பாவெல் துரோவ்: நாயகனா, குற்றவாளியா?
- கடந்த சில நாள்களாக ‘டெலிகிராம்’ சேவைக்கும், அதன் நிறுவனர் பாவெல் துரோவுக்கும் என்ன நடக்கிறது என்பதைத் தொழில்நுட்ப உலகம் ஆர்வத்தோடும் கவலையோடும் நோக்குகிறது. ஏனெனில், இந்த விவகாரம் டெலிகிராம் அல்லது துரோவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல: மாறாக, இந்த விவகாரமும் வழக்கும் தொழில்நுட்ப உலகின் எதிர்காலத் திசையைத் தீர்மானிக்கக்கூடியதாக அமையும் என்றே கருதப்படுகிறது.
- டெலிகிராம் சேவை சட்டவிரோதச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டில், ஃபிரான்ஸில் துரோவ் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். டெலிகிராம் போன்ற தொழில்நுட்ப மேடையில் பகிரப்படும் கருத்துகளுக்கு அதன் நிறுவனர் எப்படிப் பொறுப்பேற்க முடியும் என்பது துரோவ் தரப்பின் வாதம்.
- சமூக ஊடக சேவைகளில் பகிரப்படும் கருத்துகளைப் பாதுகாப்பு நோக்கில் நெறிப்படுத்த வேண்டும் என்பது இறையாண்மை மிக்க நாடுகளின் தரப்பாக இருக்கிறது என்றால், நெறிப்படுத்தல் என்பது கட்டுப்பாடாக, தனியுரிமைக்கும், பேச்சுரிமைக்கும் எதிராக அமையும் என்பது இதற்கு எதிர்த் தரப்பில் முன்வைக்கப்படும் வாதமாக இருக்கிறது.
- இந்த விவாதத்துக்கு மத்தியில், பல்வேறு நாடுகளில் பலவிதமாகச் சமூக ஊடகங்களை நெறிப்படுத்தும், கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தொழில்நுட்ப மேடையில் பகிரப்பட்ட கருத்துக்கு அதன் நிறுவனரைப் பொறுப்பேற்கச் செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
ஃபிரான்ஸில் கைது:
- துரோவ் கைது விவகாரம் தொடர்பாக முன்னணித் தொழில்நுட்பப் பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்திருப்பதும், இதில் அரசியல் இல்லை என ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரூன் விளக்கம் அளித்திருப்பதும் இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
- இந்தப் பிரச்சினையில் பல்வேறு கோணங்களும், நுணுக்கமான விஷயங்களும் உள்ள நிலையில், இதன் மையமாக விளங்கும் துரோவ் எனும் தனிப்பட்ட ஆளுமையை அறிமுகம் செய்துகொள்வது பொருத்தமாக இருக்கும்.
- ‘ரஷ்ய கோடீஸ்வரர்’ என்றும், ‘ரஷ்ய ஸக்கர்பர்க்’ என்றும் வர்ணிக்கப்படும் பாவெல் துரோவ், சோவியத் ஒன்றியத்தின் லெனின்கிராட் நகரில் பிறந்து வளர்ந்தார். தஸ்தாயெவ்ஸ்கி உள்ளிட்ட ரஷ்ய நாவலாசிரியர்களின் கதைகளில் விவரிக்கப்படும் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் மேட்டுக்குடி பள்ளியில் படித்தார்.
- பள்ளிப் பருவத்திலேயே கணினியில் ஆர்வமும், கோடிங் (Coding) எழுதும் திறனும் கொண்டிருந்த துரோவ், வகுப்புக் கணினியினை ஹேக் செய்து அதில், ‘சாக வேண்டியவர்’ என்னும் குறிப்புடன் ஆசிரியரின் முகத்தை இடம்பெறச் செய்ததற்காக நடவடிக்கைக்கு உள்ளானதாக அவரது சுயசரிதையை எழுதிய ரஷ்யப் பத்திரிகையாளர் கோனோனவ் தெரிவித்திருக்கிறார்.
பள்ளிக் கணினி:
- பதின் பருவத்தில் தனது திறமை மீது மிகை நம்பிக்கை கொண்டவராகவே துரோவ் இருந்திருக்கிறார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு எதிர்கால வாழ்க்கை பற்றி நண்பர்கள் பேசியபோது, “நான் இணையத்தின் இறைத்தூதராக வருவேன்” எனக் கூறியிருக்கிறார்.
- கல்லூரிக் காலத்திலும் அவரது கணினித் திறன் வியந்து பேசப்பட, நண்பர்கள் சிலரால் ஃபேஸ்புக் சேவை அவருக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டபோது, அதே போன்ற சேவையை ரஷ்யாவில் உருவாக்கிக் காண்பித்தார். விகோண்டடே (VKontakte) என்னும் அந்த சேவை ரஷ்யாவில் பிரபலமாகி அவரைச் செல்வந்தராக்கியது. ஃபேஸ்புக்கின் நகல் என்று சொல்லப்பட்டாலும் அந்த சேவை ரஷ்யச் சமூகத்தின் தேவைக்கேற்ற அம்சங்களைக் கொண்டிருந்ததோடு, சட்டவிரோதமான முறையில் இசை, திரைப்படங்கள் உள்ளிட்டவற்றைப் பகிர்வதற்கான மேடையாகவும் அமைந்தது.
ரஷ்யப் போராட்டம்:
- 2012இல் ரஷ்யாவில் அதிபர் புடினுக்கு எதிராகப் போராட்டம் வெடித்தபோது, விகோண்டடேயின் அரசியல் பயன்பாடு கவனத்தை ஈர்த்தது. அரசின் கட்டுப்பாட்டை மீறிப் போராட்டக்காரர்கள் தகவல்களைப் பரிமாற இதைப் பயன்படுத்திய நிலையில், எதிர்க்கட்சி - போராட்டக் குழு பக்கங்களை முடக்க வேண்டும் என அரசுத் தரப்பு நிர்ப்பந்தத்துக்கு அடிபணிய துரோவ் மறுத்துவிட்டார்.
- இந்தச் சம்பவமே கருத்துச் சுதந்திரத்தின் நாயகனாக அவர் அறியப்பட்ட முதல் நிகழ்வு. 2013-14 காலத்தில் ரஷ்ய–உக்ரைன் மோதலின்போது, உக்ரைன் பயனாளிகள் தொடர்பான தகவல்களை ஒப்படைக்க வேண்டும் என்னும் ரஷ்ய அரசின் அழுத்தத்துக்கும் அவர் அடிபணியவில்லை. எனினும் நெருக்கடிகள் காரணமாகத் தனது நிறுவனத்தை விற்றுவிட்டு ரஷ்யாவில் இருந்து துரோவ் வெளியேறினார். “என்னிடம் இப்போது எந்தச் சொத்தும் இல்லை, ஆனால் தெளிவான மனசாட்சியும், போராட வேண்டிய லட்சியமும் இருக்கிறது” என்றார். அவரது அடுத்த கட்ட வாழ்க்கை அதிலிருந்துதான் தொடங்கியது.
- ரஷ்யாவிலிருந்து வெளியேறிய பிறகு, தனது குழுவினரோடு தொடர்புகொள்ளப் பாதுகாப்பான வழிமுறையைத் தேடிக்கொண்டிருந்தபோதுதான் டெலிகிராம் சேவையை உருவாக்கும் எண்ணம் அவருக்கு உண்டானது. வாட்ஸ்அப் போன்ற அம்சங்களோடு, டிவிட்டரின் உடனடித் தன்மை, ஒரு செய்திமடலின் விரிவான தன்மையையும் டெலிகிராம் கொண்டிருந்தது.
- இந்தச் சேவையின் எளிய தன்மையும், தனியுரிமை அம்சங்களும் அடுத்து வந்த ஆண்டுகளில் அரசு எதிர்ப்பாளர்கள், போராட்டக் குழுவினர் ஆகியோர் அதிகம் பயன்படுத்திய சேவையாக டெலிகிராமை மாற்றின. குறிப்பாக ரஷ்யா, பெலாரஸ், ஈரான் போன்ற நாடுகளில் அரசு எதிர்ப்பாளர்களால் இந்தச் சேவை அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், தீவிரவாதிகள், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள், வதந்திகளைப் பரப்புகிறவர்கள் போன்றோரும் இதை அதிகம் பயன்படுத்தினர்.
டெலிகிராம் சேவை:
- இதன் காரணமாக, சர்வாதிகார அரசுகளுக்கு மட்டும் அல்லாமல் இறையாண்மை மிக்க அரசுகளுக்கும் டெலிகிராம் சேவை தலைவலியாக அமைந்தது. இதனிடையே துரோவின் தனிப்பட்ட ஆளுமையும் வண்ணமயமாக மாறியது. டெலிகிராம் சேவை சர்வதேச அளவில் வளர்ச்சி பெற்றதை அடுத்து, தன்னை ஒரு தவிர்க்க இயலாத ஆளுமையாக துரோவ் நம்பினார். ‘மேட்ரிக்ஸ்’ படத்தின் நாயகன்போல உடை உடுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். விந்து தானம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர் தந்தையானதாகவும் செய்திகள் இருக்கின்றன.
- ரஷ்யாவின் மார்க் ஸக்கர்பர்க் என்று வர்ணிக்கப்பட்டாலும், உண்மையில் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸையே துரோவ் தனது ஆதர்சமாகக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஜாப்ஸ் போலவே தன்னை ஒரு தொழில்நுட்ப தீர்க்கதரிசியாகவும், கனிவற்ற மேலாளராகவும் துரோவ் கருதினார். இடைப்பட்ட ஆண்டுகளில் டெலிகிராம் சேவையின் வளர்ச்சி துரோவின் செல்வாக்கை மேலும் அதிகமாக்கியது. சர்ச்சைகளும் அதிகரித்தன.
தனியுரிமை நாயகன்:
- இந்த நிலையில்தான் 2021இல் ஃபிரான்ஸின் குடியுரிமை பெற்றார். வேறு சில நாடுகளின் குடியுரிமையும் வைத்துள்ள அவர், எந்த ஒரு நாட்டிலும் அதிகக் காலம் தங்கியதில்லை எனக் கூறப்படுகிறது. அவர் ஃபிரான்ஸ் குடியுரிமை பெற அந்நாட்டு அதிபர் மக்ரூனே முக்கியக் காரணம் என்றும் இப்போது கூறப்படுகிறது.
- ஃபிரான்ஸ் அதிபருக்கு துரோவ் நெருக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் கைது செய்யப்படும் நிலை வரும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். துரோவ் கைது விவகாரத்தில் கருத்துரிமை - தனியுரிமை தொடர்பான விவாதமும் முக்கிய அங்கமாக அமைகிறது. தொழில்நுட்ப மேடை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு அதன் நிறுவனரைப் பொறுப்பேற்கச் செய்வது சரியா என்னும் கேள்வி ஒரு பக்கம் எழுகிறது. மறுபக்கத்தில் சட்டவிரோத, குற்றச் செயல்களுக்காக ஒரு மேடை பயன்படுத்தப்படும்போது, அதை நெறிப்படுத்துவது தொடர்பான கேள்வியும் எழுகிறது.
- தனியுரிமை மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட துரோவ், தவறான பயன்பாடுகளை நெறிப்படுத்துவதைவிட, தனியுரிமையே மிகவும் முக்கியமானது என்று ஒரு முறை கருத்துத் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரின்போது, தனது சொந்த நாட்டு அரசைப் பகைத்துக்கொண்டு அவர் கருத்துரிமை பக்கம் நின்றுள்ளார்.
- இதற்கு முன் நிகழ்ந்துள்ளதுபோல, இந்த சர்ச்சையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இந்த வழக்கிலிருந்து வெளிவந்து, அதிகாரத்துக்கு எதிரான தனது பிம்பத்தை துரோவ் மேலும் வலுவாக்கிக்கொள்வார் என்று அவரது சுயசரிதையாளர் கோனோனவ் கூறுகிறார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 09 – 2024)