- இரணியனை வதம் செய்ய நரசிங்கர் அவதாரம் தோன்றியது. இராவணனை வதம் செய்ய திருமால் இராமனாக அவதாரம் செய்தார்.
- துரியோதனாதியரை வதம் செய்ய கிருஷ்ணாவதாரம் எழுந்தது.
- அதர்மங்கள் அதிகரிக்கும் போதெல்லாம் அவதரிக்கும் பரம்பொருள், லஞ்சமாகிய அரக்கனை அழிக்க எப்போது அவதாரம் செய்யப் போகின்றது?
- லஞ்ச லாவண்யத்தின் ஆதிக்கம் தாங்காமல், அண்மையில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர் குமுறிக் கொந்தளித்திருக்கிறார். அவர், "தேசிய நெருக்கடிகளைத் தீர்க்கும் வழிமுறைகள், ஆதிக்கவாதிகளின் படிக்கட்டுகளில் தீர்மானிக்கப் படுகின்றன.
- ஊழல், ஜனநாயகத்தையும் அதன் அமைப்புக்களின் வேர்களையும் தின்று கொண்டிருக்கிறது. லஞ்சம், பொது நிறுவனங்களின்மீது ஆதிக்கம் செலுத்தும் விதிமுறையாகவும், நெறிமுறையாகவும் ஆகிவிட்டது. சுருக்கமாகச் சொன்னால், ஊழலுக்காக ஜனநாயகத்தின் அறக்கோட்பாடுகள், தியாகம் செய்யப்படுகின்றன' எனக் கூறியிருக்கிறார்.
- ஒரு குடியரசுத் தலைவரையே (நிக்சன்) பதவியிறக்கம் செய்யக்கூடிய "வாட்டர் கேட்' ஊழல், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில்தான் நிகழ்ந்தேறியது.
- உலகப் பேரழகி கீலர் என்ற உளவாளி விரித்த சதி வலையில், சர்வதேசத் தலைவர்களும் சிக்கினர். அவளால், இங்கிலாந்து நாட்டுப் பிரதமர் ஹெரால்டு மாக்மில்லர் பதவி இழந்தது, தேசத்திற்கே அவமானத்தைத் தந்தது.
- கையூட்டு எனும் ஊழல், அறிவுஜீவிகளையும் விட்டு வைக்கவில்லை. இங்கிலாந்தில் லார்ட் பேகன் என்ற மேதாவி ஒருவர் இருந்தார். அவர் ஆங்கில உரைநடைக்கே புது ரத்தம் பாய்ச்சியவர் என்பதால், "உரைநடை இலக்கியத்தின் தந்தை' என அழைக்கப்பட்டார்.
- அவருடைய மேதாவிலாசத்தை மெச்சி, இங்கிலாந்து அவரை உயர்நீதிமன்ற நீதிபதி ஆக்கியது. எனினும் ஒரு வழக்கில் அவர் கையூட்டு வாங்கியதால், அப்பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். அதனால், அவரை ஆங்கிலப் பத்திரிகைகள், "லார்ட் பேகன் மிகப்பெரிய மேதை என்றாலும் சின்ன புத்தி படைத்தவர்' என விமர்சித்தன.
- கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் "மாக்கியவல்லி'என்றொரு ஞானவான் இருந்தார். மக்களாட்சி தத்துவத்திற்கு அற்புதமான விளக்கங்களைத் தந்ததோடு, மன்னராட்சியை ஒழித்துக் கட்டுவதிலும் மும்முரமாக இருந்தார்.
- அவரை அந்த நாட்டு இளவரசன் நல்ல விலை கொடுத்து வாங்கிப் போட்டான். மறுநாளிலிருந்து மாக்கியவல்லி, "ஜனநாயகம் ஒரு மாயை; மன்னராட்சியே மகேசன் ஆட்சி' எனப் பேசத் தொடங்கியதோடு, "இளவரசன்' என்ற பெயரில் ஒரு புத்தகமும் எழுதினார். அதனால் விமர்சகர்கள் அவரை "ஒழுக்கமில்லாதவன்' என வருணிக்கத் தொடங்கினர்.
- இன்றைக்கும் சோரம் போகும் அரசியல்வாதியை "மாக்கியவல்லி' என அழைக்கும் மரபு இருந்து வருகிறது.
- இப்படி உலகம் முழுவதும் ஊழல் இருந்தாலும், "பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு' என மகாகவி பாரதியால் வருணிக்கப்பட்ட புண்ணிய பூமியில், அது காலூன்றலாமா எனக் கேட்கத் தோன்றும்.
- கி.மு.விலேயே லஞ்சமும் ஊழலும் பரவியிருந்தமைக்கு சாணக்கியரின் "அர்த்த சாஸ்திரம்' சான்று பகருகின்றது. "தண்ணீருக்குள் நீந்திக் கொண்டிருக்கும் மீன் எப்பொழுது தண்ணீரைக் குடிக்கும் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதுபோல அரசாங்க அலுவலகங்களில் வேலை பார்க்கும் அதிகார வர்க்கம், எப்பொழுது லஞ்சம் வாங்கும் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது' என்றார் சாணக்கியர்.
- கி.பி. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழகத்திலும் லஞ்சம் தலைகாட்டியதை சேக்கிழார், பெரிய புராணத்தில் சுட்டிக் காட்டுகிறார்.
- சைவ கோபுரத்தை சமண கோபுரமாக மாற்றியதைக் கண்டித்து அப்பரடிகள் பழையாறையில் உண்ணாவிரதம் இருக்கிறார். உண்ணாவிரதம் இருக்கும் அப்பரடிகளை கைது செய்து வரக் காவலர்களை அனுப்புகிறான், சமணனாகிய மகேந்திர வர்மன்.
- அப்படி அனுப்புகையில், "யாராவது லஞ்சம் கொடுத்தால், அவரை விட்டுவிட்டு வந்து விடாதீர்கள்' எனக் காவலர்களை எச்சரித்தும் அனுப்புகின்றான். இதிலிருந்து ஆறாம் நூற்றாண்டிலேயே லஞ்சம் கால்கொண்டிருந்ததை அறியலாம்.
- சோழர்கள் காலத்தில் லஞ்சம் நடமாடியதாக முதல் பராந்தகச் சோழனின் உத்திரமேரூர் கல்வெட்டு கூறுகின்றது.
- 18-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிழக்கிந்திய கம்பெனி, வரும்போதே தன் முதுகில் ஊழலையும் சுமந்து வந்தது. கம்பெனியில் நிலவிய ஊழலை ஒழிப்பதற்காக அனுப்பப்பட்ட ராபர்ட் கிளைவ், வங்காள நவாப் நசிம் உத் தெüலா-விடமிருந்து ரூபாய் 25 லட்சம் பெற்றுக்கொண்டு, அவருடைய பதவிக்குப் பாதுகாப்பு அளித்தார்.
- கி.பி. 1772-இல் வங்காள கவர்னராக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ், அயோத்தி பேகங்களுக்குத் தொல்லை கொடுத்த அசாத் உத் தெüலா-விடமிருந்து பத்து லட்ச ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, அவரை மன்னித்து அனுப்பினார்.
- வாரன் ஹேஸ்டிங்ஸின் அட்டூழியங்களைத் தாங்க முடியாத எட்மண்ட் பர்க், அவர் மீது 23 குற்றங்களைக் காட்டி, இங்கிலாந்தில் ஹேஸ்டிங்ûஸ குற்றவாளிக் கூண்டிலேற்றினார். எட்மண்ட் பர்க்கினுடைய ஆணித்தரமான வாதங்களைக் கேட்ட வாரன் ஹேஸ்டிங்ஸ், கூண்டிலேயே மயக்கமுற்று வீழ்ந்தார்.
- இப்படி ஆங்கிலேயர்களும் அவர்களுடைய பங்கிற்கு, ஊழல் செய்துவிட்டுதான் சென்றனர்.
- சுதந்திர இந்தியாவின் முதல் ஊழலை 1957-ஆம் ஆண்டு பெரோஸ் காந்தி வெளிப்படுத்தினார்.
- ஹரிதாஸ் முந்த்ரா என்பவர் திவாலாகப் போகும் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு, நிதியமைச்சர் அலுவலகத்தின் மூலமும், பிரதமர் அலுவலகத்தின் மூலமும் பெருந்தொகையைப் பெற்றுத் தந்தார். இதனை முதன் முதலில் பெரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் எழுப்பினார்.
- பெரோஸ் காந்தியினுடைய அக்கினிக் கணைகளைக் கண்டு அவருடைய மாமனாராகிய பிரதமர் நேருவே ஆடிப்போனார். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகட்டும் என்று நேரு பெருமானார், நிதி மந்திரி டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரை மந்திரி சபையிலிருந்து கழற்றிவிடவே, ஒரு வழியாக அந்தப் பிரச்னை தீர்ந்தது.
- 1962-இல் பாரதத்தின் மீது சீனா போர் தொடுத்தது. சீன நெருக்கடியை முன்னிட்டு பிரதமர் நேரு வானொலியில் ஆற்றிய உரை, இந்திய மக்கள் அனைவரையும் நெக்குருகச் செய்தது.
- அதிலும் வீரம் மிக்க மக்களாகிய பஞ்சாபியர் தங்களுடைய செல்வங்களையெல்லாம் அள்ளி அம்மாநில முதலமைச்சராகிய பிரதாப் சிங் கெய்ரோனிடம் யுத்த நிதியாக வழங்கினர்.
- மொத்த நிதியையும் வாகனங்களில் ஏற்றிக்கொண்டு, பிரதமரிடம் வழங்குவதற்காக சண்டீகரிலிருந்து தில்லிக்குப் புறப்பட்ட முதல்வர், பாதி வழியில் வாகனத்தை நிறுத்தி, பாதிப் பணத்தைத் தம் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.
- செய்தியறிந்த பஞ்சாப் மக்கள், ஊழல் பேர்வழியை விட்டுவைக்கக்கூடாது என்று நேருக்கு நேர் நின்று கெய்ரோனை சுட்டுக் கொன்றனர்.
- அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலை சில நன்மைகள் ஏற்படவும் வழி செய்தது. சர்வதேக கடத்தல் மன்னர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, கே.ஆர். கணேஷை துணை நிதியமைச்சராக நியமித்தார் இந்திரா காந்தி.
- ஹாஜி மஸ்தான் "இல்லஸ்ட்ரேடட் வீக்லி' பத்திரிகையில் கொடுத்த பேட்டி, அனைவருக்கும் பேரதிர்வை ஏற்படுத்தியது. "அவரை (கணேஷை) சும்மா இருக்கச் சொல்லுங்கள். நான் யாருக்கு என்ன கொடுத்திருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியாது' என்று கூறியது, ஊழல்வாதிகள் எவ்வளவு ஆற்றல் பெற்றவர்களாய் இருக்கிறார்கள் என்பதைக் காட்டியது.
- மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபொழுது, கேத்தன் தேசாய் என்ற மருத்துவக் குழுத்தலைவர் செய்த ஊழல், தனி மனிதரின் ஊழலுக்கு சிகரம் வைத்த ஒன்றாகும். அவர் பிடிபட்டபோது 1,300 கிலோ தங்கமும், 1,500 கோடி ரூபாய் பணமும் அவருடைய படுக்கையறையில் கிடைத்தன.
- மற்ற நாடுகளின் ஊழல், மனிதர்களைத்தான் பாதிப்பதாக இருக்கின்றது. ஆனால் பிகாரின் லாலு பிரசாத் யாதவ் செய்த ஊழல், பசு மாட்டின் தீவனத்திற்கே வேட்டு வைத்தது. அதனால் அவர் பெற்றது 40 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஈடான தொகையாகும். அத்துடன் 14 ஆண்டு சிறை வாசமும் பெற்றார்.
- லஞ்சமும், ஊழலும் இன்றைய பாரதத்தில் வாழ்க்கை முறையாகிவிட்டது. லஞ்சத்தை அசிங்கமாகக் கருதவேண்டிய சமூகம், அதனை ஓர் ஆபரணமாகவே அணியத் தொடங்கிவிட்டது.
- அரசியல்வாதிகள் ஒரு தேர்தலில் செலவிட்டதை எடுக்கவும், மறுதேர்தலில் செலவு செய்வதற்குமாக லஞ்சம் வாங்குகிறார்கள். அமைச்சர்கள் தவறு செய்யச் சொல்லும்போது, "இப்படிச் செய்தால், இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவோம்' எனச் சொல்ல வேண்டிய அதிகார வர்க்கம், தப்பிக்கக்கூடிய வழிகளில் தவறு செய்யும்படிக் கற்பிக்கிறார்கள்.
- அண்ணா ஹசாரே எனும் உத்தமர் ஒன்பது நாட்கள் உண்ணா நோன்பிருந்தும், லோக்பால் எனும் சட்டத்தைக் கொண்டு வர முடிந்ததே தவிர, ஊழலை இன்றுவரை ஒழிக்க முடியவில்லை. ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம், பொதுஜனம் ஆகிய முத்தரப்பினரும் கூட்டணி வைத்து, லஞ்சத்தையும் ஊழலையும் அரங்கேற்றுகிறார்கள்.
- இந்நிலையில், நியாயவான்கள், "அதர்மம் அதிகரிக்கும் போதெல்லாம் அவதாரம் செய்யும் பெருமாளே, நீ எப்போது அவதரிப்பாய்?' என இறைவனை வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை.
நன்றி :தினமணி (26-11-2020)