TNPSC Thervupettagam

பாலியல் கொடுமைகளை வன்முறையால் தடுக்க முடியாது

December 12 , 2019 1858 days 1051 0
  • வன்புணர்வு என்பது கலாச்சாரக் களங்கமல்ல, அதுவும் வன்முறைதான். என்கவுன்ட்டர் என்பது நீதியல்ல, அதுவும் வன்முறைதான். ஏதோவொரு வகையில் எல்லோருமே வன்முறையின் ஆதரவாளர்களாக இருக்கும்போது, யாரோ ஒருசிலர் மட்டும் எப்படிக் குற்றவாளியாக முடியும்? ஒரு வன்முறைக்கு மற்றொரு வன்முறையைத் தீர்வாக்கி, அப்படியானத் தீர்வுகளைக் கொண்டாடித் தீர்க்கும் நாம் எப்படி பண்பட்ட மனிதச் சமூகமாக இருக்க முடியும்?
  • கொலை என்பது குற்றம் எனில் அதை யார் நிகழ்த்தினாலும் குற்றமே. வன்புணர்வு கொடூரமெனில் அதை யார் யாருக்கு இழைத்தாலும் கொடூரமே என்ற சமநீதி சாத்தியமற்ற சமூகத்தில் நாம் வாழ்கிறோம். குற்றவாளி யார், பாதிக்கப்படுகிறவர் யார் என்பதைப் பொறுத்தே பொதுச் சமூகத்தின் ஆதரவும் தண்டனையும் அமைகிறது. பிரியங்கா உயர் வகுப்பைச் சேர்ந்தவர். குற்றவாளிகள் லாரி தொழிலாளர்கள், பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
  • இவர்களே குற்றமிழைத்தவர்கள் என நீதிமன்றம் முடிவுசெய்யும் முன்னரே சுட்டுத்தள்ளும் அதிகாரம் அதனால்தான் காவல் துறைக்கு வழங்கப்படுகிறது. ஒருவேளை, சர்வாதிகார நாட்டைப் போல இப்படித்தான் நீதி வழங்கப்படும் எனில் ஆதிக்கசாதியினரால் வன்புணர்வுக் கொலைக்கு ஆளாக்கப்பட்ட தலித் பெண்கள் ரோஜா, நந்தினி போன்றவர்களின் வன்புணர்வுக் கொலைக்கு அதே தண்டனையை காவல் துறை ஏன் வழங்கவில்லை?

பண்பாட்டுக் குற்றம்

  • நாடெங்கும் நாள்தோறும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டு கொந்தளித்துக் கிடக்கும் பொதுச் சமூகத்தின் கூட்டு மனசாட்சியை ஆற்றுபடுத்த ஒடுக்கப்பட்ட மக்களை வைத்துக் கொடுக்கப்படும் நரபலி இது. அவ்வளவே! அதே கூட்டு மனசாட்சி நம்புவதைப் போல, பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்த இப்படியான நரபலிகள் துரும்பளவுகூட உதவாது.
  • பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பண்பாட்டுக் குற்றம். எந்தப் பண்பாட்டுக் குற்றத்தையும் தண்டனைகளால் மட்டும் தடுத்து நிறுத்திவிட முடியாது. ‘உங்களில் பாவம் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள்’ என்பதைப் போல சமூகத்தின் எல்லா மட்டத்திலும் பரவி நிற்கும் குற்றம் இது. படித்தவர்கள் படிக்காதவர்கள், ஏழைகள் பணக்காரர்கள், ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்டவர்கள், ஆட்சியாளர்கள் பொதுமக்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், நீதிபதிகள் வழக்கறிஞர்கள், விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள், அப்பாக்கள், கணவர்கள், தாத்தாக்கள், மாமாக்கள், மகன்கள், நண்பர்கள் என ஒட்டுமொத்த ஆண் சமூகமுமே எத்தருணத்தில் வேண்டுமானாலும் வன்புணர்வில் ஈடுபடும் தகுதியுடைதாகவே இருக்கிறார்கள்.
  • எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் பாலியல் பண்டமாகவே கருதுகிறான் எனில் அதற்குக் காரணம் நமது நாட்டின் கலாச்சாரத்தில் பொதிந்திருக்கிறது. பெண்ணை மையப்படுத்தியே பாலுறவு (sex), பாலியல் (sexuality), பாலினம் (gender) குறித்து மிகவும் பிற்போக்கானக் கருத்தியல்கள் இங்கே வேரூன்றியிருக்கின்றன. இந்திய ஆண்கள் எவ்வளவு படித்திருந்தாலும் பெண்ணைக் கீழானவர்களாக நினைக்கின்றனர். வன்புணர்வு என்பது அவர்களுக்கு பாலுறவுதான்.
  • வன்புணர்ச்சியை ஆபாசப் படக் காட்சிகளில் வருவதைப் போன்ற வன்கலவியாகவே (wild sex) கற்பனை செய்துகொள்கின்றனர். கூட்டு வன்புணர்ச்சி (gang rape) என்பதைக் கூட்டுக் கலவி (group sex) என்பதாகப் புரிந்துகொள்கின்றனர். “அரசாங்கம் வன்முறையற்ற வன்புணர்வை சட்டபூர்வமாக்க வேண்டும். வன்புணர்ச்சிகளை எதிர்கொள்ள பெண்கள் ஆணுறையைக் கையிலெடுத்துச் செல்ல வேண்டும்” எனத் திரைப்பட இயக்குனர் டேனியல் ஷ்ராவான் பரிந்துரைப்பது இக்கலாச்சாரத்தின் வெளிப்பாடுதான்.
  • வன்புணர்வை முழுவதுமாக நியாயப்படுத்தும் ஒரு சமூக அமைப்பை நாம் கொண்டிருக்கிறோம். நவீன உடைகளை அணிவது, தனியாக இருப்பது, இரவில் பயணிப்பது, சுதந்திரமாக இருப்பது, சகஜமாகப் பழகுவது, சிரித்துப் பேசுவது, மது அருந்துவது, வேலைக்குப் போவது, காதலிப்பது, மனைவியாக இருப்பது, எதிர்க்க முடியாமல் இருப்பது, அடங்கிப்போவது, ஒப்பனை செய்துகொள்வது என ஒரு பெண்ணின் எல்லா சூழல்களையும் வன்புணர்ச்சிக்கான வாய்ப்பாகவே ஆண் கருதும் வகையிலேயே அவன் வளர்த்தெடுக்கப்படுகிறான்.
  • இந்தச் சமூக மனநிலையை சரிசெய்யாமல் நம்மால் பாலியல் குற்றங்களைத் தடுக்கவே முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை யாரென்றே தெரியாத அந்நியர்களால் நிகழும் பாலியல் குற்றங்கள் மிகக் குறைவு. அதாவது, 93% பாலியல் குற்றங்கள் குடும்ப உறுப்பினர், குடும்ப நண்பர்கள், முதலாளிகள், பக்கத்து வீட்டுக்காரர், பிரிந்துசென்ற கணவர் போன்ற தெரிந்தவர்களாலேயே நடக்கின்றன. அவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளிவிடலாமா?

குற்றத்தை ஊக்குவிக்கும் பழக்கவழக்கங்கள்

  • என்கவுன்ட்டரில் கொல்லக் கொல்ல இவர்கள் முளைத்துவருவார்கள். ஏனெனில், நம் வீடுகள் ஒவ்வொரு ஆணையும் எப்போது வேண்டுமானாலும் குற்றவாளியாகும் தகுதியுடையவர்களாகவே உற்பத்திசெய்கிறது. குழந்தைத் திருமணம், பாலியல் வன்புணர்வு, குடும்ப வன்முறை, வரதட்சணை என இன்று சட்டப்படி குற்றமாக இருக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அனைத்தும் இங்கே பண்பாட்டுப் பழக்கவழக்கமாக இருப்பவைதான்.
  • சட்டம் குற்றம் என்றாலும் நம் சமூகம் அவற்றைப் பண்பாடாகவே கருதுகிறது. அதனால், பெரும்பாலான இந்திய ஆண்கள் பெண்ணுக்கெதிரான ஏதேனும் ஒரு குற்றத்திலாவது அங்கமாக இருக்கின்றனர் என நிச்சயமாகச் சொல்ல முடியும். ஆண்களை அப்படியானவர்களாக குடும்பங்களே தயார்செய்கின்றன.
  • பாலியல் குற்றம் என்றதும் எல்லோரும் பாதிக்கப்பட்டப் பெண்ணாகவே தன்னைக் கற்பனை செய்துகொள்கின்றனர். ‘நம் வீட்டுப் பெண்ணுக்கு நேர்ந்துவிட்டால்...’ என அச்சப்பட்டு கொடூர தண்டனைக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ‘நம் வீட்டுப் பையன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுவிட்டால்...’ என்ற சிந்தனை அவர்களுக்கு வருவதே இல்லை. கொல்லப்படுபவர்கள் நம் மகள்கள் எனில், கொலையைச் செய்பவர்கள் நம் மகன்களாகத்தானே இருக்க முடியும்?
  • வழிவழியாகக் கடத்தப்படும் மூடநம்பிக்கைகள், ஆபாசப்படங்கள் மூலம் தவறான பாலியல் அறிவே இச்சமூகத்தில் கரைபுரண்டு ஓடுகிறது. பிள்ளைகள் எது கேட்டாலும் வாங்கித் தந்து அவர்களது வளர்ச்சியிலும் புகழ்ச்சியிலும் ஆர்வங்காட்டும் பெற்றோர் தம் குழந்தைகள் குற்றவாளியாகவோ பாதிக்கப்பட்டவராகவோ ஆகிவிடாமல் தடுக்கும் பாலியல் அறிவையும் அற விழுமியங்களையும் வளர்த்தெடுப்பது பற்றி கவலைப்படுவதில்லை.

பாலியல் கல்வியைக் கட்டாயமாக்குவோம்

  • இருபதாண்டுகளுக்கு முன்னர் பள்ளிப் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்க்க எடுக்கப்பட்ட தீவிரமான முன்னெடுப்புகளைத் தடுத்து நிறுத்தியதில் பெற்றோருக்குப் பெரும்பங்கு உண்டு.
  • உண்மையில், தம் பிள்ளைகளின் பாதுகாப்பிலும் வன்முறையற்ற எதிர்காலத் தலைமுறையிலும் அக்கறை கொண்ட பெற்றோர் பாலியல் கல்வியைப் போராடி பாடத் திட்டத்தில் சேர்த்திருக்க வேண்டும். ‘செக்ஸ் எஜுகேஷன்’ என்ற வார்த்தையில் பிரச்சினை என்றால் ‘லைஃப் எஜுகேஷன்’ என மாற்றிக்கொள்ளலாம். பாலியல் அறிவு, உடல் பற்றின புரிதல், பாலின சமத்துவம், பாலுணர்வைக் கையாளுதல், ஆரோக்கியமானப் பாலுறவு என நிஜமாகவே இதுவொரு வாழ்க்கைக் கல்விதான்.
  • இந்தியப் பெற்றோரால் பாலியல் விஷயங்களைக் குழந்தைகளிடம் வெளிப்படையாகப் பேச முடிவதில்லை. காரணம் மனத்தடை, அறியாமை, போதாமை. ஆக, பள்ளிகளைத் தவிர நமக்கு வேறு களம் இல்லை. ஒரு மனிதரைப் பண்படுத்தும் சரியான பருவமும் அதுவே.
  • பள்ளியில் கல்வியாகக் கற்கும்போது குழந்தையின் மூளையை மட்டுமல்ல; வீடுகளையும் அதன் வழியே சமூகத்தையும் அது பண்படுத்தும். பாலியல் கல்வியை அர்ப்பணிப்போடு செயல்படுத்திய பல நாடுகளில் அது நல்ல பலன்களை அளித்திருக்கிறது என்பதே இதற்கான ஆதாரம்.
  • பண்பாட்டுக் குற்றமாக வேரூன்றியிருக்கும் பாலியல் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் தொலைநோக்குப் பார்வையோடு நாம் செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். அதில் முக்கியமானது, பாலியல் கல்வியைக் கட்டாயமாக்குவது.
  • கல்வியாளர்களும் அரசும் அதைத் துரிதப்படுத்த வேண்டிய கால நெருக்கடியில் இருக்கிறோம். தெருவில் கிடக்கும் சமத்துவக் கருத்துகளை வீடுகளுக்குள் சேர்க்க அதுவொன்றுதான் வழி. பாலின சமத்துவம் பற்றி கற்றறிந்தத் தலைமுறையை உருவாக்கும்போது பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிச்சயமாக முடிவுக்குவரும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்