- வழக்கம் போல இந்த ஆண்டும் கலை, விளையாட்டு, தொண்டு எனப் பல துறைகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அசத்தியுள்ளனர். அந்த வகையில் விடைபெறும் 2023இல் கவனம் ஈர்த்த சிலர்:
முத்தமிழ்செல்வி
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்த 34 வயதான முத்தமிழ்செல்வி இமாலய சாதனையைப் படைத்தார். ஆம், உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான 8,850 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட்டை எட்டிய பெண் என்கிற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார். இந்தச் சாதனையை அடைந்த முதல் தமிழ்ப் பெண் இவர். கடினமான சாகச விளையாட்டாகக் கருதப்படும் மலையேற்றத்தை மேற்கொள்ள தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு, தடைகளைத் தாண்டி இந்த ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டினார் முத்தமிழ் செல்வி.
கிரீஷ்மா
- தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர், சுயாதீன பத்திரிகையாளர் கிரீஷ்மா குதர். களத்துக்குச் சென்று செய்திகளைச் சேகரித்து உண்மையை உலகுக்குச் சொல்ல முனைபவர். இந்தியாவை உலுக்கிய மணிப்பூர் கலவரத்தை நேரில் சென்று ஆவணப்படுத்தி செய்திகளை வழங்கினார். பாகுபாடற்ற இவருடைய எழுத்து தனி அடையாளமானது. இதழியல் துறையில் இளம் பெண் பத்திரிகையாளராக மிளிர்கிறார் கிரீஷ்மா.
ஷான் ரோல்டன்
- ‘நான் காலி..’, ‘ஜிங்கர்ததங்கா..’ என இந்த ஆண்டு இசைப்பாடல்கள் மூலம் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தவர் ஷான் ரோல்டன். 2014ஆம் ஆண்டில் ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூல ம் இசை அமைப்பாளராக அறிமுகமான இவர், ‘ஜோக்கர்’, ‘மெஹந்தி சர்க்கஸ்’, ‘ஜெய் பீம்’ போன்று கவனிக்கத்தக்க படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். ஷான் ரோல்டன் குரலில் ஒலிக்கும் பாடல்களுக்கெனத் தனி ரசிகப் பட்டாளமும் உண்டு. திரைத் துறையில் பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஷான், இளைய தலைமுறை விரும்பும் பல மெட்டுகளை உருவாக்க முனைந்துகொண்டே இருக்கிறார்.
யூடியூபர் அஜய்
- ஒரு பட்ஜெட் பயணத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை நடைபெறும் விஷயங்களை சுவாரசியம் குறையாமல் காட்சிப்படுத்தி வருகிறார் தமிழ் யூடியூபர் அஜய். உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை இவர் பயணப்படும் இடங்களைப் பற்றிய காணொளிகளை ‘டிரான்சிட் பைட்ஸ்’ எனும் யூடியூப் பக்கத்தில் பகிர்கிறார். இப்பக்கத்தை 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். காணொளிக்கு தேவையான காட்சிகளை படம் பிடிப்பது, தொகுப்பது, பின்னணிக் குரல் தருவது தொழில்நுட்ப வேலைகள் என அனைத்தையும் தனி ஒருவனாக, தானே தயாரித்து வெளியிடுவது இவருடைய தனிச்சிறப்பு.
வித்யா ராம்ராஜ்
- கோவையைச் சேர்ந்த 25 வயதான தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் தமிழ்நாட்டுக்குப் பெருமையைத் தேடித் தந்தார். 2023இல் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்தார் இவர். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலம், மகளிர் 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும், கலப்பு 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினார். தடை தாண்டும் ஓட்டத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில், 55:42 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த வித்யா, இந்தியாவின் ‘தங்க மங்கை’ பி.டி உஷாவின் 39 ஆண்டு கால தேசிய சாதனையைச் சமன் செய்தும் கவனிக்க வைத்தார்.
சாய் சுதர்ஷன்
- தமிழ்நாட்டிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து அறிமுகத் தொடரிலேயே அசத்தியிருக்கிறார், 22 வயதான சாய் சுதர்ஷன். அண்மையில் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகி தொடர்ச்சியாக இரண்டு அரைச் சதங்களை விளாசி சாதனை படைத்தார். இதன்மூலம் 1987இல் அறிமுகமாகி தொடர்ச்சியாக இரண்டு சதங்களை விளாசிய நவ்ஜோத் சிங் சித்துவின் சாதனையை சாய் சுதர்ஷன் சமன் செய்தார். இதேபோல் 2023 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக குஜராத் அணிக்காக 96 ரன்களைக் குவித்து பாராட்டைப் பெற்றார்.
தன்னார்வலர்கள்
- 2023 டிசம்பரில் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் கன மழையால் பாதிக்கப்பட்டன. திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை, வெள்ளத்தைச் சந்தித்தன. இந்த இயற்கைப் பேரிடர்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உயிர், பொருள் இழப்புகளால் உதவிகளை எதிர்ப்பார்த்திருந்த மக்களுக்கு இளைய தலைமுறையினர் ஆதரவு கரம் நீட்டினர். 2015 சென்னை வெள்ளத்தின்போது இயங்கியதுபோலவே களத்தில் இறங்கிய தன்னார்வலர்கள் இணையதளத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி உதவிகளை ஒருங்கிணைத்தனர். இளைய தலைமுறையின் இந்த மனிதநேயமிக்க செயல்கள் துயர்மிகு காலத்தில் மனிதத்தை மீட்டெடுக்க உதவின.
மணிகண்டன்
- தேர்ந்த மிமிக்ரி கலைஞராகக் கலைத் துறையில் மிளிரத் தொடங்கி, தனது இயல்பான நடிப்பால் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருபவர் மணிகண்டன். மிமிக்ரி, நடிப்பு மட்டுமல்லாமல் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என சினிமாவின் முக்கியப் பணிகளிலும் திறம்படப் பங்காற்றி வருகிறார். ‘சில்லுக் கருப்பட்டி’, ‘ஜெய்பீம்’, ‘குட் நைட்’ போன்ற படங்களால் இவரது திரைப்படத் தேர்வும் அதிக எதிர்பார்ப்பை கூட்டுகிறது. ஆண்டுக்கு ஆண்டு தன் மீதான எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் சேர்த்து வருகிறார்.
பவானி தேவி
- சென்னையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனையான 28 வயதான பவானி தேவி, இந்த ஆண்டு ஜூனில் சீனாவில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதேபோல கோவாவில் நடைபெற்ற 37ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான வாள் வீச்சில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்குத் தகுதிபெற வெளிநாடுகளில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டிருக்கும் அவர், தன் மீதான எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறார்.
பிரக்ஞானந்தா & குகேஷ்
- செஸ் விளையாட்டின் தலைநகரம் என்று போற்றப்படும் அளவுக்கு தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியிருக்கிறார்கள். இந்த கிராண்ட் மாஸ்டர்களில் 18 வயதான ஆர். பிரக்ஞானந்தாவும் 17 வயதான டி. குகேஷும் சர்வதேச செஸ் அரங்கில் இந்த ஆண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர். 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இவர்கள், அடுத்தடுத்து சாதனைகளைப் படைத்தது கவனிக்க வைத்தது.
- ‘டைகர் ஆஃப் மெட்ராஸ்’ என்றழைக்கப்படும் ஆனந்தின் 36 ஆண்டுக் கால சாதனையை முறியடித்து, இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் என்கிற இடத்தைக் கைப்பற்றினார் குகேஷ். இன்னொரு புறம், ஆனந்துக்குப் பிறகு உலகக் கோப்பை செஸ் தொடரில் இறுதிப் போட்டிவரை முன்னேறிய, பதக்கம் வென்ற இந்தியர் ஆகிய பெருமைகளைப் பெற்றார் பிரக்ஞானந்தா.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 12 – 2023)