TNPSC Thervupettagam

பல்லுயிர் வாழ்நிலையே வாழ்வாதாரம்!

May 22 , 2020 1700 days 1873 0
  • பல்லுயிர் வாழ்நிலை என்பது நிலம், கடல், பிற நீா்நிலைகள் உள்பட பூமியில் வாழும் பல்வகை உயிரினங்களை உள்ளடக்கியது.
  • மரபணு ரீதியான பன்முகத்தன்மை (உயிரினங்களுக்குள்), உயிரின பன்முகத்தன்மை (உயிரினங்களுக்கிடையே), சுற்றுச்சூழல் அமைப்பு பன்முகத்தன்மை ஆகிய மூன்று நிலைகளைக் கொண்டது பல்லுயிர் வாழ்நிலை.
  • பூமியில் மனிதகுலம் உருவானதையும், வாழ்வதையும் பல்லுயிர் வாழ்நிலை உறுதி செய்கிறது. இந்த உலகுக்குப் பல்லுயிர் வாழ்நிலையால் ஒவ்வோர் ஆண்டும் கிடைக்கும் லாபத்தின் மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய்கள் ஆகும்.
  • உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்குவது கடல், கடலோரப் பகுதிகளின் பல்லுயிர் வாழ்நிலைதான்.
  • உலகின் ஒட்டுமொத்த பரப்பளவில் 71% கடல் பகுதியாகும். உலகின் உயிரினங்கள் வாழக் கூடிய பகுதிகளில் கடல் பகுதியின் அளவு 90% ஆகும்.
  • மாங்குரோவ் காடுகள், பவளப் பாறைகள், கடல் புற்கள், கடல் களைகள் எனக் கடல் பகுதிகளிலும் காணப்படும் பல்லுயிரினங்களில் பல, நலிவடைந்த சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க உதவுகின்றன.

இந்தியாவில் பல்லுயிர் வாழ்நிலை

  • இந்தியாவில் மொத்தம் 7,500 கி.மீ. நீளத்துக்கு கடலோரப் பகுதிகள் உள்ளன. இதில் 5,400 கி.மீ. நீள கடற்கரை தென்னிந்திய தீபகற்ப பகுதியிலும், மீதமுள்ளவை அந்தமான், நிகோபார், லட்சத்தீவு கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
  • உலகின் கடலோரப் பகுதிகளில் 0.25% மட்டுமே இந்தியாவில் உள்ளன என்ற போதிலும், கடலோரப் பகுதிகளில் வாழும் பல்லுயிரினங்களில் 11% இந்தியாவில் தான் உள்ளன.
  • இந்தியாவில் கடலோரப் பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது மீன்பிடித் தொழிலாகும்.
  • இந்திய கடல்பகுதியில் பவளப் பாறைகள், மாங்குரோவ் காடுகள் கடல்புற்கள், கடல் களைகள், உப்பளங்கள், மணல் குன்றுகள், கழிமுகத்துவாரங்கள் முதலானவை உள்ளன.
  • இந்திய கடலோரப் பகுதியில் மொத்தம் நான்கு வகையான பவளப் பாறை பகுதிகள் உள்ளன.
  • வடமேற்குப் பகுதியில் கட்ச் வளைகுடா, தென் கிழக்குப் பகுதியில் பாக் நீரிணை, மன்னார் வளைகுடா கிழக்குப் பகுதியில் அந்தமான், நிகோபார் தீவுகள், மேற்குப் பகுதியில் லட்சத் தீவுகள் ஆகியவைதான் அந்த நான்கு பவளப் பாறை பகுதிகள் ஆகும்.
  • இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிவரங்களின்படி 4,827 சதுர கி.மீ. பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் உள்ளன.
  • இவற்றில் 57% கிழக்கு கடலோரப் பகுதிகளிலும், 23% மேற்கு கடலோரப் பகுதிகளிலும், மீதமுள்ள 20% அந்தமான் நிகோபா் தீவுப் பகுதியிலும் உள்ளன.
  • மிகப் பெரிய பல்லுயிர் வாழ்நிலைகளைக் கொண்ட 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
  • உலகில் பதிவு செய்யப்பட்ட உயிரினங்களில் 7% முதல் 8% இந்தியாவில்தான் இருக்கின்றன. இந்தியாவில் 2014-ஆம் ஆண்டு கணக்கின்படி 45,968 தாவரங்களும், 91,364 உயிரினங்களும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.
  • சுமார் 5,650-க்கும் மேற்பட்ட நுண்ணுயிரினங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன.
  • அரிசி, பருப்பு, தானியங்கள், காய்கறிகள், பழங்கள், நார்த் தாவரங்கள் உள்ளிட்ட ஒன்றுடன் ஒன்று நெருக்கமான உறவு கொண்ட 375 வகை தாவரங்கள் தோன்றிய 8 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
  • மாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், ஒட்டகங்கள், குதிரைகள், கோழியினங்கள் என 255 வகையான உயிரினங்கள் இந்தியாவில்தான் கண்டறியப்பட்டுள்ளன.

உயிரின சுற்றுச்சூழல் மாற்றங்கள்

  • உலக சரித்திரத்தில் நெடுங்காலமாக பருவ நிலையால் உயிரின சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. உயிரினங்கள் பல மறைந்தும், புதியவை தோன்றியும் உள்ளன.
  • பருவநிலை பெருமளவு மாறுபடும்போது உயிரின சுற்றுச்சூழலும், உயிரினங்கள் மாற்றங்களைச் சகித்துக்கொள்ளும் திறமையும் பாதிக்கப்பட்டு பல்லுயிர் சமநிலையில் இழப்புகள் ஏற்படுகின்றன. பருவநிலை மாற்றத்தால் பல்லுயிர் சமநிலை பாதிக்கப்பட்டு மக்கள் நலன்கள் பாதிக்கப்படுகின்றன.
  • உயிரின சுற்றுச்சூழலை உருவாக்கும் பல்லுயிர்ச் சமநிலையே, பருவநிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ளவும் அதற்குத் தக்கவாறு தங்களை மாற்றியமைத்துக் கொள்ளவும் உதவுகிறது. தாவரங்கள், உயிரினங்களின் பன்முகத் தன்மையில் பல அற்புதங்களைக் கொண்டது இந்த உலகு.
  • பெரும்பான்மையான தாவரங்களும், விலங்கினங்களும் அந்தந்தப் பகுதிகளைச் சார்ந்தவைகளாக உள்ளன. பருவநிலை, பூகோள அமைப்பு, அங்கு வாழும் உயிரினங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் சில உயிரினங்கள் அமைகின்றன. எடுத்துக்காட்டாக, வேகமாக ஒடக்கூடிய சிறுத்தைகளுக்கு சிறந்த இடமாக சவானா புல்வெளிப் பகுதிகளையும், ஆா்டிக் பகுதிகளில் காணப்படும் துருவ கரடிகளையும் கொள்ளலாம்.
  • ஒவ்வோர் ஆண்டும் உலகப் பரப்பில் காணப்படும் தாவர உயிரின வகைகளின் அப்போதைய நிலைமையை வெளியிடும் இயற்கையை பராமரிக்கும் பன்னாட்டுக் குழுமம் அவற்றை அழிந்துவிட்ட, அழியக்கூடிய நிலையில் உள்ள, அச்சுறுத்தப்பட்டுள்ள, பாதிப்படையக் கூடிய, அலட்சியப்படுத்தப்பட்டுள்ள என்ற வகைளில் பிரித்து அளித்துள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பூமியிலிருந்து சுமார் 140 உயிரினங்கள் மறைந்து விடுகின்றன. அவை வாழும் இடம் பறிபோவதும், மனிதா்களால் வேட்டையாடப்படுவதுமே முக்கியக் காரணங்களாகும்.
  • இந்தியாவில் மற்ற இடங்களைக் காட்டிலும் மூன்று பகுதிகள் மட்டுமே பல்லுயிர் சமநிலை கொண்ட வளமான பகுதிகளாக உள்ளன.
  • அவை வடகிழக்கு இமயமலைப் பகுதி, நிகோபார் தீவுகள், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகள். இந்தியாவின் இந்தப் பகுதிகளிலும் காடுகள் அழிப்பு, பருவநிலை மாற்றங்களால் பெருமளவு பாதிப்பை நாம் பார்க்கிறோம்.
  • காடுகளை அழிப்பதன் மூலம் நூற்றுக்கணக்கான ஹெக்டோ்கள் கொண்ட காட்டுப் பகுதிகள் குறுகிய காலத்தில் மறைந்து விடுகின்றன.
  • அதனால், அந்தப் பகுதியில் வாழும் தாவரங்கள், உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. காடு அழிப்பால் பருவ மாற்றமும் ஏற்படுகிறது. எனவே, பல்லுயிர்ப் பகுதிகளை திறம்பட தொடா்ந்து பாதுகாப்பதன் மூலம் நாம் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க முடியும்.
  • ஒவ்வோர் ஆண்டும் மே 22-ஆம்தேதியை சா்வதேச பல்லுயிர் வாழ்நிலை நாளாக ஐ.நா. சபை அறிவித்துள்ளபோதிலும், பல்லுயிர் வாழ்நிலை சார்ந்த பிரச்னைகளின் புரிதலையும், விழிப்புணா்வையும் அதிகரிக்க ஒவ்வொரு நாளும் முக்கியமானது.
  • நல்ல சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதார பாதுகாப்பு, தட்பவெப்ப நிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு வளமான பல்லுயிர் வாழ்நிலைதான் அடிப்படையாகும்.
  • (இன்று சா்வதேச பல்லுயிர்ப் பெருக்க விழிப்புணா்வு தினம்)

நன்றி: தினமணி (22-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்