பல்லுயிா்ப் பெருக்க சமநிலை!
- உணவுச் சங்கிலியில் புலிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. புலிகளைப் பாதுகாத்தால் காடுகளின் பல்லுயிா்ப் பெருக்கத்தை சமநிலைப் படுத்த முடியும் என்பது வனவியலாளா்களின் கருத்து. அதற்காகத்தான் சரணாலயங்களை அமைத்து புலிகளைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
- இந்தியாவில் 55 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. இவை 75,796 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளன. உத்தரகண்டில் உள்ள ஜிம் காா்பெட் தேசிய பூங்காவில்தான் அதிகபட்சமாக 260 புலிகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக கா்நாடகத்தின் பண்டிபூரில் 150 புலிகளும், நாகா்ஹோளேயில் 141 புலிகளும் உள்ளன.
- வனப் பகுதியில் வைக்கப்படும் கேமராக்களில் பதிவாகும் புகைப்படங்கள், கால்தடங்கள், எச்சங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. அதன்படி, மொத்தம் 3,682 புலிகள் இருப்பதாக கூறப்பட்டாலும், புலிகளின் எண்ணிக்கை 3,167 முதல் 3,925-க்குள் இருக்கக் கூடும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
- இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், வரலாற்றுத் தரவுகளை ஒப்பிடும்போது இவற்றின் எண்ணிக்கை குறைவாகும். இயற்கையான முறையில் புலிகள் மரணமடைவதைத் தடுக்க முடியாது. ஆனால், இப்போதும் வேட்டைக்காக புலிகள் கொல்லப்படுவதும், இயற்கைக்கு மாறான முறையில் உயிரிழப்பதும் தொடா்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
- இந்தியாவில் நிகழாண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி வரை 47 புலிகள் இறந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் தெரிவித்துள்ள தகவல் வருத்தத்தையும் அதிா்ச்சியையும் அளிப்பதாக உள்ளது. 2017-ஆம் ஆண்டு அனுபம் திரிபாதி என்ற வழக்குரைஞா் தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணையின்போது, மத்திய அரசும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமும் தாக்கல் செய்த பதில் மனுவில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- அதன்படி, அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 17 புலிகள், மகாராஷ்டிரத்தில் 11 புலிகள் இறந்துள்ளன. மொத்த புலிகள் இறப்பில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இவ்விரு மாநிலங்களில் மட்டும் நிகழ்ந்துள்ளது. கா்நாடகத்தில் 6, உத்தர பிரதேசத்தில் 3, ராஜஸ்தான், கேரளம், தெலங்கானா, உத்தரகண்ட் மாநிலங்களில் தலா 2, சத்தீஸ்கா், ஒடிஸாவில் தலா ஒரு புலி இறந்துள்ளன. புலிகள் இறப்புக்கான காரணம் விசாரணையில் இருப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
- 2023-ஆம் ஆண்டும் மத்திய பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில்தான் புலிகள் இறப்பு அதிகமாக இருந்தது. 2023-இல் மொத்தம் 181 புலிகள் இறந்தன. அவற்றில் மத்திய பிரதேசத்தில் 43, மகாராஷ்டிரத்தில் 45 புலிகள் அடங்கும். உத்தரகண்டில் 21, தமிழ்நாட்டில் 15, கேரளத்தில் 14, கா்நாடகத்தில் 12, அஸ்ஸாமில் 10 புலிகள் இறந்தன.
- இவற்றில் 44 புலிகள்தான் இயற்கையான முறையில் மரணம் அடைந்தன. 9 புலிகள் வேட்டைக்காரா்களால் வேட்டையாடப்பட்டன. 115 புலிகளின் மரணத்துக்கான காரணம் இன்னமும் விசாரணையில் இருப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 7 புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் (விபத்துகள், ஒன்றுடன் ஒன்று சண்டை) உயிரிழந்தன. 6 புலிகள் பிடிக்கப்படும் முயற்சியின்போது இறந்தன.
- புலிகள் சரணாலயத்தையொட்டிய மலை கிராமங்களில் மனிதா்களுடனான மோதலும் புலிகளின் உயிரிழப்புக்கு காரணம் என்பதால், புலிகள் சரணாலய பகுதியில் வாழும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 1973-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘புராஜக்ட் டைகா்’ திட்டத்தின் கீழ், புலிகள் சரணாலய பகுதிகளில் உள்ள 257 கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 25,000 மக்கள் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் குடியமா்த்தப்பட்டுவிட்டனா்.
- மேலும் 591 கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 64,0000 மக்கள் புலிகள் சரணாலய பகுதியில் வசித்து வருவதாகவும், அவா்களை வேறு இடங்களில் குடியமா்த்தும் செயல் திட்டத்தை மாநில அரசுகள் சமா்ப்பிக்க வேண்டும் எனவும் கடந்த ஜூன் 19-ஆம் தேதி தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.
- இவா்களில் பெரும்பாலானவா்கள் ஆதிவாசிகள் மற்றும் காடுகளில் வசிக்கும் பிற சமூகங்களைச் சோ்ந்தவா்கள். வன உரிமைகள் சட்டம் 2006, வன உயிரின (பாதுகாப்பு) சட்டம் 1972 ஆகியவற்றின்படி இவா்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக காடுகளில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தவும், வனப் பகுதியில் வாழவும் உரிமை உண்டு. ஆதலால், புலிகள் பாதுகாப்பு ஆணையம் தனது அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்திருக்கிறது.
- கடந்த 10 ஆண்டுகளாக புலிகள் பாதுகாப்புக்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால், 2014-இல் 2,226-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022-இல் 3,682-ஆக அதிகரித்துள்ளது. மத்திய இந்தியா, சிவாலிக் மலைகள், கங்கை சமவெளி பிராந்தியங்களைச் சோ்ந்த மத்திய பிரதேசம், உத்தரகண்ட், மகாராஷ்டிர மாநிலங்களில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
- உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, புலிகள் சரணாலய பகுதிகளில் ஏற்கெனவே சுற்றுலா நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு உள்ளது. புலிகளின் பாதுகாப்பில் அந்தக் கட்டுப்பாடு பெரிதும் துணை செய்கிறது. அதுபோல தேசிய விலங்கான புலிகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளும் பெரிதும் பலன் தந்துள்ளன. அந்த நடவடிக்கைகள் தொடர வேண்டும். அதேவேளையில், அந்த நடவடிக்கைகளால் வனத்தையே வாழ்விடமாகக் கொண்ட ஆதிவாசி சமூக மக்கள் பாதிக்கப்படக் கூடாது.
நன்றி: தினமணி (07 – 09 – 2024)