பிணையை எளிதாக்கும் தீர்ப்பு!
- விதிவிலக்கான தருணங்களிலேயே பிணை மறுக்கப்பட வேண்டும் என்பது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பிணைக்கு எதிரான, கடுமையான பிரிவுகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருப்பவர்களுக்குப் பிணை கிடைப்பது இனி எளிதாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
- பி.எம்.எல்.ஏ. சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த வெவ்வேறு வழக்குகளுக் காகக் கைது செய்யப்பட்டிருந்த பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கவிதா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் ஆகிய இருவருக்கும் கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.
- இச்சட்டத்தின் பிரிவு 45இன்படி பெண்களுக்குப் பிணை வழங்கலாம். ஆனால், கவிதாவைச் சாமானியப் பெண்ணாகக் கருத முடியாது என்பது போன்ற காரணங்களை முன்வைத்து, அவருக்குப் பிணை வழங்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இப்போது கேள்விக்கு உள்படுத்தியுள்ளது.
- ‘மதன்லால் செளத்ரி எதிர் இந்திய அரசு’ வழக்கில் 2022இல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, திருத்தப்பட்ட பி.எம்.எல்.ஏ. சட்டத்தையும் அச்சட்டத்தின்படி அமலாக்கத் துறைக்கு வழங்கப்பட்ட கைது செய்வதற்கான அதிகாரத்தையும் உறுதிசெய்திருந்தது.
- பி.எம்.எல்.ஏ. சட்டப் பிரிவு 45 குற்றம்சாட்டப்பட்டவர்களின் பிணை உரிமையின் மீது கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதே நேரம், இந்தக் கட்டுப்பாடுகள் பிணையை முழுமையாகத் தடுப்பவையாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் கூறியிருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், அவர்களுக்கு எதிரான விசாரணைக்கு நீண்ட காலம் தேவைப்படும் என்கிற நிலையிலும் பிணை வழங்குவதற்குப் பிரிவு 45 விதிக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நிபந்தனைக்கு உள்பட்ட விடுதலையை வழங்கலாம் என்பதையும் பிரேம் பிரகாஷுக்குப் பிணை வழங்கிய நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
- பி.எம்.எல்.ஏ. சட்டத்தின் மூலம் பிணையை நிரந்தரமாக மறுக்க முடியாது என்பதை இந்தத் தீர்ப்புகள் உறுதிப்படுத்துகின்றன. மத்தியில் ஆளும் பாஜகவை அரசியல்ரீதியாக எதிர்க்கும் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பி.எம்.எல்.ஏ. வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரின் பிணை மனுவின் மீதான நீதிமன்ற விசாரணைகளின் ஒவ்வொரு நிலையிலும் அவர்களைப் பிணையில் விடுவிப்பதற்கு எதிராக நீண்ட விவாதங்கள் அமலாக்கத் துறை சார்பில் முன்வைக்கப்படுகின்றன.
- உச்ச நீதிமன்றம் மூலம்தான் இவர்களில் சிலருக்குப் பிணை கிடைத்துள்ளது. பிணையை எதிர்ப்பதைவிட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களையும் சாட்சியங்களையும் திரட்டி, குற்றச்சாட்டுகளை நிரூபித்து அவர்களுக்குச் சட்டரீதியான தண்டனை பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
- சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை எதிர்க்கட்சிகளை முடக்கு வதற்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதாக மத்திய அரசைக் குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள், ஊழல் வழக்குகளின் கீழ் கைதுசெய்யப்படும் தமது கட்சிப் பிரமுகர்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
- உரிய ஆதாரங்கள் திரட்டப்படாததோ, பிணையில் வெளியேறுவதோ ஊழல் குற்றச்சாட்டைப் பொய்யாக்கிவிடாது என்பதை இக்கட்சிகள் மறந்துவிடக் கூடாது. விசாரணைக் கைதிகளை நீண்ட காலம் சிறையில் வைத்திருப்பதும் விசாரணையே தண்டனையாக மாறுவதும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 21 உறுதிசெய்துள்ள வாழ்வதற்கான உரிமைக்கு எதிரானவை. பி.எம்.எல்.ஏ. உள்பட எந்தச் சட்டமும் அரசமைப்புச் சட்டத்துக்கு இணக்கமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டிய கடமை அனைத்து நிலை நீதிமன்றங்களுக்கும் அரசுகளுக்கும் உண்டு.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 09 – 2024)