- புதுச்சேரியைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அச்சத்தைப் பெற்றோர்களிடம் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
- இந்தியாவில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் 2012இல் ‘போக்சோ’ சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது. குழந்தைப் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில் உள்ள தேக்கநிலையும் வழக்குகளைக் கையாள்வதில் உள்ள அசிரத்தையும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழக் காரணங்கள்.
- குழந்தைகள் மீதான வல்லுறவுக் குற்றங்கள் 2016இலிருந்து 2022 வரை 96.8% அதிகரித்திருப்பதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2022இல் மட்டும் 38,911 குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பாலியல் வல்லுறவு அல்லது அதற்கு நிகரான குற்றங்கள் மட்டுமே இவை. பதிவு செய்யப்படாத வன்முறைகள் ஏராளம்.
- இந்தக் குற்றங்களைக் கட்டுப்படுத்த அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கான சாட்சிகள்தான் அவ்வப்போது செய்திகளில் விவாதிக்கப்படுகிற பெண் குழந்தைகளின் வல்லுறவுப் படுகொலைகள். குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொல்கிறவர்களுக்கு, உடனடியாகத் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்கிற பொதுச் சமூகத்தின் கொந்தளிப்புக்குத் தீனிபோடுகிற வகையில் சில வழக்குகளில் குற்றவாளிகள் உடனுக்குடன் தண்டிக்கப்படுவது உண்டு.
- அதைக் கதாநாயகச் செயல்பாடு போலவும் கொல்லப்பட்ட குழந்தைக்கு வழங்கப்பட்ட நீதிபோலவும் பாவித்துப் பலர் கடந்துவிடுகின்றனர். ஆனால், அத்துடன் பிரச்சினை முடிந்துவிடுவதில்லை.
- குற்றமிழைத்தவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, குற்றங்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதும் அவ்வளவு முக்கியம். அதுதான் அடுத்தடுத்துக் குற்றச் செயல்கள் நிகழாத வண்ணம் தடுக்கும்.
- புதுச்சேரி சிறுமி கொலையில் தொடர்புடையதாகச் சொல்லப்படும் இருவரும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வரைமுறையற்ற போதைப்பொருள்களின் புழக்கமும் கட்டற்ற பாலியல் காணொளிகளின் பரவலும் குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவுடன் நேரடித் தொடர்புடையவையாக இருக்கின்றன.
- சிறார் குற்றவாளிகள் அதிகரிப்பதற்கும் இவை காரணமாக அமைகின்றன. எங்கோ ஓரிடத்தில் ஏதோவொரு நாளில் நடைபெறுகிற குற்றமாகக் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைப் புறக்கணிக்க முடியாது.
- காரணம், எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டிய குழந்தைகளைத்தான் இந்த வகையில் நாம் பலிகொடுத்துக்கொண்டிருக்கிறோம். எனவே, குற்றங்களுக்கு ஆணிவேராக அமையக்கூடியவற்றைக் கட்டுப்படுத்தவும் முற்றாக முடக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் பெரும்பாலும் கூட்டாகத்தான் நிகழ்த்தப்படுகின்றன. அல்லது குற்றவாளிகளுக்குக் குடும்பங்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. சமூகம் மிக மோசமாகச் சிதைவடைந்து வருவதற்கான வெளிப்பாடு இது.
- நம்மைச் சுற்றி இருக்கிற குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்காத சமூகம், எந்த வகையிலும் நாகரிகமான சமூகமாக இருக்க முடியாது. அந்தச் சமூகத்தை ஆளும் அரசுக்கும் இது பொருந்தும். இனி, எந்தவொரு குழந்தைக்கும் பாதிப்பு நிகழாது என்கிற உத்தரவாதத்தை மக்களுக்கு அரசு அளிக்க வேண்டும்.
- அந்த உத்தரவாதத்துக்குப் பங்கம் விளைவிக்கும் ஒவ்வொருவரும் பாரபட்சமின்றி உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும். குற்றங்களுக்கான காரணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுச் சீர்செய்யப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 03 – 2024)