TNPSC Thervupettagam

பாரத ரத்னா அரசியல் சொல்வது என்ன

February 15 , 2024 341 days 274 0
  • இன்றைய இந்தியா மீது எந்த சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை விளக்கும் நிகழ்வுகள், 1990 ஆகஸ்ட் தொடங்கி 1991 ஆகஸ்ட் வரையில் 12 மாதங்களுக்கு உச்சத்தில் இருந்தன. 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இதற்குப் பின்னாலிருந்த தலைவர்களுக்கு நாட்டின் குடிமக்களுக்கான உச்சபட்ச விருதுபாரத் ரத்னாவழங்கப்பட்டுள்ளது.
  • இதில் முதலாவது சக்தி, ‘மண்டல்ஆணையப் பரிந்துரை; விசுவநாத் பிரதாப் சிங் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோதுபிற்படுத்தப்பட்ட சாதிவகுப்பாருக்கு ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு உரிமைகளை வழங்கும் ஆணை 1990 ஆகஸ்டில் பிறப்பிக்கப்பட்டது. பழங்குடிகளுக்கும், பட்டியல் இனத்தாருக்கும் கல்விவேலைவாய்ப்பில் இடங்களை ஒதுக்கும் நடைமுறை அரசமைப்புச் சட்டத்திலேயே அங்கீகரிக்கப்பட்டிருந்தன.
  • இடைநிலைச் சாதியினருக்கு இடங்களை ஒதுக்கும் நடைமுறை தென்னிந்திய மாநிலங்களில் 1950களிலேயே தொடங்கியது. அதை வட இந்திய மாநிலங்களும் ஏற்பது, பிஹாரில் முதல்வர் கற்பூரி தாக்குர் ஆட்சியில் 1970களில் தொடங்கியது. அதுவே ஒன்றிய அரசின் கொள்கையாக, மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல் செய்வது என்ற முடிவால் 1990இல்தான் ஏற்பட்டது.
  • இன்றைய இந்தியா எப்படிப்பட்டது என்று உணர்த்தும் இரண்டாவது சக்தி, அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்றமந்திர்இயக்கம் தொடர்பானது. 1980களின் தொடக்கத்தில் உருவான இந்தச் சக்தியை, பாஜக அரசியல் விவகாரமாக பின்னர்தான் கையில் எடுத்தது. ‘ஜுகல்பந்தி: மோடிக்கு முன்னால் பாஜகஎன்ற புத்தகத்தில் இதைப் பற்றி விவரித்திருக்கிறேன். குஜராத்தின் சோமநாதபுரத்திலிருந்து அயோத்திக்கு எல்.கே.அத்வானி 1990இல் தொடங்கிய ரத யாத்திரை, ‘ராம பக்தர்களே நாங்கள் உங்களோடு இருக்கிறோம்என்று அறிவிப்பதாக அமைந்தது.
  • மூன்றாவது சக்தி, பி.வி.நரசிம்ம ராவ் இந்தியப் பிரதமராக இருந்தபோது, பொருளாதார தாராளமயம் என்ற வடிவில் (மார்க்கெட்) அமைந்தது. ‘மண்டல்’, ‘மந்திர்போலமார்க்கெட்சீர்திருத்தமும் ஏற்கெனவே சிறிய அளவில் தொடங்கியிருந்தது. அதிகார வர்க்கத்தின்சிவப்பு நாடாமுறையிலிருந்து பொருளாதாரத்தை விடுவிக்க பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி முதலில் முயற்சி செய்தார், அதைத் தீவிரமாக எடுத்துச் செல்லும் ஆற்றல் அவருக்குப் போதவில்லை; அரசியல் உத்திகளில் கைதேர்ந்தவரான நரசிம்ம ராவ், தனக்கிருந்த பல போதாமைகளையும் மீறி, பொருளாதாரக் கட்டுப்பாடுகளை நீக்கும் நடவடிக்கையை 1991இல் தொடங்கினார்.

தலைவரை அடையாளம் காட்டுவன

  • மண்டல், மந்திர், மார்க்கெட் என்ற இந்த மூன்றும்தான் இன்றைய இந்தியா மீது செல்வாக்குச் செலுத்துகின்றன; ஒரு வகையில் இந்த மூன்றின் கலவையும்தான் நரேந்திர மோடி. கடந்த மாதம் நடந்த அயோத்தி ராமர் கோயில் திறப்பு, பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த ஆலயம் கட்டும் இயக்கத்தை முடித்து வைத்தது. மோடியின் பாஜக இப்போது தன்னைபிற்படுத்தப்பட்ட மக்களுடையகட்சியாக சித்தரிக்கிறது.
  • அறிஞர் நளின் மேத்தா, ‘நியூ பிஜேபிஎன்ற தன்னுடைய நூலில் கூறுகிறார், ‘பாஜகவின் இன்றைய வேட்பாளர்களும் பெரும்பாலான வாக்காளர்களும் இந்துக்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினர்தான், முற்பட்ட சாதியினர் அல்லஎன்று. மார்க்கெட் என்று அழைக்கப்படும் சந்தையும் மோடியின் அரசியலில் மைய இடம் வகிக்கிறது.
  • தொழில் வர்த்தகம் விரிவடைய வேண்டும் என்பதற்காக இதுவரை இருந்திராத வகையில் கோடிக்கணக்கான ரூபாய்களை மூலதனச் செலவாகஅதாவது அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்காகசெலவிடுகிறார், இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதும், இந்தியாவில் தொழில் தொடங்குவதும் எளிதுதான் என்று அயல்நாட்டு முதலீட்டாளர்கள் நம்பும் அளவுக்கு நடைமுறைகளைச் சுலபமாக்கிவருகிறார்.
  • கற்பூரி தாக்குர், எல்.கே.அத்வானி, நரசிம்ம ராவ் என்றுபாரத் ரத்னாவிருது பெறத் தேர்வுசெய்யப்பட்டுள்ள மூவருமே மண்டல், மந்திர், மார்க்கெட் என்ற மூன்றின் செல்வாக்கையே உணர்த்துகின்றனர். முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கும் இந்த விருதுகள் ஏன் வழங்கப்படுகின்றன என்பதை ஊகிக்கும் வேலையை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். எனக்கு மிகவும் நன்றாகத் தெரிந்த அரசியல் தலைவர் பி.வி.நரசிம்ம ராவ் குறித்து மேலும் சில தகவல்களைத் தெரிவிக்கிறேன்.

மறக்கப்பட்ட பிரதமர்

  • நரசிம்ம ராவ் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை எழுத நான் முடிவுசெய்த 2014வது ஆண்டில், 1991 முதல் 1996 வரையில் நாட்டை ஆண்ட அவரை மக்கள் கிட்டத்தட்ட மறந்தேவிட்டனர். தெற்காசிய அரசியல் குறித்து நன்கு படித்த அறிஞர் ஒருவரே, ‘நரசிம்ம ராவாயார் அவர்?’ என்று கேட்டார். நரசிம்ம ராவின் மகனைச் சந்திக்க, ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து அவருடைய வீட்டுக்கு டாக்சியில் சென்றபோது ஓட்டுநரிடம் பேசினேன்; “நரசிம்ம ராவ் யாரென்று தெரியவில்லைஒரு மேம்பாலத்துக்கு அவருடைய பெயரை வைத்திருக்கிறார்கள்என்றார். ராவை அவருடைய சொந்தக் கட்சியே நிராகரித்துவிட்டது, எல்லோரும் மறந்துவிட்டனர் (மன்மோகன் சிங் மட்டும் விதிவிலக்கு).
  • நரசிம்ம ராவைப் பற்றி நான் மேற்கொண்ட ஆராய்ச்சி, அவர் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டியவர் என்பதையே உணர்த்துகிறது. அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள 45 பெரிய அட்டைப் பெட்டிகளில் அவர் தனிப்பட்ட முறையில் திரட்டியிருந்த ஆவணங்களையும் நூற்றுக்கும் மேல் அவர் அளித்த பேட்டிகளையும் படிக்கத் தந்தார்கள்.
  • அரசியலை அருகிலிருந்து வேடிக்கை பார்த்த வழிப்போக்கர் அல்ல அவர். உலகச் சந்தையில் போட்டி போடும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரத்தைத் திறந்துவிட அவர் தீவிரமாக சிந்தித்து உத்தி வகுக்க வேண்டியிருந்தது; நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது; உள்நாட்டு முதலாளிகளின் எதிர்ப்பை மீற வேண்டியிருந்தது; சொந்தக் கட்சியையே (காங்கிரஸ்) தனக்கு ஆதரவு தர கெஞ்ச வேண்டியிருந்தது.
  • நரசிம்ம ராவ் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் வெறும் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல; பெர்லின் சுவர் தகர்ப்புக்குப் பிறகு இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றிணைந்த நிகழ்வைப் போல, இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை அமெரிக்காவுடன் உறவு வலுப்பட சீர்திருத்தினார்; பஞ்சாபில் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார், காஷ்மீரத்தில் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தினார். சில தோல்விகளையும் சந்தித்தார் அவர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு வரை நிகழ்ந்தவற்றை சாதாரண அரசியலர் போலவே கையாண்டார், முதிர்ந்த அரசியலராகச் செயல்படவில்லை.
  • மசூதி இடிக்கப்பட்டதற்கு அவரும் உடந்தையாகச் செயல்பட்டார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு துளியும் ஆதாரம் இல்லை. 1984இல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தின்போது அவர் நடந்துகொண்ட விதம், அவருடைய அனுபவம், ஆற்றலுக்குச் சிறிதும் தொடர்பில்லாமல் இருந்தது. தில்லி மாநகரம், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததால் அவர் நினைத்திருந்தால் அதைச் சுலபமாகக் கட்டுப்படுத்தியிருக்க முடியும், ஆனால் பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த ஆலோசனையை ஏற்று அமைதி காத்தார். ‘ராவ்பாதி சிம்மம்என்ற நூலில் அதை விவரித்திருக்கிறேன். அவருடைய வாழ்க்கையில் அது மிகவும் இழிவான நேரம் என்றே கூறுவேன்.
  • ராவ் மீது இந்தக் குறைகள் இருந்தாலும், பொருளாதார சீர்திருத்தத்துக்காக அவர் கொண்டுவந்த மிகப் பெரிய மாற்றங்கள், அவருக்கு நிறைய ஆதரவாளர்களைப் பெற்றுத் தந்திருக்க வேண்டும். அரசியலர்களுக்கு மூன்று பெரிய பாடங்களை அவருடைய வாழ்க்கை விட்டுச் சென்றிருக்கிறது.
  • முதலாவது, அரசு இயந்திரத்தை மட்டும் நம்பியிருக்காமல் மக்கள் மீது நம்பிக்கை வைத்துச் செயல்படும்போது நாட்டின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. உலகச் சந்தையில் போட்டிக்குத் தயாராகும்போது தனியார் துறையையும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவித்தால்தான் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்பது சிறந்த பொருளாதார பாடமாகும். 1991களில் உலகம் முழுவதும் பல நாடுகள் உணர்ந்த பாடமும் இதுவே.
  • இதை எளிதாக நடைமுறைக்குக் கொண்டுவந்த விதத்தில்தான் நரசிம்ம ராவின் மேதைமை வெளிப்படுகிறது. ஆனால், இன்றைக்கு இந்தச் சுதந்திரச் சந்தை கருத்தொற்றுமையும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது. சுதந்திரச் சந்தையை வலியுறுத்திய அமெரிக்காவே இப்போது தன்னாட்டுத் தொழில் நிறுவனங்களைக் காப்பாற்ற வெளிநாட்டுப் பொருள்கள் மீது இறக்குமதி வரியை அதிகப்படுத்துகிறது, காப்புவரி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது. ‘குறைந்தபட்ச தலையீடுஅதிகபட்ச நிர்வாகம்என்று கூறிய தலைவர்கள்கூட இப்போது பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் ஏதாவது ஒரு வகையில் அரசின் கைகளும் தெரியவேண்டும் என்று ஆசைப்படுகிிறார்கள்.
  • இரண்டாவது, நல்வாழ்வு திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றால் தாராளமயக் கொள்கையால் பொருளாதாரம் வளர்ச்சி காண்பது அவசியம் என்பது. ‘வறுமையை ஒழிப்போம்என்று முழங்கிய இந்திரா காந்தியால், வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அதிகம் செலவிட முடியவில்லை, காரணம் அரசுக்குப் போதிய வருமானம் இல்லை. நரசிம்ம ராவின் பொருளாதார சீர்திருத்தங்களால் வரி வருவாய் பெருகியது. இதனால் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு, அதற்கு முன்னர் இல்லாதவகையில் செலவிட நிதி கிடைத்தது.
  • பொருளாதாரக் கொள்கையில் உங்களுக்கு யார் முன்மாதிரி?” என்று கேட்டபோது, “மார்கரெட் தாட்சர் (பிரிட்டிஷ் பிரதமர்) அல்ல, வில்லி பிராண்ட் (ஜெர்மனியின் பிரதமர்)” என்று பதில் அளித்தார் நரசிம்ம ராவ். மேற்கு ஜெர்மனியில் சமத்துவ ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்த வில்லி பிராண்ட், தாராளச் சந்தை முதலாளியமும் - அரசு உந்துதலில் நடைபெறும் மறுபங்கீடும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று ராவுக்கும் முன்னதாக உணர்ந்திருந்தார்.

சமூக ஒற்றுமையில் நம்பிக்கை

  • மூன்றாவது பாடம்தான் முக்கியமானது. இந்திய நாகரிகம் காலங்காலமாகப் பின்பற்றிவரும் சமூக ஒற்றுமையைக் கட்டிக்காக வேண்டும் என்பதே அது. சம்ஸ்கிருதத்தை நன்கு கற்றவரான ராவ் இந்து மதத்தில் ஆழ்ந்த பக்தி கொண்டவர். அவர் படித்த நூல்களில் பல சோதிடம் தொடர்பானவையும் உண்டு. நிஜாம் ஆட்சியில் இருந்த ஹைதராபாதில் பிறந்து வளர்ந்ததால் அவருடைய நண்பர்களில் பலர் முஸ்லிம்கள்.
  • எனவே, திருக்குர்ஆனையும் நன்கு வாசித்திருந்த ராவால் பாரசீகம், உருது ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசவும் முடியும். இரண்டு மதங்கள் குறித்தும் நன்கு அறிந்திருந்ததால் இரு மதங்களும் சேர்ந்திருப்பது சவாலானது என்பதும் புரிந்திருந்தது, அதேசமயம், அப்படிச் சேர்ந்திருப்பதும் சாத்தியமே என்று முழுதாக நம்பினார்.
  • சாமுவேல் பி.ஹட்டிங்டன் என்ற ஹார்வர்ட் பல்கலைக்கழக அரசியல் அறிஞர் 1993இல் எழுதியநாகரிகங்களுக்கு இடையிலான மோதல்என்ற ஆய்வறிக்கையும் ராவின் தொகுப்புகளில் இருந்தது. இஸ்லாமியர்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான மோதல் பற்றி சாமுவேல் அறிக்கை இருந்தது. அந்த அறிக்கையின் இடது ஓரமாக இருந்த மார்ஜினில், ராவ் தன்னுடைய கையால் சிவப்பு மையில் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார்.
  • எதற்காக மேற்கத்திய நாடுகளைப் பற்றி மட்டும் உதாரணத்துக்கு எடுக்கிறார், அங்கு மதம் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு காரணத்தால் மோதல் நடந்துகொண்டுதானே இருக்கும்; இந்தியாவில் மத அடிப்படையிலான போர்களே நடந்ததில்லை. இந்துமுஸ்லிம்களுக்கு இடையில் கலவரம் நடந்தாலும் சில நாள்களுக்கெல்லாம் இரண்டு தரப்பும் அவற்றை மறந்து மீண்டும் இயல்பாக நட்புடன் வாழத் தொடங்கிவிடுகிறார்கள்; மோதல்களுக்குச் சில உதாரணங்களைக் காட்டினாலும் - சேர்ந்து வாழ்வதற்குப் பல உதாரணங்கள் உள்ளனஎன்று எழுதியிருக்கிறார்.
  • நரசிம்ம ராவ் வாழ்க்கையிலிருந்து இறுதியாக நாம் கற்க வேண்டிய பாடம் சந்தை பற்றியோ, வெளியுறவுக் கொள்கை தொடர்பாகவோ, சமூக நல நடவடிக்கை எது என்பதே அல்ல; இங்கு எத்தனை மதங்கள் இருந்தாலும், அந்த வேறுபாடுகளைப் பொருள்படுத்தாமல் மக்கள் இணக்கமாக வாழ்கின்றனர் - வாழ்வார்கள் என்பதுதான்!

நன்றி: அருஞ்சொல் (15 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்