மதிப்பீடுகளை நியாயமாக ஒப்பிட முடியாது என்ற ஒரே காரணத்தினால் தேசிய அளவிலான ஒரு ஒற்றை நுழைவுத் தேர்வு தேவை என்ற வாதம் அறிவியல் பூர்வமானதல்ல.
  • வாரிய மதிப்பீடுகளைவிட ஒற்றை நுழைவுத் தேர்வு சிறந்த முறையில் மாணவர்களின் அறிவையும் திறனையும் மதிப்பிடும் என்கிற வாதமும் ஏற்புடையதல்ல.

அறிவியல்பூர்வமானதாகவும் நியாயமானதாகவும்

  • அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது போன்ற பாடத்திட்டங்களுக்கிடையே ஒரு பொது அடிப்படை அளவுகோல்கள் (காமன் கோர் கிரைட்டேரியா) இல்லாத பட்சத்தில் மாநில பாடத் திட்டங்களிலிருந்து ஒரு மாறுபட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையைக் கொண்ட நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களை மதிப்பிடுவது நியாயமல்ல.
  • பல்வேறு சமூக, கலாசார மற்றும் கல்வித் தேவைகளைக் கொண்ட சமூகங்களுக்கிடையே கல்விக்கான பொதுவான அடிப்படை அளவுகோலை உருவாக்குவது என்பது சாத்தியமானதல்ல.
  • இந்தியாவில் பலதரப்பட்ட சமூகப் பின்புலங்களைக் கொண்ட மாணவர்கள் அனைவரும் பாகுபாடின்றி உயர்தர கல்விச் சேவையைப் பெற்று, பல வளர்ச்சியடைந்த நாடுகளைப் போன்று, ஒரே நேர்க்கோட்டிலிருந்து போட்டி நுழைவுத் தேர்வைச் சந்திக்கும் சூழல் இங்கே நிலவவில்லை. எந்தவொரு உள்ளீடுகளும் மாநிலங்களிடமிருந்தோ மாநில கல்வி வாரியங்களிடமிருந்தோ பெறாமலேயே, ஒற்றை நுழைவுத் தேர்வை மாநிலங்கள் மேல் திணிப்பது என்பது அறிவியலுக்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமான நடைமுறையாகும்.
  • வாரிய மதிப்பீடு என்பது பன்முகத்தன்மை கொண்டதாகவும், காலப்போக்கில் தொடர் மதிப்பீடுகளின் மூலம் பெறப்பட்ட ஒட்டுமொத்த மதிப்பீடுகளையும் கணக்கில் கொண்டதாக உள்ளது.
  • ஒற்றை நுழைவுத் தேர்வு என்பது பன்முகத்தன்மையற்றதாகவும் தொடர் மதிப்பீடுகளற்றதாகவும் உள்ளதால், மாணவர்களுடைய அறிவையும் திறனையும் பரந்து பட்டு மதிப்பிட முடியாமல் போய் விடுகிறது.
  • ஒற்றை நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணை மட்டும் கொண்டு நடத்தப்படும் மாணவர் சேர்க்கை ஒருதலைபட்சமானது.
  • இதுபோன்ற ஒருதலைபட்சமான மதிப்பீடு என்பது மாணவர்களின் முழுமையான அறிவையும் திறனையும் மதிப்பிட முடியாமல் போகும் என்பதால்தான் பல வளர்ச்சியடைந்த நாடுகளில் இதுபோன்ற நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் மாணவர் சேர்க்கையின் அளவீடுகளில் ஒரு சிறு அங்கமாகவே பயன்படுத்தப்படுகிறது.
  • அதுவும், அதனை வலுக்கட்டாயமாக பயன்படுத்தியே ஆகவேண்டும் என்ற எந்த நிபந்தனை எதுவும் அந்த நாடுகளில் இருந்ததில்லை.
  • அமெரிக்காவின் சாட், எம்கேட் , சீனாவின் கோகோ என்றழைக்கப்படும் தேசிய கல்லூரி நுழைவுத் தேர்வு, இங்கிலாந்தின் யூகேட், ரஷியாவின் யூஸ், தென் ஆப்ரிக்காவின் என்பிடி போன்ற பல தேர்வுகளும் மாணவர் சேர்க்கையில் ஒரு சிறு அளவீடாகவே பயன்படுத்தப் படுகிறது.
  • பல நாடுகளில் அதன் பயன்பாடு பல்கலைக்கழகங்களின் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளது.
  • சீனாவில் பயன்படுத்தப்படும் கோகோ தேர்வு, தேசிய அளவிலானதாக இருந்த போதிலும், மாநிலங்கள் தங்கள் தேவைக்கேற்ப அத்தேர்வுக்கான உள்ளடக்கங்களையும் வினாக்களையும் தாங்களே உருவாக்கிக்கொள்ள கூடிய நெகிழ்ச்சித்தன்மை கொண்டதாகவும் உள்ளது.

அறிவியல்பூர்வமானதாகவும் நியாயமானதாகவும்

  • பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளில் போட்டி நுழைவுத் தேர்வுகளை தன்னார்வ தொழில்முறை நிறுவனங்கள் நடத்துகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
  • ஒரே நுழைவுத் தேர்வு மதிப்பீட்டின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து உயர்கல்வி நிலையங்களுக்கும் சுலபமாக விண்ணப்பிக்க முடியும் என்ற ஒற்றை வாதத்தை மட்டும் வைத்து மாணவர் சேர்க்கை நடைபெறுமானால், அது அறிவுத்திறன் கொண்ட மாணவர்களை மதிப்பிட்டு அடையாளம் காண இயலாமல் செய்துவிடும்.
  • இத்தகைய கூற்றுகளை ஆதாரங்களோடும் புள்ளிவிவரங்களோடும் சமீபத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீட் ஆய்வுக்குழுவின் அறிக்கை நிரூபித்திருக்கிறது.
  • அதுமட்டுமல்ல, இந்தியாவின் நீட், ஜேஇஇ போன்ற போட்டி நுழைவுத் தேர்வுகள் உட்பட உயர்கல்வி நுழைவிற்காக உலகில் நடத்தப்படும் மேற்குறிப்பிட்டுள்ள பெரும்பாலான போட்டித் தேர்வுகள் அனைத்தும் ஒன்றில் மட்டும் உடன்படுகின்றன.
  • அதாவது, தனிப்பயிற்சி (கோச்சிங்) இல்லாமல் இத்தேர்வுகளில் பெரும்பாலான மாணவர்கள் சோபிப்பதில்லை என்பதாகும்.
  • பயிற்சி மையங்கள் அளிக்கும் "தேர்வுத் திறன்கள்' (டெஸ்ட் டேக்கிங் ஸ்கில்ஸ்) ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர்.
  • நுழைவுத்தேர்வு மதிப்பெண் மட்டுமே உயர்கல்வி நுழைவிற்கு ஒரே அளவுகோலாக அமையும்போது அங்கு "கற்றல்' புறந்தள்ளப்பட்டு "பயிற்சி' (கோச்சிங்) மட்டுமே பிரதானமாக்கப்படும்.
  • அவ்வேளையில், கல்வியின் மூலம் பெறவேண்டிய மாணவர்களது ஒருங்கிணைந்த மன வளர்ச்சியையும், அறிவு வளர்ச்சியையும், ஆளுமை மேம்பாட்டையும் அடைய முடியாமல் போகும்.
  • பயிற்சி கலாசாரம் மூலம் அளிக்கப்படும் கல்வியானது சிந்தனையயற்ற இயந்திரத் தனமான மனிதனை உருவாக்கவே பயன்படும்.
  • இதனால் பள்ளிகளை விடுத்து பயிற்சி மையங்களை மட்டுமே நம்பி தங்களது உயர் கல்விக்கான பாதையை மாணவர்கள் கடைப்பிடிக்கக்கூடும். இந்த "பயிற்சி' போக்கு கல்வியில் வியாபாரமயமாக்கலை ஊக்குவிக்கும். கார்ப்பரேட் பயிற்சி மையங்களே மாணவரின் உயர்கல்வி நுழைவுகளை நிர்ணயிக்கும். அப்போது, வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களே அதிக உயர்கல்வி வாய்ப்புகளை பெறுவார்கள்.
  • இத்தகைய "பயிற்சி' போக்கும், அதனுடைய பாதிப்புகளும் வாரியத் தேர்வுகளில் இல்லையா என்ற கேள்வி எழக்கூடும். அப்படி ஒரு கேள்வி எழுவதில் நியாயமிருக்கிறது.
  • தனிப்பயிற்சியின் மூலம் பல பள்ளிகள் தங்கள் மாணவர்களின் வாரியத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்கச் செய்து உயர்கல்வியில் அவர்களின் சேர்க்கையை அதிகரித்திருக்கிறார்கள் என்பதில் உண்மை இருக்கவே செய்கிறது.
  • ஆனால், பயிற்சியை ஊக்குவித்து கற்றலைப் புறந்தள்ளும் மற்றுமொரு நுழைவுத் தேர்வு அதற்குத் தீர்வாக அமையாது.
  • அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இதுபோன்ற நுழைவுத் தேர்வுகள் ஏழைகளுக்கும், சமூக ஊனங்களைச் சந்திக்கும் பிரிவினருக்கும் எதிராக பாரபட்சம் கொண்டதாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • அமெரிக்கா சாட் தேர்வை சுமார் 100 வருடங்களாக நடத்திவரும் காலேஜ் போர்ட் இது போன்ற பாதிப்புகளைக் கண்டறிந்ததால்தான் நலிந்த பிரிவினருக்கு அவர்கள் சந்திக்கும் சமூக பொருளாதார இடர்ப்பாடுகளின் தீவிரத்தைப் பொறுத்து, அவர்கள் சாட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை இயல்பாக்கும் (நார்மலைஸ்) முயற்சியில் ஈடுபட்டார்கள்.
  • உலக அளவில் பல்வேறு வேற்றுமை நிறைந்த கல்விக் கட்டமைப்புகள் கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரே நுழைவுத் தேர்வு மூலம் உயர்கல்வி சேர்க்கை இருக்க வேண்டும் என்று அமெரிக்க பல்கலைக்கழகங்களோ ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களோ நிபந்தனைவிதிப்பதில்லை. ஆனால், இந்த நாடுகள் உயர் கல்விக்கான உலக மையங்களாக விளங்குகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • இந்நாடுகளில் ஒரு சில பல்கலைக்கழகங்கள் உலகளாவிய நிலையில் போட்டி தேர்வுகளைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அது கட்டாயமில்லை.
  • அதுவும் போட்டித் தேர்வுகளின் மதிப்பெண்கள் மாணவர் சேர்க்கையின் பல்வேறு அளவுகோல்களில் ஒன்றாகவே பயன்படுத்தப் படுகிறது.
  • கற்றல் விளைவுகளை உள்ளடக்கிய அடிப்படைத் தரத்தைக் கொண்ட ஒரு கல்விக் கட்டமைப்பே வாரியக் கல்வியாகும்.
  • அனைத்து அறிவையும் சோதிக்கும் வகையிலான வெளிப்படையான மதிப்பீட்டை வழங்கக்கூடிய வாய்ப்புகள் நுழைவுத் தேர்வுகளைவிட வாரியக்கல்வி மதிப்பீடுகளிலேயே அதிகம் உள்ளது.
  • பன்னெடுங்காலமாக இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள், ஒடுக்குமுறைகள், பிராந்திய வேறுபாடுகள் ஆகியவை, மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்குவதால் தேசிய அளவிலான ஒற்றை போட்டி தேர்வுக்கு இந்தியா உகந்ததாக இல்லை என்பதே உண்மை.
  • ஆதலால் நாட்டில் நிலவும் பல்வேறு வாரியத் தேர்வுகளின் மதிப்பெண்களைக் கொண்டே உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அதுவே நியாயமானது.
  • வெவ்வேறு வாரியத் தேர்வுகள் மூலம் அடையப் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு தொடர்புடைய பல காரணிகள் மூலம் இயல்புபடுத்தப்பட்ட மதிப்பெண்ணை (நார்மலைஸ்ட் மார்க்) உருவாக்கி, அதன்மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துவதே அறிவியல் பூர்வமானதாகவும் நியாயமானதாகவும் இருக்கும்.

நன்றி: தினமணி (06 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்