TNPSC Thervupettagam

பாரத ரத்னா: அரசியல் ஆதாய அறிவிப்பாகிவிடக் கூடாது

February 13 , 2024 341 days 271 0
  • மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், இந்திய அரசின் மிக உயரிய அங்கீகாரமான பாரத ரத்னா விருது ஐந்து பேருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது விவாதப் பொருளாகியிருக்கிறது. பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர், முன்னாள் மத்திய அமைச்சரும் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்கள் செளத்ரி சரண் சிங், நரசிம்ம ராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகிய ஐவருக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இவர்களில் அத்வானியைத் தவிர மற்ற நால்வரும் காலமாகிவிட்டனர். இதுவரை ஓர் ஆண்டில் அதிகபட்சமாக மூவருக்கு மட்டுமே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகியிருப்பதில் வியப்பில்லை.
  • பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சி அமைந்த பிறகு, 2015இல் பாரத ரத்னா விருதுகளை வழங்கியது. அதன் பிறகு மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஆண்டுகளான 2019இலும் 2024இலும் மட்டுமே பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • அதேபோல், 2004இல் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் மக்களவைத் தேர்தல் நடந்த 2009, 2014 ஆண்டுகளில் மட்டுமே பாரத ரத்னா விருதுகளை வழங்கியது.
  • காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது.
  • ஆனால், நேரு குடும்ப வாரிசுகளின் ஆதிக்கத்தால் நரசிம்ம ராவுக்கு காங்கிரஸ் கட்சியில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி பல முறை கூறிவந்த நிலையில், இதன் பின்னே அரசியல் இருப்பதாகப் பேசப்படுகிறது.
  • பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான அரசியலின் முக்கியமான தலைவராகப் பார்க்கப்படும் கர்ப்பூரி தாக்கூருக்கு விருது அறிவிக்கப்பட்டது. நிதீஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அணிமாறும் நிர்ப்பந்தத்தை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
  • சரண் சிங்குக்கு விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியானது, இண்டியா கூட்டணியிலிருந்து விலகி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய முடிவெடுத்துவிட்டது. சரண் சிங்கின் பேரனும் அக்கட்சியின் தலைவருமான ஜெயந்த் செளத்ரி மாநிலங்களவையில் பிரதமர் மோடியைப் பாராட்டிப் பேசியது எதிர்க்கட்சிகளை ஆவேசப்பட வைத்திருக்கிறது.
  • இதற்கு முன்பும் பாரத ரத்னா விருது அறிவிப்புகள் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. 1988இல் ராஜீவ் காந்தி அரசு எம்ஜிஆருக்கு விருதளித்தது, அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த தேர்தலில் தமிழக வாக்காளர்களைக் கவர்வதற்கான உத்தி என்று விமர்சிக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று புகழப்படும் பி.ஆர்.அம்பேத்கருக்கு 1990இல் தேசிய முன்னணியின் ஆட்சியில்தான் பாரத ரத்னா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதுவரை பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட 53 பேரில் ஐவர் மட்டுமே பெண்கள். இந்தப் பாலினப் பாகுபாடு களையப்பட வேண்டும். தேச வளர்ச்சிக்கு முக்கியமான பங்காற்றியுள்ள பலருக்கு இன்னும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
  • தகுதி வாய்ந்த அனைவரையும் உரிய நேரத்தில் அங்கீகரிப்பதற்கு ஒவ்வோர் ஆண்டும் விருது கொடுப்பது குறித்து ஆட்சியாளர்கள் பரிசீலிக்கலாம். பாரத ரத்னா அறிவிப்புகளின் தேவையற்ற கால இடைவெளி குறைக்கப்பட வேண்டும். தேர்தல் ஆண்டுகளில் மட்டும் விருதுகள் அறிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றின் மூலம் விருதுகள் சர்ச்சைக்குள்ளாவதைத் தடுக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்