- தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் உறவை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பல்வேறு செயல்திட்டங்களை அறிவித்திருக்கிறார். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே பரஸ்பர புரிதலை ஏற்படுத்தவும், மாணவர்களின் மனநலம் மேம்படவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முனைப்பு காட்டுவது வரவேற்புக்குரியது.
- மாணவர்கள் குறித்த பெற்றோர், ஆசிரியர்களின் கருத்தை அறியவும், ஆசிரியர்கள் குறித்த மாணவர்களின் கருத்தை அறியவும், மாதந்தோறும் பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் சந்திப்பு பள்ளி மேலாண்மைக் குழுவின் உறுதுணையுடன் நடத்தப்படவுள்ளது. கொள்ளை நோய்த்தொற்று காரணமாக மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருக்கும் ஆர்வக் குறைவை அகற்ற சில முயற்சிகள் முன்மொழியப்பட்டுள்ளன.
- இலக்கியம், கலை, சூழலியல், விளையாட்டு சார்ந்த புறச்செயல்பாடுகளில் மாணவர்களை ஊக்குவிக்க கலைவிழாக்களும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. கல்விச் சுற்றுலா, கோடை சிறப்பு பயிற்சி முகாம் போன்ற நிகழ்வுகளுக்கு ஆசிரியர்கள் திட்டமிட வேண்டும் என்று இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
- மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த புதிய "ஸ்டெம்' திட்டம் அறிமுகப்படுத்தபட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை. பிரச்னையின் மூலத்தை தமிழக அரசு புரிந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.
ஒழுக்கத்துக்கும் முக்கியத்துவம்
- தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமான நல்லுறவு முன்னெப்போதையும்விட தற்போது மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. பள்ளிப் பருவத்தில் ஒழுங்கீனமாக நடப்பவர்கள் வருங்காலத்தில் நல்ல குடிமக்களாக மாறுவதில்லை. எனவே, பள்ளி மாணவர்களின் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்களின் ஒழுக்கத்துக்கும் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
- அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தரவீழ்ச்சி, தங்கள் குழந்தைகளின் இயல்புநிலை அறியாத பெற்றோரின் உதாசீனம், விளிம்புநிலை மக்களின் கடைசிப் புகலிடமாக மாறிவிட்ட தன்மை ஆகிய காரணங்களால், அரசுப் பள்ளிகளில் கற்பதும் கற்பிப்பதும் சவாலானதாக மாறிவருகின்றன. அதன் வெளிப்பாடே மாணவர்களின் அதிருப்தி செயல்பாடுகள்.
- பள்ளி மாணவர்களின் அநாகரிக நடவடிக்கைகள் பள்ளி வளாகத்தைத் தாண்டி பொதுவெளிக்கும் வந்துவிட்டதை அண்மைக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன. திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், கையில் சமுதாயக்கயிறு கட்டுவதில் மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு, ஏப்.30-ஆம் தேதி நடுத்தெருவில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் ஒரு மாணவர் பலியாகியிருக்கிறார். இது தொடர்பாக மூன்று மாணவர்கள் கைதாகியிருக்கின்றனர்.
- சென்ற வாரம் சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவிகளும் தொழில் கல்லூரி மாணவிகளும் இருதரப்பாகப் பிரிந்து கடுமையாக மோதிக்கொண்டனர். பேருந்து நிலையத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவத்தைத் தடுக்க இயலாமல் அனைவரும் கையறு நிலையில் வேடிக்கை பார்க்க வேண்டியிருந்தது.
- இதே போல மதுரை பேருந்து நிலையத்திலும் அரசுப் பள்ளி மாணவிகளிடையே சில தினங்களுக்கு முன் சண்டை நடைபெற்றிருக்கிறது. இவையெல்லாம், பள்ளி மாணவ மாணவியர் சுயகட்டுப்பாடும் இங்கிதமும் இல்லாதவர்களாகவும், சமூகக் கண்ணோட்டம் அற்றவர்களாகவும் மாறி வருவதையே காட்டுகின்றன. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் இவ்வாறு நடந்துகொள்வதற்கு அவர்கள் மீது போதிய கவனிப்பும் அக்கறையும் இல்லாமல் இருப்பதுதான் காரணம்.
- வசதியுள்ள குடும்பங்களின் தேர்வு தனியார் பள்ளிகளாக மாறிவிட்டது. உறவுச் சிக்கல் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பெரும்பாலோர் கல்வி பயில்வதற்கான ஒரே வாய்ப்பாக அரசுப் பள்ளிகளே விளங்குகின்றன. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் கடைசி வாய்ப்பாகவும் அரசுப் பள்ளிகள்தான் உள்ளன. ஒரு சமநிலையற்ற மாணவ சமுதாயம் தமிழகத்தில் உருவாகி ஒரு புதிய வர்க்க பேதத்தை உருவாக்குகிறது. இதன் விளைவே அரசுப் பள்ளி மாணவர்களின் அமைதியின்மைக்கும் சீற்றத்துக்கும் காரணமாக இருக்கலாம் என்பது உளவியல் நிபுணர்களின் பார்வை.
- இந்த பிரச்னையின் ஆணிவேரை தமிழக அரசு உணர்ந்துவிட்டது என்பதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் புதிய செயல்திட்டம் காட்டுகிறது. கொள்ளை நோய்த்தொற்று காரணமாக கடந்த இரண்டு கல்வியாண்டுகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வியை உடனடியாக பழைய நிலைமைக்கு திருப்பிவிட முடியாது. அதனால், மாணவர் தேர்ச்சிக்கான அலகுகள், மாறியுள்ள சூழலுக்கேற்ப புதுப்பிக்கப்பட வேண்டும். சமுதாய வேற்றுமைகளை பிரதிபலிக்கும் பள்ளிக்கல்வி முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுவை அமைத்து ஆராய்வது அரசின் கடமை.
- ஆசிரிய சமுதாயமும் மாணவர்களின் மனப்போக்கைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்வது அவர்களது மதிப்பை மேம்படுத்தும். வெறும் ஊதியத்திற்காக பணியாற்றக்கூடியதல்ல ஆசிரியர் பணி என்பதை ஆசிரிய சமுதாயம் நினைவில் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கான முன்னுதாரணங்களாக ஆசிரியர்கள் விளங்கும்போது, மாணவர்களும் புதிய பாதையில் பயணிப்பார்கள்.
நன்றி: தினமணி (05 – 05 – 2022)