TNPSC Thervupettagam

பழைய அணைகளும் புதிய பிரச்னைகளும்

March 1 , 2021 1423 days 710 0
  • உயிரினங்களின் ஜீவாதாரமான நீர்நிலைகளில் சேகரிக்கப்படும் நீர்வளத்தால், இன்றைக்கு நீர் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பது அதிர்ச்சி தரும் உண்மை.
  •  நம் நாட்டில் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு, நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பெரும்பாலான அணைகள் அவற்றின் உறுதித்தன்மையை இழந்து வருவதாகவும், நீர்த்தேக்கங்களின் நீரானது, மண்ணால், இன்னும் சொல்லப் போனால், வண்டல் படிவங்களால் ஆபத்து விளைவிப்பதாகவும் ஆய்வுகள் விவரிக்கின்றன.
  • உலகில் கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய அணைகளின் கட்டுமான வரிசையில், இந்தியா சர்வதேச அளவில் மூன்றாவது இடம் வகிக்கிறது. நம் நாட்டில் இதுவரை கட்டப்பட்டுள்ள 5,200-க்கும் மேற்பட்ட பெரிய அணைகளின் பட்டியலில், 1,100 அணைகள் ஏறத்தாழ 50 ஆண்டு காலத்தை நெருங்கிவிட்டன. சில அணைகள் 120 ஆண்டுகளைக் கடந்துவிட்டன.
  • 2050-க்குள் இந்த எண்ணிக்கை 4,400 ஆக உயரும் எனவும், இதன்மூலம் 80%-க்கும் அதிகமான பெரிய அணைகள் 50 முதல் 150 ஆண்டுகளை நெருங்குவதால், விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
  •  மிகப் பெரிய அணைகளுக்கே இந்த நிலைமை என்றால், சிறிய, மிகச்சிறிய அணைகளின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • கர்நாடக மாநிலம் மாண்டியாவில் காவிரியாற்றின் குறுக்கே 1911-இல் தொடங்கி 1931-இல் கட்டி முடிக்கப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணை, தற்போது 90 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. இதேபோல, தமிழகத்தில் 1925-இல் தொடங்கி 1934-இல் கட்டி முடிக்கப்பட்ட மேட்டூர் அணை, 87 ஆண்டை நெருங்கிவிட்டது.
  • அணைகளின் வயது ஏற ஏற நீர் தேங்கும் பகுதியில் வண்டல் மண் படிவதால், நீரின் கொள்ளளவு குறைய நேரிடுகிறது. ஆகையால், இந்த அணைகளின் கொள்ளளவு 1950-களில் இருந்தாற்போல், இப்போது இருப்பதற்கு வாய்ப்பில்லை.
  • மேலும், நமது நாட்டில் பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் வடிவமைப்பில் குறைபாடுகள் நிலவுவதாக கடந்த 2003-ஆம் ஆண்டில் வெளியான நீர்வள ஆய்வறிக்கை தெளிவுபடுத்தியது.
  • இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள பக்ரா அணையில் (பக்ரா நங்கல் அல்ல) வண்டல் மண் வீதம் எதிர்பார்த்ததை விட கூடுதலாக, அதாவது 139.86% ஆக இருப்பதாகவும், இதே நிலை நீடித்தால் அணையின் ஆயுள்காலம் நிர்ணயிக்கப்பட்ட 88 ஆண்டுகளை விட பாதியாக, அதாவது 47 ஆண்டுகளாக மட்டுமே இருக்கும் எனவும் அந்த ஆய்வறிக்கை அப்போதே எச்சரிக்கை விடுத்திருந்தது.
  • இதேபோல, ஹிராகுட் (சாம்பல்பூர், ஒடிஸா), மைதோன் (தான்பட் மாவட்டம் ஜார்க்கண்ட்), கோட் அல்லது பாவா அணை (சிரூர், மஹாராஷ்டிரா) ஆகிய அணைகளின் வண்டல் படிவ வீதம் முறையே 141.67%, 808.64%, 426.59% ஆக இருப்பதாக அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டது.
  • அதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும், இதே முடிவுதான் கிடைத்திருந்தது. 18 ஆண்டுகளுக்கு முன்பே அந்த நிலை என்றால், தற்போதைய நிலைமையை எண்ணிப்பார்க்க வேண்டும்.
  • இதுதவிர இந்திய நீர்த்தேக்கங்கள் பெரும்பாலும் வண்டல் படிவ அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு வடிவமைக்கப்படவில்லை எனவும், நீர்த்தேக்கங்களின் வடிவமைப்பு வண்டல் வீதத்தை குறைத்தும், கொள்ளளவை மிகைப்படுத்தியும் மதிப்பிட்டதாகவும், இதனால் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேகமாக குறைந்து வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியது.
  • மலையிலிருந்து ஓடிவரும் ஆறு மக்கிய செடி, கொடி, தழைகளையும், பல தாதுப் பொருள்களையும் அடித்து வரும்போது உண்டாவதுதான் வண்டல் மண். வேளாண்மைக்கு ஏற்ற வண்டல் மண்ணில் நார்ச்சத்து, கனிமங்கள் நிறைந்திருக்கின்றன.
  • நெல், கோதுமை, கரும்பு, வாழை, வெற்றிலை போன்றவற்றைப் பயிரிட ஏற்றதாக இந்த வண்டல் மண் திகழ்ந்தாலும், நீர்த்தேக்கங்களின் அடியில் படியும் வண்டல் மண்ணால் ஒட்டுமொத்த வேளாண்மையும் பாதிக்கப்படுகிறது என்பதே நிதர்சனம்.
  • நீரின் இடத்தை வண்டல் மண் நிரப்பும்போது, நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு குறைந்து ஷட்டர் வாயிலாக தண்ணீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதனால், அந்த அணைகளை நம்பி பாசன வசதி பெறும் விளைநிலங்கள் பாதிப்படைவது மட்டுமின்றி, பாசனத்துக்காக நிலத்தடி நீரையே விவசாயிகள் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
  • இதன் வாயிலாக பயிர் உற்பத்தி பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வருவாய் குறைந்து கடன்சுமைதான் அதிகரிக்கும். வண்டல் படிவங்களால் நிரம்பிய அணைகளைக் காக்க பருவநிலை மாறுபாடு குறித்துத் தீட்டப்பட்ட எந்தவொரு திட்டமும் இதுவரை வெற்றிபெறவில்லை என்பது வியப்புதான்.
  • இதன் விளைவாகத்தான் கடந்த 2015-ஆம் ஆண்டில் சென்னை, 2018-இல் கேரளம், 2020-இல் குஜராத் மாநிலம் பரூச், இந்த ஆண்டு (2021) பிப்ரவரியில் உத்தரகண்ட் மாநிலம் சமோலி என அடுத்தடுத்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் தத்தளிக்க நேர்ந்தது.
  • மேலும், பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப போதிய தண்ணீரையும், உணவு தானியங்களையும் இருப்பு வைத்துக் கொள்வது என்பது நமக்கு முன் இப்போது இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால்.
  • ஏற்கெனவே பருவநிலை மாற்றத்தை பூமிப்பந்து எதிர்கொண்டு வரும் சூழலில், மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உணவுதானிய உற்பத்தியையும், உள்ளார்ந்த, நிலையான இட அமைவையும், இயற்கையோடு இயைந்த பொருளாதார வளர்ச்சியையும் நிர்ணயிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.

நன்றி: தினமணி  (01-03-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்