TNPSC Thervupettagam

பள்ளிக்கரணை பறவைகள் திறந்த புது உலகம்

December 16 , 2023 198 days 181 0
  • அது ஒரு மகிழ்ச்சிகரமான குளிர்காலத்தின் தொடக்கக் காலம். சென்னையில் மார்கழி மாதப் பறவைகள் நோக்கும் திருவிழாவில் கலந்துகொள்ளும் (Margazhi Bird Utsav) வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பூமியின் வடதுருவத்தில் கடுங்குளிர் நிலவும்போது அங்குள்ள நாடுகளிலிருந்து மத்திய ஆசியப் பறவை வான்வழித்தடம் (Central-Asian flyway) வழியே இந்தியாவின் பல பகுதிகளுக்குப் பல வகைப் பறவைகள் வலசை வருகின்றன. இவ்வான் வழித்தடத்தில் அமைந்துள்ள ஒரு பகுதியே சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம். ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கு இளைப்பாறுவதற்காக, உணவுக்காக, இனப்பெருக்கத்திற்காக ஈரநிலப் பறவைகள் வருகின்றன. அதனைக் கொண்டாடும் விதமாக 2019இல் தொடங்கப்பட்டதே ‘மார்கழிப் பறவைகள் திருவிழா’. இந்தப் பறவைகள் திருவிழாவின்போதுதான் பறவைகள் உலகில் முதன்முதலில் நான் அடியெடுத்து வைத்தேன். அதற்கு முன்புவரை ஏதோ பறவைகள் வானத்தில் பறக்கின்றன என்று நினைத்துக்கொண்டு, அவற்றின் பெயரைக்கூட தெரிந்துகொள்ள முயன்றதில்லை.
  • வெள்ளையாக எது வானத்தில் பறந்தாலும் அதனை கொக்கு என்று நினைத்துக்கொண்டு இரு கைவிரல் நகங்களையும் ஒன்றோடு இன்னொன்றை வைத்து தேய்த்துக்கொள்வேன் - கொக்கு பறப்பதைக் காணும்போது அவ்வாறு செய்தால் புத்தாடைகள் கிடைக்கும் என்கிற மூடநம்பிக்கையால்தான். ஆனால், இன்று எந்தப் பறவை பறந்தாலும், அதன் பெயர், எந்த வகைப் பறவை, உள்ளூர்ப் பறவையா - புலம்பெயர்ப் பறவையா, அதன் தமிழ்ப்பெயர் - ஆங்கிலப் பெயர் என்னென்ன என்பதுவரை ஆராயத் தொடங்கிவிட்டேன். அன்றைக்குப் பறவை நோக்குதல் நிகழ்வை வழிநடத்தியவர், பறவைகள் எழுப்பும் ஒலியைக் கொண்டே அது என்ன பறவை என்று சொன்னது எனக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுதான் பறவைகளைப் பற்றித் தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியது.

விதம்விதமான பறவைகள்

  • அன்று எங்கள் கண்ணில் முதலில் பட்டது பவளக்கால் உள்ளான் (Black-winged Stilt) கூட்டம்தான். தூரத்தில் இருந்து பார்த்தபோது பறவைகள் இருப்பதே தெரியாத அளவுக்கு சிறியதாக இருந்தாலும் பெரிய கூட்டமாக இருந்ததால், அவற்றைக் கண்டுகொள்ள முடிந்தது. அந்தப் பயணத்தில் என்னை மிகவும் ஈர்த்தது செந்நீலநாரை (Purple Heron). அவற்றில் ஒன்று மட்டும் ஒரே இடத்தில் அதிக நேரமாக இரை தேடிக் கொண்டிருந்தது. அதுவும் சம்பு புற்களுக்கு இடையில். அவ்வளவு ஒய்யாரமாக அது தன் கழுத்தைத் திருப்பாமல் பார்த்துக்கொண்டிருந்தது என்னைப் பெரிதும் ஈர்த்தது.
  • அடுத்து கரண்டிவாயன் (Eurasian Spoonbill). கரண்டி போல் வாயை வைத்துக்கொண்டு சிறிதும் ஓய்வில்லாமல் தீவிரமாக இரை தேடிக்கொண்டிருந்தது. இவ்வாறு பல பறவைகளின் பெயர்களைக் கேட்கையில் தமிழ் இலக்கணத்தில் நான் கற்ற காரணப்பெயர், இடுகுறிப்பெயர் என்பதெல்லாம் என் நினைவுக்கு வந்தன. எவ்வளவு அழகாக, அதன் அமைப்பு, வண்ணம், செயல் போன்றவற்றை வைத்தே பறவைகளுக்கு பெயர் வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். அதற்கிடையே பார்த்தவுடன் கவரும் நிறத்தில் இருந்த சில மஞ்சள்மூக்கு நாரைகளும் இரை தேடுவதற்காகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.

கண்ணாமூச்சிப் பறவைகள்

  • பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் ஆங்காங்கே உள்ள காய்ந்த மரக்கிளைகளில் சிறிய நீர்க்காகங்கள் மற்ற பறவைகளைப் போலல்லாமல் தமது இறக்கைகளை விரித்தவாறு அமர்ந்திருந்தன. நீர்க்காகங்கள் நீருக்கடியில் நீந்திச் சென்று இரை பிடிக்கும் திறனுடைவை. அவ்வாறு நீந்திச் சென்று வந்தபின் அவற்றின் இறக்கையில் உள்ள நீரை வெயிலில் உலர்த்தவே இவ்வாறு அமர்ந்திருக்கின்றன. சின்ன அரிவாள் மூக்கன் (Glossy Ibis) எனப்படும் அன்றில் பறவையின் அலகு, அதன் பெயருக்கு ஏற்றபடியே நீண்ட அரிவாள் போலவும், நீண்ட கால்களுடனும் கரும்பழுப்பு நிறத்துடன் சற்றே பளபளப்பான கரும்பச்சை நிற இறக்கைகளுடனும் இருந்தது. அவை கூட்டமாக இரைதேடிக் கொண்டிருந்தன. அவற்றின் நடுவே சில சிறிய நீர்க்கோழிகளும் தென்பட்டன.
  • பல வகையான வெள்ளை நிறப் பறவைகளை பள்ளிக்கரணையிலும், அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் காணமுடிந்தது. அதிலும் உண்ணிக்கொக்கு, சிறிய கொக்கு, நடுவாந்தரக் கொக்கு, பெரிய கொக்கு எனப் பல வகையான கொக்குகள் உள்ளனவாம். நமக்கு மட்டும்தான் கண்ணாமூச்சி விளையாடத் தெரியும் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு, பறவைகளுக்கும் அந்த விளையாட்டு தெரியும் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். ஆம், முக்குளிப்பான் (Little Grebe) என்னும் நீர்ப்பறவை, நீரின் மேற்பரப்பில் ஓரிடத்தில் மறைந்து நீருக்குள்ளேயே நீந்திச் சென்று வேறோர் இடத்தில் வெளியே வந்தது. இந்தப் பண்பு தன்னைத் தாக்கவரும் பல உயிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவுகிறது.
  • நீலவால் பஞ்சுருட்டான் (Blue-tailed Bee-eater) பறவைகள் அங்குள்ள மின் கம்பிகளில் தேனீக்களையும், பறக்கும் பல வகையான பூச்சிகளையும் உண்ண அமர்ந்திருந்தன. முதன்முதலாக மாங்குயில்களை (Indian Golden Oriole) பார்த்ததும் அங்குதான். நாங்கள் குனிந்து சில தாவரங்களை உற்றுநோக்கிக் கொண்டிருக்கையில், சில சின்னஞ்சிறிய பறவைகள் பறந்து சென்று மறைந்தன. அவை கதிர்க்குருவிகளாம். சிறிய மீன்கொத்தி, வெண்மார்பு மீன்கொத்திகளும் அங்கு தென்பட்டன. நீலத் தாழைக்கோழிகள், நாமக்கோழிகள், இரட்டைவால் குருவி, ஆள்காட்டி எனப் பல வகையான பறவைகளைக் காண முடிந்தது. இதுவரை படத்தில் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த பறவைகளை நேரில் பார்த்தது பெரிதும் மகிழ்ச்சியளித்தது.

வருத்தம் தந்த செய்தி

  • இவை அனைத்தையும் கண்டு மகிழ்ச்சியாக இருந்தாலும், என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்திய தருணம் கடந்த 40 வருடங்களில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் மாற்றத்தைப் படிப்படியாக வரைபடத்தில் கண்டபோதுதான். பள்ளிக்கரணை சதுப்புநிலமானது, சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான ஈரநிலங்களில், கடைசியாக எஞ்சியுள்ள ஒரே இயற்கையான ஈரநிலம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் தோராயமாக 8,000 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்திருந்த இந்தச் சதுப்புநிலமானது நகர விரிவாக்கம், குப்பைக் கிடங்கு விரிவாக்கம், தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது பத்தில் ஒரு பங்கு மட்டுமே எஞ்சியுள்ளது.
  • சென்னையின் தென் பகுதியிலிருந்து அதிகப்படியான மழைநீர் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் வடிந்த பின், வங்காள விரிகுடாவில் கலக்கப்படுவதன் மூலம் அப்பகுதியை வெள்ள அபாயத்திலிருந்தும் காக்கிறது. இப்படி ஓர் இயற்கை அமைப்பைச் சிறிது சிறிதாக அழித்து, இப்போது தண்ணீர் தேங்குகிறது, வெள்ளம் வடியவில்லை என்று புலம்புவதில் என்ன பயன்? இத்தகைய நடவடிக்கைககளில் இருந்து இந்தச் சதுப்புநிலத்தைப் பாதுகாக்க, 2022ஆம் ஆண்டில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்திற்கு ‘ராம்சர் தளம்’ எனப்படும் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி. தமிழ்நாட்டில் பள்ளிக்கரணையுடன் சேர்த்து தற்போது 14 ராம்சர் தளங்கள் உள்ளன.
  • மேலும் இந்தியாவில் தமிழ்நாடே அந்த எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது. மனித இனமான நாம் எப்போதும் நம்மைப் பற்றி மட்டுமே யோசிக்காமல் நம்மைச் சுற்றியுள்ள மற்ற உயிரினங்களைப் பற்றியும் யோசித்து வாழ வேண்டும். அடிப்படையாக நாம் எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னும், அதன் விளைவுகளை அறிந்து செயல்பட்டோமேயானால், நன்மை மட்டுமே பயக்கும். இயற்கையான வாழிடங்களை மனிதர்களின் பயன்பாட்டிற்காக அழிக்காமல், பாதுகாத்தாலே பறவைகளைத் தனியாகக் காக்கவேண்டிய அவசியம் ஏற்படாது. ஏனென்றால் தேவையான உணவு, இருப்பிடம்,சூழ்நிலை இருக்கும்போது அவை அழியும் நிலையும் ஏற்படாது.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்