- இரு கோடுகள் தத்துவம் பாரிஸ் ஒலிம்பிக் ரசிகர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் நாள்களில் வெயில் அதிக அளவில் இருக்கும் என்று அறிக்கைகள் கூற, பலரும் அதிருப்தியோடு உச்சுக்கொட்டிக் கொண்டிருந்தனர். ஆனால், இப்போது அதிக வெயில் இருந்தால்கூட நல்லது என்று பதறுகிறார்கள். காரணம், தொடக்க விழா கொண்டாட்டத்தின்போது பெய்த மழையும், அதனால் சுருதி குறைந்த ஆட்டம் பாட்டங்களும்.
- நம்மூரில் தேசியக் கொடியைத் தலைகீழாகப் பறக்கவிடும் அவலம் நடப்பதுதான். ஆனால், பல கோடி செலவில் ஒத்திகைகளுக்குப் பின் நடக்கும் ஒலிம்பிக்கில் இப்படி நடந்தால்? மேற்புறம் மூன்று வட்டங்களுடனும், கீழ்ப்புறம் இரண்டு வட்டங்களுடனும் ஒலிம்பிக் கொடி காட்சித் தர வேண்டும். ஆனால், அது மாறிவிட்டது.
- ட்ரோன் மூலம் பிற நாடுகள் மேற்கொண்ட பயிற்சிகள், அவர்கள் பகிர்ந்துகொண்ட தொழில்நுட்பங்களை உளவு பார்த்திருந்தது கனடா கால்பந்துக் குழு. இதனால், கனடா அணிக்கு ஆறு புள்ளிகள் குறைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது ஒலிம்பிக் சங்கம். கனடா விளையாட்டுப் பிரிவுக்கு அளிக்கப்படும் நிதியும் குறைக்கப்படுமாம்.
- பீச் வாலிபால் போட்டிகள் பரபரப்பைவிட உற்சாக கணங்களை அதிகம் அளித்தது. தொடக்கத்தில் ஒரு கொண்டாட்டமாக இருந்த பீச் வாலிபால், பின்னர் ஒலிம்பிக்கில் இடம்பெற்றிருக்கிறது. விளையாட்டு நடந்துகொண்டிருக்கும்போதே அவ்வப்போது இசை ஒலிக்கிறது.
- யாராவது ஷாட் அடித்தால் (மரண அடி என்கிற பொருளில்) ‘மான்ஸ்டர் ஸ்ட்ரோக் மான்ஸ்டர் ஸ்ட்ரோக்’ என்று தாளலயத்தோடு ஒருவர் மைக்கில் அறிவிக்க, மக்களும் சேர்ந்து கொண்டு இரு கைகளையும் பந்தைத் தரையில் தட்டி ஆடுவது போல் மேலும் கீழுமாகச் சீராக அசைத்து அசைத்து, அந்த வார்த்தைகளை எதிரொலித்தபடி கூக்குரலிட்டது கண்கொள்ளாக் காட்சி.
- பீச் வாலிபால் அரங்கம் ஈஃபிள் டவருக்கு வெகு அருகில் அமைந்திருந்தது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஈஃபிள் டவர் விளக்குகள் மினுமினுப்போடு மின்ன, அதைப் பார்த்து மக்கள் உற்சாகக் கூக்குரலிட்டார்கள்.
- மெட்ரோ ரயில் நிலையங்களில், முக்கியப் பேருந்து நிறுத்தங்கள் போன்றவற்றில் தன்னார்வலர்கள் வழிகாட்டி உதவுகிறார்கள். அவர்கள் முதுகுகள் ‘நாங்கள் உதவத் தயார்’ என்கிற வார்த்தைகள் அடங்கிய பெரிய அறிவிப்புகளைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன.
- விளையாட்டு அரங்கங்களின் அருகிலோ உள்ளேயோ எந்த நிறுவனங்களின் பெயரும் விளம்பரப்படுத்தப்படவில்லை. ஒலிம்பிக் விளையாட்டுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்போதும் அவற்றின் பின்னணியில் நிறுவனங்களின் விளம்பரம் இல்லை. விளையாட்டு வீரர்களின் உடைகளில் ஸ்பான்சர்களின் பெயர்கள் மிகச் சிறிய அளவிலேயே இடம்பெற்றிருப்பதும் ஒலிம்பிக்கில் ஸ்பெஷல்தான்.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 08 – 2024)