TNPSC Thervupettagam

பாகிஸ்தான் மக்களாட்சி நிலைபெறட்டும்

April 13 , 2022 846 days 374 0
  • கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் நிலவிவந்த அரசியல் குழப்ப நிலை முடிவுக்கு வந்திருக்கிறது. 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 174 வாக்குகளைப் பெற்று ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • சரிந்துவரும் பொருளாதாரம், அதிகரித்துவரும் கடன்கள், குறைந்துவரும் அந்நியச் செலாவணி கையிருப்பு என்று ஏகப்பட்ட சவால்களை பாகிஸ்தானின் புதிய பிரதமர் சந்திக்க வேண்டியிருக்கிறது.
  • எனினும், அவற்றையெல்லாம் தாண்டி, இந்த ஆட்சி மாற்றத்தின் அரசமைப்பு முக்கியத்துவமே உலக அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டுவருகிறது.
  • இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த நிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வதற்குப் பதிலாக, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலை நடத்தத் தயாரானார்.
  • இதற்கிடையில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு, அந்நாட்டில் நாடாளுமன்ற மக்களாட்சியை உறுதிப்படுத்தியுள்ளது.
  • இதன் மூலமாக, அரசமைப்புக்கு அப்பாற்பட்ட சர்வாதிகாரியாகச் செயல்பட விரும்பிய இம்ரான் கானின் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
  • ஒரு மக்களாட்சி நாட்டில், நாடாளுமன்ற முறையின் மரபார்ந்த நெறிகளைப் பின்பற்றச் செய்வதில், அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் வகிக்கக்கூடிய பங்கின் முக்கியத்துவமும் உணரப்பட்டுள்ளது.
  • பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றதிலிருந்து இம்ரான் கானின் ஆட்சிக்காலம் வரையில், மொத்தம் 23 முறை பிரதமர்கள் தங்களது ஆட்சிக் காலம் முடிவதற்கு முன்பே பதவியிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள்.
  • ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, அரசதிகாரத்தை ராணுவமே கைப்பற்றிக்கொண்ட நிகழ்வுகளும் உண்டு. பாகிஸ்தான் அரசியலில் ராணுவத்தின் செல்வாக்கு அபரிமிதமாகவே தொடர்ந்துவருகிறது.
  • இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பிரதமருக்குப் பதிலாக, பெரும்பான்மையைப் பெற்ற மற்றொருவர் பிரதமராகப் பொறுப்பேற்கிறார் என்பதே அங்குள்ள மக்களாட்சி நடைமுறையில் ஆரோக்கியமான போக்கு நிலவுகிறது என்பதைத்தான் காட்டுகிறது.
  • பாகிஸ்தான் அரசியல் வரலாற்றிலேயே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்து, பதவியை இழந்துள்ள முதல் பிரதமர் இம்ரான் கான்தான்.
  • நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் வழியாக அத்தீர்மானத்தை நிராகரிக்கவும், குடியரசுத் தலைவர் வாயிலாக நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் இம்ரான் கான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மக்களாட்சி நெறிகளுக்கு முரணானவை.
  • எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்துத் தொடர்ந்த வழக்கில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
  • அதன் காரணமாக, தற்போதைய நாடாளுமன்றத்தின் கால அளவு ஆகஸ்ட் 2023 வரையில் தொடரவிருக்கிறது.
  • நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்க நேர்ந்தமைக்கு அந்நிய நாட்டின் சதியே காரணம் என்று இம்ரான் கான் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார்.
  • இத்தகைய தேசபக்திப் பிரச்சாரங்கள் அடுத்துவரும் தேர்தலில் அவருக்கு வாக்குகளைப் பெற்றுத் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
  • ஆனால், அதுவரை பாகிஸ்தானில் மக்களாட்சிதான் நிலவப்போகிறது என்பது உலகம் முழுவதும் உள்ள, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு ஆறுதலான செய்தி.
  • சட்டத்தின் ஆட்சியும் சுதந்திரமான நீதித் துறையுமே ஜனநாயகத்தின் காவல் அரண் என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியிருக்கிறது.

நன்றி: தி இந்து (13 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்