TNPSC Thervupettagam

பல்கலைக்கழக மொழி அரசியல்

December 19 , 2019 1851 days 1023 0
  • இந்தியாவில்  920 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றுள் மாநிலப் பல்கலைக்கழகங்கள் 404; தனியார் பல்கலைக்கழகங்கள் 340; நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் 126; மத்தியப் பல்கலைக்கழகங்கள் 50.  தமிழ்நாட்டில் திருவாரூரில்  ஒன்றும் சென்னையில் ஒன்றுமாக இரண்டு மத்தியப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன.
  • இந்தியாவில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில், பழங்குடி மக்கள் ஆய்வுப் பல்கலைக்கழகம்  ஒன்று மத்தியப் பிரதேசத்தில் 2007-08-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. மதங்களின் பெயரைக் கொண்டு மூன்று பல்கலைக்கழகங்கள்  இருக்கின்றன. வாராணசி ஹிந்து பல்கலைக்கழகம் (1916),  அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (1920), ஜாமியா மில்லியா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் (1988) ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

மொழிகள்

  • இந்தியாவில் மொழிகளுக்கென்று மூன்று மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. வார்தாவில் ஹிந்தி மொழிக்கான மத்தியப் பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி ஹிந்தி விஷ்வ வித்யாலயா  (1997) எனும் பெயரில் உள்ளது. ஐதராபாதில் உருது மொழிக்கான பல்கலைக்கழகம், மெளலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் (1998) எனும் பெயரில் உள்ளது. ஆங்கிலம், வெளிநாட்டு மொழிகளுக்கென்று ஐதராபாதில் ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் (2006-07)  உள்ளது.
  • அலுவல் மொழியாக ஹிந்தியை அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்த பின்பு,  ஹிந்தி மொழி  தனது இலக்கிய வளம் சொல் வளம் போதாமை காரணமாக,  வடமொழியின் தயவில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.  அலுவல் மொழியாக ஹிந்தியை வளர்த்தெடுக்க  ஹிந்திக்கு மட்டுமின்றி, அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில்  22 மொழிகளில் ஒன்றாக இருக்கும்  வடமொழிக்கும் தனிச் சலுகைகளும் உரிமைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. 
  • வடமொழியை வளர்க்க வடமொழி ஆணையம் 1956-57-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் பரிந்துரைகளை ஏற்று மத்திய வடமொழி வாரியம் தோற்றுவிக்கப்பட்டது. வாரியத்தின் பரிந்துரைகளை ஏற்று ராஷ்டிரீயச் சம்ஸ்கிருத சன்ஸ்தான் 1970-இல் தொடங்கப்பட்டது.
    இந்திய மொழிகளில் வடமொழிக்கு மட்டும் ஏறத்தாழ 18  நிகர்நிலைப்  பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றுள் மூத்தது வாராணசியில் உள்ளது. இது 1791-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்கலைக்கழகமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
  • தில்லியில்  உள்ள இரண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் திருப்பதியில் உள்ள ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமுமாக,   வடமொழி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மூன்று தற்போது மத்தியப்பல்கலைக்கழகங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.

அலுவல் மொழி

  • மற்ற மொழிகளுக்கு இல்லாத வகையில், குறிப்பாக அரசமைப்புச் சட்டத்தில் அலுவல் மொழி என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ஹிந்தி மொழிக்கு ஒரே ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் இருக்கிற நிலையில் வடமொழிக்கு ஒரே நேரத்தில் மூன்று மத்தியப் பல்கலைக்கழகங்களை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது.
    இன்றைய சமூகத்  தேவைகளை  நிறைவு செய்யவும், எதிர்கால நெருக்கடிகளை எதிர்கொள்ளவும்,  புதிய நிறுவனங்களை உருவாக்குவதும் ஏற்கெனவே உள்ள நிறுவனங்களை நிலை உயர்த்துவதும்  நிகழ்காலத்தின் கடமைகளாக இருக்கின்றன.
  • அப்படி மொழிகளுக்கான பல்கலைக்கழகங்களை நிலை உயர்த்தும் தேவை இருந்தால்  அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்குமான மத்தியப் பல்கலைக்கழகங்களை மாநிலந்தோறும் நிறுவியிருக்கலாம். அதிக நிதி தேவைப்படும் என்று நினைத்தால் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என்று நான்கு  இடங்களில் மத்திய பல்கலைக்கழகங்களைத் தொடங்கியிருக்கலாம்.  அதற்கும் வாய்ப்பில்லை எனில் ஆங்கிலம், வெளிநாட்டு மொழிகளுக்கென்று ஐதராபாதில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகம் போன்று இந்திய மொழிகளுக்கென்று ஒரு மத்தியப் பல்கலைக்கழகத்தை இந்தியத் தலைநகரில் தொடங்கியிருக்கலாம்.
  • அதற்கும் வாய்ப்பில்லை எனில் இந்திய மொழிகளுக்கென்று தற்போது  மைசூரில் உள்ள இந்திய மொழிகள் ஆய்வு நிறுவனத்தைப் பல்கலைக்கழகமாக நிலை உயர்த்தியிருக்கலாம்.

உலகச் செம்மொழிகளுக்கான ஆய்வு நிறுவனம்

  • தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வடமொழி உள்பட உலகச் செம்மொழிகளுக்கான ஆய்வு நிறுவனம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் 2010-இல் தொடங்கப்பட்டது. பல்கலைக்கழக நல்கைக் குழு ரூ.2 கோடி வழங்கியது. கட்டடம் கட்டுவதற்குத்   தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதி நிதியிலிருந்து ரூ.2 கோடி வழங்கினார். இது மொழிப்பகை வளர்க்காமல் இணக்கம் காணும் உயரிய நோக்கமாகப் பாராட்டப்பட்டது.
  • இந்தியா குடியரசு நாடு. எல்லா மக்களுக்கும் சம உரிமையைச் சாத்தியப்படுத்தும் நோக்கத்தில்  மொழிகளின் சம உரிமையை  மறுப்பதில் நியாயமில்லை. ஆனால், மத்திய அரசு இவற்றை மனதில் கொள்ளாமல்  வடமொழிக்கு மட்டும்  மூன்று மத்தியப் பல்கலைக்கழகங்களை  உருவாக்கியிருக்கிறது.
  • ஒரு மொழிக்குப் பல்கலைக்கழகங்களை உருவாக்குவது தவறில்லைதான். ஆனால், இந்தியாவில் ஒருமொழிக்கு மட்டும் அப்படியான சிறப்புச் சலுகை காட்டப்படும் போது அதற்கான சிறப்புக் காரணங்கள் இருக்க வேண்டும்.
    • இந்தியாவின் பெரும்பான்மை மக்களின்  பேச்சு மொழியாக வடமொழி இருக்க வேண்டும். அரசின் புள்ளிவிவரங்கள் அப்படிச் சொல்லவில்லை. 
    • பெரும்பான்மை மக்களின் தாய்மொழியாக இருக்கவேண்டும்.  
  • வாழும் காலத்தில் யாருக்கும் தாய்மொழியாக வடமொழி இருக்கவில்லை என்று சங்கராச்சாரியார் கூறியிருக்கிறார். (ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்யா அனுக்கிரகித்த நன்மொழிகளின் இரண்டாம் பாகம்,  சங்கர விஜயம் பாகம் 2,  மெட்ராஸ் லா ஜர்னல் அச்சகத்தில் அச்சிடப்பட்டு ஆர். நாராயணஸ்வாமி ஐயரால்  1933-இல் வெளியிடப்பட்டுள்ளது. "அதில்  முதல் கட்டுரையாக வெளிவந்திருப்பது அவர் 29.10.1932-இல் வழங்கிய உபன்யாசமாகும். அதன் தலைப்பு, "சமஸ்கிருதப் பாஷாப் பிரயோஜனம்' என்பதாகும். அதில், நம் தேசத்தில் முன் பேசப்பட்ட பாஷைகள், பாலி, மாகதி முதலிய பாஷைகளே தவிர ஸமஸ்கிருதமல்ல.

சமஸ்கிருதம்

  • ஆனால், சமஸ்கிருதம் எல்லாப் பாஷைகளிலும் கலந்திருக்கிறது ப.2.
    "நாம் இறந்த பிறகு தேவலோகம் சென்றால் அவர்கள் பாஷையைப் படிக்காவிட்டால் எப்படி அவர்களுடன் பேசமுடியும்?' பக்.2-3.
    "எந்தத்   தேசத்திலும் எந்தக் காலத்திலும் சமஸ்கிருதம் தேசபாஷையாகப் பேசப்படவில்லையென்று தெரிகிறது.' (ப.4).
    • வடமொழி, செம்மொழி என்பதையும் சிறப்புக் காரணமாகச் சொல்ல இயலாது. ஏனெனில்,  தமிழ் (2004), கன்னடம் (2008), தெலுங்கு (2008), மலையாளம்(2013) ஆகிய மொழிகளுக்கும் செம்மொழி அறிந்தேற்பை இந்திய அரசு வழங்கியுள்ளது. அதிலும் 2005-இல் வடமொழிக்குச் செம்மொழி அறிந்தேற்பு வழங்கப்படும் முன்பாகவே  தமிழுக்கு 2004-ஆம் ஆண்டிலேயே செம்மொழி அறிந்தேற்பு வழங்கப்பட்டுள்ளது.
    • மத்திய அரசின் முழு நிதி உதவியில் இயங்கும் வடமொழிப் பல்கலைக்கழகங்கள் போல் பிற செம்மொழிகளுக்கு மத்திய அரசின் முழு நிதியுதவியுடன்  விளங்கும்  பல்கலைக்கழகங்கள்  இல்லை. 
    • செம்மொழித் தமிழுக்கென்று உருவாக்கப்பட்ட மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இயக்குநர் உள்பட ஒருவர்கூட நிரந்தரப் பணியாளராக இல்லாமல் நிறுவனம் முடங்கிக் கிடக்கிறது.
    • மற்ற மொழிகள் மாநிலத்தில் ஆட்சிமொழியாக உள்ளன. எனவே, மாநில அரசு விருப்பத்திற்கேற்ப அந்தந்த மொழிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யலாம். அப்படி ஒரு நிலை வடமொழிக்கு இல்லை என்பதால் மத்திய அரசு நிதி ஒதுக்குவதாக முன்பு சொல்லப்பட்டு வந்தது. ஆனால், 2000-இல் இந்தியாவின் 27-ஆவது மாநிலமாக உத்தரகண்ட்  உருவாக்கப்பட்டு அந்த மாநிலத்தின் இரண்டாவது ஆட்சிமொழியாக வடமொழி ஆகியிருக்கிறது.  
    • இந்தியாவில் உத்தரகண்ட் மாநிலத்தில் மட்டும் இரண்டாவது ஆட்சிமொழியாக உள்ளது என்பது வடமொழிக்கு மூன்று மத்தியப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுவதை நியாயப்படுத்தும் சிறப்புக் காரணமாக இல்லை.
    • இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, நல்லிணக்க  வாழ்க்கைமுறை, பண்பாட்டுப் பொறுப்புணர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து வளர்க்க வழிகாணும் வகையில் மத்தியப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
    • மொழிசார் பல்கலைக்கழக மாணவர்கள் பிற மொழிப் பல்கலைக் கழகங்களில் ஓராண்டு தங்கிப் படிப்பதைக் கட்டாயப்படுத்தும் வகையில் வசதிகளோடு மத்தியப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதன்வழி மொழிப்பகை  வளர இடம் இல்லாமல் ஆக்கலாம்.
    • இந்திய மொழிகள் உரிமை இழக்காமல் சுய மரியாதையோடும் மதிப்போடும் மக்களின் பண்பாட்டு மொழிகளாக மட்டுமின்றிப் பயன்பாட்டு மொழிகளாகவும் விளங்குவதற்கு உறுதியளிக்க, ஒரு குறிப்பிட்ட மொழிக்கு மட்டுமான சிறப்புச் சலுகைகள்  தவிர்க்கப்பட வேண்டும்.  அப்போதுதான் மொழிக்கான சமஉரிமை கோரிக்கை, அந்தந்த மொழி பேசும் மக்களின் சம உரிமை கோரிக்கையாக மாறுவதைத் தடுக்க முடியும்.
    • இணக்கமாக வாழ்தல் என்பது, உரிமை இழந்து வாழ்தல் இல்லை; இது மனிதர்களைப்போலவே மொழிகளுக்கும் தேவைப்படுகிறது. ஏனெனில், மொழிகள் இல்லாமல் மனிதர்கள் இல்லை; மனிதர்கள் இல்லாமல் மொழிகளும் இல்லை.  

நன்றி: தினமணி (19-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்