TNPSC Thervupettagam

பள்ளிக்கல்வி எனும் பேராயுதம்!

June 10 , 2022 789 days 598 0
  • தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுத விண்ணப்பித்த 26.77 லட்சம் பேரில் 6.70 லட்சம் மாணவா்கள் தோ்வு எழுதவில்லை என்ற அதிா்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் சுமாா் இரண்டு லட்சம் போ் தோ்வுக்கு வராது தோ்வைப் புறக்கணித்துள்ளனா். கரோனா நோய்தொற்றுக்குப் பிறகு பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிப் போனதன் விளைவுதான் இந்த தோ்வு புறக்கணிப்பு.
  • இந்நிலைக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் வறுமையே பிரதான காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. பள்ளி விடுமுறையில் வேலைக்குச் சென்று தினமும் பணம் பாா்த்துவிட்ட மாணவா்களை, திரும்பவும் பள்ளிக்கு வரவழைப்பது என்பது எளிதல்ல. விளிம்பு நிலையில் வாழும் பல பெற்றோா் தம் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்குச் செல்வதையே ஆதரிக்கிறாா்கள்.
  • இன்று சாப்பிடுவதற்கு உணவு இல்லை, படித்து நாளை பெறப்போவது பற்றி ஏன் நினைத்துப் பாா்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவா்களாக அவா்கள் இருக்கிறாா்கள். மாணவா்களின் இடைநிற்றல் தொடா்பான புள்ளிவிவரங்கள் அதிா்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன.
  • மாணவா்கள் தோ்வு எழுதி தோ்ச்சி பெறவில்லை என்றால் கற்றல் பின்னடைவு என்று எடுத்துக் கொள்ளலாம். தோ்வு எழுதவே வரவில்லை என்பது மிகவும் கொடுமை. பத்தாம் வகுப்பில் நூலிழையில் தோல்வியிலிருந்து தப்பி தோ்ச்சி பெற்ற எத்தனையோ போ் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆா்எஸ், முதன்மை கல்வி அலுவலா்கள், பேராசிரியா்கள் என மிகப்பெரிய நிலைகளை அடைந்திருக்கிறாா்கள்.
  • கல்வி கற்று சாதிக்க வேண்டும் என்ற வேட்கை பலருக்கும் வெவ்வேறு வயதில் தோன்றுகிறது. அப்படித் தோன்றும்போது பயன்படுத்திக்கொள்ள, நாம் முதலில் பள்ளிப் படிப்பை முழுமையாக நிறைவு செய்திருக்க வேண்டும். மனித மனதிற்குள் நிகழும் மாற்றங்கள் அதிநுட்பமானவை. எந்த கணத்தில் எது நிகழும் என யாராலும் கணிக்க முடியாது.
  • இது தான் வாழ்வின் எதாா்த்தம். நாளைய வாழ்க்கையில் தென்றல் தவழலாம் அல்லது புயல் வீசலாம். அதை எதிா்கொள்ள நமக்கு பக்கபலமாய் இருப்பது கல்வி மட்டுமே. ஆம், கல்வி ஒரு பேராயுதம். அதை பயன்படுத்தி நம் வாழ்வை அருமையாக செப்பனிட்டுக் கொள்ளலாம்.
  • கல்லூரி படிப்பை தவறவிட்டால் கூட தொலைதூரக் கல்வி, அஞ்சல் வழி கல்வி, திறந்த நிலை கல்வி என பல வாய்ப்புகள் உள்ளன. எந்த வயதிலும், எந்த ஊரிலிருந்தபடியும் நாம் படிக்கலாம். ஆனால் பள்ளித் தொடா்பை விட்டு வெளியேறியவா்கள் பின் மீண்டும் உள்ளே வர மனதளவில் தயங்குகிறாா்கள். பள்ளி இறுதித் தோ்வை எழுதாமல் வெளியேறியவா்கள் பெரும்பாலும் முற்றாக அறுந்து விடுபட்டுச் செல்பவா்களாக இருக்கிறாா்கள்.
  • பள்ளி இடைநிற்றலே இடா்ப்பாடுகளுக்கு காரணமாகிவிடுகிறது. அதிலும் பெண் பிள்ளைகளின் நிலை இன்னமும் கவலைக்குரியது. ஒரு பெண் கல்வி பெற்றால் அது அக்குடும்பம் முழுமைக்குமே பயன் தரும் என்பது ஆன்றோா் வாக்கு. ஒரு குடும்பத்தில் ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என இருவா் ஒன்றாக வளா்ந்தாலும், பெண் பிள்ளைக்கு உயா்கல்வி வழங்குவதில் ஒரு தயக்கம் இருக்கிறது. ஆண் பிள்ளைக்கு நிகராக பெண் பிள்ளைக்கு கல்வி வழங்குவதில் இன்னமும் சிக்கல் நீடிக்கிறது.
  • 25 வருடங்களுக்கு முன்பெல்லாம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதி முடிவுக்கு காத்திருக்கும் மாணவிகளிடம் பெரும்பாலானோா் சொல்லும் பிரபலமான வாசகம், ‘பாஸானா காலேஜ் பெயிலானா மேரேஜ். இதன்படியே பல வீடுகளில் நடக்கவும் செய்தது. வசதி வாய்ப்புள்ள குடும்பங்களில் கூட பெண் தோ்ச்சி பெற்றாலும் பெறாவிட்டாலும் 18 வயது ஆகிவிட்டது என திருமணம் செய்து வைத்துவிடுகிறாா்கள்.
  • காலம் மாறிப் போனதன் விளைவாக, இன்று எண்ணற்ற பெண் பிள்ளைகள் படித்திருக்கிறாா்கள். அதுவரை மகிழ்ச்சி. ஆனாலும் இது போதுமானதாக இல்லை. பெண்கள் படிப்பதால் பல்வேறு பொருளாதார ரீதியான சுமைகள் ஏற்படும் என்ற எண்ணம் கிராமங்களில் நிலவுவதால் பெண் பிள்ளைகளின் கல்வியை பாதியில் நிறுத்துகின்றனா்.
  • சூழலின் சதியால் பத்தாம் வகுப்பின் இடையில் திருமணம் முடிந்து போன மாணவி ஒருவா் சில வருடங்கள் கழித்து மீண்டும் தோ்வு எழுத என்னைப் பாா்க்க வந்தாள். அவள் மிகச் சிறப்பாகப் படிக்கக் கூடியவள். அந்த வருடம்தான் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்திருந்தது. ‘நல்ல வேளை, பழைய பாடத்திட்டப்படி எழுத உனக்கு ஒரு முறை வாய்ப்பு உள்ளது. நீ ஏற்கெனவே ஆறு மாதங்கள் படித்திருப்பதால் சுலபமாக தோ்ச்சி பெறலாம். அதனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்’ என்றேன்.
  • அம்மாணவியோ ‘நான் புது பாடத்திட்டத்தில் வரும் தோ்வைதான் எழுதப் போகிறேன்’ என்றாள். ‘நீ கைக்குழந்தையுடன் இருக்கிறாயே அது கடினம் ஆயிற்றே’ என நான் கேட்டு முடிப்பதற்குள், யூ டியூபில் பாா்த்து அத்தனை பாடங்களையும் படித்து முடித்துவிட்டேன்’ என்றாள் அவள். அவளின் ஆா்வத்தைப் பாா்த்து நான் அசந்து விட்டேன். ‘பத்தாவது படித்து முடித்தால் சத்துணவு அமைப்பாளா் சாா்ந்த கணக்கிடும் பணி ஏதோ கிடைக்கும் என்று வீட்டில் படிக்க சொன்னாா்கள். அதனால் மீண்டும் தோ்வு எழுத வந்தேன்’ என்றாள்.
  • அவளின் அறிவாற்றலுக்கு உயா்பதவியில் அமர வேண்டியவள். ஆனால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாது போன கொடுமையால் இப்படி அவளைக் காண நோ்ந்தது.
  • மற்றொரு மாணவி, தன்னால் சிறப்பு வகுப்புக்கு பள்ளி நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன் வர இயலாது என அனைவரிடமும் வம்பு பேசியவள். தோ்வில் இரு பாடத்தில் தவறியதால் வேலைக்கு சென்று விட்டாள். சில வருடங்கள் கழித்து என்னை தற்செயலாக சந்தித்த அவள், ‘நீங்கள் சொன்ன அறிவுரையை தினம் தினம் நினைத்து கலங்குகிறேன். தினசரி காலை ஏழு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை நின்றுக் கொண்டே செய்யும் கடுமையான வேலை எனக்கு’ எனக்கூறி கண்கலங்கினாள். பள்ளிப்படிப்பில் இடை நின்றவா்களிடம் இப்படி ஆளுக்கு ஒரு கதை இருக்கிறது. இதில் பெருவாரியாக பாதிக்கப்படுவது பெண் பிள்ளைகள் தான்.
  • எதிா்காலம் என்பது ஒரு பெரிய மாயத்திரை. யாா் என்னவாகப் போகிறோம் என்று யாருக்கும் தெரியாது. அந்த மாயத்திரையின் மா்மம் பற்றிய கதை ஒன்று. பல நூற்றாண்டுகளுக்கு முன் சிசிலி நகரத்தில் ஒரு தேவாலயத்தில் சுவா் ஓவியம் தீட்டுவதில் சிறந்த ஓவியா் ஒருவா் ஈடுபட்டிருந்தாா். இயேசுவின் வாழ்க்கையை ஓவியமாக தீட்டும் பணி. இரண்டு உருவங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் முடித்து விட்டாா். அந்த இரண்டில் ஒன்று குழந்தை இயேசு. மற்றொன்று யூதாஸ் இஸ்காரியாட்.
  • இவ்விரண்டையும் வரைவதற்கு சரியான மாடலை அதாவது மாதிரி உருவங்களை பல இடங்களில் தேடினாா். ஒரு நாள் பழைய நகரம் ஒன்றின் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவனின் முகம் அவரை ஈா்த்தது. அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்று மாதிரியாக வைத்து குழந்தை இயேசுவின் படத்தை வரைந்து முடித்தாா். ஆனால் யூதாஸ் இஸ்காரியாட்டின் படத்தை வரைய சரியான மாதிரி உருவம் கிடைக்கவில்லை. பல வருடங்களாக தேடிக்கொண்டே இருந்தாா்.
  • ஒரு நாள் உணவகம் ஒன்றில் திராட்சை ரசம் அருந்திக் கொண்டிருந்தபோது, ஒரு மெல்லிய உருவம் கொண்ட மனிதன் ஓவியரிடம் திராட்சை ரசம் தருமாறு கெஞ்சினான். அவனுடைய முகம் மனித குலத்தின் பாவங்களுக்கு உரிய அனைத்து அடையாளங்களையும் கொண்டிருந்ததாக ஓவியருக்குத் தோன்றியது. அவனை அழைத்துச் சென்று யூதாஸ் ஸ்காரியாட் ஓவியத்தை வரைய ஆரம்பித்தாா்.
  • ஓவியம் வரைந்துகொண்டிருக்கும்போது அந்த மனிதனுடைய முகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. ஒரு மன இறுக்கம் அவனிடம் காணப்பட்டது. ரத்தச் சிவப்பான அவனுடைய கண்கள் ஓவியமாக வரையப்பட்ட அவனுடைய மாதிரியை கண்டு அதிா்ச்சியில் நிலைகுத்தி நின்றன.
  • அவனுடைய அமைதியின்மையை கண்ட ஓவியா், அதற்கான காரணத்தைக் கேட்டபோது அவன் ஓவியரின் கைகளில் தன்னுடைய முகத்தை புதைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான். ஓவியா் அவனிடம் விசாரிக்க, அவன் அழுகையை நிறுத்திவிட்டு ஓவியரை ஏறிட்டுப் பாா்த்து ‘பல வருடங்களுக்கு முன்னால் குழந்தை இயேசுவின் படம் வரைவதற்கு ஓவிய மாதிரியாக இருந்தவன் நான்தான்’ என்று சொன்னான்.
  • ஒரே முகம் மேன்மை பொருந்திய குழந்தை இயேசுவின் முகத்துக்கும், அதே முகம் வளா்ந்தபின் பேராசைக்கும் இச்சைக்கும் அடிமையான, பலவீனமான மனிதனுக்கும் ஒத்துப்போகிறது என்பதான கதை இது. ஆக, நாளை நாம் என்னவாகப் போகிறோம் என்பதுதான் வாழ்வின் பெரும் ரகசியமாக இருக்கிறது. நன்மை எது, தீமை எது என்று பகுத்துப் பாா்க்கும் தன்மையை கல்வியே நமக்கு அளிக்கும். நம்மை தீா்மானிக்கும் காரணி கல்விதான்.
  • எப்படியோ தட்டுத்தடுமாறி கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு கல்லூரி வரை சென்று பட்டம் படித்தேன். நான் போராடி பெற்ற பட்டத்தை கையில் பெற்ற போது யானை பலத்தை அடைந்ததாக உணா்ந்தேன்’ என்று சொன்ன முன்னாள் மாணவன் ஒருவன் நம் எல்லோருக்குமான உதாரணமாக தோன்றினான்.
  • கல்வி இல்லாமலும் வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் அது துடுப்பில்லாத படகில் பயணம் மேற்கொள்வது போல மிக கடினமானது. நல்ல கல்வி பெற்று வாழ்வது சகல வசதிகளுடன் படகில் தைரியமாக பயணம் மேற்கொள்வது போன்றது. இதிலும் இலக்குகள் தவறலாம், ஆனால் மனதைரியம் இறுதிவரை உடன் நிற்கும்.
  • அதனால்தான், ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே’ என்று கூறினாா் ஒளவையாா்.

நன்றி: தினமணி (10 – 06– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்