பாகிஸ்தானை திருத்த முடியுமா?
- அண்மையில் ஜம்முவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சீரற்ற உறவை மேலும் சிக்கலாக்கி இருக்கின்றன.
- இதியா - பாகிஸ்தான் இடையேயான 1947, 1965, 1971, 1999 போர்களால் ஏற்கெனவே சீர்குலைந்துள்ள இருநாட்டு உறவுகள் மீண்டும் சரிவை நோக்கிச் செல்கின்றன. 1970-களின் பிற்பகுதியிலிருது பாகிஸ்தான் உதவியுடன் நிகழ்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால், ஆரம்பத்தில் பஞ்சாபும், அடுத்து ஜம்மு - காஷ்மீரும், பிறகு நாடு முழுவதிலும் பாதிப்புக்குள்ளாகின.
- அதேசமயம், தங்கள் மாகாணமான பலுசிஸ்தானில் இந்தியா போராட்டங்களை தூண்டுவதாக பாகிஸ்தான் அரசு, எந்தவித ஆதாரமுமின்றி, மனம்போன போக்கில் குற்றம் சாட்டுகிறது. எனவே, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவுகளின் ஏற்ற இறக்கங்கள் குறித்து பரிசீலிக்க வேண்டிய தருணம் இது.
- 1980-களின் பிற்பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் உறவில் நிலையற்ற தன்மையை மீறி சில ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் பாகிஸ்தான் பிரதமர் பெனாசீர் புட்டோவும் மேற்கொண்ட நல்லெண்ண முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகின. ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் உதவியுடன் பிரிவினைவாதிகள் நடத்திய வன்முறைகள் அமைதி முயற்சிக்குப் பின்னடைவையும், நம்பகமற்ற தன்மையையும் உருவாக்கின.
- அந்தக் காலகட்டதில் காஷ்மீர் பள்ளதாக்கில் ஊடுருவல் அதிகரிதது. ஊடுருவல்காரர்களுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் பின்புல உதவி, இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது. சியாச்சின் பனிச்சிகரத்திலும், சர் கிரீக் பனிமுகட்டிலும் படைகளைக் குறைப்பது குறித்த இருநாட்டு பேச்சுவார்த்தைகளில் அது தடங்கலை ஏற்படுத்தியது. அப்போது கைக்கு எட்டும் நிலையிலிருந்த அமைதிக் கனியை எட்டாமல் செய்தது பாகிஸ்தான் தான்.
- 1998-இல் அப்போதைய இந்தியப் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் தெற்காசியாவுக்கான துணிச்சலான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடித்தார். அது "குஜ்ரால் கோட்பாடு' என்று அழைக்கப்படுகிறது. பரஸ்பரமாக இல்லாவிட்டாலும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்காக விட்டுக்கொடுக்கும் கொள்கையை அவர் முன்வைத்தார்.
- இந்தக் கோட்பாடு பாகிஸ்தானுடனும் நம்பிக்கையை ஏற்படுத்தி, அந்நாட்டுடனான உறவை சீர்ப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டிருந்தது. ஆயினும் அதே ஆண்டில் இரு நாடுகளும் நிகழ்த்திய அணுகுண்டு வெடிப்பு சோதனைகள், தெற்காசியாவின் புவிஅரசியல் வரைபடத்தை மாற்றியமைத்துவிட்டன.
- அந்தச் சோதனைகளின் வாயிலாக, இரு நாடுகளும் அணுஆயுத நாடுகளாக மாறின. அது இரு நாட்டு உறவில் புதிய வியூக மாற்றத்தை ஆரம்பித்து வைத்தது. இரு நாடுகளும் அணு ஆயுதங்களை பரஸ்பரம் அழிப்பது என்ற, குஜ்ரால் கோட்பாட்டின் அடிப்படை இலக்கான அணு ஆயுத தடுப்பை இச்சோதனைகள் பின்னுக்கு தள்ளிவிட்டன.
- 1998 - இல் இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு நடத்திய அணுகுண்டு வெடிப்பு சோதனைகளை அடுத்து, நட்புறவை மேலும் சிக்கலாக்கியது 1999 - இல் நடத்தப்பட்ட கார்கில் போர். கார்கில் பகுதியில் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை பல வீரர்களின் உயிர்த் தியாகத்தால் இந்தியா முறியடித்தது. எனினும் இரு அணு ஆயுத நாடுகளிடையிலான வழக்கமான ஆயுதப் பிரயோகம் அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றுவிடுமோ என்ற அச்சம் அப்போது ஏற்பட்டது.
- அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இரு நாடுகளிடையிலான உறவு பதற்றம் மிகுந்ததாகவும், ஒருசமயம் நம்பிக்கை ஊட்டும் விதமாகவும், ஊசலாட்டம் கொண்டதாக இருந்தது. அமைதியை நிலைநாட்ட வாஜ்பாய் மேற்கொண்ட லாகூர் பேருந்துப் பயணமும், லாகூரில் நடைபெற்ற அமைதிக்கான மாநாடும் ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தின. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இணக்கமாகவே நடந்துகொண்டார். ஆனால், அந்த நம்பிக்கை மிக விரைவில் பொசுங்கியது.
- 1999 கார்கில் ஊடுருவலும், 2001 புது தில்லி நாடாளுமன்றம் மீதான பயங்கரவாத தாக்குதலும், பாகிஸ்தானின் மாறாத சிறுமைத்தனதை வெளிப்படுத்தின. அதையடுத்து "ஆபரேஷன் பராக்கிரமம்' என்ற ராணுவ நடவடிக்கைக்கு இந்திய அரசு உத்தரவிட்டது. அதன் விளைவாக இருநாட்டு ராணுவங்களும் எல்லையில் படைகளைக் குவித்தன. இரு நாடுகளிடையிலான மோதல் உச்சகட்டப் போராக வெடித்துவிடுமோ என்ற சூழலால், அமைதிக்கான முயற்சிகள் மீண்டும் தேக்கமடைந்தன.
- 2003 -இல் இரு நாடுகளிடையே ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் படைக்குறைப்புக்கு வழிகோலியது. அடுத்து வந்த மன்மோகன் சிங் ஆட்சியின்போது, அமைதிக்கான முயற்சிகள் துளிர்விட்டன. கிரிக்கெட் போட்டிகள், பேருந்துப் போக்குவரத்து ஆகியவை மூலம் நட்புறவை மேம்படுத்தும் பணிகள் தொடங்கின. வாஜ்பாய் தொடங்கி வைத்த மாற்றுவழிப் பேச்சுவார்த்தைகள் இக்காலகட்டத்தில் மீண்டும் வேகமெடுத்தன.
- ஆனால் இம்முறையும் பாகிஸ்தான் தவறிழைத்தது. இந்திய பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்த காலத்தில், 2008 நவம்பர் 26 -இல் இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பையில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூர தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பின்னணியில் இருந்தது அம்பலமானது. அது நாடு முழுவதிலும் பீதியையும், பாகிஸ்தானின் தொடர்ந்த பயங்கரவாத மிரட்டல்களால் அமைதிக்கு எதிரான சிந்தனைப் போக்கையும் உருவாக்கிவிட்டது.
- மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு, இருநாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அண்டைநாட்டின் நம்பகத்தன்மை கடும் சேதாரத்துக்குள்ளானது. 2013 -இல் நவாஸ் ஷெரீப் மீண்டும் பாகிஸ்தான் பிரதமரானபோது, சிறு நம்பிக்கையொளி தென்பட்டது. மன்மோகன் சிங்கும் நவாஸ் ஷெரீப்பும் பல்வேறு உலக மாநாடுகளில் சந்திதுப் பேசியதன் மூலமாக இருதரப்பு உறவு மலரும் நிலை உருவானது. ஆயினும் பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர்ச்சியான எல்லை அத்துமீறல்கள் அமைதிக்கான வாய்ப்புகளை தொடர்ந்து குலைத்தன.
- 2014 -இல் இதியப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு, இந்திய - பாக். உறவில் சிறு மாற்றம் காணப்பட்டது. தனது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உள்பட அண்டை நாட்டு தலைவர்களை மோடி அழைத்தார். சமச்சீரற்ற பாதுகாப்புச் சவால்கள் இருந்தபோதும், நல்லெண்ணதுக்கான ஆரம்ப முயற்சிகளை மோடி அரசு வெளிப்படுத்தியது. 2015 - இல் லாகூருக்கு மோடி சென்றதும், நவாஸ் ஷெரீஃப் இல்ல விழாவில் பங்கேற்றதும் நல்லெண்ணதுக்கான சிறப்பான முயற்சி என்பதில் சந்தேகமில்லை.
- ஆனால், பாகிஸ்தான் ராணுவம் வழக்கம்போல தனது வஞ்சகப் போக்கைக் காட்டியது. பதான்கோட் விமானப் படைத்தளத்திலும், ஊரி ராணுவ முகாமிலும் 2016 -இல் நடதப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானின் சுயரூபத்தை வெளிப்படுத்தின. அதையடுத்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் வீரர்கள் குவிக்கப்பட்டு, பதிலடிகள் கொடுக்கப்பட்டன.
- 2019 பிப்ரவரியில் ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவப் படை வீரர்கள் 40 பேர் பலியாகினர். அதற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்துவந்த பாலாகோட் முகாம் மீது இந்திய விமானப்படை ஊடுருவி தாக்குதல் நடத்தியது. அப்போது இந்திய விமானம் என்று வீழ்த்தப்பட்டு விமானி அபிநந்தன் வர்தமான் சிறைபிடிக்கப்பட்டார். எனினும் ராஜதந்திர நடவடிக்கைகளால் அவர் மீட்கப்பட்டார். இவ்வாறாக, தொடர்ச்சியான நிலையற்ற தன்மைகளால் அமைதி திரும்புதல் அசாத்தியமானது. தற்போது இந்திய - பாக். உறவு, நீண்டகால விரோதப் போக்கின் தொடர்ச்சியாக மேலும் நலிவடைந்திருக்கிறது.
- இருநாடுகளிடையிலான பிரச்னையின் ஆணிவேராக ஜம்மு - காஷ்மீர் இருந்து வருகிறது. அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை இந்தியா என்றைக்கும் விட்டு தராது. ஆனால், அதனை தனது பகுதியென்று சொந்தம் கொண்டாடி, பாகிஸ்தான் தொடர்ந்து அத்து மீறுகிறது. இந்நிலையில், இரு நாடுகளும் உள்நாட்டிலும் உலக அரங்கிலும் சந்திக்கும் சவால்களால், நீடித்த அமைதிக்கான முயற்சிகளை மழுப்பலாக வெளிப்படுத்தி வருகின்றன.
- இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள் என்பதால், தெற்காசிய பிராந்தியத்தின் முன்னேறத்துக்காக, இருநாட்டு உறவில் அமைதியைப் பேண வேண்டியதே தற்போதைய இலக்காகும். எனவே சவால்கள் இருந்தபோதிலும் அமைதிக்கான முயற்சிகள் தொடர வேண்டும்.
- இரு நாட்டு உறவில் இதுவரையிலான முன்னேற்றங்கள் மிகவும் மெதுவானவையாகவே இருந்துள்ளன. அவை அடிக்கடி தடம்புரண்டதையும் வரவாறு காட்டுகிறது. அதேசமயம், கசப்பான அனுபவங்கள் நிறைய உள்ளன. அவை அனைத்தையும் சீர்தூக்கி, அமைதிக்கான நன்முயற்சிகள் ராஜதந்திரத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.
- எந்த ஒரு நல்ல முயற்சிக்கும் தகுந்த நேர்மறையான சூழல் அவசியம். அந்த வகையில் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாவிட்டால், நல்லிணக்கதுக்கான முன்னேற்றப் பாதையை உருவாக்க முடியாது.
- இரு நாடுகளும் நிலையாகவும், இணைந்தும் வாழ வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அச்சுறுத்தும் அணு ஆயுதமயமாக்கப்பட்ட உலகச்சூழலில் இரு நாடுகளிடையே போர்ப் பதற்றம் தொடர்வதன் ஆபத்தை உணர்ந்து செயல்படுவதே, இந்தியா, பாகிஸ்தானின் உடனடி தேவையாகும்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 09 – 2024)