TNPSC Thervupettagam

பாரதி என்றொரு நவீனக் கனவு!

September 11 , 2020 1590 days 756 0
  • உ.வே.சா.வின் என் சரித்திரத்தில் ஒரு காட்சி: பகட்டான போலிப் புலவர் ஒருவர், பாடிப் பரிசல் பெற தனது பரிவாரங்களுடன் ஓர் ஊருக்கு வருகிறார். ஏற்கெனவே இயற்றப்பட்ட செய்யுள்களில் புதிய புரவலர்களின் பெயர்களைச் செருகி, புதுப் பாடல் எனச் சொல்லிப் பரிசு பெறும் பாணி அவருடையது.
  • அவரது தகுதியின்மையை அறிந்துகொண்ட தமிழறிந்த தனவான் ஒருவர், அவரை எச்சரித்து சொற்பப் பரிசிலோடு திருப்பி அனுப்புகிறார். ஒருவகையில் அந்த போலிப் புலவர் அக்காலத்தின் தமிழ் இலக்கியச் சூழலைச் சரியாகவே புரிந்துகொண்டிருந்தார் எனத் தோன்றுகிறது.
  • 18, 19-ம் நூற்றாண்டுகளில் இலக்கியம் என்பது பெரும்பாலும் நொடித்துப்போய்த் தள்ளாடி நின்றுகொண்டிருக்கும் சிற்றரசாட்சிகளின் ராஜரீகத்தின் ஜம்பக் குறியீடாகவே இருந்தது.
  • அதன் மூலம் புலவருக்கு வாழ்வாதாரமும், அரசருக்கு அதிகார பிம்ப உருவாக்கமும் கிடைத்தது. இப்படியாக, இலக்கியத்துக்கு ஜமீன்தார்களின் அரசவை ஓர் ஆதரவுத் தளமாக இருந்தது என்றால், இன்னொரு ஆதரவுத் தளமாக விளங்கியவை மதக் கட்டுமானத்தின் அதிகார மையங்களாக இருந்த மடங்கள்.
  • சிற்றிலக்கியங்களும் தலபுராணங்களும் இலக்கிய வகைமைகள். தலைவனும் உள்ளூர் புராணமும் பாடுபொருட்கள். முடிந்துபோன வாழ்வியலின் ஓர் அசட்டு கௌரவச் சின்னமாக அப்போது எஞ்சியிருந்தது இலக்கியம்.
  • பாரதி ஒரு யுகசந்தியில் வந்து நிற்கிறான். அவனுக்கான பாதி முக்கியத்துவம் அவன் எழுத வந்த காலகட்டத்தாலேயே நிலைபெற்றுவிடுகிறது.
  • காலனிய நவீனத்துவம், உலகளாவிய கருத்தியல்களோடு தன் மரபைத் தானே எட்ட நின்று பார்க்கும் விமர்சனத் தொலைவையும் அளித்தது. பாரதியின் படைப்புகள் திருத்தலங்களில் கற்றோர் முன்னில் புனித அங்கீகாரத்தின் பொருட்டும் புரவலரின் பெருமையைப் பறைசாற்றும் நோக்கிலும் அரங்கேற்றப்படவில்லை.
  • அச்சுக் கலையும் ஜனநாயகமும் தனிமனிதவாதமும் அறிமுகம் பெறுகிற அந்தக் காலத்தில், அவை மக்கள்திரளை நம்பி அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.
  • பாரதி அவனது சமகாலத்திய கவிராயர்கள் போலன்றி முழுமுற்றாகத் தனது காலத்தால் பாதிக்கப்பட்டவன். அதன் தாக்குதலுக்குத் தானே விரும்பி, தன்னை எல்லாத் திசையிலும் திறந்து ஒப்புக்கொடுத்தவன்.
  • அழகியல் ரீதியாக, மரபார்ந்த கவித்தொடர்ச்சியில் ஒரு காலையும், மறுமலர்ச்சிக் கால லட்சியங்களிலும் கற்பனாவாதத்திலும் மற்றொரு காலையும் ஊன்றியவாறே தன் படைப்புகளை எழுதியவன் பாரதி.
  • ஓர் அறிவுஜீவியாகவும், சமூக உயிரியாகவும், பிரெஞ்சுக் கவிஞர் ஆர்தர் ரைம்போ சொன்னதைப் போல நூறு சதவீதம் நவீன மனிதனாகவே வாழ்ந்திருக்கிறான்.
  • அதனால்தான், அவன் காலத்தில் இயற்றப்பட்ட பெரும்பாலான படைப்புகளோடு தொடர்புகொள்ள முடியாத நம்மால், மரபு வடிவங்களில் எழுதப்பட்டாலும், பாரதியின் உலகுடன் உறவுகொள்ள முடிகிறது.
  • சொல்லப்போனால், நினைவிலிருந்து வரும் சொல்லாக அவனுடையதே இருக்கிறது பெரும்பாலும். நமது அறிவையும் அபிப்ராயங்களையும் தாண்டி, அவனது வரிகள் வானகத்தைச் சென்று தீண்டுவன் இங்கென்று மண்டியெழும் தழலைபோல அவ்வப்போது உயிர்த்தெழுகின்றன.
  • அகால மரணத்தால் அவரது முழு சாத்தியம் நமக்கு அறியக் கிடைக்கவில்லை; எனினும், பாரதியின் கவிதைகள் இந்தப் பண்பாட்டின் ஆழங்களுக்குள் கசிந்து நுழைந்துள்ளன என்பதால், எல்லாக் காலத்திலும் அவை அதன் நினைவிலும் நாவிலும் எழுந்தருளிக்கொண்டே இருக்கும்.

பாரதி என்றொரு நவீனக் கனவு

  • பாரதிக்குப் பின் வந்தவர்களை நவீனத்துவத்திலிருந்து மரபை எதிர்கொண்டவர்கள் என்றால், பாரதியை மரபில் நின்றபடி நவீனத்துவத்தை எதிர்கொண்டவர் எனக் கூறலாம்.
  • கலைப் படைப்புகளுக்கு மட்டுமின்றி, அவனது கவிதைகள் சிந்தனைக்கும் உந்துசக்தியாக இருந்துள்ளன. ஏனெனில், சிந்தனைக்கு மரபு அவசியமாகிறது.
  • தமிழ்ச் சமூகத்துக்கென்று தமிழில் அசலாகச் சிந்திக்கும் ஒருவருக்கு வள்ளுவரைப் போலவே பாரதியும் தவிர்க்க முடியாத மூலவர்.
  • இவர்கள் இருவரையும் தொட்டுக்கொள்ளாமல் எதைப் பற்றியும் பேசி முடிக்காத ஜெயகாந்தனை இங்கு உதாரணமாகச் சொல்லலாம். என்று தணியும் இந்த சுதந்திர தாகம்என்ற வரி தேசியப் பாடல்கள் பிரிவில் அமர்த்தப்பட்டிருக்கலாம்.
  • ஆனால், 2020-லும் எனக்கு அது பொருளுடைத்ததாகவே உள்ளது. வேண்டுமடி எப்போதும் விடுதலைஎன்று அவரே பாடவில்லையா என்ன.
  • தான் எழுதிக்கொண்டிருக்கும் காலகட்டம் பற்றிய, அப்போதைய உலகளாவிய போக்குகளைப் பற்றிய பிரக்ஞை அவருக்கு இருந்துள்ளது.
  • சொல்லப்போனால், தமது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற விருப்பமும், அப்படி பெயர்க்கப்படுவது பற்றிய பெருமையும் இருந்துள்ளது.
  • திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்என்று அப்பட்டமாக அளவுகோலைக் கச்சேரியிலிருந்து உலகரங்குக்கு எடுத்துச்சென்ற கவிஞன் அவன்.
  • பிற நாட்டார் அதைப் போற்றினரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அப்படியான ஒரு பெருங்கனவைக் கொண்டியங்கிய இளைஞன் அவன் என்பது முக்கியம்.
  • பாரதியின் கவிதைகள் உணர்திறனுக்குள்ளோ அறிவுப்பரப்புக்குள்ளோ நுழைவதற்கு முன்பே உடலின் சக்தி மண்டலத்துக்குள் ஊடுருவிவிடுவன. எதிரொலிக்கும் அச்சொற்களின் வெண்கல ஒலியும், உத்வேகம் மிக்க ஆத்மார்த்த வெளிப்பாடும் வாசிப்பின் தொடக்கத்திலேயே ஒருவரை இணங்கச்செய்துவிடும். பிறகு, அந்த அலையின் மேல் பிடிப்பற்றுப் பயணிப்பவனாகிவிடுகிறார்கள் வாசகர்கள்.
  • அறிவார்த்த விளைவோ அல்லது மனம் புனைந்த கவிதையோ, அதிமனதின் வெளிப்பாடாக அமையும் ஓர் உச்சக் கூற்றினுடைய ஆற்றலையும் அழகையும் தொட முடியாதுஎன்ற அரவிந்தரின் கருத்துகள் இவ்விடத்தில் பொருந்திவருபவை.
  • ஊழிக்கூத்துபோன்ற அமானுஷ்ய கவித்துவ நிகழ்வுகளை அப்படித்தான் புரிந்துகொள்ள முடியும்.
  • தேசிய, சமூக, ஆன்மிக லட்சியவாதங்களின் விசையால் செயல்படும் எழுச்சிக் கவிதைகள் இருக்கும் அதேநேரம் ஞானப் பாடல்கள், பக்திப் பாடல்கள் போன்ற பகுதிகளில் உளைச்சலும் அச்சமும் மீட்சியும் காணக்கிடைக்கின்றன.
  • வெற்றி வெற்றிஎன்று கூத்திடும் கவிஞர் எல்லாக் கடவுளரிடமும் ரகசியமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறவில்லை.
  • சுகத்தினை நான்வேண்டித் தொழுதேன்; எப்போதும்/ அகத்தினிலே துன்புற்று அழுதேன்என்று வெளிப்படையாகவே ஒரு குரல் ஒலிக்கிறது. சமூக மனிதனின் ஏனைய பாடல்களை விட இருத்தலின் துயருறும் தனிமனிதனின் இத்தகைய கவிதைகள் அவனது ஆளுமைக்குள் நுழைய வாய்ப்பளிக்கின்றன.
  • பாரதி இன்று தமிழில் ஒரு நவீனத் தொன்மமாக நிலைபெற்றுவிட்டவன். அத்தொன்மத்தை உருவாக்கிக்கொண்ட தமிழ்ச் சமூகம், தன்னை நவீன காலகட்டத்துக்குத் தயார்செய்ய அதையும் பயன்படுத்திக்கொண்டது.
  • ஏனெனில், கம்பருக்குப் பின்னரான எண்ணூறு வருடங்களில் அப்படியான ஒரு தனிப்பெரும் கவியாளுமை இங்கு உருவாகியிருக்கவில்லை. பாரதி மூலம் தோன்றிய அந்நல்வாய்ப்பைத் தமிழ்ச் சமூகம் பயன்படுத்திக்கொண்டது எனலாம்.
  • ஆனால், இதற்கு ஒரு நிழற்பக்கம் இருக்கிறது. அது இத்தகைய ஆளுமைகளைத் திருவுருக்களாக மாற்றி அவர்களிடமிருந்து தப்பிக்கும் உத்தி.
  • காணும் இடமனைத்தும் காந்தி படங்களைத் தொங்கவிட்டு, ‘காந்திக்கு இந்நாட்டில் இப்போது இடமில்லைஎன்ற உண்மையை மறைத்துக்கொள்வதைப் போல வள்ளுவரும் பாரதியும் மேற்கோள்களாகத் தமிழர்களால் ஒவ்வொரு நாளும் அதிவிரைவாகக் கடந்துசெல்லப்படுகின்றனர்.
  • இந்தப் பிம்பங்களைத் தொழுதுவிட்டு, இவற்றின் சாராம்சத்தைக் கைகழுவுவது என்பது துரதிர்ஷ்டவசமானது.
  • கலையின் சாரமே கலாச்சாரமாக உருத்திரண்டு வருகிறது. தமிழின் வரலாறும், பண்பாட்டு அடையாளமும் அதன் இலக்கியங்களாலேயே வடிவமைக்கப்பட்டவையாய் இருப்பினும் அவை பற்றிய நமது அறியாமையும் அலட்சியமும் ஆச்சரியமூட்டுபவை.
  • கலைவெளிப்பாடும் கலாச்சாரமும் கைவிடப்பட்டிருக்கையில், சமூகம் ஒருநாள் நலம்பெற்றுச் சிறந்தோங்கும் என்ற எதிர்பார்ப்பு அபத்தமானது. நமது காடுகளும் நீர்நிலைகளும் ஆரோக்கியமாக இல்லாதபோது, நாம் மட்டும் ஆரோக்கியமாக இருக்க முடியும் என நம்புவதைப் போல நகைப்புக்குரியது.

நன்றி:  தி இந்து (11-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்