TNPSC Thervupettagam

பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் குறித்த தலையங்கம்

April 13 , 2022 846 days 377 0
  • வெற்றி தோல்விகளைப் பெருந்தன்மையுடன் எடுத்துக் கொள்வதும், தோல்வியைத் தழுவினாலும் வெற்றி பெற்றவரை மனமுவந்து பாராட்டிக் கைகுலுக்கிப் பிரிவதும் விளையாட்டு வீரர்களுக்கே உரித்தான அடிப்படைப் பண்புகள்.
  • அரசியலில் இணைந்து விட்டதாலோ என்னவோ, பாகிஸ்தானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கானுக்கு அந்தப் பண்பு முற்றிலுமாக மறந்துபோய்விட்டது.
  • நம்பிக்கை இல்லாத் தீர்மான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலி இருக்கிறார்கள்.
  • பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவையின் 342 உறுப்பினர்களில் 174 உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றார் அவர்.
  • இம்ரான் கான் பதவியிலிருந்து அகற்றப்பட்டதன் பின்னணியில் பாகிஸ்தான் அரசியல் மீண்டும் குழப்பத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.
  • முந்தைய பிரதமர்கள் வேறு யாருக்கும் இல்லாத மக்கள் செல்வாக்கு இம்ரான் கானுக்கு இருந்தது.
  • 1992-இல் அவரது தலைமையில் உலகக் கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது முதல், இம்ரான் கான் தேசிய அடையாளமாகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் ஒளிரத் தொடங்கினார்.
  • தனது தாயின் நினைவாக லாகூரில் அவர் நிறுவிய பன்னோக்கு மருத்துவமனையும், அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை என்கிற அறிவிப்பும் அவரது மக்கள் செல்வாக்கை உச்சத்துக்கு எடுத்துச் சென்றன.

இம்ரானின் ஆட்டம் தொடரும்...

  • 1996-இல் அவர் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியைத் தொடங்கியபோது, முன்வைத்த முக்கியமான குற்றச்சாட்டு "குடும்ப ஆட்சி'.
  • புட்டோ, ஷெரீஃப் குடும்பங்களின் கைகளில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கிறது என்கிற அவரது குற்றச்சாட்டு மக்களைக் கவர்ந்தது.
  • இப்போது அதே புட்டோ, ஷெரீஃப் குடும்பங்கள் கைகோத்து அவரை பதவியிலிருந்து அகற்றியிருக்கின்றன.
  • பாகிஸ்தானின் அரசியல் சற்று வித்தியாசமானது. பெரிய மாகாணங்களாகிய பஞ்சாபும், சிந்துவும் நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை வைத்திருப்பதால், அவற்றின் கட்டுப்பாட்டில் தான் பாகிஸ்தான் ஆட்சி இருப்பது வழக்கம்.
  • பஞ்சாபைச் சேர்ந்த "ஷெரீஃப்' குடும்பமும், சிந்துவைச் சேர்ந்த "புட்டோ' குடும்பமும் ஆதிக்கம் செலுத்திவந்த பாகிஸ்தான் அரசியலில் பஷ்டூனிய இம்ரான் கான் செல்வாக்குள்ள தலைவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதே ஒரு மிகப் பெரிய ஆச்சரியம்.
  • இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கும், தலிபான்களுக்கும் ஆதரவு தெரிவித்து "தலிபான் கான்' என்கிற பட்டப் பெயருடன் அரசியலில் வலம்வரத் தொடங்கினார் அவர்.
  • 2002-இல் நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற்ற இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி, 2018 தேர்தலில் 149 இடங்களில் வெற்றி பெற முடிந்தது என்றால், அதற்கு அவரது போராட்டங்களும், ஊழலுக்கு எதிரான முழக்கங்களும் மட்டுமே காரணமல்ல.
  • இளைஞர்கள் மத்தியில் அவரது செல்வாக்கு அதிகரித்தது என்பதும் நிஜம். ஆனால், வெற்றியை உறுதிப்படுத்தியது ராணுவம் என்பது அதைவிட நிஜம்.
  • இம்ரான் கானின் வெற்றிக்கு எப்படி ராணுவம் துணை புரிந்ததோ அதேபோல இப்போதைய அவரது வீழ்ச்சிக்குப் பின்னாலும் ராணுவம்தான் இருந்திருக்கிறது. முன்பு போல, தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்சிகளைக் கவிழ்த்து ராணுவ ஆட்சி நடத்தும் முறையை அவர்கள் இப்போது கையாள்வதில்லை.
  • தங்கள் மீது எந்தப் பழியும் விழுந்து விடாமல், அரசியல்வாதிகளை கைப்பொம்மையாக்கி, ஆட்சியை மறைமுகமாகக் கண்காணிப்பதும், கட்டுப்படுத்துவதும் பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய அணுகுமுறைகள்.
  • ராணுவத்துடனான இம்ரான் கானின் உரசல்தான், அவருக்கு எதிராக அரசியல் சூழலை மாற்றியது. புதிய ஐ.எஸ்.ஐ. (புலனாய்வுப் பிரிவு) தலைவராக லெப்டினென்ட் ஜெனரல் ஹகீம் அஞ்சுமை நியமிக்க மூன்று வாரங்கள் தாமதித்தார் பிரதமராக இருந்த இம்ரான் கான்.
  • தனக்கு நெருக்கமான ஃபயஸ் அகமதை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். தற்போதைய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பாஜ்வாவின் பதவிக்கால நீட்டிப்பு குறித்துப் பொதுவெளியில் அவர் பேசத் தொடங்கியதும்கூட ராணுவத் தளபதிகளின் ஆத்திரத்தை அதிகரித்தது.
  • ஒருபுறம் ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா, பாகிஸ்தானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும் இடையேயான நெருக்கத்தையும் உறவையும் பற்றிப் பேசினார்.
  • இன்னொருபுறம், "தன்னைக் கவிழ்க்க மேலைநாட்டு சக்திகள் சதித்திட்டம் தீட்டுகின்றன' என்று இம்ரான் கான் அறிவித்தார். அவரது ரஷியாவுடனான நெருக்கத்தை பாகிஸ்தான் ராணுவம் ஏற்கவில்லை.
  • ஒருபுறம் தங்கள் கட்டுப்பாட்டில் இம்ரான் இல்லை என்கிற கோபம்; இன்னொருபுறம் கடுமையான பொருளாதாரப் பின்னடைவாலும், விலைவாசி உயர்வாலும் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அதிருப்தியால் ஏற்பட்ட ஆத்திரம்.
  • இம்ரான் கானின் வீழ்ச்சியை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க முடிவெடுத்தது பாகிஸ்தான் ராணுவம்.
  • இம்ரான் கானின் கடைசிநேர முயற்சிகள் எதுவும் எடுபடவில்லை. அவர் கடைசிப் பந்தை எதிர் கொள்ளாமலேயே மைதானத்திலிருந்து வெளியேறிவிட்டார்.
  • முந்தைய பிரதமர்களைப் போலவே, பதவிக் காலத்தை நிறைவு செய்யாமல் வெளியேற்றப் பட்டார் என்பது மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப் பட்டு வெளியேற்றப்பட்ட முதல் பிரதமர் என்கிற அவமானத்துடன் இம்ரான் கானின் இந்த இன்னிங்ஸ் முடிவடைந்திருக்கிறது. இம்ரான் கானின் அரசியல் ஆட்டம் ஓய்ந்து விட்டது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்.

நன்றி: தினமணி (13 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்