- இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு லட்சம் நபர்கள் பாதப்புண் பாதிப்பால் காலை இழக்கின்றனர். 50 வயது முதல் 80 வயதுக்கு உள்பட்டவர்களே நீரிழிவு பாதப்புண் பாதிப்புக்கும் ஆளாகிறார்கள்.
- இதில் பாதப்புண் வராத நோயாளி களைவிட, பாதப்புண் வந்த நீரிழிவு நோயாளிகளுக்கு மரண ஆபத்து இருமடங்காக அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
- விபத்து தவிர்த்து 80 சதவீதம் காலை இழப்பதற்கு நீரிழிவு பாதப்புண்ணே காரணமாகிறது. நீரிழிவு பாதப்புண்ணின் தீவிரத்தை அறியாததால் பலரும் தங்கள் கால்களை இழந்துவரும் சூழலில் நீரிழிவு பாதப்புண் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.
நீரிழிவு பாதப்புண் ஏற்படக் காரணிகள்
- கால் புறநரம்புகளுக்கு ரத்த ஓட்டத்தைத் தரும் மூன்று மைக்ரோ மீட்டர் துவாரம் கொண்ட நுண் ரத்தக் குழாய் வழியாக, ஏழு மைக்ரோ மீட்டர் அளவுடைய சிவப்பணுக்கள், புற நரம்புகளுக்கு உயிர்ப்பு ஊட்டி, தோல்களின் தொடு உணர்வையும் வலி உணர்வையும் பெற்று, பாதங்கள் பாதுகாக்கப்படுகின்றன. நீரிழிவு நோய் வந்தவர்களுக்கு நுண் ரத்தக் குழாய்கள் அடைபட்டு, கால் புற- தொடு நரம்புகள் பாதிக்கப்படும். இதனால் பாதப்புண் எளிதில் ஏற்படும்.
- இன்சுலின் பற்றாக்குறையால் குளுக் கோஸ் முழுமையாகப் பயன்படாமல் ரத்தத்தில் மிகுதியாகத் தேங்கி, வேதிப்பொருள்களாக மாற்றம் பெற்று, கால் புறநரம்புகளைப் பாதிக்கிறது. இதனால் பாதங்களில் தொடு உணர்வையும் வலி உணர்வையும் இழக்க நேரிடுகிறது. உணர்வற்ற பாதம், காயங்களை உணர முடியாமல் பலவித நுண்ணுயிர்த் தொற்று ஏற்படுகிறது.
- இதனால் பாதம் சீழ்பிடித்து கால் திசுக்களை அழித்து, ‘கேங்ரின்’ நோய் ஏற்படுகிறது. மேலும், கால் ரத்தத் தமனிக் குழாய்களில், கொழுப்பு படிந்து அதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு, கால் பாதிக்கப்படும். இதனால் உயிர் இழந்த திசுக்களால் கால் கறுப்பு நிறத்தில் மாறுவதால் அறுவை சிகிச்சை மூலம் கால் நீக்கப்படுகிறது.
- கால்பாதத் தோல்கள், வியர்வை, சீபம் போன்ற திரவ குறைபாட்டால் காலில் வறட்சி ஏற்பட்டு, வெடிப்பு காரணமாக கிருமிகள் தோலில் நுழைந்து பாதப்புண் ஏற்படும். நீரிழிவு நோயால் பாதங்கள், அதன் இயல்பான கட்டுமானத்தை இழந்து உடல் பருமன் காரணமாகப் பாதப்புண் ஏற்படும். கால் விரல் இடுக்கில் உருவாகும் சேற்றுப் புண்ணால் பலர் காலை இழந்துள்ளனர்.
- மத ரீதியில் காலணி அணியாமல் வேண்டுதலின் பேரில் பக்தி பாத யாத்திரை செய்வதால் பாதப்புண் பாதிப்பு ஏற்படும். கால் வரிசுருள் சிரை நோய் (Varicose vein) உள்ள நீரிழிவு நோயளிகளுக்குப் பாதப்புண் எளிதில் தோன்றும். கால் மூட்டு, கணுக்கால் மூட்டுக் குறைபாடு உள்ளவர்களுக்குப் பாதப் புண் ஏற்படும்.
சர்க்கரை அளவைக் கண்காணித்தல்
- பாதப்புண் ஏற்படுவதைத் தவிர்க்கத் மாதம் ஒருமுறையாவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்காணிக்க வேண்டும். கால் புறநரம்புகள், உயர் ரத்தச் சர்க்கரையால் பாதிக்கப்பட்டுச் செயல் இழந்தால், அதைச் சீர்செய்ய முடியாது. அதனால், அதைத் தடுக்கத் துரிதமாகச் செயல்பட்டு, கால் பாத உணர்வைக் காப்பாற்ற வேண்டும். உயர் ரத்தச் சர்க்கரையால் சிவப்பணுக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிய மூன்று மாதத்திற்கு ஒரு முறை HbA1C பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
- கால்கள் மரத்துப்போதல், எறும்புகள் ஊர்வது போன்ற உணர்வு, கால் எரிச்சல் போன்ற தொல்லைகள் இருக்கும்பட்சத்தில் ஆரம்பக் கட்டத்திலேயே இதை மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு சென்று நோய்ச் சிக்கலுக்குக் காரணமான புறநரம்புகள் பாதிப்பைத் தடுக்க வேண்டும்.
வராமல் தடுக்க
- முதல்கட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கையாக உடற்பயிற்சி, நடைப் பயிற்சி இரண்டையும் வாழ்வின் அங்கமாகக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு மிக எளிதாகப் பாதிக்கப்படும் நுண் ரத்தக் குழாய்கள் அடைபடாமல் இருக்க துரித வேக நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
- இதன் மூலம் புறநரம்புகள் பாதிப்படையாமல் தடுக்கப்படும். நடைப்பயிற்சியின்போது பின்பாதம் தரை தொட்டு, மத்திய பாத வளைவு தரை பதிந்து, முன்கால் விரல்களால் தரை எழும்பி நடக்க வேண்டும். குதிகால் பகுதிக்கு அதிக உயரம் வைத்த காலணி தீமை பயக்கும்.
- அதிகப்படியான கலோரி உணவைத் தவிர்த்து, கொழுப்பைக் குறைத்து, நார்ச்சத்தைச் சேர்த்து, உடல் பருமனைச் சரியான அளவீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் உயர் ரத்த அழுத்தத்தைச் சரியான கண்காணிப்பில் வைத்திருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்குப் பாதப்புண் ஏற்படும் சாத்தியம் குறைவு.
- பராமரிப்புக்காகக் கால்விரல் நகத்தை வெட்டும் போது அதை ஒட்டிய தோல், திசுக்கள் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். கால் விரல் இடுக்கில் ஈரப்பதம் இல்லாமல் பராமரிப்பதன் மூலம் பூஞ்சைத் தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம். பாதத்தை உப்பு நீரில் குறைந்தது பத்து நிமிடங்கள் ஊறவைத்து, சோப்பு நீரில் சுத்தம் செய்து, பருத்தித் துணியால் ஈரப்பதம் அகற்றிக் காலைச் சுத்தமாக வைக்க வேண்டும். இரவு உறக்கத்திற்கு முன் இப்பராமரிப்பைத் தினமும் செய்வது நன்மை பயக்கும்.
சுயமருத்துவம் கூடாது
- பாதத்தில் தடித்த தோல் இருக்கும் பட்சத்தில் அதைக் கத்தியால் கீறுவது, தாங்களாக மருந்து எடுத்துக்கொள்வது போன்ற சுய மருத்துவத்தைத் தவிர்க்க வேண்டும். பாதப்புண், ஆணிக் கால் போன்றவற்றுக்கு மருத்துவரின் அறிவுரையின் பேரில் சிகிச்சை பெற வேண்டும். முதியோர், பார்வை யற்றவர்கள் பாதத்தைக் குடும்பத்தினர் தினம்தோறும் கவனிப்பது அவசியம்.
காலணிகளில் கூடுதல் கவனம்
- மைக்ரோ செல்லுலார் ரப்பரில் தயாரிக்கப்பட்ட தரமான காலணிகளை அணிவது பாதுகாப்பு தரும். மலிவான பிளாஸ்டிக் காலணிகள் பாதத்தைக் கடித்துப் புண் வரக் காரணமாகலாம். குளிர்காலத்தில் இரவில் கால் குளிர்ச்சியாக இருந்தால் பாத உறை அணிந்து உறங்க வேண்டும்.
- பாதக் காலுறைகள் பருத்தித் துணியால் ஆனதாக இருக்க வேண்டும். கணுக்கால் உயரத்துக்குக் காலுறை இருத்தலே சிறப்பானது. காலணிகளின் சுற்றுப்புறத்தைத் தாண்டி பாதங்கள் வெளிப்புறம் நீட்டிக்கொண்டிருக்காமல் இருக்க, காலணிகளின் அளவு சீராக இருக்க வேண்டும். கோடைக் காலத்தில் காலணியின்றி தார்சாலையில் நடப்பது ஆபத்து. வீட்டில் நடப்பதற்கும் தனி காலணியைப் பயன்படுத்த வேண்டும்.
சிகிச்சை முறை
- பாத வெடிப்புக்கும், வறட்சிக்கும் பாரஃபின் எண்ணெய், வேசலின் ஆகிய வற்றைத் தடவலாம். பாதத்தை முள், ஆணி தாக்கியிருந்தால் சீழ் பிடிக்காமல் இருக்க, ஆறு மணி நேரத்துக்குள் மருத்துவரை அணுகி நோய்த் தடுப்பு நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்தித் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் இருந்தாலும் அதனால் ஏற்படும் விளைவுகளைச் சரியான மருத்துவப் பராமரிப்பு முறையின் மூலம் தடுக்கலாம். எனவே, பாதப்புண் வந்தவர்கள் சரியான மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொண்டால் செயற்கைக் கால் பொருத்துவதைத் தவிர்க்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 02 – 2024)