TNPSC Thervupettagam

பாகு காலநிலை உச்சி மாநாடு

November 13 , 2024 11 days 54 0

பாகு காலநிலை உச்சி மாநாடு

  • ​காலநிலை உச்சி மாநாடு (COP29) நவம்பர் 11 முதல் 22ஆம் தேதிவரை மத்திய ஆசிய நாடான அசர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்று​வரு​கிறது. சமீப ஆண்டுகளாக உலக நாடுகள் எதிர்​கொண்டு​வரும் வெள்ளம், வெப்ப அலை, காட்டுத் தீ, அதிதீவிர மழை, வறட்சி, பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்புக் குறித்து இந்நிகழ்வில் உலகத் தலைவர்கள் பேச உள்ளனர். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக, காலநிலை மாற்றத்​தினால் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, வளர்ந்த நாடுகள் எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனை நடைபெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

​மாநாட்டின் முக்கி​யத்துவம்:

  • COP29 என்பது காலநிலை மாற்றம் குறித்து சர்வதேச அளவில் நடத்தப்​படும் முக்கிய மாநாடாகும். இதை ஐக்கிய நாடுகள் அவை முன்னின்று நடத்து​கிறது. COP (Conference of the Parties) அமைப்பில் 200 நாடுகள் அங்கம் வகிக்​கின்றன. இதன் முதல் காலநிலை உச்சி மாநாடு ஜெர்மனியின் பெர்லின் நகரில் 1995 ஆம் ஆண்டு நடத்தப்​பட்​டது.
  • இம்மாநாட்டில் உலக நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள், அமைச்​சர்கள், அரசுப் பிரதி​நி​திகள் பங்கேற்​பார்கள். காலநிலை மாற்றத்​தினால் உலக நாடுகளில் ஏற்படும் பாதிப்புகள், அதைக் கட்டுப்​படுத்து​வதற்கான நடவடிக்கைகளுக்குத் தயாராவது போன்றவை குறித்து இம்மாநாட்டில் விவாதிக்​கப்​படும்.
  • ஆனால், காலநிலை மாற்றப் பாதிப்​புக்கு முக்கியக் காரணமான கார்பன் உமிழ்வை அதிகம் வெளியிடும் உலக நாடுகளின் தலைவர்கள் (அமெரிக்​காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரூன், ஜெர்மன் அதிபர் உலாஃப் ஷோல்ஸ், இந்தியப் பிரதமர் மோடி) அசர்பைஜான் மாநாட்டில் பங்கேற்​க​வில்லை.

கடந்த கால ஒப்பந்​தங்கள்:

  • காலநிலை உச்சி மாநாட்டின் முக்கிய விவாத​மாகப் புவியின் வெப்பநிலை அதிகரிப்பு உள்ளது. காலநிலை மாற்றத்​தினால் புவியின் ஆண்டு சராசரி வெப்பநிலை இயல்பைவிட 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்​துள்ளது. 2040ஆம் ஆண்டுக்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸாக மாறக்​கூடும் என்று விஞ்ஞானிகள் உலக நாடுகளை எச்சரித்​துள்ளனர். வெப்பநிலை அதிகரிப்பால் புவியில் உயிரினங்கள் வாழ முடியாத சூழல் உருவாகலாம் என அஞ்சப்​படு​கிறது.
  • இதன் காரணமாகவே 2015இல் பாரிஸ் உடன்படிக்கையில் புவியின் வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்சி​யஸுக்குள் கட்டுப்​படுத்த வேண்டும்; வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க 2020ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் 100 பில்லியன் டாலர் நிதியை வளர்ந்த நாடுகளி​லிருந்து திரட்ட வேண்டும் என்பன போன்ற ஒப்பந்​தங்கள் உலக நாடுகள் இடையே ஏற்படுத்​தப்​பட்டன. எனினும் இந்த நிதிப் பங்களிப்பில் வளர்ந்​து​வரும் நாடுகளான இந்தியா, சீனாவுக்கு அப்போது விலக்கு அளிக்​கப்​பட்​டிருந்தது.
  • அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் போக்கு, அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் பாரிஸ் உடன்படிக்கையி​லிருந்து விலகியது, கரோனா பாதிப்பு, போர்ச் சூழல் போன்றவை காரணமாக பாரிஸ் உடன்படிக்கை சார்ந்து எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்​கப்​படாமல் இருந்தது.

2023இல்...

  • 2023ஆம் ஆண்டு காலநிலை உச்சி மாநாடு (COP28) துபாயில் நடைபெற்றது. இதில், காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க, வளர்ந்த நாடுகளால் மொத்தம் 770 மில்லியன் டாலர் நிதி திரட்​டப்​பட்டது. காலநிலை உச்சி மாநாட்டின் 28 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாகப் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்​கவும் முடிவுசெய்​யப்​பட்டது.
  • அத்துடன், புதுப்​பிக்​கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை உலக நாடுகள் மூன்று மடங்கு அதிகரிக்க ஒப்பந்தம் மேற்கொள்​ளப்​பட்டது. காலநிலை மாற்றத்​தினால் ஏற்படும் நோய்கள், சுகாதாரப் பிரச்​சினைகள் பற்றியும் அம்மாநாட்டில் தலைவர்கள் ஆலோசித்தனர்.

மாநாட்டின் எதிர்​பார்ப்புகள்:

  • காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்​புக்கான இழப்பீட்டு நிதியில் கார்பன் உமிழ்வில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்தியா, சீனா, வளைகுடா நாடுகள் பங்களிக்க வேண்டும் என வளர்ந்த நாடுகள் வலியுறுத்​திவரு​கின்றன. தவிர, இழப்பீடு நிதியை வழங்கு​வதில் வளர்ந்த - வளரும் நாடுகளுக்கு இடையே சுமுகத் தீர்வு எட்டப்​படாமல் உள்ளது. இவை குறித்து COP29 மாநாட்டில் விவாதம் நடைபெறலாம்.
  • கடல், ஆறு, மலை என எங்கெங்கும் சுற்றுச்​சூழலில் பாதிப்பை ஏற்படுத்​திவரும் பிளாஸ்டிக் மாசு குறித்து உலக நாடுகள் விவாதிக்​கக்​கூடும். மறுசுழற்சியை அதிகரித்தல் உள்ளிட்ட காலநிலை மாற்ற பாதிப்பைக் குறைப்​ப​தற்கான புதிய ஒப்பந்​தங்கள் உருவாக்​கப்​படும் என நம்பப்​படு​கிறது. “2030க்குள் வறட்சி​யினால் பாதிக்​கப்பட்ட 1.5 பில்லியன் ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுப்​ப​தற்கான வழிகள் குறித்​தும், வறட்சியை எதிர்​கொள்​வதற்கான ஒப்பந்​தங்கள் குறித்தும் ஆலோசிக்​கப்​படும்” என்று காலநிலை மாற்றம் குறித்த நிபுணரான அரோனா டிடியோ தெரிவித்​துள்ளார்.

தீர்வுகள் எட்டப்​படுமா?

  • புவியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சி​யஸுக்கு உயராமல் தடுக்கக் கரியமில வாயுக்கள் உமிழ்வை, சுழிய​மாகக் (Net zero - கரியமில வாயு வெளியேற்​றத்தை முற்றி​லு​மாகத் தடுத்துச் சமநிலைக்குக் கொண்டு​வருவது) குறைக்க உலக நாடுகளின் நடவடிக்கை தேவை. பசுமை ஆற்றல் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் உலக நாடுகள் பொருளா​தா​ரத்தை வலுப்​படுத்​திக்​கொள்​வதற்கான வழிமுறைகளை முன்வைப்பது இம்மாநாட்டின் முக்கிய நகர்வாக அமையக்​கூடும். மேலும், காலநிலை மாற்றத்தால் பாதிக்​கப்​படும் ஏழை நாடுகள், அவற்றுக்கான இழப்பீட்டைப் பெறுவதை இம்மாநாடு உறுதிப்​படுத்த வேண்டும்.
  • புவியில் கரியமில வாயு வெளியேற்றம் 2022ஐவிட 2023இல் 1.1% அதிகரித்​துள்ளது. 2023இல் கார்பன் உமிழ்வு புதிய உச்சத்தைத் தொட்டதாக கார்பன் பட்ஜெட் அறிக்கை (The Global Carbon Budget) சுட்டிக்​காட்​டி​யுள்ளது. இந்த எச்சரிக்கைகளை எல்லாம் கவனத்தில் கொண்டு, காலநிலை மாற்றத்தின் பாதிப்பு​களைக் குறைப்​ப​தற்கான தீர்வுகளை நோக்கி அசர்பைஜான் மாநாடு பயணிக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்