- கடந்த சில ஆண்டுகளாகப் பொது வெளியிலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் கடைப்பிடிக்கப்படும் ‘வெறுப்புப் பேச்சு’ போக்கு தற்போது பள்ளிக்கூட வாசல்களையும் எட்டிப் பார்த்துள்ளது. உலகம் முழுவதும் அதிகரித்துவரும் வன்முறை, அமைதியின்மை, வெறுப்புப் பேச்சுகளால் மாணவர்களின் மனநிலை அதிகம் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
காரணங்கள் என்ன
- ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பையொட்டியே ஆண்டுதோறும் ஜனவரி 24ஆம் தேதி ‘சர்வதேசக் கல்வி தினம்’ கொண்டாடப்படுகிறது. அண்மையில் முடிந்த சர்வதேசக் கல்வி தினத்தின் இந்த ஆண்டு கருப்பொருள், ‘வெறுப்புப் பிரச்சாரத்துக்கு எதிராகக் கல்வியும் ஆசிரியர்களும்’ என்பதாகும்.
- பள்ளிக் கூடங்களில் மாணவர்களிடம் ஊடுருவியிருக்கும் வெறுப்புப் பேச்சுப் போக்கை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும் எனவும் இது குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது. பதின்பருவத்தினரிடம் வெறுப்புப் பேச்சுகள் அதிகரிக்கப் பல காரணங்கள் இருக்கின்றன.
- அண்மைக் காலமாக அதிகரித்துவரும் வன்முறை, சண்டைக் காட்சிகள் மிகுந்த திரைப்படங்களை மட்டுமே ஒற்றைக் காரணமாக இதற்குச் சொல்லிவிட முடியாது.
- ஏனெனில், திறன்பேசி பயன்பாட்டின் அபரிமிதமான வளர்ச்சியால் ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவது தற்போது எளிதாகிவிட்டது. இதனால் பலருடைய கருத்துகளை, பேச்சுகளை, விவாதங்களை ஒலி, ஒளி வடிவிலான காட்சிகள் வழியே பதின்பருவத்தினர் உள்வாங்கிக்கொள்கின்றனர். இதனால் அவர்களது எண்ணங்கள் எளிதாகக் கலைந்து விடுகின்றன.
என்ன செய்யலாம்
- பள்ளி மாணவர்களில் சிலர் வெறுப்புப் பேச்சு பேசுபவராக இருக்கலாம். சிலர் இது தொடர்பான கசப்பான சம்பவத்தால் பாதிக்கப் பட்டவராகவும் இருக்கலாம். கேலி, கிண்டல் செய்வது, மிரட்டுவது, ஒதுக்கி வைப்பது, வம்பிழுப்பது போன்ற செயல்களால் பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே இதன் தீவிரம் அதிகமாக இருக்கும். இதுபோன்ற சம்பவங்களிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு மாணவரும் சில வரம்புகளைக் கடைப்பிடிக்கலாம்.
- உடல்ரீதியாக, மனரீதியாக, காலம், கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் வரம்புகளை உருவாக்கலாம். உதாரணத்துக்கு, ‘என்னைத் தொட்டுப் பேசக் கூடாது’, ‘நான் இருக்கும் இடத்தில் புகைபிடித்தல் கூடாது’ என்பது போன்று உடல்ரீதியான வரம்புகளை வெளிப்படையாகத் தெரிவிக்கலாம்.
- அடுத்து, மனரீதியான தாக்குதல்களுக்கு ‘நோ’ சொல்லலாம். குடும்பச் சூழல், மதம், உருவம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் காயப்படுத்தும்படி பேச வேண்டாம் என்பதைத் தெரிவிக்கலாம். ஒருவேளை காயப்படுத்தப்பட்டால், ‘இதனால் நான் காயமடைந்துள்ளேன்.
- இனியும் இது போன்ற பேச்சுகள் தொடர வேண்டாம்’ என்பதை உடன் படிக்கும் மாணவ நண்பர்களிடம் சொல்லலாம். இவை தவிர காலம், தலைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் வரம்புகள் வைத்துக்கொள்ளலாம்.
- சக மாணவர் ஒருவர் வகுப்பின் போது உங்களை விளையாடச் சொல்லித் திசை திருப்பினால், அந்த நேரம் நீங்கள் விளையாடத் தயாராக இல்லை என்பதை விளக்கிச் சொல்லலாம். இப்படிக் கால நேரத்தில் வரம்புகள் வைக்கலாம். எந்நேரமும் மற்றவர்களுக்காக நீங்கள் இடம் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. இதைப் போல கருத்துகள் - அதாவது உங்களுக்கு விருப்பம் இல்லாத கருத்துகளைப் பற்றி உங்களோடு விவாதிக்க வந்தால், நீங்கள் அதிலிருந்து விலகி இருக்கலாம். முகம் சுளிக்க வைக்கும்படியான பேச்சுகளைத் தவிர்க்கலாம்.
ஆசிரியர்களின் பங்கு
- ஒரு விஷயத்தைப் பற்றி மாணவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளும் பட்சத்தில் அதை அப்படியே ஒதுக்கி வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. இந்தச் சூழலில் ஆசிரியர்கள் மாணவர்களோடு கலந்துரை யாடுவது அவசியம். வாரந்தோறும் இரண்டு அல்லது மூன்று முறை ஏதாவது ஒரு தலைப்பைத் தேர்வு செய்து மாணவர்களோடு கலந்துரையாடலாம்.
‘வெறுப்புப் பேச்சு என்றால் என்ன
- ‘அதனால் யாருக்குப் பாதிப்பு?’, ‘இது சரியா, தவறா?’ போன்ற தலைப்புகளில் விவாதிக் கலாம். கலந்துரையாடல் என்பது ‘அறிவுரை’ தொனியில் இல்லாமல், மாணவர்களின் கருத்துகளைக் கேட்டுப் பேசுவதாகவும் ஆரோக்கிய மாகவும் இருப்பதை ஆசிரியர்கள் உறுதிசெய்தல் நல்லது. பொதுத் தளத்தில் அனைவரது முன்னிலையிலும் விவாதித்து சரி, தவறுகளைப் பகுப்பாய்வு செய்யலாம்.
- கல்வியைத் தாண்டி, தவிர்க்க முடியாத சூழலில் சாதி, மதச் சண்டைகளில் ஈடுபடும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் உரையாட வேண்டும். சமநிலையுடன் பிரச்சினையை அணுகி மாணவர்களின் சிந்தனைப் போக்கை மடைமாற்ற முயற்சி செய்யலாம். வெறுப்புப் பேச்சு செய்திகளைச் சுட்டிக்காட்டி, அதனால் ஏற்படும் பாதிப்பு களைப் பட்டியலிட்டு, இனி இதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை அவ்வப்போது மாணவர்களுக்கு நினைவூட்டலாம்.
முயற்சி செய்யலாம்
- வெறுப்புப் பேச்சு பேசுவது தவறு என்பதை உணர்வதும் பாதிப்பில் இருந்து மீள்வதும் ஒரு நாளில் நடந்துவிடாது. காலப்போக்கில் அனு பவங்கள் உணர்த்தும் பாடங்கள்தாம் அவை. கல்வியின் உதவியோடு ஆசிரியர்கள், பெற்றோரின் முயற்சி யால், மாணவர்களின் ஒத்துழைப்பால் மட்டுமே மாற்றம் சாத்தியம். வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிர்வினை ஆற்றும்போதுதான் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகும்.
- எது தேவை, தேவையில்லை என்பதை உணர்ந்து படிப்பில், விளையாட்டில், விருப்ப வேலைகளில் கவனம் செலுத்தினால் அவர்களது மனநலத்துக்கு நல்லது. தகாத வார்த்தைப் பயன்பட்டால் வெறுப்பு உண்டாகுமெனில், கல்வி அறிவால் மட்டுமே அமைதியை நோக்கிப் பயணிக்க முடியும்!
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 02 – 2024)