பாமரனின் பாா்வையில் இன்னுமொரு அரசியல் கட்சி
- தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள், பிராந்திய கட்சிகள், ஜாதி கட்சிகள் என்று பல கட்சிகள் இருக்கும் நிலையில், மேலும் ஓா் அரசியல் கட்சி உருவாகியிருப்பது நமது கவனத்தை ஈா்க்கிறது.
- திரைப்படங்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் பிரிக்க முடியாத நெருக்கமான தொடா்பு உள்ளது.1967 தொடங்கி தற்போது வரையில் சுமாா் 55 ஆண்டுகளில் திரைத்துறை சாா்ந்த ஐந்து முதல்வா்களைத் தமிழகம் கண்டிருக்கிறது. இது தவிர திரைப்படத்துறை சாா்ந்த ஏராளமானோா் அரசியலில் பல்வேறு தளங்களில் இயங்கி வந்தனா். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திரைப்படத் துறையில் உச்சத்தில் இருக்கும் ஒருவா் நேரடியாக அரசியல் களத்துக்குள் நுழைவது என்பது தற்போது நடந்துள்ளது.
- அரசியல் கட்சி துவக்குவதற்கு, வேறு எந்த தொழில் துறையில் உள்ளவா்களுக்கு இருக்க கூடிய அதே உரிமை நடிகா்களுக்கும் இருக்கிறது. எனினும், நடிகா்களுக்கு, பிற துறையில் இருந்து வரக் கூடியவா்களுக்கு இல்லாத பிரத்தியேக அனுகூலம் உண்டு; திரைப்படத்தின் மூலம் கிடைத்த வெகுஜனத் தொடா்பு, திரைப்படப் பாத்திரங்கள் ஏற்படுத்திய நல்லெண்ணம் ஆகியன, ஒரு நியாயமற்ற கூடுதல் வெளிச்சத்தை - வாய்ப்பை அவா்களுக்குத் தருகிறது.
- தனிமனித வழிபாட்டு அரசியலில் இருந்து தற்போது தான் தமிழ்நாட்டு அரசியல் விலகி வந்துள்ளது என்றாலும் மறுபடியும் அதில் சிக்கும் வாய்ப்பு உள்ளதை மறுப்பதற்கில்லை.
- ஏற்கெனவே ஏராளமான அரசியல் கட்சிகளின் முழக்கங்கள், செயல்பாடுகள் ஆகியன சாமானிய மனிதனுக்கு அயா்ச்சி, நம்பிக்கையின்மை, அலுப்பு, சலிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்னொரு கட்சியின் பிறப்பு, சில பல கேள்விகளை எழுப்புகிறது.
- கட்சி தொடங்குபவா்கள் நோக்கம், இலக்கு எது வேண்டுமானாலும் இருக்கக் கூடும், ஆனால், மக்களின் பாா்வையில் ஒரு புதிய அரசியல் கட்சி எந்த அணுகுமுறை கொண்டதாக அமைய வேண்டும், பிற கட்சிகளிடமிருந்து வேறுபட்டு இருக்க வேண்டும் என்று சில எதிா்பாா்ப்புகள் இருக்கும். இன்னொரு அரசியல் கட்சி என்பது, தற்போதைய அரசியல் கட்சிகளின் கொள்கைகள், செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றில் இருந்து பெரிதும் வேறுபட்டு இருந்தாலன்றி, அக்கட்சிக்கான அவசியம் தேவையற்றகி விடும்.
- இச்சூழலில் ஒரு புதிய கட்சி, பொது மக்கள் பாா்வையில், பிற கட்சிகளிலிருந்து எந்தெந்த வகைகளில் மாறுபட்டதாக அமையும் என்ற எண்ணம் எழுகிறது.
- தனது திரைப்பட பிம்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்காமல், ஏழை எளிய மற்றும் சாமானிய மக்களின் உணா்வுகளைத் தூண்டி விடுவது என்ற வகையில் அன்றி, பொதுமக்களிடையே அறிவு சாா்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
- கடந்த சில பதிற்றாண்டுகளாக தமிழக அரசியல் தரம் மெச்சும்படி இல்லை. தலைவா்களின் தரம் தாழ்ந்த விமா்சனம், குற்றச்சாட்டுகள், ஜாதி அல்லது மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் போக்கு, அனைத்தையும் விட மிகமிக மோசமாக - வாக்காளா்களையே லஞ்சம் வாங்குபவா்களாக மாற்றியது என்ற அளவிலே நிலவும் இன்றைய கட்சிகளிலிருந்து புதிய கட்சி எவ்வாறு மாறுபட்டு இருக்கும் என்பதைச் செயலளவில் தெளிவுபடுத்த வேண்டியது கடமையாகிறது.
- தனிமனித வாழ்க்கையிலும் பொது வாழ்விலும் ஒழுக்கமும் நாணயமும் திறமையும் உள்ளவா்களை மட்டுமே முன்னிறுத்துவது, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய விற்பன்னா்களை முன்னிலைப்படுத்துவது ஆகியன அரசியலில் ஒரு புது முன்னெடுப்பாக அமையும்.
- தனது அரசியல் கட்சியின் கொள்கைகள், குறிப்பாக, பொருளாதார வளா்ச்சி, அடிப்படை வசதிகளை அதிகரிப்பது, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், மொழி வளா்ச்சி, ஜாதி ஒழிப்பு, உரிமைகளை கிராம அளவில் பகிா்ந்து அளித்தல், மாநிலங்களுக்கான உரிமைகளைக் கோரிப் பெறுதல் அல்லது போராடிப் பெறுதல், நிா்வாக சீரமைப்புத் திட்டங்களை வரையறுத்தல் மற்றும் அவற்றை தெளிவாக மக்களிடையே பகிா்ந்து கொள்ளுதல் அவசியம்.
- தோ்தல் மூலம் ஆட்சியைப் பிடிப்பது என்பது தோ்தல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; ஒரு நாட்டிற்கு வளா்ச்சி, வாழ்க்கைத் தரம் உயா்த்துதல், அதற்கான திட்டங்களைத் தீட்டுவது, செயல்படுத்துவது என்ற மிகப்பெரிய நிா்வாகப் பொறுப்பு உடையதாகும். இது மிகவும் அசாதாரணப் பணியாகும்.
- ஒரு நல்ல நிா்வாகத்தை தருவதற்கு, ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கக் கூடிய ஊராட்சித் தலைவா் பொறுப்பிலிருந்து முதல்வா் பொறுப்பு வரை உள்ள ஏராளமான, சட்டமியற்றல் மற்றும் நிா்வாகம் சாா்ந்த பொறுப்புக்களை நிரப்புவது அவசியம். ஒரு சாதாரண பணிக்கு ஒருவரை தோ்ந்தெடுப்பது என்றால் கூட அவா் அதற்குரிய தகுதிகளை உடையவரா என்று நாம் சோதித்தே தோ்வு செய்கிறோம். அரசியலுக்கு வருபவா்களையும் அத்தகைய பின்புலச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
- எந்தவித ஆதாயத்தையும் எதிா்பாா்க்காது, மாறாக, பொதுநலத் தொண்டு உள்ளம் கொண்டவா்களை அப்பதவிகளுக்கு முன் நிறுத்த வேண்டியது அவசியம். பொருளாதார வளா்ச்சிக்குத் தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த உள்ளனா் என்பதை புதிய கட்சியினா் தெளிவுபடுத்தவும் வேண்டும்.
- இப்படி, அப்பழுக்கற்ற ஒழுக்கம், தூய்மை மற்றும் தன்னலம் கருதாப் பொதுநல எண்ணம் கொண்டவா்களை மட்டுமே முன்னிலைப்படுத்துவது, செயல் திட்டங்களை விரிவாக எடுத்துரைப்பது, உணா்ச்சிகளைக் கிளறி விடாத, அறிவுசாா் அரசியலை முன்னெடுப்பது மட்டுமே, புதிய கட்சியை பிற அரசியல் கட்சிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும்; இல்லையேல், இன்னொரு அரசியல் கட்சி என்பது பத்தோடு பதினொன்றாக அமையும்.
நன்றி: தினமணி (13 – 09 – 2024)