TNPSC Thervupettagam

பாதல் சர்க்கார் நூற்றாண்டு: தமிழ் நாடகங்களுக்குப் புது வடிவம் தந்தவர்!

July 21 , 2024 5 hrs 0 min 4 0
  • உத்பல் தத், சம்பு மித்ரா போன்ற வங்க நாடகக்காரர்களை அதிகமான மக்கள் அறிந்திருந்தனர். நாடகங்கள் மட்டுமின்றித் திரைப்படங்களிலும் தோன்றியவர்கள் அவர்கள். ஆனால், அவர்களைப் போல் பெரும் ரசிகர் கூட்டத்தைப் பெற்றிராதபோதும், இந்திய அளவில் அவர்களுக்கு இணையான புகழை நாடக உலகில் பெற்றிருந்த ஒரு நாடக இயக்குநர் பாதல் சர்க்கார்.
  • பாதல் சர்க்கார் 1925இல் பிறந்தவர். கல்கத்தாவில் நகர நிர்மாணப் பொறியாளராக அரசாங்க வேலை பார்த்துவந்தபோது, ஓய்வு நேரங்களில் அமெச்சூர் நாடகங்களில் நடித்தார். நகைச்சுவை கலந்து நாடகங்களையும் எழுதினார். நாடகங்கள் பற்றிய அவரது எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் எழுதிய ‘ஏவம் இந்திரஜித்’ நாடகம் 1962இல் மேடையேறியது. பொருளாதார, அரசியல் கொந்தளிப்பு மிக்க காலகட்டம் அது. அமல், விமல், கமல், இந்திரஜித், மானசி என்கிற கதாபாத்திரங்கள் எவ்விதத் தனித்துவ குணாதிசயங்களும் அற்றவர்களாக அதில் படைக்கப்பட்டிருந்தார்கள். வாழ்வின் நோக்கம் என்ன என்பதை ஏற்கெனவே சமைக்கப்பட்ட கோட்பாடுகளின் வாயிலாக இல்லாது, சமகால வாழ்வின் வழியாக அறிய அவர்கள் முற்பட்டார்கள். தீர்த்தத் தலங்கள் எதுவும் இல்லை. ஆனால், தீர்த்த யாத்திரை உண்டு என்பதில் அவர்கள் தெளிவடைந்தனர். அவரது நாடகங்களில் தீவிரமான சமூக விமர்சனம் வெளிப்படத் தொடங்கியது. நாடக மேடை அமைப்பு குறித்தும் அவர் அதிகம் சிந்திக்கலானார். முடிவாக மூன்றாம் அரங்கு என்கிற கருத்தாக்கத்துடன் தமக்கே உரிய நாடக அரங்கினை அவர் கண்டடைந்தார்.

சமூக மாற்றத்துக்கான அரங்கு

  • பாதலின் மூன்றாம் அரங்கு மதச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் தரும் பாரம்பரிய முதல் அரங்கினையும் புரொசீனிய (Proscenium) இரண்டாம் அரங்கினையும் நிராகரித்துவிடுகிறது. நாடக நடிகனின் குரலை அது முக்கியப்படுத்துவது இல்லை. நடிகனது உடலை அது பலவாறாகக் கற்பனைக்கு உள்படுத்தி, அவனை நடமாடும் அரங்காக மாற்றுகிறது. அது அரசியல் பார்வையுடன் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விழைகிறது. சஹினா மஹாடோ என்கிற நாடகத்துடன் மூன்றாம் அரங்கு 1972இல் பிறந்தது. போமா, மிச்சில், பாஸிகபர் போன்ற பல நாடகங்களை சர்க்கார் எழுதினார். ஒரு நாடகத்திற்கான மொத்தச் செலவு நூறு ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என்கிற கட்டுப்பாடுடன் தனது நாடகங்களை எளிமையாக அமைத்தார். பூங்கா, தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களில் தனது நாடகங்களை நிகழ்த்தினார். தவிர ‘அங்கன் மன்ச்’ என்கிற முற்ற மேடைகளிலும் நாடகங்களை நிகழ்த்தினார். கட்டணம் வசூலிக்காது நன்கொடைகளை மட்டும் ஏற்றார். இறுதிவரை அர்ப்பணிப்புடன் நாடகச் செயல்பாடுகளில் ஈடுபட்ட அவர், 86ஆம் வயதில் 2011இல் இறந்தார். அவரது விருப்பப்படி அவரது சடலம் மருத்துவ ஆராய்ச்சிக்காக அரசு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டுத் தாக்கம்

  • பாதல் சர்க்காரின் புரட்சிகரமான நாடக நடவடிக்கைகள் தமிழகத்தை மிகவும் பாதித்தன. தமிழகத்தில் தொழில்முறையில் நடத்தப்பட்ட நாடகங்கள் நின்றுபோன பிறகு, அமெச்சூர் நாடகங்கள் பெருகின. அவற்றில் முன்னேற்றமான கருத்துக்களோ காத்திரமான நாடகக் கருக்களோ இல்லை. சினிமாவை நகலெடுக்கும் காட்சிகளும் துணுக்குத் தோரணங்களுமாக அவை தேங்கிப்போயின. நாடகம் என்பது ஒரு நிகழ்த்துக் கலை என்கிற புரிதலைப் பெற்ற இளைஞர்கள் புதிய நாடக வடிவங்களையும் அதற்கான பயிற்சி முறைகளையும் எதிர்பார்த்தவர்களாக இருந்தனர்.
  • அந்த வேளையில் எழுத்தாளர் கோபால் ராஜாராம், பாதல் சர்க்காரின் ‘ஏவம் இந்திரஜித்’ நாடகத்தை ‘பிறிதொரு இந்திரஜித்’ என்கிற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். அது தமிழ் வாசகர்களிடையே நவீன நாடகம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கியது. பல நாடகக் குழுக்களால் அது தமிழ்நாட்டில் நடிக்கப்பட்டது. சென்னை வீதி நாடகக் குழுவினர் அழைப்பின்பேரில் சென்னையில் நாடகப் பயிலரங்கை 1980 செப்டம்பர் மாதம் ஒன்பது நாள்களுக்கு பாதல் சர்க்கார் நடத்தினார். அப்பட்டறையில் நாடகக்காரர்கள், எழுத்தாளர்கள்ஆகியோர் கலந்துகொண்டனர். எழுத்தாளர் எஸ்.சாமிநாதன் பயிலரங்கில் இடம்பெற்ற பயிற்சிகள் அனைத்தையும் ‘மனசில் பதிஞ்ச காலடிச் சுவடுகள்’ என்கிற புத்தகமாக எழுதினார். ‘பரிக்ஷா’ ஞாநி, பாதலின் அநேக நாடகங்களை மேடையேற்றினார்.

பாதல் சர்க்கார் குறித்து ஆளுமைகள்!

  • மதுரை நிஜ நாடகக் குழுவின் அமைப்பாளரும் நாடகச் செயல்பாட்டாளருமான மு.ராமசாமி மூன்றாம் அரங்கு நாடகத்தின் அனுபவத்தை முற்றாகத் தரும் வகையில், பாதலின் ‘ஸ்பார்டக’ஸை அளித்தார். மூன்றாம் அரங்கு நாடகச் செயல்பாட்டாளர் கருணா பிரசாத், பாதல் சர்க்கார் பாதிப்பினால் தமிழ் நாடகங்கள் படாடோபமற்ற நாடகங்களை மேடைக்குக் கொண்டுவந்தன என்கிறார். அவர் நாடகத்தில் புகுத்திய எளிமை நாடகக்காரர்களுக்கு மட்டுமின்றித் தன்னார்வக் குழுக்கள் நடத்திய நிகழ்ச்சிகளுக்கும் உதவியாக இருந்தது என்கிறார்.
  • நவீன நாடகத்தை பாதல் சர்க்கார் வாயிலாகவே முதன்முதலாக அறிந்ததாக நாடகப் பேராசிரியர் அ.ராமசாமி கூறுகிறார். பாதல் சர்க்கார் பற்றிய தகவல்களையும் நாடக மொழிபெயர்ப்புகளையும் தொடர்ந்து தனது ‘வெளி’ இதழில் வெளி ரங்கராஜன் வெளியிட்டார். பாதலின் பாணியைத் தமிழகத்தில் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த வீதி நாடக குழுக்கள்தான் அதிகம் பின்பற்றுகின்றன என்று அவர் கருதுகிறார். பார்வையாளனின் மனசாட்சியை உலுக்குகிற பாதலின் அணுகுமுறை தன்னை மிகவும் பாதித்ததாகவும் வரையறுக்கப்படாத வெளிகளில் அவர் நாடகம் நிகழ்த்துவது தனது நாடகப் பார்வையைச் செம்மைப்படுத்தியதாகவும் தொடர்ந்து வீதி நாடகங்களை நிகழ்த்தும் சென்னைக் கலைக் குழு நாடகச் செயல்பாட்டாளர் பிரளயன் கூறுகிறார்.
  • திருச்சி நாடக சங்கத்தின் நாடக இயக்குநர் ஆர்.ஜம்புநாதன், பாதலின் ‘ஹட்டமால ஓபரே’ நாடகத்தை ‘நாணயம் இல்லாத நாட்டில்’ என்று தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பாதலின் நாடகங்களை எல்லாவித மேடை அமைப்புகளிலும் நிகழ்த்துவதில் தனக்கு உடன்பாடு இருப்பதாக அவர் கூறுகிறார். நவீன நாடக, திரைப்பட நடிகர் கலைராணி பாதலைப் போல் இலவசமாக நாடகம் நடத்துவது என்பது பின்பற்றக்கூடிய நடைமுறையாகாது என்கிறார். மரப்பாச்சி அமைப்பாளரும் நாடகச் செயல்பாட்டாளருமான அ.மங்கை, பாதலின் பயிலரங்குகள் புரட்சிகரமானவை என்றும் தன்னுடைய முறையியலில் அவை பெரிதும் தாக்கம் செலுத்தியுள்ளன என்றும் கூறுகிறார்.
  • திருச்சியில் 1988இல் மூன்று நாள்கள் நடத்தப்பட்ட பாதல் சர்க்கார் நாடக விழா முக்கியமானதொரு நிகழ்வாகும். பாதல் சென்னையில் நடத்திய பயிலரங்கில் கலந்துகொண்ட நான், அவரது நாடகம் பற்றிய முதல் ஆவணப்படத்தை ‘தேர்ட் தியேட்டர்’ என்கிற பெயரில் எடுத்தேன்.
  • மூன்றாம் அரங்கப் பயிற்சிகளைப் பெற்றாலும் அவரது நாடகங்களைப் பெரும்பாலானோர் இங்கு புரொசீனிய மேடைகளில் நடித்தனர். ஆனால், நாடகத்தின் மொழி என்பது என்ன, நிகழ்த்துக் கலையான அது முன்வைக்கும் சவால்கள் எவை என்பதை அவர்கள் அவற்றின் வாயிலாக அறிந்தனர். அது தொடர்பாகப் புதியதொரு நாடகப் பிரக்ஞை தமிழகத்தில் உருவாகியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்