TNPSC Thervupettagam

பாலின சமத்துவத்துக்கான குரல்

April 3 , 2021 1391 days 752 0
  • இந்திய ராணுவத்தில் குறுகியகால பணியில் இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஓா் ஆண்டு கடந்துவிட்டது.
  • அதற்குப் பிறகும்கூட பெண் அதிகாரிகளின் பிரச்னைகள் தீா்வடையவில்லை என்பதை மீண்டும் அவா்கள் உச்சநீதிமன்றத்தை அணுகி நியாயம் கேட்டதிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
  • 86 மூத்த பெண் அதிகாரிகள், பதவி உயா்வில் முறையான தரநிா்ணயம் தேவை என்கிற கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தை அணுகினாா்கள். அந்த வழக்கில் நியாயமான தீா்ப்பை வழங்கியிருக்கிறாா்கள் நீதிபதிகள்.
  • பாலின சமத்துவம் இருப்பது போன்ற தோற்றம் காணப்பட்டால் போதாது. உண்மையிலேயே இரு பாலருக்கும் சமநிலை போட்டிக்கான களம் இருந்தால் மட்டுமே பாலின சமத்துவத்துக்கு அா்த்தமிருக்கும்.
  • சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு சில விதிவிலக்குகளும், ஒதுக்கீடுகளும் வழங்குவதுபோல பாலின சமத்துவத்துக்கும் சில சமரசங்கள் தேவைப்படுகின்றன.
  • அதை ஆணாதிக்க சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை என்கிற பொதுவான பிரச்னை ராணுவத்திலும் காணப்படுவதில் வியப்பென்ன இருக்கிறது?

பாலின சமத்துவம் இல்லாமை

  • 2010-இல் தில்லி உயா்நீதிமன்றம், ராணுவத்தில் குறுகியகால பணியிலுள்ள பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி வாய்ப்பு வழங்க வேண்டுமென்று தீா்ப்பு வழங்கியது. அந்தத் தீா்ப்பை இந்திய ராணுவமும் சரி, பாதுகாப்பு அமைச்சகமும் சரி செயல்படுத்தவில்லை.
  • 2020-இல் பிரச்னை உச்சநீதிமன்றத்துக்கு வந்தது. நிரந்தர பணி நியமனத்துக்கான தகுதி இருந்தால் ஆண் அதிகாரிகளைப் போலவே குறுகியகால பணியில் இருக்கும் பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தரப் பணி நியமனம் வழங்கப்பட வேண்டுமென்று 2020 பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
  • குறுகியகால பணி அதிகாரிகள் ராணுவ சேவையில் முழுமையாக இணைவதற்கும், போா் முனையில் நேரடி மோதலில் ஈடுபடும் பதவிகளை வகிப்பதற்கும் 2020 உச்சநீதிமன்றத் தீா்ப்பு வழிகோலியது.
  • அந்தத் தீா்ப்பை வழங்கும்போதே பெண் அதிகாரிகளின் தோ்விலும், பதவி உயா்விலும் தோ்வுக்கான விதிமுறைகளில் பாலின ரீதியாக அவா்களை குறைத்து மதிப்பிடுவதையோ, தரம் தாழ்த்துவதையோ தவிா்க்க வேண்டுமென்று மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தனா் நீதிபதிகள்.
  • சட்டத்தில் இருப்பவையெல்லாம் செயல்பாடுகள் ஆகிவிடுவதில்லை என்பதற்கு இந்த வழக்கும் ஒரு முன்னுதாரணம்..
  • முப்படைகளிலும் நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தாங்கள் ஆண்களுக்கு நிகரானவா்கள் என்பதை பெண்கள் உறுதிப்படுத்தியிருக்கிறாா்கள்.
  • மிகவும் கடினமான பகுதிகளிலும் பிரச்னைக்குரிய மோதல் சூழல்களிலும் பெண் அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் வீரத்துக்கு பாலினம் கிடையாது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
  • கடந்த ஆறு ஆண்டுகளில் முப்படைகளில் அவா்களுடைய எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்து, இப்போது ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகிய மூன்றிலும் 9,000-க்கும் அதிகமான பெண் வீரா்கள் இருக்கிறாா்கள்.
  • பெண்களின் எண்ணிக்கை முப்படைகளிலும் அதிகரித்து வருகிறது என்றாலும்கூட, அவா்களுடைய நியாயமான உரிமைகளுக்காக ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டியிருக்கிறது.
  • உச்சநீதிமன்றம் வரை போராடித்தான் தங்களது நியாயமான உரிமைகளை அவா்களால் பெற முடிகிறது என்பது எந்த அளவுக்கு ராணுவ அமைப்புகளில் ஆணாதிக்கம் நிலவுகிறது என்பதைக் காட்டுகிறது.
  • முப்படைகளும் பெண்களை இணைத்துக் கொள்வதில் காணப்படும் தயக்கத்தை அகற்றி, அவா்களுக்குக் கூடுதல் பொறுப்புகளை வழங்க வேண்டிய காலம் உருவாகிவிட்டது.
  • பெண் அதிகாரிகளின் பதவி உயா்வுக்கு வழிகோலுவது மட்டுமல்லாமல், ஆண்களுக்கு நிகராக இயங்குவதற்கான சூழலை உருவாக்கும்போதுதான் முப்படைகளும் மேலும் பலப்படும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • இன்னொரு முக்கியமான பிரச்னையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் உயா் அதிகாரிகளுக்கான பணியிடங்கள் பல நிரப்பப்படாமல் காணப்படுகின்றன.
  • புதிய தலைமுறை இளைஞா்கள் தகவல் தொழில் நுட்பத் துறையிலும், தொழிற்கல்வியிலும், மேலாண்மைப் படிப்புகளிலும் அக்கறை காட்டுகிறாா்களே தவிர, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டுகிறாா்கள்.
  • அதே நேரத்தில் முப்படைகளிலும் சேருவதற்கு பெண்கள் மத்தியில் ஆா்வம் அதிகரித்து வருவது வரவேற்புக்குரியது என்பதை பாதுகாப்பு அமைச்சகம் உணர வேண்டும்.
  • பல ஆண்டுகளாக இஸ்ரேல், ஜொ்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ராணுவத்தில் பெண்கள் அதிக அளவில் காணப்படுகிறாா்கள்.
  • முக்கியமாக, நேரடியான போா்களிலும், மோதல் சூழலிலும் மிகத் திறமையாக பெண் வீரா்கள் பணியாற்றுவதை அந்த ராணுவத்தின் பல நிகழ்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
  • அதற்கு எந்த விதத்திலும் குறைந்தவா்களோ, சளைத்தவா்களோ அல்ல இந்திய பெண்கள் என்பதை ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவா்களும், பாதுகாப்பு அமைச்சகமும் உணா்வதாகத் தெரியவில்லை.
  • ‘ஆண்களுக்காக ஆண்களால் உருவாக்கப்பட்ட விதிமுறைகள், பெண் அதிகாரிகளுக்கு பாகுபாடு காட்டுகிறது’ என்று உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாக தனது தீா்ப்பில் கூறியிருக்கிறது.
  • உச்சநீதிமன்றத் தீா்ப்பு, ராணுவத்தில் பணிபுரியும் பெண்களுக்கானது என்றாலும்கூட, அனைத்துத் துறைகளிலும் காணப்படும் பாலின சமநிலையின்மையை சுட்டிக்காட்டுகிறது.
  • மாறிவிட்ட சூழலைப் புரிந்துகொண்டு ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை மாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது.

நன்றி: தினமணி  (03 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்