TNPSC Thervupettagam

பல்கலைக்கழக விதிகளில் மீளாய்வு தேவை!

June 24 , 2021 1134 days 504 0
  • கல்விதான் மனிதனுக்கு நிறையழகு. ஆனால், வாழ்க்கை முழுதும் கல்விக்கு உரிய பருவமன்று. பள்ளிக்கல்வியைத் தொடர்ந்து பெறும் உயர்கல்வியானது, ஒவ்வொரு மாணவனுக்கும் திருப்புமுனையாகும்.
  • வாழ்க்கையில் செல்லவேண்டிய திசையைத் தெரிந்துகொள்ளும் பருவமாகும். தனது தகுதிக்கும் தன்னம்பிக்கைக்கும் ஏற்ப பட்டப்படிப்பைத் தேர்வு செய்பவர் வாழ்வின் இலக்கை எட்டுவர்.
  • உயர்கல்வி பெறவேண்டிய வயது 18 முதல் 23 ஆகும். இந்திய மக்கள்தொகையில் இந்த வயதுடையோர் ஏறத்தாழ 15 கோடி பேர்.
  • இவர்களுள் 2019-இல் 3.74 கோடி மாணவர்களும், 2020-இல் 3.85 கோடி மாணவர்களும் உயர்கல்வியில் இணைந்துள்ளனர். ஆண்டுதோறும் மாணவர்தொகை கூடிக்கொண்டே வருகிறது.
  • இந்தியாவின் 28 மாநிலங்களுள் உத்திர பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை கூடுதலாகும்.
  • தன் வாழ்க்கை வளத்திற்கும், தான் சார்ந்துள்ள நாட்டின் செழுமைக்கும் உரியவர்கள் இளைஞர்கள். அவர்களுக்கான உயர்கல்வியின் தரம் பாதுகாக்கவும், உயர்த்தப்படவும் வேண்டாமா? உயர்கல்வியைக் கட்டமைத்து நெறிப்படுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் பல்கலைக்கழகங்களைச் சாரும்.
  • பல்கலைக்கழகங்களின் செயல்திறன், மாணவர்களுக்கான பாடத்திட்டம், ஆய்வுத்திட்டப் பணிகள் ஆகியவை குறிப்பிட்ட கால இடைவெளியில் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
  • பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கல்வி வளர்ச்சி, நிருவாகத்திறன் குறித்த ஆய்வு நடத்தப் பட்டு, அதன் முடிவுகளும் பெறப்பட்டு, எதிர்கால செயல்திறன்களை உருவாக்குதல் தகும். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இவ்வாறான நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

பல்கலைக்கழகங்களின் இயக்கம்

  • திமுக அரசு 2000-த்தில் பொதுப்பல்கலைக்கழக சட்டவரைவு கொண்டுவர முயன்றது. வல்லுநர் குழு ஆராய்ந்து அறிக்கையும் தந்தது. அந்த அறிக்கை இன்றுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. உயர்கல்வியின் தரம் மேம்படுவதற்கு சில கட்டமைப்புகளை வளர்நோக்கில் புதுப்பித்தல் நலம் பயக்கும்.
  • கல்வி நிறுவனத்தின் தலைவரான துணைவேந்தரின் கொள்கைவகுப்புத் திறன் அடிப்படையில் இயங்குவதே பல்கலைக்கழகம்.
  • கல்விசார்ந்த - சாராத பணிகளுக்கான வளர்ச்சிக்குத் திட்டமிடுபவர் துணைவேந்தரே.
  • அவர் கல்விப்புலத்திலும் ஆய்வுத்திறத்திலும் சிறந்து விளங்குவதோடு சமூக அக்கறை, தொலைநோக்குச் சிந்தனை, உலகலாவிய பார்வை, அரவணைத்துச் செல்லும் பண்பு, முடிவெடுக்கும் திறன், ஒருசார்பு கொள்ளாமை, கடமையில் கண்டிப்பு, திறனாளர்களைத் தெரிவு செய்யும் நுட்பம் போன்ற அருங்குணங்கள் நிரம்பப் பெற்றிருப்பது விரும்பத் தக்கது.
  • பல்கலையின் வளர்ச்சி துணைவேந்தரின் ஆளுமைத்திறனைச் சார்ந்து அமையப்பெறும்.
  • அறிஞர் மால்கம் ஆதிஷேசய்யா சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய போது, பல்கலைக்கழகத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் சென்றவர்.
  • அறிஞர் பொற்கோ துணைவேந்தர் ஆனவுடன் 15 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பினார். பல்கலைக்கழகத்திற்கு ஐந்து நட்சத்திர மதிப்பீடு பெற்றுத்தந்தார்.
  • பின்னாளில் அறிவியல் ஆய்வறிஞர் எஸ்.பி. தியாகராஜன் அறிவியல் துறைகளை வளர்த்தெடுத்து வழிகாட்டினார். கர்னல் திருவாசகம், பல்கலைக்கழகப் பதிப்புத்துறைக்குப் புத்துயிர் தந்தவர். அறிஞர் அ. சிதம்பரநாதன் செட்டியாரின் உலகத் தரம் வாய்ந்த ஆங்கில அகராதியை மறுபதிப்பு செய்தவர்.
  • தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வடிவமைத்தவர் அறிஞர் வ.அய். சுப்பிரமணியம். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான அறிஞர் மு. ஆனந்தகிருஷ்ணன் பொறியியல் படிப்புக்கான தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக்கத்திற்கு வித்திட்டவர்.
  • அழகப்பா பல்கலைக்கழகத்தை வடிவமைத்தவர் ராதா தியாகராஜன்; புதுவைப் பல்கலைக் கழகம் உருவாகும்போது பெரும் பங்களிப்பு செய்தவர் முனைவர் வேங்கட சுப்பிரமணியம். பின்னாளில் வளர்பணிகளை மேற்கொண்டவர் அறிஞர் ஞானம்.
  • இதுபோன்று தமது சிந்தனைத் திறத்தாலும், உழைப்பாலும் நிறுவனங்களை வளர்த்தெடுத்த பெருமைக்குரியோர் பலர் உளர். அவ்வாறான அறிஞர்களைக் கண்டறிந்து துணைவேந்தர்களாக நியமித்தால் கல்விப்பணி சிறக்கும்.

நயம்

  • பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆசிரியர்களிடையே குழுமனப்பான்மை துளிர்விட்டு வளர்ந்துவிட்டது. சாதி அரசியல் வெளிப்படையாக நிகழ்கின்றது. அது கொடுநோய்க்கு ஒப்பானது. நிருவாகத்தின் நாடிநரம்புகளில் தொற்றிக்கொண்டு வளர்ச்சிப் பணிகளைப் பாதிக்கிறது.
  • அந்நோய் மாணவர்களிடமும் விதைக்கப்படுவது வேதனைக்குரியது. ஒற்றுமை, ஒருமைப்பாடு, நாட்டுப்பற்று, மொழிப்பற்று போன்ற வாழ்வியல் விழுமியங்களைக் கற்றுத் தரவேண்டிய ஆசிரியர்கள் மாணவர்களின் போராட்டத்திற்கும் வன்முறைக்கும் துணைபோகும் நிலை மனத்தை நெருடலாக்குகிறது.
  • எதிர்காலத்தில் தாய்நாட்டைப் பாதுகாத்து வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுசெலுத்தும் திறன்கொள் மாணவர்களை உருவாக்கும் பணியை மேற்கொள்ள முழுத்தகுதியுடையோர் ஆசிரியர் அல்லவா? அவர்கள் அந்தக் கடமையிலிருந்து நழுவுதல் தகுமா?
  • சிலர் வாரத்திற்கு பதினாறு மணிநேரம் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது மட்டுமே தம் கடமையென்று கருதுகின்றனர்.
  • சமுதாயத்திற்கும் மொழிக்கும் பயன்படும் வகையிலான ஆய்வுகளை மாணவர்களைக் கொண்டு உருவாக்கும் திறன் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
  • கற்பித்தல் பணியோடு ஆய்வுத்திட்டப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் விழைவு ஆசிரியர்களிடம் மேலோங்க வேண்டும்.
  • உலகமயமாக்கல் வலுப்பெற்று கணினி வழியும், இணைய வழியும் கற்றல் - கற்பித்தல் முறைகளில் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன.
  • அதற்கேற்ப மாணவர்களிடம் அத்திறன்களை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கானது என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.
  • உலகப் பல்கலைக்கழகங்களோடு மாணவர் பரிமாற்றம், ஆசிரியர் பரிமாற்றம், ஆய்வுப் பணிகளைப் பகிர்ந்துகொள்ளுதல் போன்ற பல புதிய முயற்சிகள் வேர்விட்டுத் தழைக்கத் தொடங்கியுள்ளன. ஆசிரியர்கள் அதனைத் தக்கவைத்துக்கொள்வது நயமாகும்.

நினைவில் கொள்ளத்தக்கது

  • பல்கலைக்கழக நிருவாகச் சிக்கல்களைக் களைந்து தீர்வு காணவேண்டியதும், நிதிநெருக்கடியைச் சரிசெய்து நிருவகிக்க வேண்டியதும் துணைவேந்தர்களே.
  • கல்விசார் பணிகளை அவ்வப்போது ஆய்வுசெய்து அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு கல்விப்பணிகள் சிறக்க சிந்திக்க வேண்டியவர்களும் அவர்களே.
  • இவ்வாறான பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து இணைப்புக் கல்லூரிகளையும் வழி நடத்திச் செல்லவேண்டிய மிகப்பெரும் கடமையும் உண்டு.
  • எனவே, இப்பணிகளைச் செய்து முடிப்பதற்குத் துணைவேந்தருக்கு மூன்றாண்டு பணிக் காலம் என்பது மிகக்குறைவு. தான் திட்டமிட்ட பணிகளைச் செய்துமுடிப்பதற்குக் குறைந்தது ஐந்து ஆண்டுகள் தேவை.
  • எனவே, பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளாக உயர்த்துவது பொருத்தமாகும்.
  • நடுவண் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவி ஐந்தாண்டுகள் என்பது குறிப்பிடத் தக்கது. அவ்வாறு மூன்றாண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு உயர்த்தும் போது, அடிக்கடி துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படுவதைத் தவிர்க்கலாம்.
  • ஒரு துணைவேந்தர் பணி ஓய்வு பெறும் அன்றே புதிய துணைவேந்தர் பதவியேற்க வேண்டும் என்னும் விதி உருவாக்கப்பட வேண்டும்.
  • ஒரு துணைவேந்தர் விடுப்பில் இருக்கும்போதோ அயல்நாடு செல்லும்போதோ நிருவகிப்பதற்குக் குழு அமைக்கும் முறையைக் கைவிட வேண்டும். இம்முறை தேவையற்ற குழப்பங்களையே விளைவிக்கும்.
  • துணைவேந்தர் இல்லாதபோது அவரது பணிகளை மேற்கொள்வதற்கு அதே பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசிரியர் ஒருவரை ஆட்சிக்குழுவின் ஒப்புதலோடு நிகழ்நிலை துணைவேந்தராக (ஆக்டிங் வைஸ் சான்ஸலர்) நியமிக்கலாம் (அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எட்டுமுறை நிகழ்நிலை துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார்).
  • ஆசிரியர்களின் பணிநிறைவு வயதை 65 ஆகவும், துணைவேந்தர்களின் பணிநிறைவு வயதை 70 ஆகவும் கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
  • தமிழக அரசு துணைவேந்தர்களுக்கான வயதுவரம்பை மட்டும் கருத்தில் எடுத்துக் கொண்டு சட்டம் இயற்றியுள்ளது.
  • தமிழகத்தில் கல்லூரி ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் ஓய்வு வயது 58-இல் இருந்து 60-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, பல்கலைக்கழக ஆசிரியர்களின் வயது வரம்பும் உயர்த்தப்ப டுவதுதான் அறம்.
  • நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக ஆசிரியர்களின் பணிநிறைவு வயதினை 62 அல்லது 65-ஆக உயர்த்துவது வரவேற்கத்தக்கது.
  • இந்தியாவில் ஆந்திரம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், மிசோரம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வுவயது 62-ஆக உள்ளது.
  • பஞ்சாப், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், மணிப்பூர், சிக்கிம், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஓய்வு வயது 65 என நடைமுறையில் உள்ளது.
  • தமிழ்நாடு உட்பட பிற பதினான்கு மாநிலங்களில் மட்டுமே பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வுவயது 60-ஆக உள்ளது.
  • இவற்றுள்ளும் ராஜஸ்தான், கர்நாடகம், ஜம்மு - காஷ்மீர், குஜராத், அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் ஓய்வு வயதை 65-ஆக உயர்த்த வேண்டும் என்னும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

நன்றி: தினமணி  (24 - 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்