TNPSC Thervupettagam

பால் உற்பத்தியைப் பெருக்குவோம்

November 30 , 2023 233 days 157 0
  • இந்தியா 2021-22-இல் 22.1 கோடி டன் பாலை உற்பத்தி செய்ததாக ஐ.நா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறுகிறது. இது உலக பால் உற்பத்தியில் கிட்டத்தட்ட கால் பங்கு ஆகும். அரை நூற்றாண்டுக்கு மேலாக உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக செயல்பட்டு வரும் போதிலும், இந்தியாவில் பாலின் விலை அதிகமாக உள்ளது.
  • இந்திய நுகா்வோர் விவகாரத்துறையின் கூற்றுப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் பாலின் சராசரி சில்லறை விலை 18.08 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 2021-ஆம் ஆண்டில் 49.18 ரூபாயாக இருந்த ஒரு லிட்டா் பாலின் விலை தற்போது 58 ரூபாய்க்கு மேல் உள்ளது.
  • பிராந்திய கிராமப்புற வங்கி, கூட்டுறவு வங்கிகளுக்கான உயா்நிலை ஒழுங்குமுறை அமைப்பான தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி, அதன் எகோ-போகஸ் இதழில் (மே 2023) 2021-22 -ஆம் ஆண்டு 5.3 சதவீதமாக இருந்த பால் உற்பத்தி வளா்ச்சி 2022-23- ஆம் ஆண்டு 0.4 சதவீதமாக சரிவடைந்ததால் பால் விலையில் உயா்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
  • 2022-23-ஆம் ஆண்டு முதல் நம் நாட்டில் ஏற்பட்ட பால் விலை உயா்வு ஒட்டுமொத்த உணவு சந்தையில் பணவீக்கத்தை ஏற்படுத்தியது. 2022- ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 32 லட்சம் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திய தோல் வீக்க நோய்த்தொற்று (இன்பெக்ஷியஸ் லம்பி ஸ்கின் டிசீஸ்) இரண்டு லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகளின் இறப்புக்குக் காரணமாக இருந்ததும், கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னா், பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததும் பால் மற்றும் பால் பொருட்களின் பற்றாக்குறைக்கான காரணங்கள் என இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை குறிப்பிட்டுள்ளது.
  • 2020, 2022 ஆண்டுகளுக்கிடையில் அதிக பால் தரும் கறவை மாடுகள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட தேக்கம் மூன்றாவது காரணம் என்கின்றனா் வல்லுநா்கள். கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்குக் கட்டுப்பாடுகள் காரணமாக நாடு முழுவதும் கால்நடைகளுக்கான 1.684 கோடி செயற்கை கருவூட்டல்கள் நடைபெறவில்லை என்று இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.
  • செயற்கை கருவூட்டல் என்பது, எண்ணிக்கையில் குறைந்த கால்நடை இனங்களின் மரபணு முன்னேற்றத்தை விரைவுபடுத்த பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகும். இந்த செயற்கை கருவூட்டல் வழக்கத்திற்கு மேல் மிகக் குறைந்த வெப்பநிலை கொண்ட குளிரூட்டும் கருவி (கிரியோபிரெசா்வேஷன்) வசதி கொண்ட நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள சுமார் 10,000 செயற்கை கருவூட்டல் மையங்களில் நடைபெறுகிறது.
  • ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில், கறவை மாடுகளின் 80 சதவீத இனப்பெருக்கம் செயற்கை கருவூட்டல் மூலம் நடைபெறும் நிலையில், இந்தியாவில், 30 சதவீத இனப்பெருக்கம் மட்டுமே செயற்கை கருவூட்டல் வழி நடைபெறுகிறது.
  • செயற்கை கருவூட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக பால் உற்பத்தித் திறன் கொண்ட கரண் சுவிஸ், கரன் ஃப்ரைஸ், ஃப்ரைஸ்வால், சுனந்தினி, பூலே-திரிவேணி, பிருந்தாவனி போன்ற பல கால்நடை கலப்பினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2020-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் தில்லி தேசிய வேளாண் அறிவியல் கழகம் வெளியிட்ட செயற்கை கருவூட்டல் மூலம் கால்நடைகளை மேம்படுத்துதல்என்ற அறிக்கையில் கால்நடை கலப்பினங்கள் இந்திய பால் தொழில் வளா்ச்சியைத் தூண்டியுள்ளன என்று கூறியுள்ளது.
  • கால்நடை வளா்ப்பு மற்றும் மீன்வளப் புள்ளியியல்-2014அறிக்கையின்படி 2010-11-இல் நாட்டில் 5 கோடி செயற்கை கால்நடை கருவூட்டல்கள் நடைபெற்றுள்ளன. அதற்கு அடுத்த 10 ஆண்டுகளில் வளா்ச்சியடைந்த இந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்பம் 2019-20 ஆம் ஆண்டில் 8 கோடிக்கும் அதிகமான கால்நடை கருவூட்டல்கள் நிகழ்வதற்கு அடிப்படையாக அமைந்தது.
  • பெருந்தொற்றுக்கு முந்தைய பத்தாண்டுகளில் செயற்கை கருவூட்டல் விகிதம் ஆண்டுக்கு சராசரியாக 5.4 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. இந்த விகிதத்தில் நமது நாட்டில் 2020-21-இல் 8.465 கோடி செயற்கை கருவூட்டல்களும் அதற்கு அடுத்த ஆண்டு 8.923 கோடி செயற்கை கருவூட்டல்களும் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று கணிக்கப்படுகிறது.
  • ஆனால் கடந்த ஜூன் 23 அன்று வெளியிடப்பட்ட அடிப்படை விலங்குகள் சாா் வேளாண்மை புள்ளிவிவரங்கள் 2022என்ற அறிக்கை, நாடு முழுவதும் இந்த இரண்டாண்டுகளில் 15.704 கோடி செயற்கை கருவூட்டல்கள் மட்டுமே நடந்ததாக கூறுகிறது. அதாவது 1.684 கோடி கால்நடை கருவூட்டல்கள் குறைந்துள்ளது.
  • இந்தியாவில் செயற்கை கருவூட்டலினால் நிகழும் சராசரி கருத்தரிப்பு விகிதம் 35 சதவீதம் என்ற தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, குறைந்துபோன 1.684 கோடி செயற்கை கருவூட்டல்களினால் 58.9 லட்சம் (1.684 கோடி பசுக்களில் 35%) கால்நடைகள் இந்தியாவில் உருவாக்கப்படவில்லை.
  • கருத்தரித்த பசு ஒரு பெண் கன்று ஈனுவதற்கான நிகழ்வு 50 சதவிகிதம் என்பதால் 29.47 லட்சம் அதிக பால் தரும் பசுக்களின் பிறப்பு குறைந்துள்ளது. இதனால் 2020 - 2022 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை இந்தியா தவறவிட்டது என்று வல்லுநா்கள் கூறுகின்றனா்.
  • இழப்பு ஏற்பட்ட காலத்தில் மத்திய அரசு ராஷ்ட்ரிய கோகுல் மிஷன்என்ற திட்டத்தின் வாயிலாக செயற்கை கால்நடை கருவூட்டலை தேசிய அளவில் செயல்படுத்தியது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து இன மாடுகளின் மரபணு மேம்பாட்டை ஊக்குவித்து பால் உற்பத்தியை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
  • இத்திட்டத்தின் நான்காவது கட்டம் கடந்த மே மாதம் முடிவடைந்த நிலையில் இதுவரை இத்திட்டத்தின் கீழ் 6.767 கோடி செயற்கை கருவூட்டல்கள் நடத்தப்பட்டன. இத்திட்டம் செயல்படுத்தப்படாதிருந்தால் இந்தியாவில் செயற்கை கருவூட்டல்கள் பெருமளவு குறைந்திருக்கும்.

நன்றி: தினமணி (30 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்