TNPSC Thervupettagam

பாராலிம்பிக்: புதிய நம்பிக்கையளிக்கும் இந்திய வீரர்களின் சாதனை

September 6 , 2021 1061 days 537 0
  • ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் 25 தொடங்கி நேற்றோடு நிறைவடைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா 5 தங்கப் பதக்கங்களையும் 8 வெள்ளிப் பதக்கங்களையும் 6 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளது. மொத்தம் 19 பதக்கங்கள்.
  • இந்தியா இதுவரை கலந்துகொண்ட பாராலிம்பிக் போட்டிகளிலேயே அதிக பதக்கங்களை வென்ற போட்டி இதுதான். குறிப்பாக, ஆகஸ்ட் 30 அன்று ஒரே நாளில் 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என்று மொத்தம் 5 பதக்கங்களை வென்றது, அந்நாளை இந்தியாவின் மகிழ்ச்சிகரமான நாளாக்கிவிட்டது.
  • பேட்மின்ட்டன், துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் தலா 2 தங்கப் பதக்கங்களையும் ஈட்டி எறிதலில் ஒரு தங்கப் பதக்கத்தையும் இந்தியா வென்றுள்ளது.
  • உயரம் தாண்டுதல், டேபிள் டென்னிஸ், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் ஆகியவை பதக்கங்கள் வென்ற மற்ற போட்டிகளாகும்.
  • பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கும் துப்பாக்கி சுடும் வீரர் அவனி லேகாரா, இருவேறு பிரிவுகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
  • அவரைப் போலவே துப்பாக்கி சுடும் வீரர் சிங்ராஜ் அதானாவும் இருவேறு பிரிவுகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்.
  • டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பவினா படேல், அப்போட்டியில் முதல் பதக்கம் பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
  • அது போலவே, வில்வித்தைப் போட்டியில், தனது வெண்கலப் பதக்கத்தின் மூலமாகப் பதக்கக் கணக்கைத் தொடங்கிவைத்திருக்கிறார் ஹர்வீந்தர் சிங்.
  • ஒலிம்பிக் போலவே பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வீரர்களையும் பாராட்டி இந்தியப் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் உடனுக்குடன் வாழ்த்துச் செய்திகளைப் பதிவிட்டார்.
  • வெற்றிபெற்ற வீரர்களைக் கைகுலுக்கி வாழ்த்தும் புகைப்படங்களுடன் வெளிவந்த அந்தச் செய்திகள், பெரும் கவனத்தை ஈர்த்தன.
  • உயரம் தாண்டுதல் போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி ஊக்கப் பரிசு அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
  • ஆட்சியாளர்களும் ஊடகங்களும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அளித்த அதே கவனத்தை பாராலிம்பிக் போட்டிகளுக்கும் அளித்திருக்கிறார்கள். ஆனால், விளையாட்டு அமைப்புகளும் இந்தக் கவனத்தை அளிக்கத் தயாராக வேண்டும்.
  • பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களின் உடற்தகுதிகளை வரையறுப்பதில் உள்ள தெளிவின்மைகள் இனிவரும் காலங்களிலாவது சரிசெய்யப்பட வேண்டும்.
  • வட்டு எறியும் வீரர் வினோத் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்றபோதிலும், உடற்தகுதியைக் காரணம்காட்டி, அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள் முன்கூட்டியே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
  • இவ்விஷயத்தில், இந்திய வீரர்களுக்குத் தேவையான விழிப்புணர்வை அளிப்பதற்கு இந்திய பாராலிம்பிக் கமிட்டி உதவ வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்