- கறவை மாடுகளின் விலை மற்றும் பால் உற்பத்திச் செலவு தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும். இல்லையெனில், பால் விற்பனையை நிறுத்த, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
- பால் விற்பனையில் பெரும்பங்கு வகிக்கும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை அடிக்கடி உயர்த்தும்போது, அரசுத் துறையின் கீழ் இயங்கும் ஆவின் ஏன் பால் கொள்முதல் விலையை உயர்த்தத் தயங்குகிறது? பால் கொள்முதல் விலை உயர்ந்தால் தமிழக ஏழை விவசாயிகளுக்கு வருமான உயர்வு ஏற்படுமா? பால் விலை உயர்த்தப்பட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன?
- பால் விலையை உயர்த்துவது இந்தியாவில் புதிதல்ல. நாட்டின் மிகப்பெரிய பால் கூட்டுறவுச் சங்கங்களான அமுல் மற்றும் மதர் டெய்ரி நிறுவனங்கள் பால் உற்பத்திக்கு ஆகும் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பால் பொருட்களின் விலையை உயர்த்திவருகின்றன. சமீபத்தில், அக்டோபர் 15 அன்று, அமுல் நிறுவனம் எருமைப்பாலின் விலையை லிட்டருக்கு ரூ.63-லிருந்துரூ.65 ஆகவும், மற்ற பாலின் விலையை ரூ.61-லிருந்து ரூ.63 ஆகவும் உயர்த்தியுள்ளது.
- தமிழகத்தில் தற்போது இயங்கும் பல்வேறு தனியார் பால் நிறுவனங்கள், பால் விலையை 2022இல் ஆவின் பால் விலையைவிட, லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்த்தியுள்ளன. இதனை யாரும் எதிர்க்கவில்லை. நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 150 லட்சம் லிட்டா் (84%) பால் விற்பனையாகும் தமிழகத்தில், ஆவின் மூலமாக விற்பனையாவது 30 லட்சம் லிட்டா் மட்டுமே. தனியார் நிறுவனங்கள் மூலமாக அவ்வப்போது உயா்த்தப்படும் பால் விலை நுகர்வோர்களைப் பாதிக்காதபோது, ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டால் எப்படிப் பாதிப்பு ஏற்படும்?
விலை உயர்வு ஏன் தேவை?
- பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏழை விவசாயிகளுக்கு இதன் மூலம் கிடைக்கும் வருமானம், அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும் முக்கியமானது. ஆவின் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களாக ஏறக்குறைய 23 லட்சம் விவசாயிகள் தமிழகத்தில் உள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானோர் நிலமற்ற ஏழைகள், சிறு, குறு விவசாயிகள். மத்திய அரசால் 12ஆம் ஐந்தாண்டுத் (2012-17) திட்டத்துக்காக அமைக்கப்பட்ட கால்நடைகள் மற்றும் பால் உற்பத்தி சம்பந்தப்பட்ட செயற்குழுவானது, ஏறக்குறைய ஏழு கோடி விவசாயக் குடும்பங்கள் பால் உற்பத்தியில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும், இவற்றில் 75% குடும்பங்கள் நிலமற்ற சிறு விவசாயிகள் எனவும் கூறியுள்ளது.
- விவசாய இடுபொருட்களைப் போல், கறவை மாடுகளின் விலையும் கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையாக உயர்ந்துவருகிறது. பால் உற்பத்திக்குத் தேவைப்படும் பசும்புல், புண்ணாக்கு, தவிடு, வைக்கோல் மற்றும் மேலாண்மைச் செலவுகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. மத்திய அரசின் விவசாயச் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் தரவுகளின்படி, 2012 முதல் 2021 ஆண்டுகளில் உலர் தீவனத்தின் விலை 72%, மற்ற தீவனங்களின் விலை 61% உயா்ந்துள்ளன. இதன் காரணமாக, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் தற்போது பால் விலையை உயர்த்தித் தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
- பால் மாடுகள் வைத்திருப்பவர்கள், முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். மேய்ச்சல் நிலங்கள் வேகமாகக் குறைந்துவருகின்றன. குளம், ஏரிகளின் பராமரிப்பு இல்லாமையால், கறவை மாடுகளுக்குத் தேவையான பசும்புல், தண்ணீர் எளிதாகக் கிடைப்பதில்லை. இதனால், தீவனங்களின் விலை கிடுகிடுவென உயர்வதால், கறவை மாடுகளின் பராமரிப்புச் செலவு கடுமையாக உயா்ந்துள்ளது.
வறுமை ஒழிப்பு
- பால் விலை உயர்வு ஏழைகளைப் பாதிக்கும் எனப் பேசப்படுகிறது. பால் உற்பத்தியாளா்கள் பெரும்பாலானோர் ஏழை விவசாயிகள். இன்னும் சொல்லப்போனால் நீர்ப்பாசன வசதி இல்லாத வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் பெரும்பாலான இந்தியக் கிராமங்களில் விவசாயிகளின் குடும்பங்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது கறவை மாடுகள். உலக வங்கி 1999இல் இந்தியாவில் நடத்திய கால்நடைகளின் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி, பயிர் சாகுபடியில் ஏற்படும் நஷ்ட காலங்களில் பெரும்பாலான சிறு, குறு விவசாயிகளைப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து கறவை மாடுகள் காப்பாற்றுவதாகக் கூறுகிறது.
- பல காலமாகப் பால் பொருட்களை இறக்குமதி செய்துகொண்டிருந்த இந்தியாவை, உலகில் அதிகமாகப் பால் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றியமைத்தவா்கள் ஏழை விவசாயிகளே. உலகின் தரம்வாய்ந்த பால் பொருட்களை உற்பத்தி செய்யும் குஜராத் மாநிலத்திலுள்ள அமுல்-ஆனந்த் கூட்டுறவுச் சங்கங்களை வளரச் செய்து, வெண்மைப் புரட்சிக்கு உதவியவா்கள் ஏழை விவசாயிகளே. பாலுக்கு உரிய விலையைக் கொடுத்து, வறுமையின் பிடியில் பல ஆண்டுகளாகச் சிக்கித் தவித்த ஏராளமான விவசாயிகளின் வருமானத்தை அமுல் நிறுவனம் உயர்த்தியுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
- கிராமங்களில் வாழும் ஏழை மக்களின் வறுமையைக் குறைத்து, பொருளாதாரத்தை உயர்த்தியதில் பால் மூலம் கிடைக்கும் வருமானம் பெரும் பங்களித்துள்ளது. ஆனால், இன்று கறவை மாடுகள் வைத்திருப்போரின் நிலை தமிழகம் போன்ற மாநிலங்களில் மிக மோசமாக உள்ளது.
- தீவனப் பொருட்களின் தொடா் விலையேற்றத்தால், பாலுக்குக் கிடைக்கும் விலை அவற்றின் உற்பத்திச் செலவைவிடக் குறைவு என்கிறார்கள் ஏழை விவசாயிகள். விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தின் வளா்ச்சி குறைந்து வருகின்ற இக்காலகட்டத்தில், உற்பத்திச் செலவோடு ஒப்பிட்டு, பால் விலையை உயா்த்தாவிடில் கறவை மாடுகளை நம்பி வாழும் குடும்பங்கள், பொருளாதாரச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம்.
- பால் விலையை உயர்த்தினால் அது ஏழைகளைப் பாதிக்கும் என்று கூறுவதில் நியாயமில்லை. பெரும்பாலான பால் உற்பத்தியாளர்களும் ஏழைகளே. பால் உற்பத்தியாளர்களின் உழைப்பு மதிப்பிட முடியாதது. பால் உற்பத்திச் செலவோடு ஒப்பிட்டு, அதன் விலையை நிர்ணயம் செய்யாவிட்டால், கிராமங்களில் வாழும் ஏழைப் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் பாதிக்கப்படும்.
- அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படும் பால் அளவு குறைந்தால், போட்டி குறைந்து தனியார் நிறுவனங்கள் பால் விலையை நினைத்தபோதெல்லாம் உயர்த்திவிடும். எனவே, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து, அமுல், மதர் டெய்ரி போன்ற கூட்டுறவு நிறுவனங்கள் கொடுப்பதுபோல் பால் விலையை நிர்ணயம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்களுக்குக் கொடுப்பதுபோல், பாலுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை (MSP) கொடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நன்றி: தி இந்து (31 – 10 – 2022)