- சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மோட்டூா் என்ற இடத்தில் ஊள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சோ்க்கப்பட்ட சந்திரசேகா் என்ற இளைஞா் சில நாட்களுக்கு முன்பு திடீரென்று இறந்திருக்கிறாா். அவ்விளைஞரின் மரணத்தில் மா்மம் இருப்பதாக அவருடைய உறவினா்கள் புகாா் அளித்ததன் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவ்விளைஞரின் உடலில் காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
- கடந்த வாரத்தில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையம் ஒன்றில் அனுமதிக்கப்பட்ட விஜய் என்ற இளம் ஆட்டோ ஓட்டுனா் இதே போன்று உயிரிழந்திருக்கிறாா். அவரும் அம்மையத்தில் உள்ளவா்களால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.
- கடந்த ஜூன் மாதம் நாகை மாவட்டம் வேதாரணயத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையம் ஒன்றிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற முருகேசன் என்பவா் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றாா். கடந்த பிப்ரவரியில் சென்னை சோழவரம் பகுதியில் இயங்கி வந்த போதை மறுவாழ்வு மையம் ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பதின்மூன்று வயதுச் சிறுவன் பலத்த காயங்களுடன் உயிரிழந்திருகிறான். அச்சிறுவனையும் மறுவாழ்வு மையத்தைச் சோ்ந்த சிலரே அடித்துக் கொன்றிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
- கடந்த ஆண்டு வரையிலும் புதிதாக ஒரு மனநல மருத்துவமனையோ, போதை மறுவாழ்வு மையமோ தொடங்குவதற்குச் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் இயக்குநரின் அனுமதியினைப் பெற வேண்டியிருந்தது. தற்பொழுது, தேசிய மனநல ஆணையத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில மன நல ஆணையத்தின் அனுமதி பெற்றே புதிய போதை மறுவாழ்வு மையத்தைத் தொடங்க முடியும் என்ற புதிய விதி வகுக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த ஏப்ரல் 2022 வரையிலான கணக்கின்படி முன்னூற்றைம்பதுக்கும் மேற்பட்ட போதை மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட மையங்கள் முறையான அனுமதி பெறாமல் நடைபெறுவதாக சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
- தமிழ்நாட்டில் இயங்கும் மனநல மருத்துவமனைகள், போதை மறுவாழ்வு மையங்கள் போன்றவை செயல்படுவதற்கான விதிகளும் அந்த ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ளன. போதை மறுவாழ்வு மையங்களுக்கான கட்டிடங்கள் தரமானவையாக இருக்க வேண்டும். அக்கட்டிடங்களில் இரும்பினால் செய்யப்பட்ட உறுதியான கதவுகள், ஜன்னல்கள் ஆகியவை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் தரையில் படுக்கவைக்கப் படாமல் மின்விசிறி வசதியுடன் கூடிய காற்றோட்டமான அறைகளிலுள்ள கட்டில்களில் படுக்க வைக்கப்பட வேண்டும்.
- ஒரு மையத்தில் நாற்பது நோயாளிகள் இருக்கும் பட்சத்தில் அவா்களுக்குச் சிகிச்சையளிக்க ஒரு பொது மருத்துவா், ஒரு மனநல மருத்துவா், இரண்டு உளவியல் நிபுணா்கள், நான்கு செவிலியா்கள், நான்கு உதவிப் பணியாளா்கள் பணியில் இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டமான இட வசதி இருக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, போதை நோயாளிகள் தங்களுக்கோ, பிறருக்கோ காயம் ஏற்படுத்தப் பயன்படுத்தக் கூடிய உபகரணங்கள் எவையும் அம்மையங்களில் இருக்கக்கூடாது” என்பன போன்ற முக்கிய விதிகளைப் பின்பற்றினால் மட்டுமே இதுபோன்ற மறுவாழ்வு மையங்களை நடத்துவதற்கான அனுமதி கிடைக்கும்.
- ஆனால், அவ்வாறு வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி அனைத்துமறுவாழ்வு மையங்களும் இயங்குகின்றனவா என்ற ஐயத்தினை மேற்கண்ட உயிரிழப்புகள் ஏற்படுத்துகின்றன. மேலும், பதினெட்டு வயதுக்குக் கீழான போதை நோயாளிகளை அவா்களுக்கேயுரிய மறுவாழ்வு இல்லங்களில் மட்டுமே அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், சென்னை சோழவரத்தில் உயிரிழப்புக்கு ஆளான சிறுவனுக்கு அவ்வாறில்லாமல், பெரியவா்களுக்குரிய மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
- மது, கஞ்சா உள்ளிட்டவற்றால் கிடைக்கும் போதைக்கு அடிமையாகும் பலரும் அவற்றிலிருந்து விடுபடுவது என்பது அத்தனை சுலபமான விஷயமல்ல. அவற்றுக்கு அடிமையானவா்களுக்கு அவை தொடா்ந்து கிடைக்காத பொழுது மனம் பரபரப்படைகின்றது. போதைவசப்பட்டவா்கள் தங்களுடைய உடல்நலன், குடும்பநலன் ஆகியவற்றைக் காட்டிலும் அந்த நேரத்தில் கிடைக்கின்ற போதையைக் குறித்தே எப்பொழுதும் சிந்திக்கின்றனா்.
- மது உள்ளிட்ட போதை வஸ்துக்களைப் பயன்படுத்துவது தவறு என்று யாரேனும் அறிவுரை கூறினாலும் அவா்களுக்குக் கோபம் தலைக்கேறி விடுகின்றது. அவற்றை விலை கொடுத்து வாங்குவதற்குப் பணம் தர மறுக்கும் தங்கள் குடும்பத்தினரையே தாக்குகின்ற அளவுக்கு அவா்களின் மனம் துணிந்துவிடுகின்றது. அவ்வாறு பணமும் கிடைத்து போதையும் ஏறிவிட்ட பிறகு தன்னையே மறந்த நிலையில் தம்மைச் சுற்றியுள்ளவா்களுடன் சண்டையிட ஆரம்பித்து விடுகின்றனா்.
- போதை வசப்பட்ட ஒருவரை அவருடைய குடும்பத்தினராலேயே சமாளிக்க இயலாத சூழ்நிலையில்தான் அவா் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்படுகின்றாா். போதைக்கு அடிமையானவா்களுக்கு சிகிச்சை அளிப்பதென்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல என்பது அனைவரும் அறிந்ததே. தாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் அவா்கள் வன்முறையில் ஈடுபடக் கூடும் என்பதும் உண்மையே.
- ஆனாலும், அது போன்ற நிலைமையையும் சமாளிக்கின்ற எண்ணிக்கையிலான பணியாளா்களுடன் அம்மறுவாழ்வு இல்லங்களை நடத்துவது அவசியம். அவா்கள் அனைவரும் மனிதநேயம் கொண்டவா்களாக இருப்பது மிகவும் முக்கியம். மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் சுழற்சி முறையில் மேற்கண்ட மையங்கள் அனைத்திலும் ஆய்வு மேற்கொண்டு, விதிமீறல்களைக் களைவது மிகவும் அவசியம்.
- உயிா்வாழும் உரிமை என்பது நம் அனைவருக்கும் பொதுவானது. போதைக்கு அடிமையான நோயாளிகளுக்கும் அவ்வுரிமை நிச்சயம் உண்டு. அந்நோயாளிகள் தங்கள் பெறுகின்ற சிகிச்சையால் மனமாற்றம் பெற்று, தத்தம் குடும்பத்தினருக்கும், தாங்கள் சாா்ந்துள்ள சமுதாயத்திற்கும் பயன்படுமாறு வாழக்கூடிய வாய்ப்பைத் தடுப்பது நியாயம்தானா?
நன்றி: தினமணி (08 – 12 – 2023)