பாதிக்கப்பட்ட குழந்தையையே குற்றவாளியாக்குவதா?
- சீர்காழியில் மூன்று வயதுக் குழந்தையைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி, கொடூரமாகத் தாக்கியதாக 16 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள், அந்தச் சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
- தமிழகத்தில் போக்சோ குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கே அது குறித்துப் போதுமான பயிற்சியும் தெளிவும் இல்லை என்பதைக் குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து கவனப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில், மயிலாடுதுறையில் குழந்தைகள் நலத் துறை சார்பில் காவல் துறையினர், மாவட்டக் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், வருவாய்த் துறையினர், போக்சோ வழக்கைக் கையாளும் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- அதில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர், மூன்று வயதுக் குழந்தை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, ‘இந்தக் குற்றத்தில் குழந்தை தவறாக நடந்துகொண்டுள்ளது. எனக்கு வந்த தகவல்படி சிறுவன் மீது அந்தக் குழந்தை எச்சில் துப்பியிருக்கிறது. இதுகூடக் குற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம். அதனால்தான் இரு தரப்பையும் நாம் பார்க்க வேண்டும்’ எனப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
- அந்த ஆட்சியர் அடிப்படையில் மிகவும் நல்லவர்; குழந்தை வளர்ப்பு குறித்துப் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் சொன்னதைத் தவறாகப் பொருள்கொள்ளக் கூடாது என்கிற வாதமும் சமூக ஊடகங்களில் எழுந்தன. நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் நம்மையும் அறியாமல் நமக்குள் ஆணாதிக்கச் சிந்தனையும் பெண் வெறுப்பும் இருக்கக்கூடும் என்பதைத்தான் ஆட்சியரின் பேச்சு உணர்த்துகிறது. பாதிக்கப்பட்ட குழந்தையையே குற்றத்துக்குப் பொறுப்பேற்கச் சொல்லும் பொதுச் சமூகத்தின் மனநிலைதான் இது.
- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திலும் இரவு நேரத்தில் அந்த மாணவி ஏன் வெளியே சென்றார் என்று அவரைத்தான் பலரும் குற்றம்சாட்டினார்கள். இப்படிச் சமூகத்தில் ஏற்கெனவே பரவலாக ஆணாதிக்கச் சிந்தனை நிலவிவரும் சூழலில், பொறுப்பான பதவி வகிக்கும் ஆட்சியரே, முன்யோசனை இல்லாமல் பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? குழந்தை எச்சில் துப்பியதால் அந்தச் சிறுவன் அப்படி நடந்துகொண்டிருக்கலாம் என்கிற இந்தப் பேச்சு, சமூகத்தில் வேறுவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
- அதாவது, சிறுவன் செய்தது சரிதான் என்று ஒருவகையில் சிறுவனின் தவறை நியாயப்படுத்தும் தொனி அதில் மறைந்திருக்கிறது. அல்லது அவனது எதிர்வினை நியாயமானதுதானே என்கிற பாவனையும் அதில் வெளிப்படுகிறது. குழந்தை எதற்காக அந்தச் சிறுவன் மீது எச்சில் துப்பியது என்கிற காரணம் எந்த இடத்திலும் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை. குழந்தைகள் தங்கள் எதிர்ப்பைக் காட்டும்விதமாகவும் இப்படி நடந்துகொள்வார்கள்.
- ஒருவேளை காலையிலேயே அந்தச் சிறுவன், குழந்தையிடம் தவறாக நடக்க முயன்று அதை எதிர்க்கும் பொருட்டும் குழந்தை எச்சில் துப்பியிருக்கலாம். ஆட்சியர் இந்தக் கோணத்திலும் பெற்றோருக்கு அறிவுரை வழங்கியிருக்கலாம். குற்றத்தில் ஈடுபட்ட ஆணையும் அவன் பின்னணியையும் ஆராய்வதைவிடப் பாதிக்கப்பட்ட பெண்ணின் செயல்தான் எப்போதும் ஆராயப்படுகிறது. இது இது வேதனைக்குரியது.
- ஆட்சிப் பொறுப்பில், அதிகாரத்தில் இருக்கிறவர்கள் சொல்லும் செயலும் மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களைத் தவறாக வழிநடத்துவதாகவோ ஊகங்களுக்கு வழிவகுப்பதாகவோ இருக்கக் கூடாது. இன்றைக்கு ஊடகங்களின் உதவியோடு மக்கள் அனைத்தையும் உடனுக்குடன் அறிந்துகொள்கிறார்கள் என்பதாலும், வார்த்தைகள் திரிக்கப்பட்டு வெளியிடப்பட சாத்தியம் அதிகம் என்பதாலும் இதுபோன்ற குற்றங்கள் குறித்துப் பேசும்போதும் விசாரிக்கும்போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனத்தோடும் நுண்ணுணர்வோடும் செயல்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 03 – 2025)