TNPSC Thervupettagam

பவளம்: வெறும் அலங்காரத்திற்கு மட்டுமா?

June 8 , 2024 23 days 71 0
  • நம்மில் பலருக்கும் நமக்கும் நிலவுக்கும் இடையே இருக்கும் தூரம் தெரியும். ஆனால், கடலின் ஆழம் என்னவென்று கேட்டால் பதில் கிடைப்பது சந்தேகம்தான்.
  • கடலின் மிக ஆழமான பகுதி என்று அறியப்படுகின்ற பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா அகழியின் ஆழம் 11 கிலோமீட்டர் (10,928 மீ.). நாம் சுவாசிக்கத் தேவையான உயிர்வளி கடலில் இருந்துதான் பெருமளவு கிடைக்கிறது தெரியுமா? அது மட்டுமல்லாமல், உலகில் நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளின் காலநிலையைத் தீர்மானிப்பதும் பெருங்கடல்கள்தான். ஆனால் இன்றைக்குக் கடல்கள், நம் கழிவுகள் அனைத்தும் இறுதியில் சென்றடையும் இடமாக மாறிவருகிறது.
  • நம் அனைவருக்கும் 2004 சுனாமி நினைவிருக்கும். அப்போது இந்தியாவின் அனைத்து கிழக்கு கடற்கரை நகரங்களும் கடற்கரையை ஒட்டியிருந்த பகுதிகளும் பெரும் சேதத்திற்கும் அழிவுக்கும் உள்ளாகின.
  • ஆனால், தமிழ்நாட்டில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் ஏற்பட்ட சேதம் சென்னை, நாகப்பட்டினம், திருச்செந்தூர் போன்ற பகுதிகளைக் காட்டிலும் மிகக் குறைவுதான்.
  • இதற்கு முக்கியக் காரணம் தூத்துக்குடி, ராமேஸ்வரம் கடற்கரைகளுக்கு இடையே அமைந்துள்ள மன்னார் வளைகுடா பகுதிகளில்காணப்படும் பவளத்திட்டுகளும் 21 தீவுகளும்தான். மன்னார் வளைகுடா தென் கிழக்கு ஆசியாவின் முதல் கடல்சார் உயிர்க் கோளக் காப்பகமாகத் திகழ்வது மட்டுமல்லாமல், பண்பாட்டுத் தொன்மை வாய்ந்த பகுதியாகவும் திகழ்கிறது.

மிதக்கும் பாறைகள்:

  • பவளத்திட்டு என்பது ஓர் வகை உயிரினம். ராமேஸ்வரத்தில் மிதக்கும் பாறையை (Floating rock) பார்த்திருப்போம் / கேள்விபட்டிருப்போம். அதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்னவென்றால், அந்தப் பாறைகள் முழுவதும் சிறுசிறு துளைகளால் ஆனவை.
  • அந்தத் துளைகள் அனைத்திலும் பவளப் பூச்சிகள் (Coral Polyps) இருந்திருக்கும். அவை இறந்தவுடன் அந்தத் துளைகள் காற்றால் அடைக்கப்படுவதன் மூலம் அந்தப் பாறைகள் மிதக்கின்றன. இந்த மிதக்கும் பாறைகளே பவளத்திட்டுகள்.
  • Coral Polyps எனப்படும் பவளஉயிரிகள் கடல் நீரில் உள்ள சுண்ணாம்புப் பொருளான கால்சியம் கார்பனேட்டை உள்கொண்டு பாறை போன்ற அமைப்பைக் கடலில் உருவாக்குகின்றன. இந்தப் பவளத்திட்டுகளின் உண்மையான நிறம் வெள்ளை. ஆனால், இவை மஞ்சள் பழுப்புநிறப் பாசி எனப்படும் ஸூஸாந்தலே என்கிற ஒரு செல் ஆல்கேவின் உதவியுடன் பச்சை, உள்பட வண்ணங்களில் தோற்றமளிக்கிறது.
  • இந்த பவளஉயிரிகளுக்குத் தேவையான ஆற்றலை ஒளிச்சேர்கை மூலம் ஸூஸாந்தலே ஆல்கேவும் (முதல்நிலை உற்பத்தியாளர்), இந்த ஸூஸாந்தலே ஆல்கேவுக்குத் தேவையான தங்குமிடத்தை இந்தப் பவளஉயிரிகளும் தந்து ஒரு பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கின்றன. இந்த ஸூஸாந்தலே இல்லாமல் பவளஉயிரிகளால் இரண்டு மாதத்திற்கு மேல் உயிர் வாழ முடியாது.

தமிழ்நாட்டின் பவளத்திட்டுகள்:

  • "நாம் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள், ஏனெனில் நம் பகுதியில் பவளத்திட்டுகள் உள்ளன. இந்தியாவில் இந்தப் பவளத்திட்டுகள் அந்தமான் - நிக்கோபார், லட்சத்தீவுகள், மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி, கட்ச் வளைகுடா பகுதிகளில் காணப்படுகின்றன. அதைத் தவிர்த்து மேற்கு கடற்கரை பகுதிகளான கோவா, கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன.
  • ஆனால், இந்தியத் துணை கண்டத்திலேயே பவளத்திட்டுகள் அதிகச் செறிவுடன் காணப்படுவது தமிழ்நாட்டில்தான். அதுவும் முத்துநகரம் என்று அறியப்படுகின்ற தூத்துக்குடிப் பகுதியில்தான் பவளத்திட்டுகள் நல்ல நிலைமையிலும், அதிகச் செறிவுடனும் காணப்படுகின்றன என்பது ஆச்சரியமான உண்மை" என்கிறார் சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் திரவியம்.

எதிர்கொள்ளும் ஆபத்துகள்:

  • இவ்வளவு நன்மை தரக்கூடிய பவளத் திட்டுகள் இன்று அழிவுநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. பவளம் வெளிறிப்போதல் (Coral Bleaching) எனப்படும் நிகழ்வால் இவை அழிவைச் சந்தித்துவருகின்றன. இந்தப் பவளம் வெளிறிப்போதல் என்பது புவி வெப்பமாதலின் விளைவாகக் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படுகிறது.
  • கடல் நீரின் வெப்பநிலை 300 செல்சியஸை விட அதிகரிக்கும்போது ஸூஸாந்தலே ஆல்கே விற்கும் பவளத்திட்டுகளுக்கும் உள்ள உறவு வலுவிழந்து இந்த பாலிப்பைவிட்டுப் பாசி விலகிச் சென்றுவிடும். இதனால்தான் பவளம் வெளிறிப்போதல் நிகழ்கிறது. கடல்நீரின் வெப்பநிலை மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்பும்போது (2-3 மாதத்திற்குள்) இதற்கிடையேயான உறவு மீண்டும் வலுப் பெறுகிறது.
  • நல்ல நிலையில் உள்ள, பவளம் வெளிறிப் போதல் நிகழ்ந்துள்ள, இறந்த நிலையில் உள்ள பவளத்திட்டுகளை அவற்றின் நிறத்தின் அடிப்படையில் அடையாளம் காணலாம். பச்சை, வண்ண நிறங்களில் இருக்கும்போது அது நன்கு வாழும் நிலையிலும், வெள்ளை நிறத்தில் இருந்தால் பவளம் வெளிறிப்போதல் நிலையிலும், பழுப்பு நிறத்தில் இருந்தால் அது இறந்த நிலையில் உள்ள பவளத்திட்டு என்பதையும் அறியலாம். பவளம் வெளிறிப் போதல் நிகழ்ந்து 2 முதல் 3 மாதம் வரையிலும் பவளத்திட்டுகள் உயிருடன்தான் இருக்கும்.

காலநிலை மாற்றமும் விளைவுகளும்:

  • ஒவ்வோர் ஆண்டும் கோடைக்காலத்தில் இந்தப் பவளம் வெளிறிப்போதல் நிகழ்வானது நடந்துகொண்டுதான் இருக்கிறது. இரண்டுமாதங்களுக்குள் வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்பும்போது மீண்டும் பவளத்திட்டுகள் புத்துணர்வு பெறும். இப்படித்தான் 2010, 2016 ஆண்டுகளில் நிலவிய வெப்பமாதலின்போது பவளம் வெளிறிப் போதல் நிகழ்ந்து நான்கு மாதங்களுக்கும் மேலாக நீடித்து, இயல்பு நிலைக்குத் திரும்பாததால் அதிகப்படியான பவளத்திட்டுகள் அழிந்தன.
  • அதுமட்டுமல்லாமல் இழுவை மடி, கூண்டு வைத்து மீன்பிடித்தல், தள்ளுவலை முறைகளின் மூலம் பவளத்திட்டுகள் அடியோடு பெயர்த்தோ, பவளத்திட்டுகள் சேதமடைந்தோ நோய்வாய்ப்படுவதன் மூலமாகவோ பாதிக்கப்படுகின்றன.
  • மேலும், கடலில் உள்ள கடற்பாசிகளை, அழகு சாதனப் பொருள்கள், உணவு தயாரிக்கும் தொழிற் சாலைகளின் பயன்பாட்டிற்காகச் சேகரிக்கும் நோக்கில் பவளத்திட்டுகளின் மீது நடந்து சென்றும் அதைச் சேதப்படுத்தி விடுகின்றனர். மற்றுமொரு பாதிப்பு என்னவென்றால், Algal bloom எனப்படும் பாசித்திரள்களின் அபரிமிதமான வளர்ச்சி அதிகப்படியான இடத்தை ஆக்கிரமிப்பது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட காலத்தில் பவளத்திட்டுகளின் இடத்தையே அபகரித்துவிடுகின்றன.
  • தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதிகளி லெல்லாம் பண்டைய காலத்துக் கட்டிடங்கள், முக்கியத்துவத்தை அறியாமலேயே பவளத் திட்டுகளை வைத்துக் கட்டப்பட்டுள்ளன. "பவளத்திட்டுகள் வெட்டியெடுத்தல் (Coral mining) 2004ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு 2009ஆம் ஆண்டு வரை அதிக அளவில் பவளத்திட்டுகளின் வளர்ச்சி காணப்பட்டது. தற்போது பவளத்திட்டுகள் அதிகரித்துவந்தாலும் மற்றொரு பெரிய பவள வெளிறிப்போதலைத் தாங்கும் அளவிற்கு அவை நீடித்து இருக்குமா என்பது சந்தேகம்தான்" என்கிறார் திரவியம்.
  • காலநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளுக்கு இடையேயான குழு (IPCC) 2040ஆம் ஆண்டிற்குள் தீவிரமான பவளம் வெளிறிப்போதல் நிகழ வாய்ப்பிருக்கிறது என்று கணித்துள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் உலகம் முழுவதும் உள்ள பவளத்திட்டுகளில் 99% அழிய வாய்ப்பிருக்கிறது.
  • இந்தியாவில் 170க்கும் மேற்பட்ட பவளத்திட்டுஇனங்கள் உள்ளன. அவற்றில் மேசைப் பவளம் எனப்படும் ஒரு வகை பவளத்திட்டு 15 செ.மீ. வளர்வதற்கே ஓராண்டு காலம் எடுத்துக்கொள்கிறதாம். மூளைப் பவளம், பெரும் பவளம் போன்ற பவளத்திட்டு வகை களெல்லாம் 1 செ.மீ. வளர்வதற்கே ஓராண்டு எடுத்துக்கொள்ளும்.

மக்களின் பங்களிப்பு:

  • என்னதான் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972இன் அட்டவணை 1இன் கீழ் பாதுகாக்கப் பட்டாலும் பவளத்திட்டுகளைப் பாதுகாக்க நாமும் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இன்று மன்னார் வளைகுடா, தூத்துக்குடி பகுதிகளில் ஆழ்கடல் நீச்சல் (Scuba Diving) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பவளத்திட்டுகளைப் புதுப்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, புதுப்பிக்கப் பட்டுவருகின்றன.
  • அதில் வெற்றியும் காணப் படுகின்றது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதற்கான பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. செய்திகளில் வாடிக்கையாக நாம் பார்த்து வரும் நிகழ்வு தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வதும் படகுகளைச் சிறைபிடிப்பதும் ஆகும்.
  • இதற்கான முக்கியக் காரணம் இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட இழுவை மடி உள்ளிட்ட மீன்பிடி முறைகளைத் தமிழக மீனவர்கள் கடைப்பிடிப்பதால்தான். மீனவர்கள், மக்களோடு இணைந்து தமிழக அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதன் மூலமும் இத்தகைய பிரச்சினைகளைத் தவிர்ப்பதோடு கடல்சார் இயற்கை வளங்களையும் பாதுகாக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்