பல்லுயிர் பாரம்பரிய தலத்தில் டங்ஸ்டன் சுரங்கமா?
- வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குப் பயணம் செய்வதில் எனக்குப் பெருவிருப்பம் உண்டு. மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள அரிட்டாபட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் மட்டுமல்ல. அது ஒரு பல்லுயிர்ப் பாரம்பரியத் தலம் என்கிற புரிதலை ஏற்படுத்தி, அரிட்டாபட்டிக்குத் தொடர்ந்து பயணம் செய்வதற்கான உந்துதலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியவர் மறைந்த சூழலியல் ஆர்வலர் ரவி.
- மலைக் குன்றுகளாலும் நீர்நிலைகளாலும் சூழப்பட்டிருக்கும் அரிட்டாபட்டிக்கு எத்தனை முறை பயணம் செய்தாலும், ஏதோ ஒரு புதிய அம்சத்தை அந்த ஊரும் அந்த ஊரைச் சுற்றி இருக்கக்கூடிய பல்லுயிர் வாழிடமும் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. அரிட்டாபட்டியில் இருக்கும் புகழ்பெற்ற குடைவரைக் கோயிலையும் சமணர் படுக்கை யையும் பார்க்கச் சென்றிருந்தோம். அரிட்டா பட்டி, அவற்றைச் சுற்றியுள்ள குன்று களிலும் ஊர்களிலும் உள்ள இயற்கை, சூழலியல் சார்ந்த பிரச்சினைகனையும் அது தொடர்பான பல விஷயங்களையும் கற்றுக்கொடுத்தது.
முதல் பல்லுயிர்ப் பாரம்பரியத் தலம்:
- பொ.ஆ.மு. (கி.மு.) மூன்றாம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. (கி.பி.) 17ஆம் நூற்றாண்டு வரையிலான தொடர்ச்சியான ஆதாரப் பூர்வமான வரலாற்றைக் கொண்டது அரிட்டாபட்டி. இந்த ஊரில் 2200 ஆண்டு காலப் பழமை யான குடைவரைக் கோயில், தொடர்ச்சியான ஏழு சிறு குன்றுகள், 72 ஏரிகள், 200 இயற்கைக் குளங்கள், மூன்று தடுப்பணைகள் போன்றவை இருக்கின்றன. உலகில் உள்ள பறவைகளில் வேகமாகப் பறக்கக்கூடியது சிவப்பு வல்லூறு என்று அழைக்கப்படும் ஷாஹீன் பால்கன். மணிக்கு 389 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய இந்தச் சிவப்பு வல்லூறு மதுரை மாவட்டத்தில் மேலூர் தாலுகாவில் உள்ள அரிட்டாபட்டிக்கு வருகிறது.
- அழிந்து வரும் அரிய வகைப் பறவையினமான லகுடு வல்லூறு இந்தியாவில் ராஜஸ்தான், அரிட்டாபட்டி ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே தென்படுகிறது. இந்தியாவின் முதல் ராணுவ விமானத்திற்கு அரிய வகை ராஜாளிக் கழுகின் பெயரே சூட்டப்பட்டது. இந்த அரிய வகை ராஜாளிக் கழுகுகள் அரிட்டாபட்டி குன்றுகளில் வாழ்கின்றன.
- இந்த ஊரைச் சுற்றி அமைந்துள்ள ஏழு குன்றுகளில் 20 வகையான கழுகு இனங்கள் வாழ்ந்துவரு கின்றன. இப்படி அரிட்டாபட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளின் பல்லுயிர்ச் சிறப்பைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். வரலாற்று முக்கியத்துவமும் பல்லுயிர் முக்கியத்துவமும் வாய்ந்த அரிட்டாபட்டியை அங்கீகரிக்கும் வகையில், அக்கிராமத்தை தமிழக அரசு தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர்ப் பாரம்பரியத் தலமாக 2022ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.
டங்ஸ்டன் சுரங்கம்:
- இந்த ஊரை மையமிட்ட டங்ஸ்டன் திட்டம் சார்ந்த சமீபத்திய அறிவிப்புகளும் முன்னெடுப்புகளும் மதுரை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அரிட்டாபட்டி, சுற்றியுள்ள ஏழு குன்றுகள், அருகில் இருக்கும் ஊர்கள் என்று 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் எடுப்பதற்கான சுரங்கம் அமைக்கும் பணிக்காக ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தினை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
- வரலாற்றுப் புராதனச் சின்னங்கள், பல்வேறு அரிய உயிரினங்கள் வாழக்கூடிய பல்லுயிர் தலத்திற்கு இப்படி ஒரு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதற்கு எதிராக மேலூர் தாலுகாவில் உள்ள 48 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து போராடத் தொடங்கியுள்ளனர்.
மக்கள் எதிர்ப்பு:
- டங்ஸ்டன் கனிமத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கம்பூர் செல்வராஜ் கூறுகையில், “டங்ஸ்டன் சுரங்கம் ஏற்படுத்தப்படுவதற்கு 20 ஆவணங்கள் பல்வேறு அரசுத் துறைகளிடம் இருந்து பெற வேண்டியுள்ளது. அதில் ஒன்று கிராமசபைத் தீர்மானம். சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றை மாநில அரசு கொடுக்க வேண்டும். இதுவரை மாநில அரசின் எந்தத் துறைக்கும் அது சார்ந்த விண்ணப்பம் வரவில்லை என்று தமிழ்நாடு அரசு கூறுகிறது.
- அரிட்டாபட்டி, சுற்றியுள்ள பகுதியில் இருக்கக்கூடிய நில அளவு, சூழலியல் தகவல்கள், மக்கள்தொகை எண்ணிக்கை, தொழில் சார்ந்த தகவல்கள் தொகுக்கப்பட்டு மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆய்வு அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
- இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர்ப் பாரம்பரியத் தலமான அரிட்டாபட்டி அழியும். சுற்றுச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டால் இயற்கை நீர்ச்சுனைகள் வற்றிப்போகும். இப்பகுதியின் உயிர்ப்பன்மை பாதிக்கப்படும், சூழலியல் சமநிலை பாதிக்கப்படும். சுரங்கப் பணி களுக்குப் பயன்படுத்தப்படும் வேதிப் பொருள்கள் மண்ணையும் நீர்நிலைகளையும் மாசுபடுத்தும். சுரங்கத்திலிருந்து வெளி யேற்றப்படும் கந்தக அமிலம், நீரில் உள்ள அமில-கார சமநிலையைக் குறைக்கும். இதன் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள தண்ணீர் பயன்படாத நீராக மாறிவிடும். காற்று மாசுபடும்.
- எல்லாவற்றையும்விட ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயத்தை நம்பி இருக்கக்கூடிய உள்ளூர் மக்களை அவர்களின் இடத்தை விட்டு விரட்டுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்குத் தமிழ்நாடு அரசு எந்த அனுமதியும் அளிக்கக்கூடாது என அரிட்டாபட்டி, சுற்றியுள்ள 48 கிராமங்களின் கிராம சபைகளில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருக்கிறது.
- அதில், “மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் நிலக் கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் தனது 2.11.2023 நாளிட்ட கடிதத்தில் நாட்டின் நலனுக்காகச் சுரங்க அமைச்சகத்தின் முக்கிய மான கனிமங்களை ஏலம் விடுவதைத் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டு தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்து இருந்தார்” என்று முதல்வர் கடிதத்தில் குறிப்பிட் டுள்ள வார்த்தைகள் மதுரை மாவட்ட மக்களின் போராட்டமும் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடும் மத்திய அரசினை நேர்மறையான அணுகுமுறைக்குத் தயார்படுத்துமா என்கிற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 12 – 2024)