TNPSC Thervupettagam

பி.எஸ்.கிருஷ்ணன் எனும் சமூகநீதிப் போராளி

January 1 , 2022 946 days 502 0
  • ஒடுக்கப்பட்டோரிடம் தேவையற்ற கரிசனம், சாதி மறுப்புத் திருமணங்களைத் தீவிரமாக ஆதரித்தல், மதத்தைத் தாக்கத் தன் சமஸ்கிருத அறிவைப் பயன்படுத்தல், கிராம அதிகாரிகளைவிட கிராம மக்களின் பேச்சை நம்புதல், சீர்குலைவுச் சக்திகளுக்கு உதவும் வகையில் செயல்படுதல்! - கிருஷ்ணனின் பணிக்காலத் தொடக்கத்தில் அவருடைய ரகசியப் பதிவேட்டில் (Confidential Report) உயர் அதிகாரி ஒருவர் எழுதியிருந்த குறிப்பு இது.
  • பி.எஸ்.கிருஷ்ணன் இந்திய சமுதாயத்தில் சுரண்டப்படுகிற, ஒடுக்கப்படுகிற மக்களுக்கான இணையற்றதோர் போராளியாகத் திகழ்ந்தார். இந்திய அரசு அதிகாரிகளில் பி.எஸ்.கிருஷ்ணனின் வாழ்வும் பணியும் அரிதினும் அரியவை.
  • தீவிர லட்சியங்களுடனே பிறப்பவர் சிலர்; இளம் வயதில் வரித்துக்கொண்ட லட்சியத்திற்காகவே வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பவர் சிலர். லட்சியமும், லட்சியரும் இரண்டறக் கலந்துவிடுகிறார்கள். லட்சியத்தின் வெற்றியும், தோல்வியுமே லட்சியரின் வாழ்நாள் மைல்கற்கள்.
  • சொந்த மாநிலமான கேரளாவில், பள்ளி மாணவனாக இருந்தபோது, தீண்டாமை என்ற இழிவு குறித்து முதன்முதலாகத் தெரிந்துகொள்கிறான் கிருஷ்ணன்.
  • சாதிகளிலேயே மேல் சாதி என்று கருதப்படுவதில் பிறந்த இந்தச் சிறுவன் அந்தக் கொடுமையையும், சாதியத்தையும் எதிர்ப்பதையே தன் வாழ்வின் லட்சியமாக வரித்துக்கொள்கிறான்.  அன்றிலிருந்து, சாதி அமைப்பின் மீது கடுமையான போர் தொடுப்பவனாக அவன் மாறுகிறான்.
  • தன்னுடைய சித்தாந்தம் மார்க்ஸ், விவேகானந்தர், காந்தி, நாராயண குரு, பெரியார், அம்பேத்கர் அனைவரின் சித்தாந்தகளிலிருந்து வடித்தெடுத்த தனித்துவச் சித்தாந்தம் என்கிறார் கிருஷ்ணன்.
  • அத்தகைய சித்தாந்தப் பார்வையும், இந்தியாவின் ஆயிரமாயிரம் சாதிகளும், அவற்றின் மாநில வேறுபாடுகளும் குறித்த அவரது பிரம்மாண்ட புரிதலும் இணைந்து, அவரது உத்திகள் உருவாகின. வலிமையான சட்ட, அரசியல் சாசன அடிப்படையில் இந்த உத்திகளையும், அவற்றின் நுணுக்கங்களையும் உருவாக்கினார் அவர்.
  • இன்றைய ஆந்திரப் பகுதியில் 1956-இல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியைத் தொடங்கியவர், பின் மத்திய அரசின் செயலர் முதற்கொண்ட பல பதவிகளில் பணியாற்றியபோதும், ஓய்வுபெற்ற பின்னும், இறுதிவரை ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக, விடுதலைக்காக, ஓயாமல், தலை சாயாமல் உழைத்தவர்.
  • பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மதச் சிறுபான்மையினர் ஆகியோரின் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டுவந்தார்.
  • ஒடுக்கப்பட்ட சமூகங்களிடம் போய்ச்சேர்கிற செயலூக்கமுள்ள கருவியாக ஆட்சியதிகாரத்தையும் பொது நிர்வாகத்தையும் மாற்றுவதற்கு கிருஷ்ணன் இடைவிடாது முயன்றார். இந்த முயற்சியின்போது ஏற்பட்ட விரோதங்களையும், துன்பங்களையும் சிறிதும் பொருட்படுத்தாமல் தன் பணியைத் தொடர்ந்தார். அவர் கைக்கொண்ட புதுமையான நிர்வாக முறைகளும், புரையோடிப்போன சமூக அமைப்பின் மீதான தாக்குதலும் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கும், கண்டனத்திற்கும் உள்ளாகின.
  • இந்தியாவில் கொடூரத்தின் நிலைக்களனான சாதியத்தையும், அதன் மனித மறுப்பையும் எதிர்த்துக் குரல்கள் எழுவது புதுமை அல்ல. பல புரட்சிகர இயக்கங்கள், சீர்திருத்த இயக்கங்கள், சிந்தனையாளர்கள், படைப்பாளிகளின் சவால்கள், தாக்குதல்கள் எழுந்துள்ளன.
  • ஆனால், அமைப்புக்குள்ளிருந்து, அதிகாரத்தின் எஃகுக் கோட்டைக்குள்ளிருந்து, அதன் உச்சியிலிருந்து தாக்குதல் எழுவது பெரும் புதுமை. கிருஷ்ணனின் தனித்து ஒலித்த குரல் அது.
  • இந்திய சமுதாயத்தின் கடைக்கோடியில், தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, தவித்திருக்கும் மக்களும் உயர் வாழ்வு பெறும் வழி என்ன? சமத்துவ லட்சியங்களை அரசின் கொள்கைகளாக மாற்றுவது எவ்வாறு? அவற்றை ஓர் உரிமை சாசனமாக வடிப்பது எவ்வாறு?
  • உரிமைகளை வென்றெடுக்க, அவற்றிற்கு செயல் வடிவம் அளிப்பது எவ்வாறு? அரசும், ஆதிக்க சக்திகளும் மறுக்கவியலா திட்டங்களாக மாற்றுவது எவ்வாறு? இத்தகைய கேள்விகளையே தன் வாழ்நாள் தேடலாகக் கொண்டு இயங்கியவர் கிருஷ்ணன்.
  • இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆந்திரப் பிரதேசத்தில் பணிபுரிந்தபோது, 1957-லேயே, பட்டியலின மக்களின் சேரிகள், பழங்குடியினர் கிராமங்கள், பின்தங்கிய உழைப்போர் வசிக்கும் பகுதிகளில் அரசாங்க முகாம்களை (ஜமாபந்தி ) நடத்தினார். விளைவாக மேலடுக்கு சாதி-வர்க்கத்தினரின் கடும் எதிர்ப்புக்கு உள்ளானார். அத்துடன், மக்களை நோக்கிய அவரது நிர்வாகச் செயல் முறைகள் அரசாங்க உயர் அதிகாரிகளுக்குக் கடும் எரிச்சலையும், கோபத்தையும் உண்டாக்கின.
  • அது சுதந்திரத்திற்குப் பின்னான முதல் பத்தாண்டு. தன் பணியின் ஆரம்ப காலத்திலேயே நிலமற்றவருக்கும், வீடற்றவருக்கும் விளைநிலங்களையும், வீட்டுமனைகளையும் விநியோகிக்கும்  பிரம்மாண்டத் திட்டங்களைத் தொடங்கி, நிறைவேற்றினார். இவை எல்லாம் ஆந்திர பிரதேச நிர்வாகத்தில் முக்கிய மைல்கற்கள்.
  • கடந்த நாற்பது ஆண்டுகளில் ஒடுக்கப்பட்டோருக்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல சட்டங்கள், மற்றும் ஏராளமான அரசியல் சாசனத் திருத்தங்களின் பின்னணியில் முக்கியமான பங்கை கிருஷ்ணன் வகித்துள்ளார். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் - 1989, பிறகு அதன் திருத்தச் சட்டம் 2015, மனிதக் கழிவகற்றுவோரை பணியமர்த்தல் மற்றும் உலர்கழிப்பறைகள் கட்டுதல் தடுப்புச் சட்டம் 1993, பிறகு அதன் மறுவடிவமான திருத்தச் சட்டம் 2013, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்க வழிவகுக்கும் 65-வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டம்- 1990, புத்தமதத்தில் இணைந்த தலித்துகளைப் பட்டியல் சாதியினர் என அங்கீகரிப்பதற்கான சட்டம் என்று அவர் பங்கெடுத்த முன்னெடுப்புகளின் பட்டியல் நீள்கிறது.
  • பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த மண்டல் கமிஷன் அறிக்கையைத் தூசு தட்டி எடுத்து, வி.பி.சிங் முன் கொண்டுசென்ற மகத்தான வரலாற்றுச் சாதனையும் கிருஷ்ணனுடையது. சட்டங்கள் தவிர, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பல புதிய திட்டங்களையும் முதன் முறையாக வடிவமைத்து, நிறைவேற்றினார்.
  • இவற்றில் சில, பட்டியல் சாதியினருக்கான சிறப்பு உட்கூறுத் திட்டம் 1978 (Special Component Plan for Scheduled Castes, SCP), மாநிலங்களின் சிறப்பு உட்கூறுத் திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு (Special Central Assistance to the States’ SCPs) , மாநிலங்களின் பட்டியல் சாதியினர் வளர்ச்சி கார்ப்பொரேஷனுக்கான மத்திய அரசின் நிதி உதவித் திட்டம் ( Central Assistance to States for their SC Development Corporations).
  • ஒன்றிய நல்வாழ்வுத் துறையின் செயலாளராக 1990-ல் கிருஷ்ணன் பணியாற்றினார். சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு நீண்ட காலமாக மறுக்கப்பட்டுவந்த தேசிய அளவிலான அங்கீகாரத்தையும் இடஒதுக்கீட்டையும் வழங்க வேண்டும் என்று அவர் அரசை அறிவுறுத்தி, இணங்கவைத்தார்.
  • ஒன்றிய அரசு அறிவித்த பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குகள் போடப்பட்டன. அதைப் பாதுகாப்பதற்கான முக்கியமான அடிப்படைகளை அமைத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் அரசின் வாதத்தை வெற்றிபெற வைத்தார். அந்த இடஒதுக்கீட்டுக்கான சட்டரீதியான அடித்தளத்தை இதன் மூலம் உருவாக்கினார். கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தபோது, அதை எதிர்த்து வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்தன.
  • அப்போது  அரசு  கிருஷ்ணனின் உதவியை நாடியது. அவரது பணிகளின் மூலமாக, அந்த இடஒதுக்கீட்டுக்கு அரசியல் சாசனரீதியான அடிப்படை இருக்கிறது என்று 2008-ல் உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. 1990-லேயே பணி ஓய்வுபெற்றவர் அவர் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
  • இதற்குப் பிறகு 1991 - 1992 ஆண்டுகளில் தலித்துகள் மற்றும் பழங்குடிகளுக்கான தேசிய ஆணைய உறுப்பினராக அங்கம் வகித்தார். 1993- ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வல்லுனர் குழுவின் உறுப்பினராகவும், 1993 முதல் 2000 வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான
  • தேசிய ஆணையத்தின் உறுப்புச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். இஸ்லாமியர்களில் சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை இனம் கண்டறிவதற்கான ஆலோசகராகப் பணியாற்ற வேண்டும் என ஆந்திர அரசு அவரை 2007-ல் கேட்டுக்கொண்டது. அவரது அறிவியல்பூர்வமான பகுப்பாய்வின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஆந்திர அரசு இயற்றியது. அந்தச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் ஆந்திராவின் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நடந்தபோது அவற்றை எதிர்கொண்டு ஆந்திராவின் சட்டத்தை வெற்றிபெற வைக்கும் பணிகளை அவர் செய்தார்.
  • தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர் மற்றும் இதர சிறுபான்மையோர் இடையே உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இயங்குகிற ஏராளமான அரசு சாரா நிறுவனங்களின் பணிகளுக்கு கிருஷ்ணன் உதவிவந்தார். ஒன்றிய அரசின் திட்டக் குழு உருவாக்கிய மேற்கண்ட மக்களுக்கான பல திட்டமிடல் ஆணையங்களின் செயல் குழுக்களின் தலைவராகவும் உறுப்பினராகவும் இருந்துள்ளார். சமூகநீதி குறித்த நூல்கள், ஆவணங்கள், கட்டுரைகள், வரைவுகள் ஏராளமாக அவர் எழுதியுள்ளார்.
  • மறைவுக்கு முந்தைய சில ஆண்டுகளில்  கிருஷ்ணன் எளியோரின் விடுதலைக்காக ஒரு பயணப் பாதை வகுத்து அளித்துவிட்டுச் செல்லும் முயற்சியில் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார். எந்த மக்களுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்திருந்தாரோ, அதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் அடுத்து எடுக்க வேண்டிய ஒவ்வொரு படியையும், தனக்கே உரிய, விரிவான விளக்கங்களுடன் அளித்துச் சென்றிருக்கிறார். பழங்குடியினர், தலித்துகள், பின்தங்கியவர், சிறுபான்மையினர், ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்கும், எடுக்க வேண்டிய முயற்சிகள் எவை?
  • அரசியல் சாசன திருத்தங்கள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய சட்டங்கள், பல மட்டங்களில் பிறக்க வேண்டிய திட்டங்கள், அவற்றை சாத்தியமாக்குவதற்கான மக்கள் இயக்கங்கள் அனைத்தின் பட்டியலை நம் முன் படைத்தளித்திருக்கின்றார். அவற்றை ஆன்ம சுத்தியுடன், அரசியல் உறுதியுடன், மக்களின் ஒருமைப்பாட்டுடன் நிறைவேற்ற வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு; அவர் விட்டுச்சென்றிருப்பது வரலாற்றுப் பணி.

நன்றி: அருஞ்சொல் (01 – 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்