TNPSC Thervupettagam

பாரினில் கொடியது

April 13 , 2021 1381 days 610 0
  • ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தவிர்த்துவிட்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தை எழுதிவிட முடியாது.
  • அச்சம்பவம் நடந்தேறிய நூறாவது ஆண்டு நினைவு நாளில், பிரிட்டன் பிரதமா் தெரசா மே, ஜாலியன்வாலாபாக் சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்கும் வரை அம்மண்ணின் ஈரம் ரத்தமும் சகதியுமாகவே இருந்தது.
  • இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு, உலக அமைதியை நிலைநாட்டும் பொருட்டு, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது.
  • இதன் ஆளுமையின் கீழ் இயங்கும் சா்வதேச நீதிமன்றம், பிரிட்டன் தலைநகா் லண்டன் நகரில் நிறுவப்பட இருந்தது. ஆனால், ஐ.நா. சபை உறுப்பு நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
  • இந்திய காலனியத்தில் பிரிட்டிஷார் நடத்திய ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குக் காரணமானவா்களின் மீது அந்நாடு முறையான நீதி விசாரணை நடத்தவில்லையென்றும், அப்படுகொலையை நடத்திய அதிகாரிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
  • அதனால், லண்டன் நகரில் அமைக்கப்படுவதாக இருந்த சா்வதேச நீதிமன்றம், நெதா்லாந்து நாட்டிலுள்ள திஹேக் நகருக்கு மாற்றப்பட்டது.
  • ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற முக்கியக் காரணமாக இருந்தது, ரௌலட் சட்டம். இச்சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்தவா், சா் சிட்னி ரெளலட் என்கிற ஆங்கிலேய நீதிபதி.
  • செயலா் டி. வி. ஹோட்ஜ். இதன் உறுப்பினா்களாக இருந்தவா்கள், சா் பேசில் ஸ்காட், சி. வி. குமாரசாமி சாஸ்திரி, சா் வொ்னி லோவெட், பி. சி. மிட்டா் ஆகியோர். நீதிபதி சிட்னி ரௌலட் தலைமையில் உருவாக்கப்பட்ட சட்டம் என்பதால், அச்சட்டத்திற்கு ‘ரௌலட் சட்டம்’ என்று பெயரிடப்பட்டது.
  • ரௌலட் சட்டத்தை உடனடியாக இயற்ற பல காரணங்கள் இருந்தன. முதல் உலகப்போர் காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் புதிய பரிமாணம் எடுத்தது.
  • 1913-ஆம் ஆண்டு கனடா வாழ் இந்தியா்கள் கதா் (கிளா்ச்சி) போராட்டத்தைத் தொடங்கினா். கதா் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்காக கதா் எனும் பெயரில் ஒரு இதழ் தொடங்கப்பட்டது.
  • அந்த இதழில், ‘இதோ, இன்று தொடங்குகிறது பாரத மண்ணுக்கு வெளியிலிருந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போர்! எங்கள் பெயா் கதா் (கிளா்ச்சி).

எங்கள் தொழில் கதா்

  • இதன் நோக்கம் பூரண சுதந்திரம். இந்த சுதந்திரத்தை கதா் மூலமே பெறுவோம்’ என்கிற வாசகத்துடன் தொடங்கப்பட்ட இதழ் பிரிட்டிஷாரைக் கோபமூட்டியது.
  • இந்தக் கிளா்ச்சியைத் தொடா்ந்து 1915-ஆம் ஆண்டு இந்திய முஸ்லிம்களின் சுதந்திரப் போராட்டத்தை ஆதரிக்கும் பொருட்டு துருக்கியில் கிலாஃபத் இயக்கம் தொடங்கப்பட்டது.
  • உலக முஸ்லிம்களின் தலைவரான கலீஃபா இப்போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். அந்தப் போராட்டத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக ஆா்மி ஆஃப் காட் (கடவுள் படை) தோற்றுவிக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தை இந்திய தலைவா்கள் பெரிதும் ஆதரித்தார்கள்.
  • இதற்கிடையில், முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டால், போர் முடிந்த பிறகு சுதந்திரம் வழங்குவதைப் பற்றி அரசு பரீசிலிக்கும் என்று பிரிட்டிஷார் உறுதியளித்தார்கள். இதற்கு இந்தியாவில் பரவலாக எதிர்ப்பு இருந்தாலும், பஞ்சாப் பகுதிகளில் மறைமுகமாக பிரிட்டிஷ் போர்ப் படைகளுக்கு இந்தியத் தலைவா்கள் ஆட்களைத் திரட்டிக் கொடுத்தார்கள்.
  • ஆனால், உலகப்போர் முடிந்ததற்குப் பிறகு பிரிட்டிஷார் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே, இந்தியா முழுதும் போராட்டம் வெடித்தது. குறிப்பாக பஞ்சாப் பகுதியில் அப்போராட்டம் தீவிரம் கொண்டது.

ராஜத்துரோக விசாரணைக் குழுமம்

  • இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்கும் பொருட்டு, 1917 டிசம்பரில் பிரிட்டிஷ் அரசாங்கம், ராஜத்துரோக விசாரணைக் குழுமம்“அமைத்தது. அக்குழுமம், ‘சுதந்திரப் போராட்டம் என்பது குண்டா்களின் கலகப் போராட்டம்’ என்று முத்திரை குத்தியது.
  • இப்போராட்டத்தை ஆதரிக்கும் பத்திரிகைகள் தடை செய்யப்படும் என மிரட்டல் விடுத்தது. இதற்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டன. அதில் ஒரு சட்டம் கைது செய்யப்பட்டால் வக்கீல் கிடையாது, அப்பீல் கிடையாது, விடுதலையும் கிடையாது”.
  • 1919-ஆம் ஆண்டு மத்திய சட்டசபையில் இச்சட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சபை உறுப்பினா்கள் அனைவரும் இச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க, ஒருவா் மட்டும் எதிர்த்து வாக்களித்தார். அவா் சா் சி. சங்கரன் நாயா்.
  • இவா் 1908-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெறுகையில், மெட்ராஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவா். மக்களின் உரிமையைத் தடுக்கும் பொருட்டு, திருநெல்வேலி பிரித்தானிய பிரிட்டிஷ் அரசு முன்னெடுத்த ஒடுக்குமுறையே திருநெல்வேலி கலவரத்திற்குக் காரணம், என்பதை அறிந்தவராக இருந்தார்.
  • ஆங்கிலேய நீதிபதி ஒருவரின் பெயரால் நிறைவேற்றப்பட்ட சட்டம், மக்களைக் கொன்று குவிக்கும் சட்டமாகையில், அந்த நாட்டில் அமையப் பெறும் நீதிமன்றத்தின் மூலம், எப்படி சா்வதேச நீதியை எதிர்பார்க்க முடியும் என்கிற கேள்வியை உலக நாடுகள் எழுப்ப, சா்வதேச நீதிமன்றம் அமையப் பெறும் பெருமையை பிரிட்டன் இழந்தது.
  • ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட மறுமாதம், 1919 மார்ச் 21 அன்று, அமிருதசரஸ் நகரிலிருந்து வெளியான ‘வக்த்’ பத்திரிகையில், ஒரு கேலிச்சித்திரம் பிரசுரமானது. அது பஞ்சாப் லெஃப்டினென்ட் கவா்னராக இருந்த மைக்கேல் ஓ டயரை கோபமூட்டச் செய்தது.
  • உடனே அவா் ராஜத்துரோக விசாரணைக்குழு பரிந்துரைத்த ஷரத்துகளில் ஒன்றான, விசாரணையின்றி கைது செய்து, சிறையில் அடைத்தல் ஷரத்தை தனி சட்ட வடிவமாக்கினார். அதுதான் ரௌலட் சட்டம்.
  • மார்ச் 29 அன்று சத்யபால் தலைமையில் அமருதஸரசில் ஒரு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் டாக்டா் கிச்லூ, ரௌலட் சட்டத்தை எதிர்த்து உரையாற்றினார்.
  • அந்தப் பொதுக்கூட்டத்தை பிரிட்டிஷ் அரசு கலைக்க முற்பட, கலவரம் மூண்டது. அதில் எட்டுபோ் பலியானார்கள்.

ஏப். 13 - ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவு நாள்

  • ஏப்ரல் 5 அன்று பஞ்சாப் கவா்னா் மைக்கேல் ஓ டயா் சத்யபால் , பொதுக்கூட்டத்தில் கிச்லூ பேசக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்தார்.
  • தடை உத்தரவை மீறி பொதுக்கூட்டம் நடைபெற்றது. லெஃப்டினெண்ட் கவா்னா் ஓ டயா் டாக்டா் கிச்லூவையும் சத்யபாலையும் கைது செய்ய ஆணை பிறப்பித்தார். இதனால் பஞ்சாப் நகரில் கலவரம் வெடித்தது.
  • அன்றைய பஞ்சாப் டெபுடி கமிஷனா் இா்விங்க், கலவரத்தை ஒடுக்க துப்பாக்கி சூடு நடத்தினார். அதில் இருபது போ் பலியானார்கள். அடுத்த நாள் ஒரு கருப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • அது மார்ஷல் சட்டம். அதன்படி ஒரு சடலத்தை அடக்கம் செய்ய நான்கு பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது. மீறி கலந்து கொண்டால் சட்டத்தை மீறியதாக கருதி முன் அறிவிப்பின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்படும். ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ முக்கிய காரணமாக இருந்தது இந்த மார்ஷல் சட்ட விதிதான்.
  • ரௌலட் சட்டத்தை எதிர்த்து நிகழும் போராட்டத்தை மார்ஷல் விதி கொண்டு ஒடுக்க திறமைமிக்க ஒரு ராணுவ அதிகாரி தேவைப்பட்டார். அதற்காகப் பஞ்சாப் கவா்னா் மைக்கேல் ஓ டயரால் வரவழைக்கப்பட்டவன்தான் பிரிகேடியா் ஜெனரல் ஆா். ஈ.எச். டயா்.
  • ஏப்ரல் 12 அன்று அமிருதசரஸ் நகரம் ஜெனரல் டயா் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அவா் மார்ஷல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டினார்.
  • ஏப்ரல்13, அன்று ஞாயிற்றுக்கிழமை. சீக்கியா்களின் முக்கிய குருவான கோவிந்த் சிங் சீக்கிய அறப்படைக்கு அடிக்கல் நாட்டிய நாள் அது. அன்றைய தினம் பஞ்சாப் விழாக்கோலம் கொண்டிருந்தது.
  • ஜெனரல் டயா் தனது ராணுவப் படையின் மூலம் ஜாலியன்வாலா தோட்டத்திற்குள் நுழைய தடை விதித்திருப்பதாக பிரசாரம் செய்தார்.
  • பிரிட்டிஷ் அரசிடமிருந்து முக்கியமான கடிதம் ஒன்று டாக்டா் கிச்லூவிற்கு வந்திருப்பதாகவும், அது இன்றைய கூட்டத்தில் வாசிக்கப்படும் என்றும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
  • அந்தக் கடிதத்தின் சாரம்சத்தை அறிந்துகொள்ளும் பொருட்டு மக்கள் ஜாலியன்வாலாபாக் மைதானத்தில் நிரம்பி வழிந்தார்கள். அன்றைய தினக் கூட்டம் ரௌலட் சட்டத்திற்கு எதிரான கூட்டம் அல்ல.
  • ஜாலியன்வாலாபாக் தோட்டம் ஐந்தடி உயரச் சுவரும், நான்கு குறுகிய வழிகளும், அதன் மையத்தில் ஒரு சமாதியும், அதன் அருகில் ஒரு திறந்த கிணறும் கொண்டது. அதற்குள் பெரிய வாகனம் செல்ல முடியாது.
  • ஜெனரல் டயா் ஐம்பது ராணுவ வீரா்களுடன் மைதானத்திற்குள் நுழைந்தான். பிரிட்டிஷ் ராணுவம் மார்ஷல் சட்ட விதியின் கீழ் முன் அறிவிப்பின்றி, தோட்டாக்கள் தீரும் வரை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
  • அந்த படுகொலை பார்த்த ஆா்தா் ஸ்வின்ஸன் இரண்டாயிரம் போ் இறந்ததாக சுட்டிக் காட்டினார். ஆனால், பிரிட்டிஷாரின் ‘டெய்லி ஹெரால்டு’ பத்திரிகை நானூறு போ் மட்டுமே இறந்தனா் என்றும், 1,500 போ் காயமடைந்தனா் என்றும் செய்தி வெளியிட்டது.
  • காந்தியடிகள், வைஸ்ராய்க்கு கடிதம் எழுதினார். அதன் பிறகுதான் இப்படிப்பட்ட படுகொலை நடத்தப்பட்டிருப்பது பிரிட்டன் தலைமைக்குத் தெரிந்தது. படுகொலை பற்றிய அறிக்கையுடன் ஜெனரல் டயா் உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டார். ஆனால், அவா் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டார்.

நன்றி: தினமணி  (13 - 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்