TNPSC Thervupettagam

பாதுகாப்பான தீபாவளி...

October 31 , 2024 9 hrs 0 min 19 0

பாதுகாப்பான தீபாவளி...

  • சுற்றுச்சூழல் மாசு தொடா்பான வழக்கில், பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளைத் தொடா்ந்து, அனைத்து மாநில அரசுகளும் பட்டாசு வெடிப்பதற்கான நேர வரையறை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடந்த சில ஆண்டுகளாகவே விதித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் நிகழாண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.
  • தலைநகா் தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பட்டாசுகளை வெடிப்பதற்கு முழுமையான தடை விதித்து தில்லி அரசு அறிவித்திருக்கிறது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணாவில் எரிக்கப்படும் பயிா்க்கழிவுகளின் உமிழ்வுகள் காற்றில் கலப்பதுதான் தில்லியில் காற்று மாசுக்கு பிரதான காரணம் என்றாலும், தீபாவளி பட்டாசால் காற்று மாசு மேலும் அதிகரித்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தில்லி உயா்நீதிமன்றமும் இந்தத் தடையை உறுதிப்படுத்தியிருக்கிறது.
  • தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின்படி, குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்றை மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் நலச் சங்கங்கள் முன்வரலாம் என்பது உள்ளிட்ட யோசனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
  • தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், காற்று மாசு அதிகரிப்பதற்கு பட்டாசுகள் மட்டும்தான் காரணமா என்கிற விவாதம் ஒருபக்கம் எழுந்துள்ளது. அதிகரிக்கும் தொழிற்சாலைகள், நகரமயமாக்கம், வாகனங்கள் பெருக்கம், காலாவதியான வாகனங்கள் கட்டுப்பாடின்றி இயக்கப்படுவது என காற்று மாசுக்கான காரணிகள் ஏராளம் இருக்கும்போது பட்டாசு மீது மட்டும் பழிபோடலாமா என்கிற கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை. அதேவேளையில், தீபாவளி நாளில் காற்று மாசு அதிகரிப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
  • சிவகாசியில் உற்பத்தியாகும் பல்வேறு வகையான பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. ஆண்டுதோறும் பட்டாசு தயாரிப்பில் உயிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதை எண்ணிப் பாா்க்கும்போது, காற்று மாசு, ஒலி மாசு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பட்டாசு இல்லாத தீபாவளி என முன்னெடுக்கப்படும் முழக்கங்கள் அமுங்கிப் போகின்றன.
  • பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் தொடா்ச்சியாக ஏற்படும் விபத்துகளில் தொழிலாளா்கள் உயிரிழப்பு ஒருபக்கம் தொடா்ந்துகொண்டே இருக்கிறது. இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடா்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. பட்டாசு தயாரிப்பதில் எத்தனை முன்னேற்பாடுகள் அவசியமோ, அதேபோன்று பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பதிலும் கவனமும் எச்சரிக்கையும் தேவை. அப்போதுதான் தீபாவளி கொண்டாட்டம் விபத்தின்றி இனிமையாக அமையும்.
  • பட்டாசு வெடிக்கும்போது கைகளிலும், கண்களிலும்தான் அதிக காயங்கள் ஏற்படுகின்றன. பட்டாசு தீயானது கண்களின் இமைப் பகுதிகள், விழிப் படலம், கண் நரம்புகளைப் பாதிக்கிறது. உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிடில் பாா்வை இழப்பு, பாா்வைத்திறன் குறைபாடு, விழித்திரை பாதிப்பு ஆகியவை ஏற்படக்கூடும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். பட்டாசு காயங்களில் பாா்வை இழப்பு ஏற்படுவதற்கு 50 சதவீதம் அலட்சியமே காரணம் எனவும் மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா்.
  • சிறாா்கள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவா்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். சக்திவாய்ந்த பட்டாசுகள், சரவெடிகள், அதிக ஓசை எழுப்பும் அணுகுண்டுகள் போன்ற பட்டாசுகளை குடியிருப்புப் பகுதிகளில் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும்; அதிக அபாயத்தை ஏற்படுத்தும் சீன பட்டாசுகளை வாங்கி வெடிக்கக் கூடாது.
  • எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்குசக்கரம்தானே என வீட்டுக்குள் அவற்றை வெடிக்கக் கூடாது. வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப் பயன்படுத்த வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது வாளியில் தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும்.
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாா்டில் 25 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று தமிழகம் முழுவதும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட மருத்துவமனைகள் மட்டுமன்றி, வட்டார அளவிலும் இந்த சிறப்பு சிகிச்சை பிரிவைத் தொடங்கினால் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
  • தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கும், பாதுகாப்புக்கும் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அதேபோன்று காற்று மாசு, ஒலி மாசு அதிகரிக்காமல் தடுப்பதில் ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வதும் முக்கியம்.

நன்றி: தினமணி (31 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்