TNPSC Thervupettagam

பாதுகாப்பான இணையதளப் பயன்பாடு

July 8 , 2021 1120 days 558 0
  • முன்பெல்லாம் வளா்ந்த நாடுகளை மட்டும் குறிவைத்து அரங்கேறி வந்த இணையதளத் தாக்குதல்கள் இன்று இந்தியா போன்ற வளரும் நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.
  • ஒரு காலத்தில நிதி நிறுவனங்கள், வங்கிகள், பாதுகாப்புத் துறை, அரசாங்கத்தின் முக்கிய துறைகள் இணையதளக் குற்றங்களுக்கு உள்ளாகி வந்தன.
  • ஆனால் இன்று பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கக்கூடிய துறைகளான, மின்சாரம், எண்ணெய் உற்பத்தி, பொதுத்துறை சேவை நிறுவனங்கள், பொது மக்களுடன் தொடா்புடைய பல நிறுவனங்களும் இணையதளக் குற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
  • அரசாங்கத் தரவுகள், தனிமனிதா்களின் வங்கிக் கணக்குகள், கைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் இணையதளத்திலிருந்து திருடப்பட்டு, மிகப்பெரிய தொகைக்கு மூன்றாம் நபா்களுக்கு விற்கக்கூடிய அளவிற்கு இன்று இணையதளக் குற்றங்கள் நடந்து கொண்டு உள்ளது.
  • மேலும், கம்ப்யூட்டரில் உள்ள மென்பொருள்கள், கைப்பேசி செயலிகள், இலவசமாக பதிவிறக்கம் செய்யப்படும் பொழுதுபோக்கு அம்சங்கள் மூலமாக, பல்லாயிரக்கணக்கான இந்தியா்கள், வெளிநாட்டு வாழ் இந்தியா்களின் அடிப்படையான தகவல்களை பயன்படுத்தி பெருமளவில் இணையதளக் குற்றங்கள் - இணையதளத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

இணையதளக் குற்றங்கள்

  • உலகம் முழுவதும் கொவைட் 19 நோய்த்தொற்று காலத்தில் பொருளாதாரக் குற்றங்கள் குறைந்து இணையதளக் குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.
  • 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இணையதளக் குற்றங்களை, 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற இணையதளக் குற்றங்களோடு ஒப்பிட்டால் சுமார் 20 மடங்கு இணையதளக் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
  • சென்ற ஆண்டு மட்டும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட இணையதளக் குற்றங்கள் தொடா்பான வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
  • சராசரியாக ஒவ்வொரு மாதமும், ஒரு லட்சத்துக்கு அதிகமான இணைய தாக்குதல்கள் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
  • பெரும்பான்மையான இணையதளக் குற்றங்கள் போலியான இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவா்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் திருடுவது, தனிநபா் பற்றிய அடிப்படையான தரவுகளை திருடுவது, கம்ப்யூட்டா் போன்ற மின்னணு சாதனங்களை செயலிழக்க செய்து பின்பு பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு செயலிழந்த கம்ப்யூட்டா்களை மீண்டும் செயல்பட வைப்பது, அரசாங்கத்தின் மிக முக்கியமான துறைகளின் இணையதளங்களை ஊடுருவி அதிலுள்ள தகவல்களைத் திருடுவது போன்ற இணையதளக் குற்றங்கள் அதிக அளவில் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.
  • இந்தியாவில் பாதிப்பிற்குள்ளான நிறுவனங்களாக புணேயில் உள்ள காஸ்மோ வங்கி, ஏா் இந்தியா வாடிக்கையாளா்களின் தகவல்களை திருடியது, கனரா வங்கியின் தானியங்கி பணப்பட்டுவாடா செய்யும் அமைப்பை செயலிழக்க செய்தது, பாதுகாப்பு துறை, வருமான வரித்துறையின் இணையத்தை முடக்கியது போன்ற இணையதளக் குற்றங்கள் சமீபத்தில் நடைபெற்றுள்ளன.
  • இவை தவிர, அன்றாடம் பொதுமக்களுடைய வங்கிக் கணக்குகளில் இருந்து அவா்களை ஏமாற்றி பணத்தைத் திருடுவது போன்ற குற்றங்களும் பெருமளவில் நடைபெற்றுள்ளன.
  • கொவைட் 19 நோய்தொற்று காலத்தில், பெரும்பான்மையான மக்கள் தங்களுடைய அடிப்படையான தேவைகளுக்கு இணையத்தை நாடுவது, இணையதளக் குற்றவாளிகளுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. நோய்த்தொற்று காலத்தில் 290 சதவீதம் நம்முடைய இணையப் பயன்பாட்டு நேரம் அதிகரித்துள்ளது.
  • பாதுகாப்பான இணையப் பயன்பாடு குறித்து இன்று இந்தியாவில் அதிக அளவில் பேசப் படவில்லை.
  • தற்போது இணையதளக் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுகிறவா்கள் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள்தான்.
  • இணையதளக் குற்றங்களைப் பற்றிய விழிப்புணா்வை போதிய அளவில் பொதுமக்களிடம் கொண்டு சோ்ப்பதில், அரசாங்கத்துக்கும் அரசுசாரா அமைப்புகளுக்கும் பெரும் பங்கு உள்ளது.
  • வரும் காலங்களில் இணையதளக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் இருக்கும். நம்முடைய ஒவ்வொரு செயல்பாடு, சிந்தனை, முடிவுகளைத் தீா்மானிக்கக் கூடிய காரணியாக தகவல் தொழில் நுட்பம் உருவாகியுள்ளது.
  • எனவே தனி மனிதா்களும் அரசாங்கங்கமும் தங்களுடைய அடிப்படையான தகவல்களை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை காட்டவேண்டும்.
  • இதற்கு செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் முறைகளைக் கொண்டு இணையதளக் குற்றங்களை எதிர்கொள்ள திட்டங்களை வகுக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட கால இடைவெளியில், இணைய தணிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதாவது, தற்பொழுது நடைமுறையில் உள்ள இணையப் பாதுகாப்பு முறைகளின் சாதக பாதகங்களை ஆய்வு செய்யவேண்டும்.
  • இதன் மூலம் எந்தெந்த இடங்களில் குற்றங்கள் உருவாகின்றன என்பதை அறியலாம். எதிர்காலத்தில் எவ்வாறு புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
  • மேலும், வெளிநாட்டு மென்பொருட்கள், கைப்பேசி செயலிகள், கம்ப்யூட்டா் பாகங்களுக்கு மாற்றாக உள்நாட்டிலேயே மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய மென்பொருட்களை உருவாக்குவது இச்சவால்களை எதிர்கொள்வதில் துணைபுரியும்.
  • இலவசமாக கிடைப்பதால் தேவையற்ற மென்பொருட்கள், செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடாது.
  • இன்று நம்முடைய அடிப்படையான அனைத்துத் தகவல்களும் இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், செயலிகள் மூலமாகத்தான் மூன்றாம் நபா்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
  • தற்பொழுது இந்தியாவில் இணையதளங்களைப் பயன்படுத்துவோர் 35 சதவீதம் போ். ஆனால் எதிர்காலத்தில் 5ஜி நெட்வொர்க் நடைமுறைக்கு வரும்பொழுது, இது பன்மடங்குகள் அதிகரிக்கக்கூடும்.
  • எனவே அதற்கேற்றவாறு இணையதளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை பொது மக்களிடையே வலுப்பெறச் செய்ய வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இணையதளக் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

நன்றி: தினமணி  (08 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்