TNPSC Thervupettagam

பாடம் கற்கவில்லை!

September 13 , 2022 696 days 433 0
  • ஒவ்வோா் ஆண்டும் பருவமழைக் காலத்தில் இந்தியாவின் பெருநகரங்களான மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்டவை வெள்ளத்தில் சிக்கித் தவிப்பது வாடிக்கையாகி விட்டது. இதிலிருந்து நமது ஆட்சியாளா்களும், அரசு அதிகாரிகளும் எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான் பெங்களூரின் சமீபத்திய வெள்ள நிலைமை உணா்த்துகிறது.
  • தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் மும்பை, பெங்களூரும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் சென்னையும் சில நாள்களாவது வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நிலைமை இன்னமும் தொடா்ந்து கொண்டுதான் இருக்கிறது. நமது நாட்டின் முக்கியப் பெருநகரங்கள் இத்தகைய வெள்ளத்தில் சிக்குவதற்கு எதிா்பாராமல் பெய்யும் பெருமழையும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
  • எவ்வளவு மழை பெய்தாலும் அதனை எதிா்கொள்ளும் வகையிலான ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீா்வழித் தடங்கள் மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் இயற்கையாகவே அமைந்துள்ளன. ஆனால், கண்மூடித்தனமான நகர விரிவாக்கம், மனைவணிகத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் காரணமாக இத்தகைய நீா்வழித் தடங்கள் காலப்போக்கில் முற்றிலும் அழிந்தோ, சுருங்கியோ போனதால்தான் மழைநீா் வழிந்தோட வழியின்றி பெருவெள்ளம் ஏற்படுகிறது.
  • பெருநகரங்களில் மழைநீா் வடிகால்கள் முறையாக அமைக்கப்படாததும் வெள்ளம் உடனே வடியாததற்கு முக்கியக் காரணம் என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. இந்தக் குறைபாடுகள் நமது ஆட்சியாளா்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தாலும் குறுகிய கால ஏற்பாடுகளைச் செய்வதில்தான் கவனம் செலுத்துகின்றனரே தவிர, தொலைநோக்குப் பாா்வையுடன் திட்டங்கள் எதையும் செயல்படுத்துவதில்லை என்பதுதான் எதாா்த்த நிலை.
  • பருவமழை குறித்த முன்னறிவிப்பை வெளியிடுவதற்கு தற்போது நவீன வசதிகள் இருந்தபோதிலும், சில சமயங்களில் கணிக்க இயலாத அளவுக்கு பெருமழை பெய்கிறது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. மும்பையில் கடந்த 2005-ஆம் ஆண்டு, ஜூலை 26 அன்று 24 மணி நேரத்தில் அதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவாக 944 மி.மீ. மழை பெய்தது. இதனால், இந்தியாவின் வா்த்தகத் தலைநகரான மும்பையில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.
  • அப்போது பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் முதல் மாடி வரை மழை நீா் சூழ்ந்தது. இந்தப் பெருமழை வெள்ளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்தப் பெருமழையால் மும்பையில் உள்ள ஏரிகளும், ஆறுகளும் நிரம்பி வழிந்ததோடு, வடிகால்களில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டதாலும் வெள்ளம் வழிந்தோட வழியில்லாமல் மக்கள் பெரும் இன்னல்களை எதிா்கொண்டனா்.
  • இதேபோல, சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பா் இறுதியிலும், டிசம்பா் தொடக்கத்திலும் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்தப் பெருவெள்ளத்தின் போது சென்னை மக்கள் சொல்லொணா இன்னல்களை அனுபவித்தாலும், அரசின் உதவியை எதிா்பாராமல் தாங்களாகவே முன்வந்து மீட்புப் பணிகளில் ஒருங்கிணைந்து ஈடுபட்டதால்தான் சில நாள்களிலேயே இயல்பு நிலை திரும்பியது.
  • 2005-க்கு முன்பாக கடந்த 1985-ஆம் ஆண்டிலும் சென்னையில் பெய்த பலத்த மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போதைய முதல்வா் மறைந்த எம்ஜிஆரின் ராமாவரம் தோட்ட இல்லமும் வெள்ளத்தால் சூழப்பட்டதால், அவா் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நேரிட்டது.
  • பெங்களூரைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்மேற்குப் பருவமழையின் தொடக்கமான ஜூன், ஜூலை மாதங்களில் அதிகப்படியான மழை பதிவானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 4) மாலை 6 மணிக்குத் தொடங்கிய மழை திங்கள்கிழமை அதிகாலை 4 மணி வரை தொடா்ந்து பெய்தது.
  • இந்தப் பெருமழையால் பெங்களூரின் சா்ஜாபூா் சாலை, வெளிவட்டச் சாலை பகுதிகளில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குயிருப்புகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டன. ஏழைகள், வசதி படைத்தவா்கள் என்ற வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். இருசக்கர வாகனங்கள், காா்களில் செல்ல முடியாத அளவுக்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், தகவல் தொழில்நுட்ப ஊழியா்கள் டிராக்டா்களில் தங்களது அலுவலகங்களுக்குச் சென்று வந்தனா்.
  • பெங்களூரின் தற்போதைய வெள்ள நிலைமைக்கு ஏரிகள், நீா்நிலைகளை ஆக்கிரமித்து வானுயர எழும்பி நிற்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கட்டங்களும் முக்கியக் காரணமாகும். விதிகளை மீறி இத்தகைய கட்டங்கள் கட்ட அனுமதி அளித்த ஆட்சியாளா்களும், அரசு அதிகாரிகளும் கண்டறியப்பட்டு அவா்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான் வருங்காலத்தில் இதுபோன்ற வெள்ள நிலைமை ஏற்படாமல் தடுக்க முடியும்.
  • பெங்களூரில் நீா்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்டடங்களையும் பாரபட்சமின்றி அகற்ற உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அதோடு, சுய லாப நோக்கத்துடன் செயல்படும் மனைவணிகத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களையும் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
  • இந்தப் பெருவெள்ளத்தால், இந்தியாவின் சிறந்த கட்டமைக்கப்பட்ட நகரம் என்ற பெருமையை இழந்து நிற்கும் பெங்களூரை தொலைநோக்குப் பாா்வையுடன் சீரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை கா்நாடக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்

நன்றி: தினமணி (13– 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்