- 206 நாடுகளின் பங்கேற்பு, 32 ஒலிம்பிக் விளையாட்டுகள், 22 பாராலிம்பிக் விளையாட்டுகள், ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், 400 கோடி தொலைக்காட்சி ரசிகர்கள் என்று பாரிஸில் தொடங்க உள்ளது ஒலிம்பிக் போட்டி. இதற்கு முன் நிகழ்ந்த ஒலிம்பிக் போட்டிகளைவிட இம்முறை சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடக்க உள்ளன.
- வெற்றி பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் பதக்கங்களில் இம்முறை (பாரிஸ் நகரின் அடையாளமான) ஈபிள் கோபுரத்தின் ஒரு பகுதி இடம்பெறுகிறது. இந்தக் கோபுரம் 1889 இல் உருவானபோது வெளிப்பட்ட துகள்களில், மறுசுழற்சி செய்யப்பட்ட ஒரு பகுதி, அறுகோண வடிவில் செதுக்கப்பட்டு, ஒவ்வொரு பதக்கத்திலும் பொருத்தப்படுகிறது.
- முதல் முறையாக மைதானத்தில் அல்லாமல், சீன் நதிக்கரையில் தொடக்க விழா கொண்டாட்டங்கள் நடைபெறப்போகின்றன. இதன் காரணமாக, அதிகமானோர் இந்த விழாவைக் கண்டுகளிக்க முடியும். இந்த விழாவுக்கான கலை இயக்குநராக தாமஸ் ஜாலி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் நடிகர், நாடக அமைப்பு ஒன்றை நிறுவியவர்.
- சர்வதேச ஒலிம்பிக் குழு இம்முறை விளையாட்டு வீரர்களின் மனநலனை மனதில் கொண்டு சில செயல்களைச் செய்திருக்கிறது. மனதுக்கு அமைதி அளிக்கும் செயலி ஒன்றை விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கிறது. அதை அவர்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தவிர, அவர்கள் தங்கவைக்கப்படும் விளையாட்டுக் கிராமத்தில் தனியாக ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்குள் சென்று அமர்ந்தால் வெளியில் எழுப்பப்படும் எந்த ஆரவார ஒலியும் கேட்காது.
- சைவ உணவை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. சைவ உணவின் காரணமாகக் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவு குறைவே. இந்த ஒலிம்பிக்கில் அது பிரதிபலிக்கிறது (இவ்வளவுக்கும் ஐரோப்பிய நாடுகளிலேயே மிக அதிகமாக ஆட்டுக்கறியை உண்பவர்களின் எண்ணிக்கை ஃபிரான்ஸில்தான் அதிகம்!).
- தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட பர்கர், வேர்க்கடலை, பீட்ரூட் ஆகியவை அடங்கிய ‘ஃபலாபெல்’ போன்ற சிற்றுண்டிகளைப் பாரிஸ் ஒலிம்பிக் பெருமளவில் வழங்கவிருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உணவில் சைவ உணவின் விகிதம் அதிகமாக இருக்கும். ஒலிம்பிக் ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கான உணவகங்களில் பாதிக்குப் பாதி சைவ உணவு வழங்கப்படும்.
- தஹிதி என்ற பகுதி ஃபிரான்ஸுக்குச் சொந்தமானது என்றபோதிலும் அந்நாட்டிலிருந்து 15,716 கி.மீ. தொலைவில் இருக்கிறது. கடலால் பிரிக்கப்பட்ட பகுதி. அங்குதான் வலுவான அலைகள் காணப்படுகின்றன என்பதால் ‘சர்ஃபிங்’ விளையாட்டுப் போட்டி அந்த இடத்தில் நடைபெறும். ஒலிம்பிக் நடக்கவிருக்கும் நகரிலிருந்து இவ்வளவு அதிகமான தொலைவில் ஓர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவது என்பது இதுவே முதல் முறை.
- பொதுவாக, ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஒரு தனி போஸ்டர், அதைத் தொடர்ந்து நடைபெறும் (மாற்றுத்திறனாளிகளுக்கான) பாராலிம்பிக்ஸ் விளையாட்டுகளுக்குத் தனி போஸ்டரும்தான் உருவாக்கப்படும். இம்முறை இரண்டுக்குமாக ஒரு பொதுவான போஸ்டர் அழகான விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
- பிரேக்கிங் என்ற விளையாட்டுப் பிரிவு முதல் முறையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது நமக்கெல்லாம் பிரேக், டான்ஸ் என்ற விதத்தில்தான் பழக்கமானது (இடுப்பை வளைத்துக் கைகளை உலுக்கியபடி ஆடப்படும் ஆட்டம் என்பது அதன் பிம்பம்). 2018 இல் நடைபெற்ற இளைஞர்களுக்கான ஒலிம்பிக் விளையாட்டுகளில் இது இடம்பெற்று பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து பதக்கங்களுக்கான போட்டி விளையாட்டாக இம்முறை அது தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 07 – 2024)