பல்லுயிர் காக்கும் உறுப்பு தானம்!
- ஒரு வருடத்தில் நம் நாட்டில் மாற்று உறுப்பு கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வருடத்துக்குச் சுமார் 5 லட்சம் பேர் என்கிறது சமீபத்திய ஆய்வு. வருடத்துக்குக் கல்லீரல் கிடைக்காமல் இறப்பவர்கள் 2 லட்சம் பேர். இதயம் கிடைக்காமல் இறப்பவர்கள் 50 ஆயிரம் பேர். இது தவிர உறுப்புகள் முழுச்செயல்பாட்டில் இல்லாமல் போராடுபவர்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். கார்னியா கிடைக்காமல் 10 லட்சம் பேர் பார்வை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். வருடத்துக்கு 5 லட்சம் பேருக்கு மாற்றுச் சிறுநீரகம் தேவைப்படுகிறது. ஆனால், கிடைப்பதோ 5,000 மட்டுமே. கல்லீரல் 500 பேருக்குக்கூட கிடைக்கவில்லை.
- உறுப்பு தானத்தின் அவசியத்தை உணர்ந்து 1994ஆம் ஆண்டிலேயே இதற்கெனத் தனிச் சட்டம் இயற்றி, உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டது மத்திய அரசு. என்றாலும், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நம் மக்களுக்கு எட்டவில்லை. 2008, செப்டம்பர் 23இல் சென்னையில் அசோகன் மற்றும் புஸ்பாஞ்சலி எனும் டாக்டர் தம்பதியரின் மகன் ஹிதேந்திரன் ஒரு விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்தபோது, அவரது உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுத்த பிறகுதான் தமிழ்நாட்டில் ஓரளவுக்காவது உறுப்பு தானத்தின் மகிமை உணரப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ஐ மாநில உடல் உறுப்பு தான தினமாகக் கொண்டாடப்படுகிறது.
- ஒரு தனியார் செய்தி நிறுவனம், உறுப்பு தானம் குறித்து நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ள மூன்று விஷயங்கள் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. முதலாவது, அநேகம் பேர் உடல் தானத்தையும் உறுப்பு தானத்தையும் குழப்பிக்கொள்கின்றனர். இரண்டாவது, கண் மற்றும் சிறுநீரகத்தைத் தானமாகத் தரலாம் என்பது மட்டுமே பலருக்கும் தெரிந்திருக்கிறது; உடலின் பல உறுப்புகளைத் தரமுடியும் என்பது தெரியவில்லை. மூன்றாவது, உறுப்பு தானத்தை யார், எங்கு, எப்படிச் செய்வது என்பது முக்கால்வாசிப் பேருக்குத் தெரியவில்லை.
எது உறுப்பு தானம்?
- ஒருவர் இயற்கையாக இறந்த பிறகு, அவரது முழு உடலையும் மருத்துவ மாணவர்களின் கல்விக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் கொடுப்பது உடல் தானம். இவர்களின் கண்களை மட்டும் 6 மணி நேரத்துக்குள் எடுத்து, மற்றவர்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். மாறாக, மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடலில் இருந்து உறுப்புகளை எடுத்து, மற்றவர்களுக்குப் பயன்படுத்துவது உறுப்பு தானம்.
- இதயம், கண், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், கணையம், குடல், தோல், எலும்பு, இதய வால்வு, ரத்தக்குழாய் என ஒருவரே பல உறுப்புகளைத் தானமாகத் தரலாம். ஒருவர் செய்யும் உறுப்பு தானத்தால், ஒரே நேரத்தில் 14 பேர் பலன் அடைகின்றனர். உயிரோடு இருக்கும்போது சிறுநீரகம், எலும்பு மற்றும் கல்லீரலின் ஒரு பகுதியைத் தானமாகத் தரலாம். இதன் முழு விவரங்களுக்கு கூகுளில் (www.organdonor.gov)ஐ சொடுக்குங்கள்.
- உறுப்பு தானத்தில் முறைகேடுகளைத் தடுக்கவும், இடைத் தரகர்களுக்கு இடம்தராமல் இருக்கவும் தமிழ்நாடு அரசின் உறுப்பு தானத் திட்டம் 2008இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 60க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இணைந்துள்ளன. இந்த மருத்துவமனைகளில் யாருக்கேனும் மூளைச்சாவு ஏற்பட்டால், உடனே உறுப்புதான ஒருங்கிணைப்புக் குழுவுக்குத் தெரிவிப்பார்கள். இக்குழுவில் உள்ளவர்கள் அந்த மருத்துவமனைக்குச் சென்று, மூளைச்சாவு ஏற்பட்டவரின் உறவினரிடம் பேசி அவர்களின் சம்மதம் கிடைத்ததும் அதற்கான உறுதிமொழிக் கடிதத்துடன் உறுப்புகளைப் பெற்றுக்கொள்வார்கள்.
- உடல் உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகள் மருத்துவமனை மூலமாக ஏற்கெனவே இந்தத் திட்டத்தினரிடம் ரூ.1000 கட்டணம் செலுத்திப் பதிவுசெய்திருப்பார்கள். பதிவுசெய்து காத்திருப்பவர்களுக்கு முன்பதிவு அடிப்படையில் உடல் உறுப்புகள் வழங்கப்படும். பொதுவாக, இதயத்தை 2 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்துக்குள்ளும், கல்லீரலை 8 மணி நேரத்துக்குள்ளும் பொருத்திவிட வேண்டும். சிறுநீரகத்தைச் சரியான முறையில் பதப்படுத்திக்கொண்டால் 12 மணி நேரத்துக்குத் தாங்கும். உறுப்புகளை எடுப்பதைவிட முக்கியமானது, எடுத்த உறுப்பைச் சரியான நேரத்துக்குள் அடுத்தவருக்குப் பொருத்துவது.
உறுப்பு தான அட்டை!
- உறுப்பு தானம் செய்ய வயது தடையில்லை. எய்ட்ஸ் மற்றும் ஹெபடைடிஸ் பி, சி நோயாளிகள் உறுப்பு தானம் செய்யமுடியாது. உறுப்பு தானம் செய்ய விரும்புவோர் ‘டோனர் கார்ட்’ எனும் அடையாள அட்டையைத் தமிழ்நாடு அரசு இதற்கென்றே அமைத்துள்ள இணைய தளத்திலிருந்து (www.tnos.org) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- இந்த அட்டையில் பெயர், ரத்த வகை, எந்த உறுப்பைத் தானம் செய்ய விருப்பம் போன்ற விவரங்கள் இருக்கும். இதை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் உறுப்பு தானம் செய்ய விரும்புவதை அவர் வீட்டிலும் சொல்லிவிட வேண்டும். அப்போதுதான் உறுப்பு தான ஒருங்கிணைப்புக் குழுவினர் உறுப்பு கேட்டு வரும்போது உறவினரின் சம்மதம் கிடைப்பதில் சிரமம் இருக்காது. உறுப்பைப் பெறுவதில் ஏற்படும் தாமதத்தையும் தவிர்க்கலாம்.
தடைகள் என்னென்ன?
- உலக அளவில் உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் ஸ்பெய்னில் ஒரு லட்சம் பேரில் 400 பேரும், இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 8 பேர் மட்டுமே உறுப்பு தானம் செய்ய தயாராக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் 13 பேர். என்ன காரணம்?
- ஆண்டாண்டு காலமாக நம் வாழ்வியல் கலாச்சாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சில மூடநம்பிக்கைகள்தான் முக்கியத் தடைகள். உறுப்பு தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துவிட்டால், மருத்துவமனைகளில் வேண்டும் என்றே சரியான சிகிச்சை கொடுக்காமல் இறப்புக்கு வழிசெய்துவிடுவார்களோ என்ற பயமும் பலரைத் தடுக்கிறது. இந்த இரண்டையும் நாம் கடந்து வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
என்ன செய்ய வேண்டும்?
- தனியார் மருத்துவமனைகளோடு ஒப்பிடும்போது 5%கூட அரசு மருத்துவமனைகளில் நடப்பதில்லை. உறுப்பு தான மாற்றுச் சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தச் சிகிச்சைக்குப் பெறப்படும் உறுப்புகளுக்கு இவர்கள் பணம் பெறுவதில்லை. ஆனால், அதற்கான சிகிச்சைக் கட்டணங்கள் சில லட்சங்களுக்குக் குறையாது. இதனால், வசதி படைத்தவர்கள் மட்டுமே பயனடைகின்றனர்.
- அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு உறுப்புகள் கிடைப்பதில்லை. இந்தக் குறைகளைச் சரிசெய்யும் விதமாக இந்த மையங்களை அமைப்பதற்கு அரசு ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டும். இப்போது உறுப்பு தான அறுவைச் சிகிச்சை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையிலும் மட்டுமே செய்யப்படுகிறது.
- நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அனைத்திலும் உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டியது அரசின் கடமை. அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் எல்லாவற்றிலும் உறுப்புகளைத் தானமாகப் பெற்று, அவற்றை முறைப்படி பாதுகாத்து வைப்பதற்கு உண்டான வசதிகளையும் அரசு செய்துதர வேண்டும்.
- உறுப்பு தானம் தொடர்பான கருத்துகளைப் பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி சமூகத்தின் எல்லா மூலைகளுக்கும் அரசு எடுத்துச்செல்ல வேண்டும். சமூக வலைதளங்களை இதற்கு முக்கியமான கருவியாகப் பயன்படுத்தலாம். மேலை நாடுகளில் 18 வயது நிரம்பியதும் ஓட்டுனர் உரிமம் தரும்போது, அதில் உறுப்பு தானம் செய்ய விருப்பமா எனக் கேட்டு, குறித்துக் கொடுத்துவிடுகின்றனர். இதை நாமும் பின்பற்றலாம்.
- உறுப்பு தானம் செய்பவர்களை உற்சாகப்படுத்த சமூகத்துக்கு அவர்களுடைய மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் செயல்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இஸ்ரேல் நாட்டில் உறுப்பு தானம் செய்பவரின் குடும்பத்தினருக்கு ஊதியத்தில் ஊக்கத் தொகை அளிக்கின்றனர். இன்னும் சில மேலை நாடுகளில் அவரின் குடும்பத்தினருக்கு மருத்துவச் சிகிச்சைகள் இலவசம். இப்படி அவரின் குடும்பத்துக்கு அளிக்கப்படும் முன்னுரிமையும் சலுகையும் அவர்களைத் தனித்துக் காட்டும். இது மேலும் பலரை ஈர்க்கும். பல உயிர்களைக் காக்கும்!
- தற்போது தமிழ்நாட்டில், இறந்துபோனவர்கள், குறிப்பாக மூளைச்சாவு அடைந்தவர்கள் தங்களுடைய உடலுறுப்புகள் தானம் செய்கிற வகையில் அவரது உற்றார் உறவினர்கள் அனுமதிக்கும் பட்சத்தில், உடலுறுப்பு தானம் செய்தவருடைய உடலுக்கு, அதாவது மூளைச்சாவு அடைந்தவருடைய உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படுகிறது.
- (ஆகஸ்ட் 13 – தேசிய உறுப்பு தான தினம்)
நன்றி: அருஞ்சொல் (22 – 09 – 2024)