TNPSC Thervupettagam

பாதிப்பை உணராத தமிழகம்

January 4 , 2023 668 days 389 0
  • தற்போது கேரள அரசு, தமிழகப் பகுதிகளில் அத்துமீறி நடத்தி வரும் டிஜிட்டல் ரீசர்வே (மின்னணு மறு அளவைப் பணி) குறித்து நண்பர்கள் வேதனையோடு குறிப்பிட்டனர். தமிழக அரசு இதில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இதுவரை சரியாக எடுக்கவில்லை என்றும் கூறினர். தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்கு இந்த பிரச்னை சரியாகப் பிடிபடவில்லை என்று தோன்றுகிறது. அவர், "கேரள அரசு அளந்து முடிந்த பிறகு நாங்கள் உட்கார்ந்து பேசுவோம்' என்கிறார்.
  • இது குறித்து வருவாய்த் துறை செயலர் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், "கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை வட்டம் சின்னக்கானல், சதுரங்கப்பாறை, சாத்தான்பாறை கிராமங்களில் டிஜிட்டல் நில அளவைப் பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், கிராமங்களின் இருமாநில பொது எல்லைகள் தேனி மாவட்டத்தில் அமையப் பெற்று உள்ளதால் அது தொடர்பான பழைய பதிவேடுகளில் உள்ள பழைய அளவுகளைச் சரிபார்த்திட கூட்டம் நடத்த, தேனி மாவட்ட நில அளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கூட்டம்நடத்துவதற்கான தேதியினை முடிவு செய்து அந்த தகவலினை கேரளா மாநிலம் தொடுபுழா மறுநில அளவை அலுவலக உதவி இயக்குநருக்கு வரைவு மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
  • இதுவரை தமிழக - கேரள பொது எல்லையில் எவ்விதமான டிஜிட்டல் நில அளவைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், தமிழக வனச் சரகர்கள் இருமாநில பொது எல்லையில் கேரள அரசினால் டிஜிட்டல் நில அளவை பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தேனி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமாநில வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகளின் மூலம் ரீசர்வே செய்வதுதான் முறையானது.
  • கேரள அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் ரீசர்வேயினால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலங்கள் பறி போகும் அபாயம் உள்ளதாக பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் கூறுகின்றனர்.
  • கேரள அரசின் நில அளவைப் பணி எதுவும் நடைபெறவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ள நிலையில், கேரள அரசு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட14 கேரள எல்லையோர மாவட்டங்களிலுள்ள 200 கிராமங்களை டிஜிட்டல் ரீசர்வே செய்யும் இடங்களாக அறிவித்திருக்கிறது. இந்த சர்வே பணியில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 1,500 சர்வேயர்கள், 3,200 உதவியாளர்கள், தொடர்ந்து 4 வருடங்கள் பணி செய்து டிஜிட்டல் ரீசர்வே பணியை முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.
  • கேரள மாநில அரசு எடுக்கும் இந்த டிஜிட்டல் ரீசர்வேயால் தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளத்தின் 15 தாலுகாக்களில் தமிழகத்திற்குச் சொந்தமான நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளதாகவும், தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் அதிக அளவில் தமிழக வன நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் கூறி பெரியாறு வைகை பாசன சங்கத்தினர் தேனி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.
  • இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், திருவிதாங்கூர்,கொச்சி, மலபார் மாகாணங்களுக்கும், தமிழகத்திற்கும் எந்த முரணும் இல்லாததால், 1956 -இல் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழக - கேரள எல்லைகள் முழுமையாகப் பிரிக்கப்படவில்லை.
  • பசல் அலி தலைமையிலான கமிஷன் (1956) மொழிவாரியாக மாநில எல்லைகளைப் பிரிக்கச் சொன்னது. ஆனால், முறையாக, கமிட்டிகொடுத்த வரையறையின் அடிப்படையில் தமிழக - கேரள எல்லை பிரிக்கப்படவில்லை. 1956 - இல் தெற்கே நெடுமங்காடு, நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு என பல பகுதிகளை கேரளத்திடம் நாம் இழந்திருக்கிறோம். அதைப் போலவே கர்நாடகத்தில் கொள்ளேகால், குடகுப் பகுதிகள், கோலார் போன்ற எல்லையோரப் பகுதிகளைத் தமிழகம் இழந்தது. ஆந்திரத்தில் நெல்லூர் மாவட்டத்தில் சில பகுதிகள், திருப்பதி, காளஹஸ்தி, சித்தூர் மாவட்டத்தில் சில பகுதிகளை இழந்தோம்.
  • தமிழக - கேரள எல்லையின் தூரம் 822 கிலோ மீட்டர். அதில் பாதியைக் கூட இதுவரை இருமாநில அரசுகளும் அளக்கவில்லை. இப்படி எல்லைகள் அளக்கப்பட்டு சரியான வரையறை செய்யப்படாத நிலையில், தமிழக - கேரள அரசுகளின் கூட்டு முயற்சியாக இல்லாமல், கேரள அரசு மட்டும் இந்த டிஜிட்டல் ரீ சர்வே முயற்சியில் இறங்கினால், ஏழு மாவட்ட நிலப்பரப்பை தமிழகம் இழக்க வாய்ப்பு உருவாகும்.
  • 2017-இல் உத்தமபாளையம் கோட்டாட்சியரும் தேவிகுளம் துணை ஆட்சியரும் இணைந்து நடத்திய கூட்டு சர்வேயில், கம்பம் மொட்டில் உள்ள கேரள மாநில போலீஸ் சோதனைச் சாவடி தமிழக எல்லைக்குள் வருகிறது என கண்டறிந்தனர். ஆனால், இன்றுவரை கேரள மாநில சோதனைச்சாவடியின் இடம் கேரள எல்லைக்குள் மாற்றப்படவில்லை. இப்போது கேரள அரசின் இந்த டிஜிட்டல் ரீசர்வேயால், சுமார் 1,000 சதுர கிலோ மீட்டரை தமிழகம் இழக்க நேரிடும்.
  • மூணாற்றில் தமிழக மாநில பேருந்துகள் நிறுத்துவதற்கு கொடுக்கப்பட்ட ஐந்து சென்ட் நிலத்தையும் தற்போது கோள அரசு எடுத்துக் கொண்டுவிட்டது. ஆனால் தமிழகத்தில், கேரளத்திற்கு சொந்தமான நிலம் தமிழக அரசால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
  • தமிழகத்தில் இருக்கும் பத்மநாபபுரம் அரண்மனை கேரளத்திற்கு சொந்தம். குற்றாலத்தில் 64 ஏக்கர் நிலம் கேரள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. செங்கோட்டை அருகே 24 ஏக்கர் நிலம் கேரள வனத்துறையினர் வசம் உள்ளது. தமிழக அரசுக்கு கேரளத்தில் ஒரு அங்குல நிலம் கூட இல்லை.
  • தேவிகுளம் தாலுகாவில் உள்ள டாட்டா நிறுவனத்தின் தேயிலைத் தோட்டங்களை மறு அளவீடு செய்ய வேண்டும் என்று, கடந்த 2004-ஆம் ஆண்டு கேரள தமிழர் கூட்டமைப்பு கோரியது. அக்கோரிக்கை கேரள சட்டப்பேரவையில் விவாதமாக எழுந்த நிலையில், அன்றைக்கு (2006) கேரள மாநில முதல்வராக இருந்த வி.எஸ். அச்சுதானந்தன் சட்டப்பேரவையில் "டாட்டா வசமுள்ள நிலங்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவருடைய மேற்பார்வையில் ஓராண்டுக்குள் மறு அளவீடு செய்யப்படும்' என்று அறிவித்தார். ஆனால் ஏனோ அந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை.
  • 1956-இல் நடந்த மொழிவாரி மாநில பிரிவினையின்போது தமிழக - கேரளா எல்லையோர கிராமங்களில் வாழ்ந்த தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை நாணல் காடுகளாகவும், அட்டைக் காடுகளாகவும் வகைப்படுத்தி, அதில் மலையாள மக்களை வலுக்கட்டாயமாகக் குடியேற்றினர். அப்படி குடியேற்றப்பட்டவர்கள், தமிழக - கேரள எல்லையில் உள்ள, தமிழகத்திற்கு சொந்தமான வனநிலங்களை வருவாய் நிலங்களாக மாற்றி, கேரளத்தில் அந்த நிலங்களுக்கான பட்டாவை முறையாகப் பெற்று தங்களுக்குரியவையாக மாற்றிக் கொண்டுவிட்டனர்.
  • இப்படிப்பட்ட சிக்கல்கள் இருக்கும் நிலையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூன்று தாலுகாக்களை மறு அளவீடு செய்யப் போகிறோம் என்று கேரள மாநில வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் அறிவித்தி ருப்பது கண்டனத்திற்கு உரியது.
  • கேரள அரசு தன்னிச்சையாக சர்வே செய்வதற்கு அது ஒன்றும் தனித்தீவு அல்ல. தமிழகம் மற்றும் கர்நாடகத்தோடு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு மாநிலம்.
  • காசர்கோடு, வயநாடு ஆகியவை கர்நாடகத்தோடு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் கேரள மாவட்டங்கள். இந்த இரண்டு மாவட்டங்களிலும் கேரளம் டிஜிட்டல் ரீ சர்வே செய்யும்போது, கர்நாடக மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல், செய்ய முடியாது. அதே நடைமுறையை தமிழக - கேரள எல்லைப்பகுதியில் உள்ள ஏழு தமிழக மாவட்டங்களிலும், டிஜிட்டல் ரீசர்வே குழு கடைப்பிடிக்க வேண்டும்.
  • தமிழகத்தோடு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் கேரளத்தின் 16 தாலுகாக்களான கட்டக்கடை, நெய்யாற்றின் கரை, நெடுமங்காடு, புனலூர், கோணி, பீர்மேடு, உடுமஞ்சோலை, தேவிகுளம், சித்தூர், பாலக்காடு, மன்னார்க்காடு, நிலம்பூர், வைத்ரி, மானந்தவாடி, சுல்தான், பத்தேரி ஆகியவற்றில் கேரளம் நடத்தவிருக்கும் ரீசர்வே பணிகளை நிறுத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மேற்கண்ட 15 தாலுகாக்களில் எல்லையை அளவீடு செய்வதற்கு முன் இரண்டு மாநில கூட்டு கமிட்டி உருவாக்கப்பட வேண்டும். கேரள அரசு டிஜிட்டல் ரீசர்வே செய்து முடித்த பிறகு அதைப் பற்றி இருதரப்பினரும் பேசுவோம் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கூறியிருப்பது, பொறுப்பான பேச்சாக இல்லை.
  • ஏற்கெனவே தெற்கே குமரி மாவட்டம் நெய்யாறு அணையில் தொடங்கி செண்பகவல்லி, அழகர் அணைத் திட்டம், முல்லைப் பெரியாறு, கொங்கு மண்டலத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம் திட்டம் வரை பத்துக்கும் மேலான நதிநீர்ச் சிக்கல்களில் கேரளம் பிடிவாதமாக உள்ளது. தமிழகத்துக்கு வர வேண்டிய நீர்வரத்தும் இதனால் தடைப்பட்டுள்ளது.
  • நதிநீர்ச் சிக்கல்கள், கண்ணகிக் கோயில் பிரச்னை, தமிழக எல்லையோரங்களில் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுதல் என பல தொடர் சிக்கல்களை கேரளம் உருவாக்கி வருகிறது.
  • கடந்த 2002-இல் அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த அச்சுதானந்தன் தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ள செங்கோட்டை அடவி நயினார் அணையை இடிக்க கடப்பாரை மண்வெட்டியோடு வந்ததை மறந்துவிட முடியாது.
  • குமரி மாவட்டம் எல்லையோரப் பகுதிகளில் உள்ள தமிழக கிராமங்களிலேயே கேரள அரசு தனது மாநில குடும்ப அட்டைகளை வழங்கியதும் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்னர் அட்டப்பாடி பகுதியில் உள்ள தமிழர்கள் வெளியேற வேண்டும் என்ற குரலும் எழுந்தது.
  • தமிழ்நாட்டிலிருந்து அரிசி, பருப்பு, காய்கறி, சிமென்ட், கொள்ளையடிக்கப்படுகிற மணல் அத்தனையையும் பெற்றுக் கொண்டு, இவ்வளவு நெருக்கடிகளைத் தமிழகத்துக்கு கேரளம் ஏற்படுத்துகிறது. கேரளத்தின் டிஜிடல் ரீசர்வே நடவடிக்கை நல்லதல்ல. இந்திய துணைக் கண்டத்தில் கூட்டாட்சி என்ற சமஷ்டி முறைக்கு ஏற்றவாறு மாநில அரசுகள் நடந்து கொண்டால்தான், "வேற்றுமையில் ஒற்றுமை' என்பது உண்மை ஆகும்; உறுதியும் ஆகும்.

நன்றி: தினமணி (04 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்