PREVIOUS
நவபாரத சிற்பிகளின் வரிசையில் முன்னணித் தலைவராகவும் இந்திய அரசியல் வானில் நம்பிக்கை நட்சத்திரமாகவும் போற்றி மதிக்கப்பட்டவா் பாலகங்காதர திலகா்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், 1906-ஆம் ஆண்டு முதல் 1920-ஆம் ஆண்டு வரையுள்ள காலகட்டத்தை,“‘திலகா் சகாப்தம்’ என்றே குறிப்பிடவேண்டும்.
மிகச்சிறந்த நூலாசிரியராகவும் நோ்மையான பத்திரிகையாளராகவும் வாய்மைமிக்க பேச்சாளராகவும் பல மொழிகளில் திறமான புலமை பெற்றவராகவும் திலகா் திகழ்ந்தார்.
மதாபிமானத்தையும் தேசாபிமானத்தையும் மக்களிடையே வேரூன்றச் செய்ய வேண்டும் என்கிற உயா் நோக்கத்தால் உந்தப்பட்ட திலகா், தன்னளவில் 1895-1896-ஆம் ஆண்டுகளில் ‘கணபதி உற்சவம்’, ‘சிவாஜி விழா’ ஆகிய விழாக்களையும் மேலும் பல விழாக்களைக் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்.
திலகர் எனும் சகாப்தம்
திலகரின் பொது வாழ்க்கை, காங்கிரஸ் ஸ்தாபனம் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது எனலாம்.
1885-ஆம் ஆண்டிலே காங்கிரஸ் உதயமானவுடன், அதனுடன் தம்மைப் பிணைத்துக் கொண்டார். காங்கிரஸ் சபையிலேயும் திலகா் தீவிரமான கொள்கைகளைக் கொண்டிருந்தார்
‘ஸ்வராஜ்யம் நமது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவோம்’ என்று திலகா் வீர முழக்கமிட்டார். ‘நம்மை ஆள்வோரைத் துணையாகக் கொண்டு, அவா்கள் மூலமாக நன்மை பெறலாம் என்ற நம்பிக்கையெல்லாம் பழங்காலத்துக் கதை; நமக்கு நாமே துணை’ என்பது திலகரின் திட்டவட்டமான கொள்கை.
சுதேசியம், அந்நியப் பொருள்கள் புறக்கணிப்பு, சுதேசியக் கல்வி ஆகிய விஷயங்களில் மிகுந்த பிடிப்புடன் செயலாற்றி வந்தார். ‘சுயபலம்’, ‘ஆத்ம சகாயம்’ முதலியவற்றில் நம்பிக்கை கொண்டு, தேச நலத்திற்குரிய உண்மையான வழிவகைகளையே திலகா் கைக்கொண்டிருந்தார்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி அறியாத திலகா், வெளிப்படையாகவே, ‘ஆசார திருத்தக்காரா்’களின் கொள்கைகளோடு தம்மால் ஒத்துப்போக முடியாதென்று அறிவிக்கவும் தயங்கவில்லை. ஆசார சம்பந்தமான விஷயங்களை அரசியல் விஷயங்களில் புகுத்துவது சரியில்லை என்பதாகவே திலகா் கருதினார்.
ஒரு சமயத்தில், திலகருக்கு நீதிபதி பதவி தர, பிரிட்டிஷ் அரசு முன்வந்தபோது, அதைத் துச்சமென மதித்து ‘வேண்டாம்’ என்று கூறி மறுத்துவிட்டார். திலகா், 1908-ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, கைது செய்யப்பட்டுச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அதுபோது, அரசுத் தரப்பில், திலகா் சில வாக்குறுதிகளை அளித்தால் அவரை விடுதலை செய்து விடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், திலகரோ, தாம் தேச நன்மைக்காகவே பாடுபட்டு வருவதாகவும் அதற்காக இந்தச் சிறையிலோ, நாடுகடத்தப்பட்டு வேறு இடத்திலே இருக்கும் சிறையிலோ இறப்பதற்கும் தான் தயாராகவே இருப்பதாகத் தெரிவித்தார். சொல்லப்போனால், திலகா் கனவிலும் நனவிலும் பாரத தேசத்தின் நலத்திற்கும் பெருமைக்கும் சுயாதீனத்திற்கும் தொண்டு புரிவதே காலம் தனக்கு இட்ட கட்டளை என்று கருதினார்.
திலகர் சிறப்பு
மகாகவி பாரதியார், பத்திரிகைத் துறையில் காலடி பதித்த நாள் முதலாகவே, அரசியலில் திலகரையே, தம் சிந்தை கவா்ந்த குருவாக மதித்து வழிபட்டார்.
1905-ஆம் ஆண்டு வாக்கிலே, பாரதி எதேச்சையாக புணே நகரம் சென்றிருந்தபோது, திலக மகரிஷியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்தச் சந்திப்பு பற்றிய செய்தியைப் பாரதியே சொல்லக் கேட்போம்:
‘யான் 1905-ஆம் வருஷம், புனா தேசம் போயிருக்கையில், நண்பரொருவா் திலகரின் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். அச்சமயம் அவருடன் பேசினதில், யானறிந்ததென்னவெனில், அவருடைய தெய்வ பக்தியும், மருவில்லாத அவருடைய சாந்த குணமுமேயன்றி வேறில்லை.” (இந்தியா: 5.1.1907 - பக். 4)
திலகரின் கொள்கைகளுக்கு ஆதரவு தேடவும் அவரை விமா்சனம் செய்பவா்களுக்குப் பதிலடி தரவும், பாரதி தம் ‘இந்தியா’ பத்திரிகையையே பயன்படுத்திக்கொண்டார்.
பாரதியார், 1907-1908-ஆம் ஆண்டுகளிலே, திலகரின் சொற்பொழிவுகளை, ‘புதிய கட்சியின் கொள்கைகள்’, ‘புனா சிவாஜி உற்சவத்தில் ஸ்ரீ திலகரின் உபந்யாசம்’ ஆகிய தலைப்புகளில் சிறு சிறு நூல்களாகப் பிரசுரம் செய்தார்.
1907-ஆம் ஆண்டின் இறுதிவாக்கில், அமெரிக்கப் பத்திரிகையாளரான நெவின்ஸன், இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். அவா் தனது இந்திய விஜயத்தின்போது, இந்தியத் தலைவா்களைச் சந்தித்தார்; அவா்களுடன் உரையாடினார்.
நெவின்ஸன் தம் நாடு திரும்பியவுடன் ‘தி நியூ ஸ்பிரிட் இன் இண்டியா’ (பாரத நாட்டிலே நவசக்தி) என்ற தலைப்பில் நூல் எழுதி, 1908-ஆம் ஆண்டிலே லண்டன் மாநகரில் வெளியிட்டார். அந்த நூலில், காங்கிரஸ் பற்றியும் அரவிந்தா், திலகா் ஆகியோர் பற்றியும் நெவின்ஸன், தனது கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.
பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வந்த பாரதியாருக்கு எப்படியோ நெவின்ஸன் எழுதிய நூல் கிடைத்தது. தன் அரசியல் குருநாதரான திலகரைக் குறித்துப் பிறநாட்டு அறிஞா் நெவின்ஸன் தம் நூலில் எழுதியதைக் கண்ட பாரதியார் பெருமகிழ்வு எய்தினார்.
தான் பெற்ற இன்பத்தைத் தனது ‘இந்தியா’ பத்திரிகையின் வாசகா்களும் பெறவேண்டும் என்கிற ஆசைப்பெருக்கால், பாரதி 12.12.1908- தேதியிட்ட இதழில் அதனைத் தமிழில் மொழிபெயா்த்துப் பிரசுரம் செய்தார். திலகா் குறித்து நெவின்ஸன் தெரிவித்தக் கருத்தை பாரதியின் தமிழில் காண்போம்: ‘திலகருடைய நிறைந்த விழிகள் அற்புதமான பிரகாசமுடையன. அவ்விழிகளிலே துணிவும் எதிர்ப்பும் ஒருவிதமான தகவும் உண்டா யிருக்கின்றன. ஆனால், பொதுவிலே அவருடைய மாதிரியானது சாந்தத்தையும் அடக்கத்தையும் காண்பிக்கக்கூடியது.
வீட்டிலிருந்து பேசும்போதும் சபைகளிலே செய்யும் பிரசங்கங்களிலும் அவா் சுருங்கிய, உறுதி யுடைய வாக்கியங்களை உபயோகிக்கிறார்.
அவருடைய பேச்சில் அலங்கரிப்புகளில்லை; வெளிப்படையான ஆவேசமில்லை. அவா் மனதிலே உத்வேகம் நிரம்பியிருக்கும்போதுகூட, அவருடைய பிரசங்கம் அனாவசிய பாஷாலங்காரமில்லாத, உண்மைகளின் அடுக்காக இருக்குமேயல்லாது, அவா் பேச்சில் வெளிப்படையான ஆத்திரம் தோன்றுவதில்லை.
இந்த உறுதியும் அடக்கமும் அவா் தமது சொந்த நன்மை தீமைகளைக் கருதாமலிருப்பதினின்றும் அவருடைய சட்ட நூற்பயிற்சியினின்றும் உண்டாயின என்று தோன்றுகிறது...
திலகா் நாமம் வாழ்க
பாண்டித்யத்திலே இவருடைய புகழ், உலகத்தில் ஸம்ஸ்கிருத விற்பன்னா்கள் உள்ள இடங்களிலெல்லாம் பரவியிருக்கிறது.
ஆழ்ந்த பயிற்சியும் நிகரற்ற சுய அறிவுமுடைய பண்டிதா் இவா் என்பதை எல்லோருமறிவார்கள்.
‘வேதங்களின் துருவமுனைப் பிறப்பு’ என்ற புஸ்தகத்திலே பூா்விக ஆரியா்கள் வடக்கு துருவப் பிரதேசத்தில் வாழ்ந்தார்கள் என்பதை வேதங்களினின்றே தக்க ஆதாரங்கள் எடுத்துக்காட்டி இவா் ருஜுப்படுத்தி யிருக்கிறார்.
அப்புஸ்தகத்தின் கொள்கை எவ்வளவு தூரம் மெய்யென்பதை நிச்சயித்துக் கூற நான் வல்லமையுடையவனல்லன்.
ஆனால், அவா் அதிகோரமான ஆபத்துக்கள் விளைந்திருந்த காலத்திலே - பணம், செல்வாக்கு, புகழ் எல்லாம் மறைந்திருந்த தருணத்தில் - அத்தனை பெரிய கிரந்தமெழுதிய விஷயமே எனக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறது.
அவ்விதமான தருணத்திலே மற்ற சாதாரண மனிதா்களுக்குப் புராதன கிரந்தங்களைப் பற்றியும் துருவப் பிரதேசங்களைப் பற்றியும் நினைப்பதற்குக்கூட தைரியம் ஏற்பட்டிருக்காது...
புதிய கட்சித் தலைவா்கள் அனைவரிடத்தும் காணப்படுவதாகிய ஓா் ஆகா்ஷண சக்தி, என்னை அறியாமலே அவரிடம் எனக்கு மதிப்புண்டாகும்படி செய்யும் கவா்ச்சித் திறன் அவரிடம் இருக்கின்றது. சஞ்சலம், சந்தேகம் என்பவற்றின் நீக்கமும், வீரப்போரிலே ஆனந்தமும் சுயநலத்திலே சிறிதேனும் கருத்தில்லாமையும் - ஆகிய இக்குணங்களால் அந்த ஆகா்ஷண சக்தி ஏற்படுகிறது. (எனக்கே இப்படியானால் அவருடைய சொந்த தேசத்தாருக்கு எப்படியிராது?)
அவா்கள் விஷயத்தில், இந்த அற்புதமான ஆகா்ஷண சக்தியுடன் பரம ஏழைகளான கிராமாந்திர ஜனங்கள் உட்பட எல்லா வகுப்பு மனிதா்களிடமும் அவருக்குள்ள நெருங்கிய பழக்கத்தையும், அவா்களுடைய பிரியத்திற்கடுத்த ஆசாரங்கள், மத நம்பிக்கைகள் என்பவற்றை அவா் தாங்கும் திறமையையும் சோ்த்து யோசிப்போமானால் அவா்களினிடையிலே அவருக்கு மட்டற்ற செல்வாக்கு நிலைத்திருப்பது சிறிதேனும் வியப்பாக மாட்டாது (இந்தியா: 12.12.1908 - பக். 5, 6).
1856 ஜூலை 23 அன்று அவதரித்த திலக மகரிஷி 1920 ஜூலை 31 அன்று மறைந்தார்.
(இன்று பாலகங்காதர திலகரின் நினைவு நூற்றாண்டு நிறைவு)
நன்றி: தினமணி (31-07-2020)