பாறு கழுகும் ஜான்சிங் நெஞ்சில் தைத்த முள்ளும்
- மூத்த காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ஏ.ஜெ.டி. ஜான்சிங் மறைவை யொட்டி வன உயிரினப் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை அளித்த வன உயிரின ஆர்வலர் ஒருவருக்கு ஏ.ஜெ. டி.ஜான்சிங் வன உயிரினப் பாதுகாப்பு விருது ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. அதே வேளையில் அவரது நெஞ்சில் தைத்த முள் ஒன்றிருக்கிறது? அதனைக் களையச் செய்யவேண்டியது என்ன?
- கடந்த ஜூலை மாதம் சென்னை அடையாறு பகுதியில் சோர்வடைந்த நிலையில் வெண்முதுகுப் பாறு கழுகு (White rumped vulture) ஒன்று பறவை ஆர்வலரால் மீட்கப்பட்டது. முதலுதவி மருத்துவத்திற்காக பெசன்ட் நினைவு விலங்குகள் நல மருந்தகத்திற்கு வனத்துறையால் உடனே அது அனுப்பப்பட்டது. ஆயினும் பலனளிக்கவில்லை, இறந்துவிட்டது. அதனை உடற்கூராய்வு செய்தபோது வயிற்றில் இரை எடுத்ததற்கான அறிகுறி ஏதும் இல்லை என்பதும் உடலுறுப்பில் காயம் இருந்ததும் தெரியவந்தது.
- இரண்டு நாள்களுக்கு முன்னர் பறவை ஆராய்ச்சியாளர் ரவீந்திரன் கைபேசியில் அழைத்து, ரயில் பயணத்தின்போது அரக்கோணம் அருகே ஒரு ஜோடிப் பாறு கழுகுகளைப் பறவை ஆர்வலர் ஒருவர் கண்டதாகக் கூறியிருந்தார். அருகில் வசிக்கும் நண்பர்களுக்குத் தகவல் அனுப்பிப் பார்க்கச் சொன்னேன். ஆயினும் கண்டறிய இயலவில்லை. அவற்றுக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. இரை கிடைப்பதற்கான அறிகுறி ஏதும் இல்லாமலும் வந்த வழியில் திரும்பிச்செல்வதற்குப் போதிய தெம்பு இல்லாமலும் அவை தவித்திருக்கக்கூடும்.
ஏன் இந்த நிலை?
- மனிதனுக்குச் செய்யும் சாவுச் சடங்கைப் போலவே விலங்குக்கும் செய்ய வேண்டும் என்கிற சிந்தனை காரணமாகவும், தூய்மை கருதியும், கெட்ட வாடை வீசுகிறது என்றும், நோய்த்தொற்று ஏற்படும் என்று அஞ்சியும் இறந்த விலங்கின் இறைச்சியில் யாரேனும் நஞ்சு தடவி விடக் கூடாது என்பதாலும், அதன் மூலம் பிற விலங்குகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்கிற அக்கறையிலும் உயிரினங்களின் சடலங்கள் புதைக்கப்படுகின்றன.
- கெட்ட நாற்றம் வீசுகிறது என்று அருகில் வசிக்கும் மக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையிலும் புதைக்கப்படுகின்றன. தொற்று, தொற்றுநோய்களைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் சட்டம் 2009 சடலங்களை அப்புறப்படுத்தக் கையாள வேண்டிய பல்வேறு விதிமுறைகளை வலியுறுத்துகிறது.
- தொற்றுநோய் ஏற்பட்ட விலங்குக்கு மட்டுமன்றி, இயற்கையாக - இயல்பாக இறக்கும் விலங்குக்கும் இந்த நடைமுறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன. காட்டிலும் இப்படித்தான் செய்யப்படுகிறது. சில விதிவிலக்குகள் தவிரப் பெரும்பாலான இடங்களில் காட்டிலோ காட்டிற்கு அருகிலோ பேருயிர்களான யானை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்கு இறந்தால் உடற்கூராய்வுக்குப் பின்னர் புதைக்கவோ எரிக்கவோ செய்யப்பட்டது என்றே செய்தி வருகின்றது.
- முகாமிலோ கோயிலிலோ வளர்ப்பு யானை இறந்தாலும், அவற்றையும் பல்வேறு சடங்குகள் செய்து புதைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகளுக்கும் புதைத்த தற்கான அடையாளத்தைக் காட்டினால்தான் இழப்பீடு வழங்க ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தவிர, மின்சாரம் தாக்கி இறந்த விலங்குகளும் சாலையிலும் ரயிலிலும் அடிபட்டு இறக்கும் விலங்குகளும் இவ்வாறே புதைக்கப்படுகின்றன.
இப்படியா புதைப்பது?
- எப்படி அவை புதைக்கப்படுகின்றன என்று பார்த்தால் மனம் வலிக்கும். இறைச்சியை யாரும் கவர்ந்து சென்றுவிடக் கூடாது என்பதற்காக இயந்திரத்தை வரவழைத்து ஆழக் குழி தோண்டி, சடலத்தை அதனுள் தள்ளி, அதன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, குழியைச் சுற்றி பிளீச்சிங் பவுடர், ஃபினாயில், டெட்டால் உள்ளிட்டவற்றைத் தெளித்து மூடப்படுகிறது. சில வேளைகளில், மூட்டை மூட்டையாகச் சமையல் உப்பைக் கொட்டுவதும் நடக்கும்.
- இதனால் புதைக்கப்படும் சடலங்கள் எந்த நுண்ணுயிர்களுக்கும் பயன்படாமல் போகின்றன. மேலும் சடலத்தை எரிக்க வேண்டி வந்தால் டன் கணக்கில் மரக்கட்டைகளை அடுக்கிவைத்து எரிப்பதும் நடக்கும். இதனால் எவ்வளவு புகை, காற்று மாசுபாடு. இது காட்டில் மட்டும்தான் நடக்கிறது என்று எண்ணிவிட வேண்டாம். பெரிய சுறாவோ, திமிங்கிலமோ, ஆமையோ கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கினாலும் அவற்றுக்கும் இதேபோன்ற அரங்கேற்றம்தான்.
- இதில் நாம் கவனிக்கத் தவறும் விஷயம் என்னவென்றால், இறந்த விலங்குகளை உண்பதற்காகவே சில உயிரினங்கள் தகவமைக்கப் பெற்றிருக்கின்றன என்பதே. அதில் சிறப்பிடம் வகிப்பவை பாறு கழுகுகள். வெகுமக்களால் பிணந்தின்னிக் கழுகு என அழைக்கப்படும் இவை, பிற விலங்குகளைக் கொன்று உண்ணும் வேட்டையாடிப் பறவை அல்ல.
- இறந்ததை மட்டுமே உண்பவை. பாறு மட்டுமன்றி கழுதைப் புலி, பன்றி, நாரை, கொக்கு, மைனா, காகம் உள்ளிட்டவையும் வண்டு, ஈ உள்ளிட்டவையும் நுண்ணுயிர்களும் இறந்த விலங்குகளை உண்டு சுற்றுப்புறத்தைக் காக்கும் அரிய பணியினைச் செய்துவருகின்றன. கடலில் ஆமைகளும் இதேபோன்று துப்புரவுப் பணியினைச் செய்கின்றன.
நடைமுறைகள்:
- சடலங்களை எல்லாம் எந்த உயிரினங்களும் அணுக முடியாமல் புதைத்துவிட்டால், அவை உணவுக்கு எங்கு செல்லும் என்று நாம் யோசிப்பதில்லை. இந்தச் செயல் அவற்றின் உணவைத் தட்டிப்பறிப்பதற்குச் சமம். இந்த நவீனக் காலத்தில் இறைச்சியில் நஞ்சு தடவாமலும் களவாடப்படாமலும் கண்காணிப்பு கேமரா மூலம் அதனைத் தடுத்துவிட முடியும். ஆனால் அதை விடுத்து, எதற்கு வம்பு என்கிற நோக்கிலும் மூடி மறைக்கும் நோக்கிலும் சடலங்கள் அகற்றப்படுவது கவலையளிக்கிறது.
- தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், புலி உள்ளிட்ட பெரும்பூனை இனத்தைச் சேர்ந்த விலங்குகளை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்கிற வழிகாட்டு நடைமுறையை உருவாக்கியுள்ளது. அதன்படி புலியின் நகம், பல், தோல், இறைச்சி ஆகியவை மதிப்பு மிக்கவையாகக் கருதப்படுவதால் அவற்றை எரிக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளது. இறந்த யானைகளின் சடலங்களை அகற்றுவதற்காகக் கடந்த ஆண்டு இந்தியக் காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட வழிகாட்டு நடைமுறையும் சடலங்களை முறையாக அகற்ற வலியுறுத்துகிறது.
- தொற்றுநோய் பரவும் வாய்ப்பு இருந்தால், அத்தகைய விலங்குகளை அகற்ற இது போன்ற நடவடிக்கை எடுத்தால் பரவாயில்லை. ஆனால், இதே அளவுகோலை எல்லா விலங்குகளுக்கும் பொருத்துவது ஏற்புடையது அல்ல. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஜான்சிங்கின் சிந்தனை:
- காலஞ்சென்ற காட்டுயிர்ப் பாதுகாவலர் ஏ.ஜெ.டி. ஜான்சிங்கிடம் பாறு கழுகுகள் எதிர்நோக்கும் இடையூறுகள் குறித்து உரையாடியபோதெல்லாம், இறந்த விலங்குகளைப் புதைக்காமல் அவற்றைப் பாறு கழுகுகளுக்கு இரையாக்கவும் இது குறித்து நெறிமுறைகளை உருவாக்கவும் முதன்மைக் காட்டுயிர்ப் பாதுகாவலருக்கு வேண்டுகோள் விடுப்போம் என்பதை வலியுறுத்திக்கொண்டே இருந்தார்.
- எனக்கும் பல காட்டுயிர் ஆர்வலர்களுக்கும் இது குறித்து விடுத்த மின்னஞ்சலிலும் வலியுறுத்தியிருந்தார். கோவிட் தொற்றுக் காலத்தில் இக்கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தியதாலும் அதற்குப் பின்னர் ஏ.ஜெ.டி. ஜான்சிங்கின் உடல்நலம் குன்றியதாலும் அக்கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது.
- அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று தந்தை பெரியாரின் விருப்பம், அவர் இறக்கும்வரை நிறைவேறாததால் நெஞ்சில் தைத்த முள்ளுடன் பெரியாரைப் புதைக்கிறோம் என்றார் கலைஞர். இறந்த விலங்குகளைப் பிற உயிரினங்கள் உண்பதற்குத் தோதாக வழிகாட்டு நெறிமுறையை உருவாக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார் ஏ.ஜெ.டி. ஜான்சிங்.
- அது நிறைவேறாமலே அவரது நெஞ்சில் தைத்த முள்ளோடு அவரைப் புதைத்துள்ளோம். அவரது நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றவும் இறந்த விலங்குளைப் பிற உயிரினங்கள் உணவுக்குப் பயன்படுத்துவதற்கேற்ப வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு வனத்துறையும் முன்வர வேண்டும்.
- பாறு கழுகுகள் அழிவபாயத்தில் சிக்கியுள்ளன என்பது நாம் அறிந்ததே. இறந்துபோன கால்நடையில் இருந்த வலிபோக்கி மருந்துகளின் எச்சத்தாலும், இறந்த விலங்கின் சடலங்களில் வன்மம் காரணமாக நஞ்சு தடவியதாலும், இரைத் தட்டுப்பாட்டாலும், பேரழிவைச் சந்தித்துவருகின்றன. தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கையால் பாறு கழுகுகளின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. அதற்கேற்ப அவற்றுக்கு இரை கிடைப்பதையும் கிடைக்கும் இரை பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 09 – 2024)