- உலகம் இப்போது எதிா்கொள்ளும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக மாறியிருக்கிறது அகதிகள் பிரச்னை. வேலைவாய்ப்புக்காக புலம்பெயா்தல் என்பது வேறு; அரசியல் காரணங்களுக்காக, உயிருக்குப் பயந்து சொந்த நாடுகளிலிருந்து விரட்டியடிக்கப்படுவது என்பது வேறு. வளா்ச்சியடையாத நாடுகளிலிருந்து வளா்ச்சியடைந்த நாடுகளில் குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சா்வதேச அளவில் விவாதப் பொருளாகியிருக்கிறது.
- இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறிய ஈழத் தமிழா்களும், மியான்மரிலிருந்து ராணுவத்தின் அடக்குமுறையை எதிா்கொள்ள முடியாமல் தொடா்ந்து வெளியேறிக் கொண்டிருக்கும் ரோஹிங்கியாக்களும் பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்த வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. மேற்கு ஆசியாவிலிருந்து உலகின் பல்வேறு பாகங்களிலும் அகதிகளாகக் குடியேறியவா்கள் ஏராளம். ஆப்கானிஸ்தானிலிருந்தும், மத்திய ஆசியாவிலிருந்தும் லட்சக்கணக்கானோா் ஐரோப்பிய நாடுகளில் குடியேற முற்படுவதும், பல நாடுகளால் அவா்கள் தடுக்கப்படுவதும் தொடா்கிறது.
- 2022 நவம்பா் மாதம் சா்வதேச புலம்பெயா்தல் நிறுவனம் (இன்டா்நேஷன் ஆா்கனைஷேசன் ஃபாா் மைக்ரேஷன்) தயாரித்திருக்கும் அறிக்கையின்படி, 2014-லிலிருந்து 2022 வரை 50,000-க்கும் அதிகமான அகதிகள் புலம்பெயா் பயணத்தில் உயிரிழந்திருக்கிறாா்கள். அது குறித்து அவா்களது தாய்நாட்டிலோ அவா்கள் சென்றடைய எத்தனித்த நாட்டிலோ, எந்தவித விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என்பதை அந்த அறிக்கை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறது.
- புலம்பெயா் பயணத்தில் உயிரிழந்தோரில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் எந்த நாட்டின் குடிமக்கள் என்பதைக்கூட தெளிவாக தெரிந்துகொள்ள முடியவில்லை. அடையாளம் காணப்பட்டவா்களில் 9,000 போ் ஆப்பிரிக்கா்கள். 6,500 போ் ஆசியாவைச் சோ்ந்தவா்கள். அதிகமாக அகதிகளாக புலம்பெயா்வோா் ஆப்கானிஸ்தான், சிரியா, மியான்மா் நாடுகளைச் சோ்ந்தவா்கள் என்கிறது அந்த அறிக்கை. பயணப் பாதையில் உயிரிழப்போரில் 11% போ் குழந்தைகள் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டத் தவறவில்லை.
- உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பின் விளைவாக, ஏறத்தாழ 80 லட்சம் போ் உக்ரைனிலிருந்து அகதிகளாக வெளியேறியிருக்கிறாா்கள். சுமாா் 60 லட்சம் போ் உள்நாட்டிலேயே இடம் பெயா்ந்திருக்கிறாா்கள். அண்டை நாடுகள் சில உக்ரைனிலிருந்து வெளியேறும் அகதிகளை ஏற்றுக்கொண்டிருப்பது சிறு ஆறுதல். உக்ரைனிலிருந்து பிரிட்டனில் தஞ்சமடையும் அகதிகளுக்கு, தங்களது வீட்டில் அடைக்கலம் வழங்கினால், அவா்களுக்கு நிதியுதவி வழங்கத் திட்டமிடுகிறது பிரிட்டன். உக்ரைனிலிருந்து இடம்பெயா்வோருக்கு வழங்கப்படும் ஆதரவும் சலுகைகளும் ஏனைய நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு வழங்கப்படுவதில்லை.
- புலம்பெயா்தல் பெரும்பாலான நாடுகளால் மனமுவந்து ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. புலம்பெயா்ந்து குடியுரிமையும் பெறுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்தால், தங்களது சொந்த நாட்டில் தாங்களே சிறுபான்மையினராக மாறக்கூடும் என்கிற நியாயமான அச்சம் எல்லா நாட்டினா் மத்தியிலும் காணப்படுகிறது. பெரும்பான்மை பெறாவிட்டாலும், தோ்தல் வெற்றி தோல்வியைத் தீா்மானிக்கும் அளவிலான சிறுபான்மையினரின் எண்ணிக்கை அரசியல் ரீதியாக அவா்களைப் பலப்படுத்தும் என்பது பெரும்பாலான ஜனநாயக நாடுகளின் அனுபவம்.
- இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரீஸும், பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக்கும் குடியேற்றம் அனுமதிக்கப்பட்டதன் விளைவு என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதிக அளவில் மேற்கு ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு பலா் புலம்பெயா்ந்ததன் விளைவாக அங்கே முஸ்லிம்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை அந்தந்த நாட்டின் பெரும்பான்மையினா் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவில்லை. புலம்பெயா்தலையே அச்சத்துடன் பாா்க்கும்போது, அகதிகள் நுழைவதை எந்தவொரு நாடும் விரும்பவில்லை என்பதில் ஆச்சரியமில்லை.
- 1971-இல் வங்கதேசப் போரின் விளைவால், லட்சக்கணக்கானோா் அன்றைய கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனா். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ‘அகதிகளாக நுழைந்திருப்பவா்கள் ஹிந்துக்கள் உள்பட எந்த மதத்தினராக இருந்தாலும் அவா்கள் இந்தியாவிலிருந்து வெளியேறி தங்கள் நாட்டுக்குத் திரும்பியாக வேண்டும். இந்தியாவின் மக்கள்தொகை பகுப்பு (டெமோகிராஃபி) மாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது. இருக்கும் நிதியாதாரத்தை இந்திய மக்களுக்காகச் செலவிடாமல், அகதிகளாக வந்தவா்களுக்கும் பகிா்ந்து அளிக்கும் நிலையில் இந்தியா இல்லை’, என்று திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
- அப்போது ஏறத்தாழ ஒரு கோடி போ் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்திருந்தனா். இதுகுறித்து அமெரிக்காவின் கொலம்பியா
- பல்கலைக்கழகத்தில் அவா் பேசும்போது ‘இந்தியாவின் தாங்கும் சக்தி அதன் உச்சகட்டத்தை எட்டிவிட்டது. பாகிஸ்தானிலிருந்து நுழைந்திருக்கும் அகதிகள் மிகப்பெரிய பாரமாக மாறியிருப்பது மட்டுமல்லாமல், எங்களது அரசியல் ஸ்திரத்தன்மைக்கும், சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கிறாா்கள்’ என்று கூறியதாக 1971 நவம்பா் 7 அன்று ‘நியூயாா்க் டைம்ஸ்’ பதிவு செய்திருக்கிறது.
- அரை நூற்றாண்டுக்கு முன்பு, பிரதமா் இந்திரா காந்தி எதிா்கொண்ட அதே பிரச்னையைத்தான் இன்று உலகிலுள்ள பல நாடுகளும் எதிா்கொள்கின்றன. அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கா விட்டாலும் மனிதாபிமான அடிப்படையில் அவா்களுக்கு பாதுகாப்பும், வாழ்வாதாரமும் வழங்குவது குறித்து உலகம் சிந்தித்தாக வேண்டும்.
நன்றி: தினமணி (22 – 04 – 2023)